- இந்திய சமூகத்தைப் பல நூற்றாண்டுகளாகப் பீடித்துள்ள பெரும் பிணி சாதி. இந்தியாவின் முன்னேற்றம், ஜனநாயகம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றுக்கு எதிரானது சாதி. ஒருவரது தொழில், திருமண உறவு, சமூக ஏற்றத்தாழ்வை எதிர்கொள்ளுதலைப் பிறப்பின் அடிப்படையிலான சாதிதான் நிர்ணயிக்கிறது. சாதியத்தின் கோர வடிவமான தீண்டாமை மனிதர்களை மாண்பிழக்கச் செய்கிறது. அடிப்படை மனித சாரத்தையே அழிக்கிறது. இத்தனைத் தீங்குகள் நிறைந்த சாதியை ஒழிக்க சாதிமறுப்புத் திருமணங்கள் முக்கியப் பங்காற்ற முடியும்.
தோற்றமும் இயங்கும் முறையும்:
- சாதி என்பது, உழைப்புச் சுரண்டலுக்கான ஏற்பாடாகும். உழைப்புக் கருவிகளின் வளர்ச்சியால், பல்வேறு உழைப்புப் பிரிவினைகள் தோன்றிய பண்டைய இந்தியாவில், அவற்றின் அடிப்படையில் சாதிகள் தோன்றின. ‘உழைப்புப் பிரிவினையே சாதியை உருவாக்கியது’ என்றார் கார்ல் மார்க்ஸ். ‘சாதி என்பது உழைப்புப் பிரிவினை மட்டுமல்ல, உழைப்பாளர்களின் பிரிவினையும் ஆகும்’ என்றார் அம்பேத்கர்.
- ஒரே சாதிக்குள்ளேயே நடக்கும் அகமணத் திருமண முறை, சாதி அடிப்படையிலான பரம்பரைத் தொழில், சேர்ந்து உண்ணாமை, சடங்குகள், சம்பிரதாயங்கள், பழக்கவழக்கங்கள், தீட்டு, தூய்மைவாதம் போன்றவை சாதியை இன்றளவும் நிலைபெறச் செய்துள்ளன. கானல் நீரைத் தண்ணீர் என்று நம்புவதுபோல், காலாவதியான ஓர் அமைப்பை இந்தியச் சமூகம் இன்னும் தூக்கிச் சுமக்கிறது.
சாதி ஒழியுமா?
- இந்தியாவில் குறிப்பிட்ட ஒரு வரலாற்றுக் காலகட்டத்தில், உற்பத்தி முறையால் தோன்றிய சாதி என்றென்றும் நீடிக்க முடியாது. மனிதர்கள் உற்பத்தியில் ஈடுபடும்போது அவர்களுக்கு இடையேயான உற்பத்திசார்ந்த உறவுகளாகச் சாதி செயல்படுகிறது.
- உற்பத்திச் சாதனங்களான நிலம், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றின் உடைமையாளர்களாக, சாதி இந்துக்கள் உள்ளனர். உடைமையற்றவர்களாக, தங்கள் உழைப்புச் சக்தியை மட்டுமே உற்பத்திக்கு வழங்கும் நிலைமையில் அடித்தட்டு சாதிகளைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். உடைமைகளற்ற அடித்தட்டுச் சாதியினரின் உழைப்பைச் சுரண்ட உடைமையாளர்களுக்கு வாய்ப்பளிக்கிறது சாதி அமைப்பு.
- எனவே, உற்பத்திசார் உறவாக சாதி இன்றும் நீடிக்கிறது. அதேபோல், கருத்தியல் வடிவில் சாதியுணர்வாக மக்களின் மனங்களை ஆட்கொண்டுள்ளது. எனவே, சாதியை ஒழித்திட உற்பத்திசார் உறவுகளில், உற்பத்திச் சாதனங்களின் உடைமைகளில் மாற்றங்களை உருவாக்குவதோடு, மக்களின் மனங்களிலும் மாற்றத்தை உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது.
