TNPSC Thervupettagam

அரசு நிர்வாகங்களில் தனியார் துறையினர் நியமனம், சரியா?

August 25 , 2024 95 days 132 0

அரசு நிர்வாகங்களில் தனியார் துறையினர் நியமனம், சரியா?

  • அந்த நிகழ்வை யாரும் அன்றைய நாளில் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். 1964ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று, ஆழிப் பேரலை எழுந்து ராமேஸ்வர கடல் மீது சென்றுகொண்டிருந்த ஒரு முழு ரயிலையும் அடித்துக்கொண்டுபோனது. அதிலிருந்த 200 பயணிகள் மாண்டுபோயினர். 146 தூண்களைக் கொண்ட தனுஷ்கோடி ரயில் பாலத்தின் 124 தூண்கள் அப்பேரலையில் முற்றிலுமாக சிதைந்துபோயின.
  • ரயில்வே துறைக்கு ராமேஸ்வரம் செல்லும் அந்த வழி லாபகரமானதல்ல. ஆனாலும், ராமேஸ்வரம் என்னும் ஆன்மீகத் தலத்தின் முக்கியத்துவம் கருதி, அந்த ரயில் பாலத்தைச் சீரமைக்க அரசு முடிவுசெய்தது. செய்து முடிக்க ஆறு மாதங்கள் பிடிக்கும் என ரயில்வே அமைச்சர் அறிவித்தார். ஆனால், வெறும் 46 நாட்களிலேயே அந்தப் பாலம் சீரமைக்கப்பட்டு, போக்குவரத்து தொடங்கப்பட்டது. அதைச் செய்தவர், இந்தியப் பொறியியல் சேவை (Indian engineering services) தேர்வில் வெற்றிபெற்று, ரயில்வே துறையில் பணியாற்றிய ஓர் இளம் பொறியியலாளர். பின்னாளில், மிகக் கடினம் எனக் கருதப்பட்ட கொங்கன் ரயில்வேயைக் கட்டி முடித்தார். டெல்லி மெட்ரொ ரயில் திட்டத்தைக் காலம் தவறாது உருவாக்கி முடித்தார். பெயர் ஸ்ரீதரன்.
  • இந்தியா விடுதலை பெற்ற காலத்தில், தனித்தனியாக கிடந்த 650 ராஜ்ஜியங்களை, படேல் தலைமையில், தனிமனிதராக ஒவ்வொன்றுடனும் பேச்சு வார்த்தைகள் நடத்தி, இந்திய நாட்டுடன் வெற்றிகரமாக  இணைத்தவர் வி.பி.மேனன் என்னும் குடிமைப் பணி அதிகாரி.
  • விடுதலை பெற்ற காலத்தில், உணவு தானியங்களை இறக்குமதி செய்யும் நாடாக இருந்தது இந்தியா. 20 ஆண்டுகளில், உணவு தானிய உற்பத்தியைப் பெருக்கி, இறக்குமதியை நிறுத்தியது. அதன் முக்கிய காரணிகள் டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையிலான அரசு விஞ்ஞானிகளும், அதிகாரிகளும்தான்.

