- ஒருநாள் மதியம் சாலையோரக் கடையில் இளநீர் குடித்துக் கொண்டிருக்கும்போது, ஓர் இளைஞர் மோட்டார் சைக்கிளில் வந்து இறங்கினார். “என்னைத் தெரியலையா சார்... நான்தான் ராஜா!” என்று புன்முறுவலோடு தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். பழக்கப்பட்ட முகமாக இருக்கிறதே என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதே, “என்னை நம்பி 50,000 ரூபாய் பேங்க்ல கடன் வாங்கிக் குடுத்தீங்களே சார்... அதனாலதான் நான் இன்னிக்கு நல்ல நிலைமைல இருக்கிறேன்” என்றார்.
- ஐந்தாறு வருடங்களுக்கு முன்னால் நடந்த நிகழ்வு நினைவுக்கு வந்தது. அன்றைக்கு அரசு வங்கி கொடுத்த கடனை வைத்து இளநீர் வியாபாரம் செய்து, கடனையும் அடைத்து, வியாபாரத்தையும் பெருக்கி, இன்று இளநீர் விநியோகிக்கும் துணை ஏஜெண்ட் அளவுக்கு ராஜா உயர்ந்துவிட்டார்.
- கழிப்பறை சுத்தம் செய்யும் பென்சிலையா ஒருநாள் வங்கிக்கு வந்தார். கூடவே அவருடைய மகன் சந்திரன் வந்திருந்தார். “என் மகன் நல்ல மார்க் வாங்கி 2 பாஸ் செய்திருக்கிறான். மேலே படிக்கறதுக்கு பேங்க் லோன் வேணும் சார்” என்றார்.
- அவர் கையில் இருந்த ஆவணங்களைப் பார்த்தபோது எனக்கு இன்ப அதிர்ச்சி. 2-வில் 97% மதிப்பெண்கள். கையில் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியிலிருந்து (MIT) பொறியியல் படிப்புக்கான அனுமதிக் கடிதமும், கூடவே கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் மருத்துவப் படிப்புக்கான அனுமதிக் கடிதமும் வைத்திருந்தார்.
- “டாக்டருக்குப் படிக்க ஆசைப்படறான் சார்” என்றார் பென்சிலையா. அவருக்கான கல்விக் கடனைப் பிணையில்லாமல், சொத்து அடமானம் கேட்காமல் வழங்கியது அரசு வங்கி. இன்று சந்திரன் ஒரு டாக்டர்.
- சுமதியின் கணவர் சாலை விபத்தில் இறந்துவிட்டார். குடும்பமே சோகத்தில். வறுமையின் பிடியில். ஒருநாள் சுமதி வங்கிக்கு வந்தார்.
- ‘‘என் கணவரின் சேவிங்ஸ் அக்கௌண்ட்ல வருடம் ரூ.12 பிடிக்கிறாங்க சார். வேற எந்த பேப்பரும் இல்ல. அவருக்கு விபத்து இன்சூரன்ஸ் பணம் கிடைக்குமா சார்?” என்றார். பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்தில் ரூ. 2 லட்சம் காப்பீட்டுத் தொகையை உடனே வாங்கிக் கொடுத்தது அந்த அரசு வங்கி. அதை வைத்து 30,000 ரூபாய் கந்து வட்டிக் கடனை அடைத்துவிட்டு, இரண்டு பிள்ளைகளையும் படிக்க வைத்து, கிரைண்டர் வாங்கி இட்லி மாவு அரைத்துக் கொடுத்து இன்று கௌரவமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார் சுமதி.
- இப்படி எண்ணற்ற மக்களின் வாழ்க்கையில் சுடர் விளக்காகத் திகழ்ந்துகொண்டிருக்கும் அரசு வங்கிகளுக்குப் பேராபத்து காத்துக்கொண்டிருக்கிறது. அரசு வங்கிகளைத் தனியார்மயமாக்கியே தீருவோம் என்று பிடிவாதமாக, படுவேகமாகக் காய் நகர்த்துகிறது ஒன்றிய அரசு. முதல் கட்டமாக ஐடிபிஐ அல்லாமல் மேலும் இரண்டு அரசு வங்கிகளைத் தனியார்மயமாக்கப் பரிந்துரைத்துள்ளது நிதி ஆயோக்.
