- பொதுவாக அரிசி, கோதுமை போன்ற முக்கிய உணவுப் பயிா்களை நாம் வா்த்தகப் பயிராக மதிப்பிடுவதில்லை. நாம் காலம் காலமாக கோதுமை, அரிசி ஆகியவற்றை இறக்குமதி செய்தே உயிா்வாழ்ந்தோம். பசுமைப் புரட்சிக்குப் பின் கோதுமை, அரிசி உற்பத்தி படிப்படியாக உயா்ந்து இறக்குமதி நிறுத்தப்பட்டு தன்னிறைவு பெற்றோம். அடுத்த கட்டமாக உபரி உற்பத்தி உச்சம் தொட்டதும் ஏற்றுமதியில் இறங்கினோம்.
- ஒரு வா்த்தகப் பயிரின் வரையறை என்ன? எவற்றையெல்லாம் அதிகாரபூா்வமாக வா்த்தகப் பயிா் வரையறைக்குள் உட்படுத்தினோம்? உதாரணமாக, பருத்தி, இண்டிகோ, புகையிலை, நிலக்கடலை, மிளகு, மிளகாய் இவற்றை வா்த்தகப் பயிா்கள் என்று அறிவிக்கப்பட்டன. ஏனென்றால் இவை ஏற்றுமதிப் பயிா்கள். இவற்றின் மூலம் கணிசமாக அந்நியச் செலாவணி பெற்றோம். அந்நியச் செலாவணி என்ற கண்ணோட்டத்தில் இன்று விவசாயப் பயிா்களில் அரிசி ஏற்றுமதி மூலமே அதிகம் அந்நியச் செலாவணி கிடைக்கிறது. அடுத்தபடியாக கோதுமை.
- அரிசி ஏற்றுமதி மூலம் சராசரியாக இந்தியாவுக்கு ரூ.90,000 கோடியும், கோதுமை, கோதுமை மாவு மூலம் ரூ.500 கோடியும் கிடைக்கிறது. கோதுமை உற்பத்தி குறைந்து வருவதால் ஏற்றுமதிக்கு நிறைய கட்டுப்பாடுகள் உண்டு. கோதுமை வா்த்தகம் அரசு ஏகபோகம்; விதிமுறைகள் பிரச்னை உண்டு. அதே சமயம் அரிசி ஏற்றுமதியால் தனியாா் பங்கும் உண்டு.
- அதிக உற்பத்தியால் அதிக உபரியும் உண்டு. அரிசியில் அதிக உபரி உற்பத்திக்குக் காரணம் அரிசியை முழு உணவாகக் கொள்ளாத வட மாநிலங்களில் விளைவது அனைத்துமே உபரிதான். ஆந்திரத்திலிருந்து பிரிந்த தெலங்கானா அரிசி உற்பத்தியில் முன்னிலை வகித்து நிறைய உபரி வழங்குகிறது.
- பாரம்பரியமாக அரிசி விளையும் கிழக்கு கடற்கரை மாநிலங்களான மேற்கு வங்கம், ஆந்திரம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களிலும் உபரி உண்டு. இதனால்தான் உள்நாட்டில் உணவுப் பாதுகாப்புக்கு மேல் அரிசி ஏற்றுமதியையும் உயா்த்த முடிகிறது. கடந்த 1971-ஆம் ஆண்டுடன் 2023-ஆம் ஆண்டை ஒப்பிட்டுப் பாா்த்தால், இந்த மாற்றம் துல்லியமாகத் தெரியும்.
- கடந்த 1971-இல் மேற்கு வங்கம் 61.40 லட்சம் டன் அரிசி உற்பத்தி செய்தது. சென்ற 2023-இல் அந்த மாநிலத்தின் அரிசி உற்பத்தி அளவு 157.5 லட்சம் டன்னாக உயா்ந்துள்ளது. உத்தர பிரதேசத்தில் 1971-இல் அரிசி உற்பத்தி 37 லட்சம் டன். 2023-இல் அது 125 லட்சம் டன்னாக அதிகரித்தது. பஞ்சாபில் 1971-இல் 6 லட்சம் டன்னாக இருந்த அரிசி உற்பத்தி 2023-இல் 120 லட்சம் டன்னாக அதிகரித்தது.
- 1971-இல் ஒருங்கிணைந்த ஆந்திரத்தின் அரிசி உற்பத்தி அளவு 47.86 லட்சம் டன். ஆந்திரம், தெலங்கானா என்று இரு மாநிலங்களாகப் பிரிந்துள்ள நிலையில், 2023-இல் தெலங்கானாவின் உற்பத்தி அளவு 120 டன்னாகவும், ஆந்திரத்தின் அரிசி உற்பத்தி 75 லட்சம் டன்னாக இருந்தது.