பொதுத் துறையின் முக்கியத்துவம்

  • இந்தியாவில் பால் உற்பத்தியைப் பெருக்க, வெண்மைப் புரட்சி என்னும் திட்டம் 1971ஆம் தொடங்கப்பட்டது. 25 ஆண்டுகளில், இந்தியா உலகின் மிகப் பெரும் பால் உற்பத்தியாளராக உருவெடுத்தது. அதைச் செய்து முடித்தவர் குரியன் என்னும் பொதுத் துறை நிர்வாகி.
  • சங்கரன் என்னும் ஐஏஎஸ் அதிகாரி, 1976ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட, ‘அடிமைத் தொழிலாளர் ஒழிப்புச் சட்ட’த்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார். ஆந்திர மாநில பழங்குடி மக்களுக்கான புகழ்பெற்ற ஒருங்கிணைந்த மேம்பாட்டுத் திட்டங்களை அரசு உருவாக்கவும், அவர்களுக்கென தனியே அரசு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யவும் புதிய வழிமுறைகளை உருவாக்கினார்.
  • ஆந்திர மாநிலம் எங்கும் தலித் மக்களுக்கான உண்டு உறைவிடப் பள்ளிகளை உருவாக்கினார்.  மனிதக் கழிவுகளை மனிதரே அகற்றும் இழிவை எதிர்த்துப் பங்காற்றிவரும் ‘சபாய் கரமச்சாரி அந்தோலன்’ நிறுவனத்தை உருவாக்கிய பெஜவாடா வில்சனை ஒரு மூத்த ஆலோசகராக இருந்து வழிநடத்தினார். எளிமையாக, மக்களோடு மக்களாக வாழ்ந்து, இந்திய அரசமைப்புச் சொல்லும் சமூக நீதிக்காக தன் உடல்-பொருள்-ஆவி அனைத்தையும் செலவிட்டார்.
  • 1980ஆம் ஆண்டு வாக்கில், உலகில் போலியோ நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 70% இந்தியாவில் இருந்தனர். ஆனால், 2013ஆம் ஆண்டு, இந்தியாவில் போலியோ தொற்றுநோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது. இந்திய பொதுத் துறை நிறுவனங்கள், இதற்கான சொட்டு மருந்தை இந்தியாவிலேயே உருவாக்கி, இந்தியக் குழந்தைகள் அனைவருக்கும் இலவசமாக வழங்கியதன் விளைவு.
  • இவற்றுக்கு இணையான சாதனைகள் இந்தியத் தனியார் துறையில் இன்றுவரை நிகழ்த்தப்படவில்லை! அதுபோன்ற சமூக மேம்பாட்டு விழுமியங்களின் அடிப்படைகளில் தனியார் துறையை அளவிடுதல் சரியில்லை. தனியார் துறை நிறுவனங்கள் தம் முதலீட்டாளர்களுக்கான லாபத்தைத் தொடர்ந்து அதிகரிக்கும் இலக்குகளைக் கொண்டவை. அங்கே பணிபுரியும் உயர் நிர்வாகிகளின் தனிப்பட்ட செல்வ மேம்பாட்டை அதிகரித்துக்கொள்ள உதவுபவை. அவற்றினூடே பொருளாதார இயக்கங்கள் உருவாகி அதன் வழி கொஞ்சம் சமூக மேம்பாடும் நடக்கிறது. அவ்வளவே!

திறமையான நிர்வாகிகள்!

