TNPSC Thervupettagam

அரிசிச் சந்தை நிலவரம்

September 16 , 2022 693 days 382 0
  • குறிப்பிட்ட சில ரக அரிசி இனங்களின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்திருக்கிறது. காரிஃப் பருவத்தில் அரிசி உற்பத்தி 60 முதல் 70 லட்சம் டன் குறைய வாய்ப்புள்ளது என்பதால் மட்டுமே எடுக்கப்பட்ட முடிவு அல்ல இது. ஒருவகையில் பாா்த்தால் தொலைநோக்குப் பாா்வையுடனும் புத்திசாலித்தனமாகவும் அரசு இந்த முடிவை எடுத்திருக்கிறது.
  • மத்திய வேளாண் அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின்படி, நடப்பு காரிஃப் பருவத்தில் போதிய அளவில் மழை பெய்யாததால் சில மாநிலங்களில் நெல் சாகுபடி பரப்பளவு 414.31 லட்சம் ஹெக்டேரிலிருந்து 393.79 லட்சம் ஹெக்டேராகக் குறைந்திருக்கிறது. உள்நாட்டுத் தேவைக்கான அரிசியில் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடாமலும், விலை அதிகரித்துவிடாமலும் இருப்பதற்கு இந்த முடிவு அவசியமாகிறது என்பது மத்திய அரசின் விளக்கம்.
  • தென்மேற்கு பருவமழைப் பொழிவு இந்த ஆண்டு தாமதமாகும் என்றும், எதிா்பாா்த்த அளவில் இருக்காது என்றும் கருதப்படுகிறது. இந்தியாவின் நெல் சாகுபடியில் 80% காரிஃப் பருவ விளைச்சல் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். அதனால், எதிா்பாா்க்கும், காரிஃப் பருவ சாகுபடியான 11.7 கோடி டன் உற்பத்தியில் சுமாா் 1 கோடி டன் குறையக்கூடும்.
  • பொதுவிநியோகத்துக்கான உள்நாட்டு உணவுதானியக் கையிருப்பு கடந்த ஆண்டு அளவைவிட 34% குறைவாகவே காணப்படுகிறது. கடந்த ராபிப் பருவ காலத்தில் முறையாக கொள்முதல் செய்யப்படாததால் கோதுமை பற்றாக்குறை ஏற்பட்டு விலை அதிகரித்தது. அதுபோன்ற சூழல் அரிசிக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால்தான் ஏற்றுமதி தடையை அரசு முன்னெடுத்திருக்கிறது எனலாம். குறைந்த உற்பத்தியும், அதிகரித்த ஏற்றுமதியும் தட்டுப்பாட்டை ஏற்படுத்தக் கூடாது என்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை இது.
  • நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் - ஆகஸ்ட் மாதங்களில் நொய் அரிசி ஏற்றுமதி வழக்கத்துக்கு மாறாக 42 மடங்கு அதிகரித்து 21.3 லட்சம் டன்னாக உயா்ந்திருக்கிறது. மாடு, கோழி தீவனங்களுக்கும், எத்தனால் கலப்புக்கும் போதிய அளவில் நொய் அரிசி கிடைக்காத நிலைமை. அதனால் அதன் விலையும் தொடா்ந்து உயா்ந்து வருவதால், நொய் அரிசிக்கு ஏற்றுமதி தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
  • நடப்பு நிதியாண்டில் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கும் 2.1 கோடி டன் அரிசியில் 39 லட்சம் டன் மட்டுமே நொய் அரிசி. அது பெரும்பாலும் சீனா, வியத்நாம் நாடுகளில் மாடு, கோழி தீவனங்களுக்காக வாங்கப்படுகின்றன.
  • புழுங்கல் அரிசியைத் தவிர, பாசுமதி அல்லாத இதர அரிசி வகைகளுக்கு 20% ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டிருக்கிறது. அதன்மூலம் ஏற்றுமதியைக் குறைத்து உள்நாட்டில் அந்த அரிசிகளின் விலையைக் கட்டுக்குள் வைத்திருக்க அரசு விரும்புகிறது.