- “இந்த முறை தனியார்மயம் என்பது முன்புபோல் இருக்காது. தனியார்மயமாக்கப்படும் வங்கிகளில் அரசின் பங்குகள் முற்றிலுமாக விலக்கிக்கொள்ளப்படும்” என்று பிரதமரின் அலுவலகத்தை மேற்கோள் காட்டிச் செய்திகள் வருகின்றன.
- வங்கித் துறையில் ஏற்கெனவே 74% வரை அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு வங்கிகள் உள்நாட்டு முதலாளிகளுக்கு மட்டுமல்ல, அந்நிய நிறுவனங்களுக்கும் கைமாறுவதற்கான ஆபத்து பெருமளவில் உள்ளது.
அரசு வங்கிகள் தனியார்மயமானால் என்ன விளைவுகள் ஏற்படும்?
- பொதுமக்களின் சேமிப்புக்கு அரசு வங்கிகள் முழுப் பாதுகாப்பு அளிக்கின்றன. ஆனால், தனியார்மயமானால் அதிகபட்சம் ரூ. 5 லட்சம் வரை மட்டுமே பாதுகாப்பு கிடைக்கும்.
- இன்று அரசு வங்கிகளால் வழங்கப்பட்டுவரும் மொத்தக் கடனில் 40% வரை சாதாரண மக்களுக்கான முன்னுரிமைக் கடனான விவசாயக் கடன், சிறு-குறுந்தொழில் கடன், சுயஉதவிக் குழுப் பெண்களுக்கான கடன், கல்விக் கடன் போன்றவை வழங்கப்படாது.
- கிராமப்புறக் கிளைகள் பெரும் எண்ணிக்கையில் மூடப்படும்
- அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்குக் கடன் கிடைக்காது.
- வங்கிப் பணி நியமனத்தில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், முன்னாள் ராணுவ வீரர், மாற்றுத் திறனாளிகள், விதவைகள் ஆகியோருக்கு வழங்கப் பட்டு வரும் இடஒதுக்கீடு ரத்துசெய்யப்படும்.
- இவற்றின் விளைவாக, சாதாரண மக்களின் வாழ்வில் கடும் பின்னடைவு ஏற்படும். கிராமப்புற மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். அவர்கள் மீண்டும் கந்து வட்டிக்காரர்களின் பிடியில் சிக்கிக்கொள்வார்கள்.
- விவசாய உற்பத்தி பாதிக்கப்படும். அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயரும். ஏழை மக்களுக்கு உயர் கல்வி மறுக்கப்படும்.
- சுயஉதவிக் குழுப் பெண்கள், சிறிய தனியார் வங்கிகள், நுண்கடன் நிறுவனங்கள், கந்து வட்டிக்காரர்கள் ஆகியோரை நோக்கித் தள்ளப்படுவார்கள். சிறு, குறுந்தொழில் பெரும் பின்னடைவைச் சந்திக்கும். கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகள் பறிபோகும்.
- மக்களின் வாங்கும் சக்தி குறையும். உற்பத்தி தேங்கும். அதன் விளைவாக மேலும் வேலைவாய்ப்பு சுருங்கும். பொருளாதாரம் மோசமான, பின்னோக்கிய சுழற்சியில் சிக்கிக் கொள்ளும்.
- இது தவிர்க்கப்பட வேண்டுமானால், அரசு வங்கிகள் தனியார்மயமாக்கப்படக் கூடாது. மாறாக, அரசு வங்கிகள் பலப்படுத்தப்பட வேண்டும். கார்ப்பரேட் வராக் கடன்கள் கறாராக வசூலிக்கப்பட வேண்டும்.
- 53-வது வங்கிகள் தேசியமய நாளில், அரசு வங்கிகளைக் காப்பதற்கான இயக்கத்தில் அனைவரும் இணைய வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (19 - 07 – 2021)