TNPSC Thervupettagam

அரசும் ஆசிரியர்களும் முனைப்புடன் செயல்பட வேண்டும்

September 22 , 2024 7 days 28 0

அரசும் ஆசிரியர்களும் முனைப்புடன் செயல்பட வேண்டும்

  • ‘தற்கொலை உணர்வு வரும்போது என்னோடு பேசுங்கள்’ என்று தன்னுடைய தொடர்பு எண்ணை ஊர் முழுவதும் பதாகை வைத்து விளம்பரம் செய்யவேண்டிய நிலை வரும் என்று அந்த ஆசிரியர் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. அவர் பணியாற்றிய அரசுப் பள்ளிக்கு மூன்று ஊர்களில் இருந்தும் மாணவர்கள் படிக்க வந்தனர். எளிய விளிம்புநிலை மக்கள் அதிகம் வாழக்கூடிய அந்தப் பகுதியில் தற்கொலைகள் அவ்வப்போது நடந்துகொண்டே இருக்கும்.
  • ஆபத்தாகும் முடிவு: எப்போதும் போலத்தான் அந்த ஆசிரியர் அன்றைய தினமும் பள்ளிக்குச் சென்றார். ஆனால், அப்படி ஒரு துயரச் சம்பவம் நேரிடும் என்று அவர் கனவிலும் நினைக்கவில்லை. அனைவருக்கும் மிகவும் பிரியமான மாணவன் ஒருவன் தற்கொலை செய்துகொண்டான் என்பதை அவரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அவனுக்கு யாரிடமும் சண்டை இல்லை, வருத்தம் இல்லை. பிறகு ஏன் தற்கொலை செய்துகொண்டான் என்கிற காரணம் மட்டும் யாருக்குமே தெரியவில்லை. அந்த மாணவனின் நினைவாக இன்று வரை தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வையும் பிரச்சாரத்தையும், ‘ஹெல்ப் லைன்’ சேவையையும் அந்த ஆசிரியர் தொடர்ந்து செய்துவருகிறார்.
  • காரணமே சொல்லாமல் தற்கொலை செய்து கொள்வது தற்போது பரவலாகிவருகிறது. ஆனால், அதைத் தடுப்பதற்கு அந்த ஆசிரியர் செய்த முயற்சியைப் போல நம்மில் எத்தனை பேர் செய்கிறோம் என்பது பெரும் கேள்வி. எது மாணவர்கள் தங்களது வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் நிலைக்கு இட்டுச்செல்கிறது என்பது சார்ந்து ஏராளமான கேள்விகள் எழும்பினாலும் ஒவ்வொரு தனிநபருக்கும் தற்கொலைக்கான காரணங்கள் மாறுகின்றன. பெரும்பான்மையானவர்கள் அவர்களது வாழ்க்கையை முடித்துக்கொள்வதற்குத் தோல்வியும் மன அழுத்தமும் காரணங்களாக அமைகின்றன.
  • பள்ளிப் பருவத்திலேயே இதுபோன்ற முயற்சிகளைச் செய்யும் குழந்தைகளைச் சமீபத்தில் நிறைய பார்க்க முடிகிறது. ஏழாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி பிரபல தனியார் பள்ளியின் வகுப்பறையில் தற்கொலைக்கு முயன்றிருக்கிறாள். காரணம் கேட்டால் பெற்றோர் தொடர்ந்து தன்னைத் திட்டிக்கொண்டே இருப்பதாகக் கூறியிருக்கிறாள். இது போன்ற சம்பவங்கள் பெரும் அச்சத்தைத் தருகின்றன. உரிமை தருதல், குழந்தைமை சிதையாமல் வளர்த்தல், நவீனத்தை நடைமுறைப்படுத்துதல் என்று ஒன்றோடு மற்றொன்று ஒட்டாத, முறையான புரிதல் இல்லாத குழந்தை வளர்ப்பு இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதற்குக் காரணமாக அமைகின்றன.