  • பொருளாதாரத் தளங்களில் இதை, தனியார் ஈட்டும் செல்வத்தில் ஒரு பங்கு சமூக மேம்பாட்டுக்கும் செல்லும் (trickle down effect) என்கிறார்கள். ஆனால், இது 1980களிலேயே காலாவதியான கருத்தாக்கம். இதை, ஜான் கென்னத் கால்ப்ரெய்த் என்னும் புகழ்பெற்ற பொருளாதார அறிஞர், ”குதிரைக்குத் தேவைக்கு அதிகமாக ஓட்ஸ் கொடுத்தால், அதன் சாணம் வழியே சாலையில் பறக்கும் குருவிக்கும் சில தானியங்கள் கிடைப்பதுபோல” எனக் கிண்டல் செய்திருக்கிறார்.
  • இந்திய குடிமைப் பணி அமைப்பிலிருந்து, நரேஷ் சந்திரா, வோரா, டி.என்.சேஷன், சுப்பா ராவ், ஒய்.வி.ரெட்டி, சக்சேனா, பூர்ணலிங்கம், பி.எஸ்.கிருஷ்ணன் என ஆயிரக்கணக்கான திறமையான அரசுத் துறை  நிர்வாகிகள் உருவாகிவந்திருக்கிறார்கள்.
  • இந்திய வெளியுறவுப் பணியிலிருந்து, அபித் ஹசன், ஹமித் அன்சாரி, ஜி.பார்த்தசாரதி, ஜெ.என்.தீட்சித், கே.பி.எஸ்.மேனன் என நூற்றுக்கணக்கான வெளியுறவுத் துறை நிர்வாகிகள் உருவாகிவந்திருக்கிறார்கள்.
  • இந்திய அரசு தனது நிர்வாக, மேலாண் தேவைகளுக்காக அதிகாரிகளை, நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க, இந்திய குடிமைப் பணி சேவைக் குழுமம் என்னும் ஒரு அமைப்பைக் கொண்டுள்ளது. அதன் வழியே, நிர்வாகம், வெளியுறவுத் துறை, காவல் துறை, பொறியியல் துறை, பொருளாதாரத் துறை, ராணுவம், வனத் துறை போன்ற பல துறைகளுக்கான அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
  • தேர்ந்தெடுக்கப்படும் இவர்கள் முதலில், அரசின் பயிற்சி நிறுவனங்களில், வரலாறு, அரசியல், அரசமைப்புச் சட்டம் எனக் குடிமைப் பணிகளுக்குத் தேவையான அடிப்படைக் கல்வியைப் பயில்கிறார்கள். பின்னர், இந்தியக் குடிமைப் பணி அதிகாரிகள் பணி செய்யும் தளங்களுக்குச் சென்று களப்பயிற்சி பெறுகிறார்கள். இப்படி இரண்டு ஆண்டுகள் தீவிரமான பயிற்சிக்குப் பின்னரே பணியில் அமர்த்தப்படுகிறார்கள்.  

இந்திய அரசியல் மற்றும் நிர்வாக அமைப்பின் பின்னணி!