தகர்க்கப்படும் சாதியக் கட்டமைப்பு:
- உற்பத்திச் சாதனங்கள், மனித உழைப்புச் சக்தி, அறிவியல் தொழில்நுட்பம் போன்றவை உற்பத்திச் சக்திகள் என வழங்கப்படுகின்றன. இந்த உற்பத்திச் சக்திகள் தற்போது பிரம்மாண்டமாக வளர்ந்துள்ளன. அதாவது தொழில், சேவைத் துறைகளின் வளர்ச்சி, அறிவியல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், கல்வி நிறுவனங்கள் போன்றவை பெருகியுள்ளன; வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
- சாதி அமைப்பால் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு, இப்பிரிவினரில் கணிசமானோருக்குக் கல்வி, வேலைவாய்ப்புகளில் பலனளித்துள்ளது. இது உற்பத்திசார் உறவுகளில் மாற்றங்களை உருவாக்குகிறது. பிற்படுத்தப்பட்ட சாதியினரிடையே பெருமுதலாளிகள்கூடத் தோன்றியுள்ளனர். மத்திய, உயர் மத்தியதர வர்க்கங்கள் அனைத்து ஒடுக்கப்பட்ட சாதிகளிலும் உருவாகியுள்ளன. அதாவது, சாதியத்துக்குக் காரணமான நிலப்பிரபுத்துவ உற்பத்திசார் உறவுகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இது சாதிக் கட்டமைப்பை மெதுவாகத் தகர்த்துவருகிறது.
- ஒரே சாதிக்குள்ளேயே பல்வேறு தொழில் பிரிவினரும், ஒரே தொழில் பிரிவினருக்குள்ளேயே பல்வேறு சாதியினரும் பணிபுரியும் நிலை உருவாகியுள்ளது. இது பல்வேறு சாதிகளின் ஆண்களும் பெண்களும் ஒன்றாகப் பழக வாய்ப்பளித்துள்ளது. அதேவேளை, சாதிய உணர்வும் நீடிக்கத்தான் செய்கிறது. என்றாலும், சாதியே வர்க்கமாக அல்லது வர்க்கமே சாதியாகச் சில நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்த இறுக்கமான நிலைமை மெதுவாகத் தகர்ந்துவருகிறது.
- உழைக்கும் மக்களின் ஒன்றுபட்ட செயல்பாடுகள், சாதி உணர்வுக்கு மாற்றாக வர்க்க உணர்வை அதிகரித்துவருகின்றன. இவை சாதிமறுப்புத் திருமணங்களுக்கு உதவுகின்றன. என்றாலும், இது போதாது. எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்கக்கூடிய, ஒரு பொதுவுடைமைச் சமூக அமைப்பில்தான் தங்கு தடையற்ற சாதிமறுப்பு மணங்கள் பெருகும். அதுவே சாதி ஒழிப்பை முழுமைப்படுத்தும்.
- மதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், கடவுள்கள் போன்றவற்றை ஒழித்தால்தான் சாதியை ஒழிக்க முடியும் என்பது நடைமுறையில் உதவவில்லை. இந்து மதம், கடவுள் ஆகியவற்றின்மீது நம்பிக்கையுள்ள ஏராளமானோர் சாதி கடந்த காதல், சாதிமறுப்பு மணம்புரிந்து கொள்கின்றனர். திரைப்படங்கள், சமூக ஊடகங்கள், சாதியத்துக்கு எதிரான கருத்தியல் பரப்புரை, போராட்டங்கள், முற்போக்குக் கலை இலக்கியப் படைப்புகள் சாதிமறுப்பு மணங்களை ஊக்கப்படுத்தியுள்ளன. ஆக, சாதிகளற்ற இந்து மதம் சாத்தியமே.
- கல்லூரிகள், பணியிடங்களில் ஆண்களும்-பெண்களும் பழகும் வாய்ப்பும், பொருளாதாரத் தற்சார்பும் காதல்-சாதிமறுப்பு மணங்களை அதிகரிக்கச் செய்துள்ளன. இருப்பினும் நமது ஜனநாயகமற்ற, ஆணாதிக்கக் குடும்பங்கள் சாதியைப் பாதுகாக்கும் நிறுவனங்களாக நீடிக்கின்றன. சொத்துடைமை, சாதிமறுப்புத் திருமணங்களுக்கு எதிராக உள்ளது. மதமாற்றமும் சாதி ஒழிப்புக்குப் பயனளிக்கவில்ல.
