- தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் வரையில் அனைத்திலும் கடந்த சில நாட்களாக அமைதியாக ஒரு புரட்சி நடந்து கொண்டிருக்கிறது. தலைமைச் செயலாளரின் அறிவுறுத்தலின்படி மருத்துவமனை வளாகங்கள் முழுவதையும் தூய்மைப்படுத்தும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
- மருத்துவமனைகளில் சுகாதாரக் குறைவு காரணமாகத் தொற்றுகள் பரவுவதற்கான வாய்ப்புகளைத் தடுப்பது, அரசு மருத்துவமனைகளுக்குச் சிகிச்சை பெறுவதற்காக வரும் நோயாளிகளின் மனநிறைவை அதிகப்படுத்துவது, அரசு மருத்துவச் சேவைகளின் தோற்றத்தையும் வெளிப்பாட்டையும் அழகியல்ரீதியாக மேம்படுத்துவது ஆகியவை இந்தத் தூய்மை நடவடிக்கைகளின் நோக்கங்களாகும்.
- மருத்துவமனையின் கண்காணிப்பாளர் அல்லது மருத்துவ அலுவலர் இந்தப் பணிகளை மேற்பார்வையிடுவார்.
- மருத்துவமனை ஊழியர்களுக்குத் தேவையான பயிற்சிகளையும் வழிகாட்டுதல்களையும் அவர் வழங்குவதோடு, உள்ளாட்சி அமைப்புகளோடும் பொதுப் பணித் துறை, மின்வாரியம் ஆகிய பிற துறைகளுடன் சேர்ந்து, அவர் தூய்மைப் பணிகளை ஒருங்கிணைப்பார்.
- ஏப்ரல் இறுதி வரையிலும் நடக்கவுள்ள இப்பணிகள் ஒவ்வொரு காலாண்டிலும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- இது குறித்த அறிக்கைகள் மாவட்ட ஆட்சியருக்கு உரிய கால அளவில் அனுப்பப்பட வேண்டியது அவசியம். மருத்துவமனைகளின் வழக்கமான பணிகளில் ஒன்றாக தூய்மைப் பணியும் அமைய வேண்டும் என்பதே இச்செயல்திட்டத்தின் நோக்கம்.
- ஒவ்வொரு மருத்துவமனையிலும் ‘சுத்தமான மருத்துவமனைக் குழு’ உருவாக்கப் படுவதோடு மருத்துவர்கள், செவிலியர்கள், அலுவலக ஊழியர்கள் என அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கியதாக அது அமையும்.
- ஒவ்வொரு தளத்திலும் உள்ள கழிப்பறைகளைப் பற்றிய விவரங்கள் சேகரிப்பு, தொற்றுப் பரவலுக்கான வாய்ப்புகளின் அடிப்படையில் அவற்றை வகைப்படுத்துதல், தொற்று நீக்குதல் உள்ளிட்ட தூய்மைப் பணிகள், அதற்குத் தேவையான பிரத்தியேக உபகரணங்களைப் பயன்படுத்துதல், கழிப்பறைகளைப் பயன்படுத்துவோரின் உடல்நிலைக்கேற்ற படி அவற்றை ஒவ்வொரு நாளும் எத்தனை முறை சுத்தம் செய்ய வேண்டும் என்ற அட்டவணை, பெண்கள் கழிப்பறைகளுக்கான சிறப்பு ஏற்பாடுகள் என்று மிகவும் விரிவான வழிகாட்டும் நெறிமுறைகளும் உருவாக்கப்பட்டுள்ளன.
- மேலும் பூச்சிகள், கறையான், கொசுத் தொல்லைகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.
- தமிழ்நாட்டின் அரசு மருத்துவமனைகளைப் பொறுத்தவரை, அனுபவமும் நிபுணத்துவமும் வாய்ந்த மருத்துவர்களால் உயர்தரமான சிகிச்சைகள் வழங்கப்பட்டுவருகின்றன என்ற போதும் வளாகத் தூய்மை என்பது திருப்திகரமான அளவில் இல்லை என்பதே உண்மை.
- ஒவ்வொரு நாளும் நோயாளிகள், உதவியாளர்கள் என்று நூற்றுக்கணக்கானவர்கள் வந்து போகும் அரசு மருத்துவமனைகளில் அதற்கேற்ற வகையில் தூய்மைப் பணிகள் நடப்பதில்லை என்பது ஒரு குறைதான்.
- தனியார் மருத்துவமனைகள் அரசு மருத்துவமனைகளிலிருந்து வேறுபட்டு நிற்கும் அம்சங்களில் இதுவும் ஒன்று.
- இந்நிலையில், தமிழ்நாடு அரசு முன்னெடுத்துள்ள இந்தச் செயல்திட்டம் பாராட்டுக்குரிய ஒன்று. இது தொடர்ந்து நடக்கும்பட்சத்தில், அரசு மருத்துவமனைகளும் பொலிவுபெறும்.
- மருத்துவமனை வளாகம் தூய்மையாக இருப்பதில் நோயாளிகள், உதவியாளர்கள் ஆகியோருக்கும் பங்கு இருக்கிறது.
- புறநோயாளிகளும், தங்கியிருந்து சிகிச்சை பெறுவோரும் பின்பற்ற வேண்டிய தூய்மை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வும்கூடத் தேவை.
நன்றி: தி இந்து (12 – 04 – 2022)