  • இந்தியா ஒரு ஜனநாயகக் குடியரசு. இதன் அர்த்தம் என்னவெனில், இங்கு மக்கள்தான் உண்மையான எஜமானர்கள். அவர்கள் ஒவ்வொரு ஐந்தாண்டும்  கூடி, அரசமைப்புச் சட்டம் சொல்லும் சமூக - பொருளாதார நீதியை அனைவருக்கும் வழங்க வேண்டி, அரசு இயந்திரத்தை ஐந்தாண்டுகள் நிர்வாகம் செய்ய, தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அந்தப் பிரதிநிதிகள் இணைந்து ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அத்தலைவர் அரசு இயந்திரத்தை ஐந்தாண்டுகள் நிர்வாகம் செய்ய ஒரு அமைச்சரவையை உருவாக்குகிறார். தேர்ந்தெடுக்கிறார்கள். இதுதான் நமது அரசியல் நிர்வாக அமைப்பு.
  • குடிமைப் பணி என்பது, அந்த அரசியல் தலைமையின் கீழ், இந்திய அரசமைப்புச் சட்டத்தைச் செயல்படுத்தும் ஒரு கருவி. அரசமைப்புச் சட்டத்தின் நிர்வாக வடிவம் எனச் சொல்லலாம். இது ஓரளவு ஜனநாயகத்தன்மை கொண்ட அமைப்பு. நிர்வாகத்தின் உயர்மட்டத்தில் இருக்கும் அதிகாரிகள்கூட, அரசமைப்புச் சட்டத்துக்கு ஒவ்வாத ஒன்றை, கீழே உள்ள அலுவர்களைச் செய்ய வற்புறுத்த முடியாது. அதன் செயல்பாடுகள் பெரும்பாலும் எழுத்து வடிவில் இருப்பதால், ஒரு எழுதப்பட்ட ஆணையின்றி செயல்கள் நடைபெறாது.
  • கடந்த 77 ஆண்டுகளில், இந்திய மக்களின் சராசரி ஆயுள் 33 ஆண்டுகளில் இருந்து 73 ஆண்டுகளாக உயர்ந்திருக்கிறது. 16%லிருந்த கல்வியறிவு 76% ஆக உயர்ந்திருக்கிறது. வறுமையில் வாழும் மக்கள் சதவீதம் 80%லிருந்து 20% ஆகக் குறைந்திருக்கிறது. விடுதலைக்குப் பின்னர், பருவ மழை பொய்த்து, வறட்சி நிலவியபோதும், பெரும் பஞ்சங்கள் ஏற்படவில்லை.
  • விடுதலை பெற்ற காலத்தில், பல பன்னாட்டு விமர்சகர்கள், இந்தியா 10-15 ஆண்டுகளுக்கு மேல் ஒரு ஜனநாயக நாடாக நீடிக்காது. பெரும் மக்கள்தொகைக்கு உணவளிக்க முடியாமல், இந்தியா உடைந்து சிதறும் என்றெல்லாம் ஆருடங்கள் சொன்னார்கள்.
  • ஆனால், அவை அனைத்தையும் தகர்த்தெறிந்து, தொடர்ந்து ஒரு ஜனநாயக நாடாகத் திகழ்ந்து, முன்னேறி, வறுமையை ஒழித்து, 4 மடங்கு அதிகரித்த மக்கள்தொகைக்கு தேவையான உணவை உற்பத்தி செய்து, இன்று உலகின் மிகப் பெரும் பொருளாதாரங்களுள் ஒன்றாக உருவெடுத்துள்ளது. இந்த முன்னேற்றத்தில், இந்திய அரசு நிர்வாக அமைப்பும், அதிகாரிகளும் மிக முக்கிய பங்காற்றியுள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை.
  • அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது, இந்த நிர்வாக அமைப்பைப் பற்றிய விவாதங்களில், உள்துறை அமைச்சரும் மிகச் சிறந்த பொது நிர்வாகிகளில் ஒருவருமான சர்தார் வல்லபபாய் படேல், “இந்த நிர்வாக அமைப்புக்கு வேறு மாற்று இல்லை. மிகவும் சுதந்திரமாக, நேர்மையாக செயல்படத் தேவையான பாதுகாப்பு இல்லாத குடிமைப் பணி நிர்வாக அமைப்பு இல்லாமல் போனால், இந்திய ஒன்றியம் இல்லாமல் போய்விடும். இந்திய அரசமைப்புச் சட்டத்தைச் செயல்படுத்தும் முக்கியமான கருவி இந்த அமைப்பு. இதை நீக்கினால், இந்தியாவில் குழப்பமே மிஞ்சும்” எனக் கூறியது எவ்வளவு பெரிய தீர்க்கதரிசனம் என இன்று வரலாற்றைப் பின்னோக்கிப் பார்க்கும்போது தெரிகிறது.

அரசு நிர்வாக அமைப்பின் இன்றைய நிலை!