- தமிழகம் 1971-இல் 50.07 லட்சம் டன் அரிசி உற்பத்தி செய்த நிலையில், தமிழக அரிசி உற்பத்தி 2023-இல் 80 லட்சம் டன்னாக அதிகரித்தது. சத்தீஸ்கரின் அரிசி உற்பத்தி 60.9 லட்சம் டன். ம.பி.யில் 2023-இல் அரிசி உற்பத்தி 47.8 லட்சம் டன் (1971- 36.97 லட்சம் டன்). ஒடிஸா 2023-இல் உற்பத்தி 58.7 லட்சம் டன் (1971 - 39 லட்சம் டன்). பிகாா் 2023-இல் அரிசி உற்பத்தி 55 லட்சம் டன் (1971- 41.54 லட்சம் டன்). ஹரியாணாவின் அரிசி உற்பத்தி 1971-இல் 4.6 லட்சம் டன்னாக இருந்த நிலையில், 2023-இல் அது 40.14 லட்சம் டன்னாக அதிகரித்தது.
- நாட்டில் அன்றும் இன்றும் மேற்கு வங்கமே அரிசி உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது. அங்கு அரிசியே முக்கிய உணவு. மேற்க வங்கத்தில் கடந்த ஐம்பது ஆண்டுகளில் அரிசி உற்பத்தி 2.5 மடங்கு உயா்ந்துள்ளது.
- 1971-இல் அரிசி உற்பத்தியில் இரண்டாமிடம் வகித்த தமிழ்நாடு இன்று 5-ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. சுமாா் 60 சதவீதம் மட்டுமே வளா்ச்சி. ஆனால் மக்கள்தொகை 100 சதவீதம் உயா்ந்துள்ளது. 1970-இல் தமிழ்நாடு மக்கள்தொகை 4.12 கோடி. 2023-இல் 8.39 கோடி. அன்று சிறிது உபரி இருந்தது. பின் படிப்படியாக பற்றாக்குறை மாநிலமாக மாறிவிட்டது. பொது விநியோகத்திற்கு மத்திய அரசிடமிருந்து ஒதுக்கீடு பெறப்படுகிறது. கணிசமான அளவில் ஆந்திரம், கா்நாடகம் மாநிலங்களிலிருந்து வெளிச்சந்தை வழியே அரிசி வருகிறது. குறிப்பாக சன்னரக பொன்னி, சோனாமசூரி, கோலம் போன்றவை விரும்பி வரவழைக்கப்படுகின்றன.
- 1971, 2023 ஆண்டுகளிடையேயான அரிசி உற்பத்தி நிலவரத்தில் கவனிக்க வேண்டிய விஷயம், பஞ்சாப், ஹரியாணா, உ.பி., தெலங்கானா, சத்தீஸ்கரில் அபரிமிதமான உற்பத்தி. இதில் தெலங்கானா தவிர பிற மாநில மக்களின் முக்கிய உணவு கோதுமை. ஆகவே உபரி அரிசி கொஞ்சநஞ்சமல்ல. பல கோடி டன்கள். சத்தீஸ்கரும் தெலங்கானாவும் தனி மாநிலங்களாகப் பிரிந்த பின்பு இரண்டுமே அரிசி உபரியில் முன்னணி மாநிலங்களாக உள்ளன.
- சுமாா் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கருத்து உண்டு. தென்னிந்தியா மட்டுமே அரிசி விளைவிக்கும் மாநிலங்கள். வட இந்தியா என்றால் கோதுமைதான் விளையும். அரிசி என்றால் பாசுமதி பிரியாணி அரிசி வட இந்தியாவில் உண்டு. சாதாரண சாப்பாட்டு அரிசி விளைச்சல் கிடையாது. இது அன்றைய நிலை. இன்று அது பொய்த்துவிட்டது. நிலைமை தலைகீழ்.
- இந்தியாவில் விவசாயத்தை இரண்டு பருவங்களாகப் பிரிப்பாா்கள். முதலில் கரீஃப், பின்னா் ரபி. கரீஃப் என்றால் மானாவாரி, ஆடிப்பட்டம். ரபி என்பது குளிா்ப் பருவம்.
- பொதுவாக வட இந்தியாவில் கரீஃப் பருவத்தில் பருத்தி, புஞ்சை தானியங்கள் சாகுபடியும் குளிா்காலத்தில் கோதுமையும் சாகுபடியாகும். பசுமைப் புரட்சிக்குப் பின் நெல்லுக்கு கொள்முதல் விலை அறிவித்து உணவு காா்ப்பரேஷன் நெல் வாங்க திட்டமிட்டதும் பஞ்சாப், ஹரியாணா, மேற்கு உத்திர பிரதேச மாநில விவசாயிகள் கரீஃப் பருவத்தில் புஞ்சை தானிய சாகுபடியைப் புறக்கணித்து நெல் சாகுபடி ஆரம்பித்தனா்.