மாற்றம் வேண்டும்:

  • ஒத்த வயதினரின் அழுத்தம், ஒப்பீடு, போட்டி நிறைந்த உலகு, அதனால் ஏற்படும் அதீத மன அழுத்தம், தோல்விகள், தாங்க இயலாத மனச்சோர்வு போன்றவை இளம் பருவத்துக் குழந்தைகளை மிகவும் பாதிக்கின்றன. தோல்விதான் வெற்றிக்கு முதல் படி என்பதைக் குழந்தைகளுக்குப் புரியவைக்க வேண்டும். பெற்றோரும் குழந்தைகளின் எல்லா விருப்பங்களுக்கும் உடன்படாமல் மறுப்பு சொல்லியும் குழந்தைகளைப் பழக்க வேண்டும். நமது வாழ்க்கை முறை மாறியதால் ஏற்பட்ட உடல்நலக் கேட்டுக்குச் சமமான அளவு மனநலக் கேடும் ஏற்படுகிறது. ஊர்களில் பிரம்மாண்ட மருத்துவமனைகள் இருப்பது போன்று மனநல ஆலோசனை மையங்கள் இல்லை. சிறு மன அழுத்தம்கூடக் குழந்தைகளை,வாழ்க்கையைப் புரட்டிப்போடும் முடிவை எடுக்கவைத்துவிடுகிறது.
  • மனநல மருத்துவரைச் சந்தித்தாலே ஒருவரை மனநோயாளி போலப் பார்க்கும் பார்வை சமூகத்தில் இருந்து விலக வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு 40 விநாடிக்கும் ஒருவர் தற்கொலை செய்துகொள்வதாகவும் ஆண்டுதோறும் இந்தியாவில் மட்டும் 2.30 லட்சம் பேர் தற்கொலை செய்துகொள்வதாகவும் 15 முதல் 39 வயதுக்கு உள்பட்டவர்களின் இறப்புக்குப் பெரும்பாலும் தற்கொலைகளே காரணமாக இருப்பதாகவும் புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கிறது. உலக அளவில் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது என்பது மிக அதிர்ச்சிக்குரிய தகவல்.

ஆசிரியர்களின் முயற்சியில்...

  • தன் அன்பிற்குரிய மாணவனின் நினைவாகத் தற்கொலை விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் அந்த ஆசிரியரைப் போல ஊர் ஊராகப் பதாகை வைத்து விழிப்புணர்வு செய்யாவிட்டாலும் ஒவ்வோர் ஆசிரியரும் தன்னுடைய வகுப்பறையில் உள்ள குழந்தைகளிடம் மிகத் துணிச்சலுடன் வாழ்க்கை எதிர்கொள்வதற்கான உத்திகளைக் கற்றுத்தர வேண்டும். எந்தப் பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வல்ல என்கிற நம்பிக்கையை மாணவர்களிடம் ஆசிரியர்கள் ஏற்படுத்த வேண்டும். தற்கொலையைத் தடுப்பதற்காகத் தமிழ்நாடு அரசாங்கம் ஏற்படுத்தியுள்ள உதவி எண்ணான ‘104’ மாணவர்கள் மத்தியில் பரவலாக்கப்பட வேண்டும்.
  • மாணவர்களுக்காக ‘மனசு’ என்கிறதிட்டம் பள்ளி, கல்லூரிகளில் செயல்படுத்தப் பட்டுவருகிறது. பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களை தூதுவர்களாக நியமித்து அவர்களின் வழியே மாணவர்களின் பிரச்சினையைத் தெரிந்துகொண்டு மருத்துவ உதவி அளிக்கும் இந்தத் திட்டம் அரசால் நடைமுறைப்படுத்தப்பட்ட போதும், அது அனைத்துப் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் பரவலாகச் சென்று சேரவில்லை. இந்தத் திட்டத்தை அனைத்துப் பள்ளி, கல்லூரிகளிலும் பரவலாக்கித் தீவிரமாகச் செயல்படுத்த வேண்டும்.
  • தேசிய அளவில் தற்கொலைத் தடுப்புக் கொள்கை உருவாக்கப்பட்டு 2022ஆம் ஆண்டு நவம்பர் முதல் நடைமுறையில் உள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் தற்கொலை எண்ணிக்கையை மூன்றில் ஒரு பங்காகக் குறைக்க வேண்டும் என்பதே இதன் முக்கியக் குறிக்கோள். எது எப்படி இருந்தபோதிலும் வளரிளம் பருவத்துக் குழந்தைகளோடும் இளவயது பிள்ளைகளோடும் பயணிக்கும் ஆசிரியர்களும் பேராசிரியர்களும் முனைப்போடு செயல்பட்டால் ஒழிய தற்கொலை என்கிற நோயைக் குணப்படுத்த இயலாது. ஆரோக்கியமான மனநிலை கொண்ட மாணவர்களே ஆரோக்கியமான எதிர்காலச் சமூகத்தைக் கட்டமைக்க முடியும்.

நன்றி: இந்து தமிழ் திசை (22 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்