  • இந்தியா விடுதலை பெற்று, லட்சியவாதம் மேலோங்கியிருந்த காலத்தில் சர்தார் படேல் சொன்ன வரிகளுக்கு, இன்றைய காலகட்டத்தில், இந்தியக் குடிமைப் பணி அமைப்பு, முற்றிலும் நேர்மையாக இருக்கிறதா எனில், பதில் ‘இல்லை’ என்றே வரும். கால ஓட்டத்தில் லட்சியவாதம் மங்கியுள்ளது என்பதுதான் உண்மை. ஆனால், இந்த அமைப்பில் இன்றும் குறிப்பிட்ட சதவீத அதிகாரிகள் நேர்மையாளர்களாகவும் செயல்திறன் மிக்கவர்களாகவும்  இருக்கிறார்கள் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்.
  • இந்திய அரசின் நிர்வாக அமைப்பு, பொதுச் சமூகத்துடன் இணைந்து, பொதுவெளியில் செயல்பட வேண்டிய ஒன்று. எந்தவொரு சிறு தவறும், பிசிறும் பொதுமக்கள் பார்வைக்குத் தப்பாது. ஜனநாயகத்தின் நான்காம் தூண் எனச் சொல்லப்படும் ஊடகங்கள் குடிமைப் பணி நிர்வாக அமைப்புகள், பொதுத் துறை செயல்பாடுகள் முதலியவற்றைக் கண்கொத்திப் பாம்புபோல கவனிக்கின்றன. தவறுகள், ஊழல்கள் மிக எளிதில் பொதுவெளியில் கொண்டுவரப்படுகின்றன. 
  • அரசு, பொதுத் துறை நிர்வாக அமைப்புகளின் மீதான விமர்சனங்கள் நேரு காலத்திலேயே தொடங்கிவிட்டன. ஆனால், அவற்றில் நடக்கும் ஊழல்கள், பிரச்சினைகள் ஊடகங்களில் பேசப்பட்ட அளவுக்கு அவற்றின் நேர்நிலை பங்களிப்புகள் பேசப்படவில்லை. அதற்குக் காரணங்கள் இல்லாமல் இல்லை. ‘நாய் மனிதனைக் கடிப்பது செய்தி அல்ல. மனிதன் நாயைக் கடிப்பதுதான் செய்தி’ என்பது ஊடகச் சொலவடை. எதிர்மறைச் செய்திகள் வாசகர்களை ஈர்ப்பதுபோல, நேர்நிலைச் செய்திகள் மக்கள் மனங்களில் இடம்பெறுவதில்லை.
  • காலப்போக்கில், ஊடக வெளியின் தொடர் விமர்சனங்களால், அரசு நிர்வாக இயந்திரம் என்பது செயல்திறனற்ற ஊழல் மிகுந்த அமைப்பு என்னும் ஓரு கருத்து மக்களிடையே நிலைபெற்றுவிட்டது.
  • இந்த நிலைக்கான மாற்றாக தனியார் துறையும், அதன் செயல்திறனும் முன்வைக்கப்படுகின்றன. இதன் ஒரு விளைவுதான் பொதுத் துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கும் கொள்கைகள். இன்னொன்று அரசு உயர்நிர்வாகப் பதவிகளில் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களை நியமிப்பது (Lateral Recruitments) என்னும் அண்மைக் கால முடிவு. தனியார் துறையின் உயர்நிர்வாகத் தளங்களில், இந்தியாவின் 80% மக்களான தலித், பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் பிரதிநிதித்துவம் மிக மிகக் குறைவு. இல்லையென்றே சொல்லலாம். எனவே, இத்திட்டத்தால் பயனடையப்போகிறவர்கள் தனியார் நிறுவனங்களின் உயர்தளங்களில் பணிபுரியும் முற்பட்ட சாதியினர்தான்.
  • இந்தக் கொள்கைகளை முன்வைப்பவர்கள் பெரும்பாலும் இந்திய சமூகப் பொருளியல் அடுக்கில் உயர்தளத்தில் இருப்பவர்கள். அவர்கள் பெரும்பாலும் தனியார், ஊடக, பொதுநலத் திட்ட உருவாக்கம், உயர்நிர்வாகம், நீதி அமைப்புகள் போன்றவற்றில் இருப்பவர்கள்.

இந்தக் கொள்கைகள் எவ்வளவு தூரம் சரி?