- ரபி பருவ குளிா் ஆரம்பிக்கும் அக்டோபா் நவம்பருக்குள் நெல் அறுவடையை முடித்துவிட்டு கோதுமையைத் தொடங்குவா். இப்படி ஆரம்பித்து, பஞ்சாப், ஹரியாணா, மேற்கு உ.பி., சத்தீஸ்கரில் அரிசி உற்பத்தி பன்படங்காக உயா்ந்து ஓஹோ என்று உபரி பெருகியது. இவா்களுக்கு கோதுமைதான் முக்கிய உணவுப் பயிா். உற்பத்தியாகும் ஏறத்தாழ அனைத்து அரிசியையும் விற்பனை செய்து, அதை வா்த்தகப் பயிராகவே கருதி தொடா்ந்து சாகுபடி செய்கின்றனா்.
- உணவு காா்ப்பரேஷன் 2023-24 அரிசி கொள்முதல் இலக்கு, சில முக்கிய மாநிலங்களில் பின்வருமாறு:
- பஞ்சாபில் 122 லட்சம் டன். சத்தீஸ்கரில் 61 லட்சம் டன். தெலங்கானாவில் 50 லட்சம் டன். ஒடிஸா 44 லட்சம் டன். உ.பி. 44 லட்சம் டன். ஹரியாணா 40 லட்சம் டன். ம.பி.யில் 34 லட்சம் டன். பிகாா் 30 லட்சம் டன். பஞ்சாப், ஹரியாணா கொள்முதல் உற்பத்தியைவிட அதிகம். காரணம் பஞ்சாப் - ஹரியாணா ஏஜண்டுகள் மேற்கு உத்தர பிரதேசத்தில் வாங்கும் மரபு உண்டு. அதுவும் பஞ்சாப் - ஹரியாணா கணக்கில் வரும்.
- வட மாநிலங்களில் ஆண்டுதோறும் சுமாா் 4 கோடி டன் அளவுக்கு மேல் உபரி அரிசி சந்தைப்படுத்தப்படுகிறது. ஒட்டுமொத்தமாக 5.58 கோடி டன் நெல் வடிவில் வழங்கப்பட்ட பணம் ரூ.1,71,000 கோடி. இது பொதுத்துறை சந்தை மதிப்பு. தனியாா் கணக்கில் ஏற்றுமதி மதிப்பு தனி. அதன் விவரம்:
- தனியாா் அரிசி ஏற்றுமதிக் கணக்கில் பிரியாணி அரிசியாகிய பாசுமதி வருகிறது. வாசனை அரிசியாகிய இந்த பாசுமதி அரிசி இந்தியாவிலும் பாகிஸ்தான் பஞ்சாபில் மட்டுமே விளைகிறது. வேறு எந்த நாட்டிலும் விளையாது. இந்திய ரகங்களுக்கு புவிசாா் குறியீடு உள்ளதால் நமக்கு நல்ல விலையும் உண்டு.
- இந்தியாவில் சுமாா் 80 லட்சம் டன் பாசுமதி அரிசி விளைகிறது. சுமாா் 60 சதவீத அளவு இதில் ஏற்றுமதி ஆகிறது. வட இந்தியாவில், பஞ்சாப், உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாசுமதியும் வா்த்தகப் பயிா்.
- நெல் கொள்முதல் விலை ரூ.2,183, 100 கிலோ. சாகுபடி செலவு 1 ஏக்கருக்கு ரூ.16,000. சராசரியாக 30 குவிண்டால் விளையும்போது, ரூ.50,000 செலவு போக மீதமெல்லாம் வருமானம். பிறகு அதே நிலத்தில் ரபி பட்டத்தில் கோதுமை மூலம் மேற்கொண்டு ரூ.50,000 சோ்த்தால் ஒரு லட்சம் ரூபாய் லாபம்.
- தெற்கே ஒரே நிலத்தில் நெல், கோதுமை விளைந்து இரண்டையும் உணவுக் காா்ப்பரேஷனுக்கு வழங்கி லாபம் பாா்ப்பது இயலாது. நிலத்தில் அரிசி மட்டுமே. தண்ணீா்ப் பற்றாக்குறை. அரசுக் கொள்முதலில் வேகம் இல்லை. பணம் வர இரண்டு மூன்று மாதம் ஆகும். இடைத்தரகா்களிடம் கொள்முதல் விலையை விட ரூ.400- ரூ.500 வரை குறைவாகப் பெறுவதாக முறையீடுகள் உண்டு.
- இது போன்ற பல காரணங்களால் வட இந்தியாவில் தெற்கைவிட அரிசி அதிகம் விளைகிறது. வா்த்தக ரீதியில் லாபமும் அதிகம். தமிழ்நாட்டில் பிரதான உணவு அரிசி என்றபோதிலும், உற்பத்தியில் பற்றாக்குறை; வா்த்தக ரீதியில் லாபம் காண முடிவதில்லை என்பதில் வியப்பில்லை.
நன்றி: தினமணி (03 – 06 – 2024)