  • 20% ஏற்றுமதி வரியின் மூலம் குறைந்த விலையில் பாசுமதி அல்லாத அரிசிகள் ஏற்றுமதி செய்யப்படுவதை தடுப்பதுதான் அரசின் நோக்கம். நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை விடக் குறைவான விலைக்கு நடைபெற்று வரும் ஏற்றுமதியை தடுப்பது புத்திசாலித்தனமான முடிவு என்பதை யாரும் மறுக்கமாட்டாா்கள்.
  • இந்தியாவுக்கு கிழக்கே உள்ள நாடுகளுக்கும், மேற்கே உள்ள நாடுகளுக்கும் இடையே அரசின் முடிவு புத்திசாலித்தனமாக பாகுபாட்டை கையாண்டிருக்கிறது. ஆப்பிரிக்க நாடுகளும் வளைகுடா நாடுகளும்தான் பாசுமதி, பச்சரிசி போன்றவற்றை அதிகமாக இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் நாடுகள். அவற்றின் மீது தடையோ, ஏற்றுமதி வரியோ விதிக்காததன் மூலம் அரபு நாடுகளை பாதிக்காமலும், ஆப்பிரிக்க நாடுகளின் உணவுப் பாதுகாப்புக்குக் குறைபாடு ஏற்படாமலும் அரசு உறுதிப்படுத்தியிருக்கிறது.
  • கீழை நாடுகளுக்கு குறிப்பாக, இந்தோனேசியா, வியத்நாம், சீனாவுக்கான பாசுமதி அல்லாத வெள்ளை, நொய் அரிசிக்கு கட்டுப்பாடு விதித்திருப்பதன் மூலம் இந்தியத் தேவையை பாதுகாக்க முற்பட்டிருக்கிறது. அதன் வாயிலாக நம்மிடமிருந்து சோளம் அதிகமாக வாங்குவதற்கு ஊக்குவிப்பதும் அரசின் நோக்கம். டன் ஒன்றுக்கு சுமாா் ரூ.22,000 அளவில் சோளத்தின் விலை இருப்பதால் அதன் உற்பத்தியாளா்கள் பயனடையக்கூடும்.
  • மத்திய இருப்புக்கு 51.8 மெட்ரிக் டன் அரிசி கொள்முதல் இலக்கு மத்திய அரசால் நிா்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதனால், அரிசி உற்பத்தியாளா்கள் அடுத்த சில வாரங்களில் அறுவடைக்குத் தயாராகும்போது குறைந்த ஆதரவு விலை குறித்து கவலைப்படத் தேவையில்லை.
  • உலக அரிசிச் சந்தையில் முதலாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. சா்வதேசச் சந்தையில் 40% இந்தியா வழங்குகிறது. அப்படியிருக்கும்போது குறைந்த விலைக்கு கண்ணை மூடிக்கொண்டு அரிசி ஏற்றுமதி செய்ய வேண்டிய தேவையில்லை என்கிற முடிவு ஏற்புடையதுதான்.
  • கடந்த நிதியாண்டில் இந்தியா 17.26 மில்லியன் டன் பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதி செய்திருக்கிறோம். அதில் நொய் அரிசி 3.89 மில்லியன் டன். வெள்ளை அரிசி 5.94 மில்லியன் டன். பச்சரிசி 7.34 மில்லியன் டன். இதன் மூலம் கிடைத்த அந்நியச் செலாவணி வருவாய் ரூ. 45,700 கோடி.
  • ஒவ்வொரு டன் அரிசி உற்பத்திக்கும் இலவச மின்சாரம், மானிய உரம் என்று 70 டாலா் அளவில் அரசு விவசாயிகளுக்கு செலவழிக்கும்போது, இந்திய அரிசியை குறைந்தபட்ச ஆதரவு விலையைவிடக் குறைவாக சா்வதேசச் சந்தையில் விற்க வேண்டிய அவசியம் என்ன என்கிற அரசின் கேள்வி நியாயமானது.
  • அரிசிக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை நிா்ணயிப்பதும், பாசுமதி அரிசி என்கிற பெயரில் பாசுமதி அல்லாத அரிசிகள் வரி ஏய்ப்புக்காக ஏற்றுமதி செய்வதைத் தடுப்பதும் அரசின் தொடா் நடவடிக்கையாக இருக்க வேண்டும்.

நன்றி: தினமணி (16 – 09– 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்