  • அண்மைக் காலத்தில், உலகை உலுக்கிய கரோனா தொற்று வியாதியை உதாரணமாக எடுத்துக்கொள்வோம். இதன் வீரியம் தெரிந்தவுடன், தனியார் மருத்துவமனைகள் செய்த முதல் வேலை, தங்கள் கட்டமைப்புகளை மூடியதுதான். சிறிது காலம் கழித்து தம் சேவையைத் தொடங்கிய அவை, கரோனாவுக்கான சிகிச்சை, தனியறை எனப் பெரும் கட்டணம் வசூலித்து செல்வம் சேர்த்தன. சந்தையின் தேவைக்கேற்ற கட்டணம். அதுதான் அவர்கள் வணிக மாதிரி. அதில் குறை சொல்ல எதுவும் இல்லை.
  • ஆனால், அந்தக் காலகட்டத்தில், அரசு சுகாதாரக் கட்டமைப்பு, ராணுவ ஒழுங்குடன் செயல்பட்டு மக்களுக்கான இலவச சேவையை அளித்தது. மொத்த அரசு நிர்வாகமும் சாமான்ய மக்களுக்காக தம்மை அர்ப்பணித்துக்கொண்டது.
  • தனியார் மருத்துவக் குழுமங்களில், மொத்த சமூகத்தையும் பாதிக்கும் பெருந்தொற்றுப் பிணிகளுக்கான சிறப்பு மருத்துவர்கள் கிடையாது.  ஏனெனில், தனியார் மருத்துவக் குழுமங்களின் சேவையும் இலக்கும் தனிமனிதர்களுக்கானவை, மொத்த சமூகத்துக்குமானவை அல்ல. இத்தளத்தில் அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்கள்  முற்றிலும் வேறுவேறாக இலக்குகளையும், செயல்திறனையும் கொண்டவை.   
  • அரசு இயந்திரத்தில் ஊழல் என மருத்துவம் தனியார்மயமாக்கப்பட்டிருந்தால் என்னவாகியிருக்கும்? அல்லது அரசு மருத்துவத் துறையின் தலைமைப் பொறுப்பிற்கு தனியார் மருத்துவமனையிலிருந்து ஒரு நிபுணர் நியமிக்கப்பட்டிருந்தால், அவருக்குக் கரோனா தொற்றுபோல மொத்த சமூகத்தையும் பாதிக்கும் கொடிய தொற்றுநோயைக் கையாளும் நிர்வாக அனுபவம் எப்படிக் கைகூடிவரும்?
  • அண்மையில் பங்குச் சந்தையை நிர்வகிக்கும் செபி நிறுவனத்தின் தலைவரான மாதவி பூரி புச் பல விதிமீறல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளார். இவர் தனியார் துறையிலிருந்து உயர்பதவிக்கு (lateral entry முறையில்) நியமிக்கப்பட்டவர். சில காலம் முன்பு தேசிய பங்குச் சந்தை நிறுவனத்தில் மிகப் பெரும் ஊழல் குற்றச்சாட்டில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட சித்ரா ராமகிருஷ்ணனும் கோடிக்கணக்கில் ஊதியம் பெறும் ஒரு தனியார் துறை அதிகாரிதான்.
  • பொதுத் துறையில் பேசப்படுமளவுக்கு தனியார் துறையின் ஊழல்கள் பேசப்படுவதில்லை. ஏனெனில், அவை தனியார் நிறுவனம் என்பதால். கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால், தனியார் துறை ஊழல்கள் பொதுத் துறைக்குக் கொஞ்சமும் சளைத்தவை அல்ல என்பது விளங்கும். சத்யம் கம்ப்யூட்டர்ஸ் ஊழல், தேசியப் பங்குச் சந்தை ஊழல் (இது அரசு நிறுவனம்போலப் பெயர் கொண்டிருக்கும் தனியார் நிறுவனம்) தொடங்கி நம் உள்ளூர் பெனிபிட் பண்ட் நிறுவனங்கள் வரை பல்லாயிரம் எடுத்துகாட்டுகள் உள்ளன.
  • எனவே, அரசுத் துறை ஊழல் நிறைந்தது, செயல்திறனற்றது. தனியார் துறை நேர்மையானது, செயல்திறன் மிகுந்தது என்னும் எளிமைப்படுத்தப்பட்ட  கருத்தாக்கம் எந்த அடிப்படையும் இல்லாத ஒரு சமூக மூடநம்பிக்கை மட்டும்தான். நடிகர் வடிவேலு சொல்வதுபோல், “வெள்ளையா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான்” என்பதான ஓர் அவல நகைச்சுவை, அவ்வளவே!