- ஊக்கம் அவசியம்:
- ‘சாதிமறுப்புத் திருமணமே சாதியை ஒழிப்பதற்கான உண்மையான வழி என நம்புகிறேன். ரத்தக் கலப்பு மட்டுமே எல்லாரும் நம்மவரே என்கிற உணர்வை உருவாக்கும்’ என்ற அம்பேத்கரின் கருத்துகள் முக்கியமானவை. சாதி அடிப்படையிலான பரம்பரைத் தொழில்கள், சாதிகளிடம் நிலவும் பண்பாடுகள் தற்போது தகரத் தொடங்கியிருக்கின்றன. சாதியின் இருத்தலுக்கான பல்வேறு காரணிகளும் தகரத் தொடங்கியிருக்கின்றன.
- முக்கியமாக, அகமண முறையின் இறுக்கமும் தளரத் தொடங்கியிருக்கிறது. பல்வேறு மாநிலங்களில் 20%க்கும் மேல் சாதிமறுப்பு மணங்கள் நடைபெறுகின்றன. இதை ஊக்கப்படுத்த வேண்டும். அதற்கு, சாதிமறுப்பு மணம் செய்தோரின் குடும்பத்தினருக்குச் சமூகப் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
- அரசு செய்ய வேண்டியவை: சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்கத் தனிச் சட்டம் கொண்டுவர வேண்டும். சாதிமறுப்பு மணங்களை அரசு இலவசமாக நடத்திவைக்க வேண்டும். இணையரில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதுடன், அவர்களுக்கான நிதி உதவியை அதிகரிக்க வேண்டும். ‘பெரியார்’ சமத்துவபுரங்களில் மூன்றில் ஒரு பங்கு வீடுகளை இவர்களுக்கு ஒதுக்க வேண்டும்.
- சாதிமறுப்பு மணங்களுக்கு எதிராகச் செயல்படும் அதிகாரிகள், காவல் துறையினர், திருமணப் பதிவாளர்கள், சாதிச் சங்கங்கள், அரசியல் தலைவர்களின்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சாதிமறுப்பு மணம் புரிந்தோரின் குறைகளைத் தீர்க்க, மாநில-மாவட்ட அளவில் அமைப்புகளை அரசு உருவாக்க வேண்டும். மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் சாதிமறுப்பு மணங்கள் மிகக் குறைவாக நடைபெறுவதற்கான காரணங்களைக் கண்டறிந்து களைய வேண்டும்.
தனி இடஒதுக்கீட்டின் அவசியம்:
- நீதிபதி வெங்கடாச்சலய்யா குழு பரிந்துரையின் அடிப்படையில், சாதிமறுப்பு மணத் தம்பதியரில் ஒருவர் பட்டியல் சாதியைச் சேர்ந்தவராக அல்லது பட்டியல் பழங்குடியாக இருந்தால், அந்தத் தம்பதியின் குழந்தைகளைச் ‘சாதியற்றோர்’ என வகைப்படுத்தி, 0.5% இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இதை அவர்களின் சதவீதத்துக்கு ஏற்ப அதிகரிக்க வேண்டும். இதர பிரிவு சாதிமறுப்பு மணங்களுக்கும் இடஒதுக்கீட்டை விரிவுபடுத்த வேண்டும்.
- சாதிமறுப்பு மணங்கள் பெருகும் நிலையில், சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடுகளைப் படிப்படியாகக் குறைத்து, சாதிமறுப்பு மணங்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். சாதிமறுப்பு மண இடஒதுக்கீடு குறித்த சட்டமன்ற விவாதத்தின்போது, அதற்கு உரிய சட்டத்திருத்தம் அவசியம் என்று மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி கூறியிருந்தார்.
- தற்போது முன்னேறிய பிரிவினரில் பொருளாதாரரீதியாகப் பின்தங்கியோருக்கான இடஒதுக்கீடு (EWS) தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் சாதகமான சூழல் உருவாகியுள்ளது. அதாவது, 69%க்கும் மேல் தமிழ்நாடு அரசு இடஒதுக்கீட்டை அதிகரிக்க முடியும். இதைப் பயன்படுத்தி, கருணாநிதியின் நூற்றாண்டில் தமிழ்நாடு அரசு சாதிமறுப்பு மணத்தால் பிறந்த குழந்தைகளுக்குத் தனி இடஒதுக்கீட்டை வழங்க சட்டம் இயற்ற வேண்டும்.
நன்றி: தி இந்து (06 – 06 – 2023)