TNPSC Thervupettagam
February 17 , 2020 1792 days 841 0
  • அரிதினும் அரிதான நோய்கள் குறித்த தேசியக் கொள்கையின் மாதிரி வரைவை கடந்த மாதம் மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டிருக்கிறது. புள்ளிவிவரம் திரட்டுதல், நோய்களை அடையாளம் காணுதல், தகவல்களை ஆய்வு செய்தல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்த ஆக்கபூர்வ முடிவுகள் அந்த மாதிரி வரைவில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

அரிதான நோய்கள்

  • ஒருமுறை மட்டுமே செலவாகும் அரிதினும் அரிதான நோய்களுக்கு ரூ.15 லட்சம் வரை வழங்குவதற்கு மாதிரி வரைவு வழிகோலுகிறது.
  • உலகில் காணப்படும் நோய்களின், நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை கணக்கிலடங்காது. இவற்றில் சில நூறு நோய்களையும், அந்த நோய்க்கான காரணங்களையும் மட்டுமே நமது அறிவியல் ஆய்வுகள் அடையாளம் கண்டிருக்கின்றன. பல்லாயிரக்கணக்கான நோய்களும், நோய்க்கான காரணங்களும், நோய்க்கான அடையாளங்களும் இருந்தாலும்கூட அவை குறித்த அடிப்படைப் புரிதல்கூட இல்லாத அரிச்சுவடி நிலையில்தான் மனித இனம் இன்னும் இருந்து வருகிறது.
  • என்னவென்று சொல்ல முடியாத, அதற்கான காரணம் தெரியாத நோய்களை எப்படி அழைப்பது?
  • அதுபோன்ற நோய்களை அநாதை நோய்கள் (ஆர்ஃபன் டிஸீஸஸ்) என்று மேலை நாடுகளில் அழைக்கிறார்கள்.

மருத்துவம்

  • அநாதை நோய்களின் பட்டியலில் அரிதினும் அரிதான பல நோய்கள் காணப்படுகின்றன. அவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன வகையான மருத்துவத்தை மேற்கொள்வது, மருந்துகளை வழங்குவது என்பது புரியாமல் மருத்துவர்கள் விக்கித்து நிற்கும் சம்பவங்கள் பல்வேறு நாடுகளில் கடந்த பல ஆண்டுகளாக அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. அமெரிக்காவை எடுத்துக்கொண்டால், இரண்டு லட்சத்தில் ஒருவருக்குத்தான் இதுபோல அடையாளம் காண முடியாத நோய்ப் பாதிப்பு ஏற்படுகிறது.
  • இந்தியாவில் இதுவரை அநாதை நோய்களுக்கான அடையாளங்களையும், அவை குறித்த தகவல்களையும் நாம் திரட்டவில்லை. ஏனென்றால், அப்படியொன்று இருப்பது குறித்து யாரும் கவலைப்படவில்லை.

அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகள்

  • அமெரிக்காவைப் போன்ற குறைந்த மக்கள்தொகையுள்ள நாடுகளைப் போலல்லாமல், இந்தியாவில் அநாதை நோய்களை அடையாளம் காண முற்பட்டால் சில ஆயிரம் பேரில் ஒருவருக்குப் பாதிப்பு காணப்பட்டாலும்கூட ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
     தங்களுக்குத் தெரிந்த அளவில் உள்ள மருத்துவத்தைக் கையாண்டு நோயாளிகளை நமது மருத்துவர்கள் குணப்படுத்த முயற்சிக்கிறார்கள் என்றாலும், தங்களிடம் வரும் நோயாளிகளின் நோய்த்தொற்று குறித்த ஆய்வு ரீதியிலான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பவர்கள் இங்கே இல்லை.
  • நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதும், குறைவான எண்ணிக்கையில் மருத்துவர்கள் காணப்படுவதும் அதற்குக் காரணம். இந்த நிலையில்தான் இப்போது மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் நோய்களைப் பட்டியலிடும் பொறுப்பை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் ஒப்படைத்திருக்கிறது. புதிய மாதிரிக் கொள்கையில் அரிதினும் அரிதான நோய்கள் குறித்தும் (அநாதை நோய்கள்) குறிப்பிடப்பட்டிருக்கிறது.
  • உலக சுகாதார அமைப்புக்கு மிகப் பெரிய சவாலாக அமைகின்றன அநாதை நோய்கள். இந்த நோய்கள் குறித்த ஆய்வுகள் எந்தவிதத் தெளிவான முடிவையும் இதுவரை வழங்காததால், என்ன நோய் என்பது அடையாளம் காணப்படாமலேயே பல நோயாளிகள் மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

ஆராய்ச்சி...

  • இதுபோன்ற நோய்களை அடையாளம் காண்பதும் அவற்றுக்கான மருந்துகளை உருவாக்குவதும், மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களின் ஆராய்ச்சிப் பிரிவின் கடமை. ஆனால், மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் அதில் கவனம் செலுத்துவதில்லை.
     அரிதினும் அரிதான நோய்களால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு என்பதால் அதற்கான மருத்துவ வழிமுறைகளை ஆய்வு செய்து உருவாக்குவதும் மருந்துகளைத் தயாரிப்பதும் வணிக ரீதியில் லாபகரமானதாக இருப்பதில்லை. அப்படியே ஆய்வு செய்து மருந்துகளை உருவாக்கினாலும், சிகிச்சைக்கும் மருந்துக்குமான செலவு மிக அதிகமாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக, "கௌசர் நோய்' என்பதை எடுத்துக்கொண்டால் உலகில் இதற்கு மூன்றே மூன்று நிறுவனங்கள்தான் மருந்து தயாரிக்கின்றன.
  • பாதிக்கப்பட்ட நோயாளிகள் வாழ்நாள் முழுவதும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை குறிப்பிட்ட சுரப்பி நீரை அதிகரிக்கும் அந்த மருந்தை உட்கொள்ள வேண்டும்; உட்கொள்ளாவிட்டால் இறந்து விடுவார்கள். ஒருமுறை பயன்படுத்துவதற்கான அந்த மருந்தின் விலை ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை ஆகும்.
     இந்தியாவில் அநாதை நோய்கள் பிரச்னை நீதிமன்றத்தைச் சென்றடைந்திருக்கிறது.
  • கடந்த சில ஆண்டுகளாக அவ்வப்போது சில நோயாளிகள், "ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியல் சாசன சட்டப் பிரிவு 21 வழங்கியிருக்கும் உயிர் வாழும் உரிமை என்பது மருத்துவத்துக்கான உரிமையும்கூட' என்கிற வாதத்துடன் நீதிமன்றங்களை அணுகுகிறார்கள். சில நிகழ்வுகளில் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டுமென்று அரசுக்கு நீதிமன்றமும் உத்தரவிட்டிருக்கிறது.
  • மக்கள் கருத்தறிய விடப்பட்டிருக்கும் மாதிரி வரைவுக் கொள்கை இப்போதிருக்கும் நிலையில் ஏற்கப்பட்டால், நீதிமன்றத்தில் நிச்சயமாக அது விவாதப் பொருளாகும். அரசு வேண்டுமானால் கண்டறியப்படாத அநாதை நோய்களுக்கான சிகிச்சை வழங்குவதிலிருந்து தன்னை அகற்றி நிறுத்திக்கொள்ள முடியும். ஆனால், மனித இனத்தால் இந்தப் பிரச்னையிலிருந்து தப்பிவிட முடியாது. இதற்கு முடிவு கண்டாக வேண்டும்!

நன்றி: தினமணி (17-02-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்