அரசு நிர்வாகமும், துறைசார் நிபுணர்களும்

  • உலகின் எல்லா நிறுவனங்களிலும் இரண்டு தளங்கள் உண்டு. ஒன்று செயல்தளம். இன்னொரு சிந்தனைத் தளம். செயல்தளம் என்பது நிறுவனத்தின் அன்றாட அலுவல்களை நிர்வகிப்பது. சிந்தனைத் தளம் என்பது அத்துறையின் வளர்நுனி. இது வருங்காலத்தில் உலகில் உருவாகப்போகும் மாற்றங்கள், புத்தாக்கங்களைக் கணித்து, வருங்காலத் திட்டங்களை உருவாக்குவது.
  • அரசு செயல்தளத்தை நிர்வகிக்க, நிறுவனம் இயங்கும் தளம், நிறுவனத்தின் இலக்குகள், அரசமைப்புச் சட்டம் சொல்லும் சமூக, பொருளாதார நீதிகளின் அடிப்படை, நிறுவனத்தில் வெற்றிகரமாகப் பணிபுரிந்த அனுபவம் முதலியன தேவை. இங்கே பணிபுரிய இத்துறைகளில் நீண்ட காலம் பணிபுரிந்த திறமையான அரசு நிர்வாகிகளுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். இந்திய அரசுத் துறைகளில், பொதுத் துறைகளில் இத்தகைய தகுதிகளைக் கொண்டவர்கள் பலர் உள்ளனர். நல்ல நிர்வாகிகளுக்கு என்றுமே பஞ்சம் இருந்ததில்லை.
  • சிந்தனைத் தளத்திலும் மேற்சொன்ன தகுதிகளைக் கொண்டவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றாலும், உலகளவில் துறையின் வளர்நுனியில் பணிபுரியும் வெற்றிகரமான நிபுணர்கள் இருந்தால், அவர்களுக்கும் இடம் அளிக்கப்பட வேண்டும். இதற்கு இரண்டு வெற்றிகரமான நிர்வாகிகளை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். முதலாமவர் முன்னாள் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ஒய்.வி.ரெட்டி. இன்னொருவர் முன்னாள் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன்.
  • ஒய்.வி.ரெட்டி ஒரு ஐஏஎஸ் அதிகாரி. ஆந்திர மாநிலத்தில் நிதிச் செயலராகவும், ஒன்றிய நிதியமைச்சகத்தில் வங்கிச் செயலராகவும் இருந்தவர். பின்னர் ரிசர்வ் வங்கியின் உதவி ஆளுநராகவும், பன்னாட்டு நிதியமைப்பின் செயல் இயக்குநராகவும் பதவி வகித்தார். இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக 2003ஆம் ஆண்டு முதல் 2008 ஆண்டு வரை பணியாற்றினார்.
  • இந்தக் காலகட்டத்தில்தான் அமெரிக்க நிதியமைப்பு மிகப் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது. உலகின் பல நாடுகள் அதனால் பாதிக்கப்பட்டன. ஆனால், இந்தியாவில் அதன் பாதிப்பு மிகச் சொற்பம். ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த ஒய்.வி.ரெட்டி செயல்படுத்திய கடுமையான விதிமுறைகளே இந்திய வங்கிகளைக் காப்பாற்றின என்று ‘நியூயார்க் டைம்ஸ்’ இதழ் எழுதியது. “ஒய்,வி.ரெட்டி போன்ற ஒரு நிதி நிர்வாகி அமெரிக்காவில் இருந்திருந்தால், அமெரிக்காவுக்கு இந்த நிதி நெருக்கடி உருவாகியிருக்காது” எனப் புகழ்ந்தார் நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் ஜோசப் ஸ்டிக்லிஸ்.
  • இன்னொரு எடுத்துக்காட்டான ரகுராம் ராஜன், உலகின் மிகச் சிறந்த பொருளியல் அறிஞர்களுள் ஒருவர். பன்னாட்டு நிதிமுனையத்தின் பொருளியல் ஆலோசகராக, மிக இளம் வயதிலேயே நியமிக்கப்பட்டவர். 2005ஆம் ஆண்டு அமெரிக்க நிதியமைப்பு வீழ்ச்சியைச் சந்திக்கப்போகிறது எனக் கணித்தவர். 2008ஆம் ஆண்டு, அமெரிக்க நிதியமைப்பு வீழ்ச்சியைச் சந்தித்தது.
  • உலகப் பொருளாதார ஆய்வுகளின் வளர்நுனியில் பணிபுரியும் இவர் இந்திய பொருளாதாரத் துறைக்கு வளம் சேர்ப்பார் என்று பிரதமரின் பொருளியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். பின்னர் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அந்தக் காலகட்டத்தில் இந்தியப் பொருளாதாரம் இரண்டு சவால்களை எதிர்கொண்டது. ஒன்று பணவீக்கம், இன்னொன்று பலவீனமாகிவந்த இந்திய ரூபாயின் மதிப்பு. இந்த இரண்டு சவால்களையும் மிக வெற்றிகரமாக நிர்வகித்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தார். மக்கள் நலத் திட்டங்கள் வழியே வழங்கப்படும் நிதியுதவிகளை வங்கிகள் வழியே செலுத்தும் திட்டம், மொபைல் வழி பணப் பரிமாற்றம் போன்ற புத்தாக்கத் திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தினார்.
  • கட்டுரையின் முற்பகுதியில் குறிப்பிட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரி சங்கரன், இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் ரகுராம் ராஜன் இருவருமே அவரவர் துறையில் செயல்திறன் மிக்கவர்கள்; நேர்மையானவர்கள். ஆனாலும் ஒரு சமூகமாக நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியது, அவர்கள் கொண்டிருக்கும் விழுமியங்களைத்தான். எத்தகைய லட்சியங்களுக்காக அவர்கள் முனைந்து நிற்கிறார்கள் என்பதைத்தான்.

இறுதியாக...

  • இந்திய அரசுத் துறைகள், பொதுத் துறை நிறுவனங்களைச் செயல்தளத்தில் நிர்வகிக்கப் போதுமான நிர்வாகிகள் உள்ளார்கள். அவர்கள் மேலும் திறம்பட செயல்படத் தேவையான சூழலை உருவாக்குவதே அரசின் கடமையாக இருக்க வேண்டும். இங்கே தனியார் துறையில் இருந்து உயர்பதவிகளுக்கு நிபுணர்களை நியமிப்பது, ஏற்கனவே அந்த உயர்பதவிகளில் இருக்கும் முற்பட்ட சாதி ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்தவே உதவும். இது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சமூகநீதி இலக்குக்கு எதிரானது.
  • அரசு, பொதுத் துறை நிர்வாகங்களில், ஊழல்களைக் கண்டுபிடித்து தண்டிக்கும் தணிக்கை மற்றும் கண்காணிப்புப் பிரிவுகள் உண்மையான தன்னாட்சி பெற்ற நிறுவனங்களாக உருவாகும் வகையில் அரசின் சட்டங்கள் மாற்றப்பட்ட வேண்டும். இன்று இருப்பதுபோல ஆளுங்கட்சியின் கைப்பாவைகளாக இருப்பது நீண்ட கால நோக்கில் இந்திய ஜனநாயகத்துக்கு எதிரானது.
  • அதேசமயம், இந்திய அரசின் சிந்தனைத் தளங்களில் உலகளாவிய சிந்தனையாளர்கள் தேவைக்கேற்ப நியமிக்கப்பட வேண்டும். அதில் ஒருபோதும் தயக்கம்காட்டக் கூடாது. அதுதான் உலக அளவில் செயல்திறன் மிக்க ஓர் அமைப்பாக, இந்தியா தன்னை நிலைநிறுத்திக்கொள்ள உதவும்!

நன்றி: அருஞ்சொல் (25 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்