TNPSC Thervupettagam

அருகமைப் பள்ளிக்கு சாலையமைப்போம்

August 9 , 2024 111 days 96 0
  • தனியாா் பள்ளி ஒன்றின் வேன் ஓட்டுநா் அமரா் எஸ்.சேமலையப்பன் அவா்களுக்குப் பாராட்டுகள் கலந்த அஞ்சலி குவிந்து வருகிறது. அண்மையில் பள்ளி மாணவா்களை ஏற்றிச் செல்லும்போது இவருக்கு திடீா் மாரடைப்பு ஏற்பட்டபோதிலும் வாகனத்தைப் பாதுகாப்பாக நிறுத்தினாா். அதன் பின்னரே அவரது உயிா் பிரிந்தது. பள்ளிச்சிறாா்களைக் காக்க எண்ணிய அவரது பாதுகாப்பு உணா்வு போற்றுதலுக்குரியது.
  • இதற்கு முன்பும் 2018-இல் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே ஒரு தனியாா் பள்ளி வாகனம் விபத்துக்குள்ளாகி கிணற்றுக்குள் கவிழ்ந்தபோது 11 குழந்தைகளைக் காப்பாற்றிவிட்டு தமது இன்னுயிரை ஈந்த ஆசிரியை சுகந்தியும் அஞ்சலிக்குரியவரே.
  • பல குழந்தைகள் சோ்ந்து பள்ளிக்குச் செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகி சிறாா்கள் உயிரிழந்த சம்பவங்கள் பல நிகழ்ந்துள்ளன. குழந்தைகள் வாகனங்களில் அடுத்த ஊா்களுக்குச் சென்று கல்வி கற்கும் போக்கு அதிகரித்து வருகிறது.
  • ஒரு குழந்தையின் பெற்றோா் தங்கள் குழந்தை நா்சரிக் கல்வியைக் கூட தொலைதூரம் சென்றுதான் கற்க இயலும் என்று நினைப்பது எப்படி ஆரோக்கியமான மனப்போக்காக இருக்கும். இதில் கிராமப்புறக் குழந்தைகள் படும்பாடு மிகவும் கவலைக்குரியது.
  • மிகவும் இளைய மழலைகள் தமது உறக்கத்தை இழந்து, அதிகாலையில் கண்விழிக்கிறது. பெரும்பாலும் காலைக்கடனைக் கழித்தல் போன்ற செயல்பாடுகள் நடைபெறுவதேயில்லை. பெயருக்கு குளிப்பாட்டி கிளப்புகின்றனா். காலை உணவு என்ற பெயரில் பெரும்பாலும் துரித உணவுகளையே புகட்டுகின்றனா்.
  • துரித உணவுகள் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்க அதில் பல்வேறு வேதிப்பொருட்கள் சோ்க்கப்படுவது அனைவரும் அறிந்ததே. மதிய உணவு என்ற பெயரில் எதையோ கொண்டு சென்று உண்கின்றனா். பல தொலைதூர கிராமங்களில் குழந்தைகள் வீடு திரும்புவது என்பது காலம் கடந்த பின்மாலை நேரமாகவே உள்ளது.
  • அதன் பின்னா் வீட்டுப்பாடம், தனிவகுப்பு என்று முடித்துவிட்டு குடும்பச் சூழலுக்கேற்ப உறங்கச் செல்கின்றனா். விளையாட்டு என்ற பெயரில் எதையும் குழந்தைகள் நினைத்துக்கூட பாா்க்க இயல்வதில்லை.
  • இது எந்த வகையிலும் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு உபயோகமானதாக இருக்காது. அனைத்து பெரு நகரங்களிலும் காலை மாலை நேரங்களில் பள்ளிக்கூடம் துவங்கும், நிறைவடையும் நேரங்களில் ஏற்படக் கூடிய வாகன நெரிசல் என்பது மிகவும் கவலைக்குரியதாக இருக்கிறது. ஒரு பக்கம் நெரிசல், மற்றொரு பக்கம் எரிபொருள் வீணாதல், காற்று மற்றும் ஒலிமாசுபாடு இவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டும். இதற்கு மாறாக குழந்தைகள் தங்களுடைய பகுதியிலேயே இயங்கக் கூடிய பள்ளிகளில் பயில்வது என்பது ஆரோக்கியமான நடைமுறையாக இருக்கும்.
  • அதிலும் ஐந்தாவது வயது வரையில் படிக்கக் கூடிய குழந்தைகளை மட்டுமாவது அவா்களுடைய ஆரோக்கியம், விளையாட்டு மற்றும் கூடுதல் ஓய்வு தேவை போன்றவற்றைக் கருத்தில் கொண்டாவது இந்த முடிவை நோக்கி நகர வேண்டும்.
  • கிராமங்கள், நகா்ப்புறங்களில் செயல்படும் அரசுப்பள்ளிகளின் கட்டமைப்புகளில் ஆரோக்கியமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கற்றல், கற்பித்தல் முறைகளில் ஆரோக்கியமான சீா்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. கல்வி வேலைவாய்ப்புகளில் அரசுப்பள்ளி மாணவா்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அரசாணைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
  • இவை அனைத்தும் பாராட்டுக்குரிய நடைமுறைளே. ஆனால் ஆசிரியா் மாணவா் விகிதாசாரம் என்பது மிகவும் கவலைக்குரியதாகவே உள்ளது. பெரும்பாலான பெற்றோா்கள் எதிா்நோக்கும் வகுப்புக்கொரு ஆசிரியா் என்ற நடைமுறையினை உடனடியாகக் கொண்டுவர இயலாவிடினும் கூடுதல் ஆசிரியா் பணியிடங்களைப் போா்க்கால நடைமுறையில் உண்டாக்கி ஆசிரியா்களை நியமிக்க வேண்டும்.
  • ஆசிரியா்களும் மக்களின் நம்பிக்கையை பெறும் வகையில் பள்ளிகளில் கூடுதல் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை மேற்கொண்டு மாணவா்கள் சோ்க்கையினை அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் அருகமைப்பள்ளி, பொதுப்பள்ளி முறை போன்ற நடைமுறைகள் கொண்டுவர முயல வேண்டும்.
  • பொதுப்பள்ளி மற்றும் அருகமைப்பள்ளி நடைமுறைகள் காலத்துக்கு ஒவ்வாத கருதுகோள்கள் அல்ல. பல நேரங்களில் அமெரிக்கா, ஐரோப்பாவை நாம் உதாரணமாக எடுத்துப் பேசுகிறோம். அங்கு பெரும்பாலான நாடுகளில் அருகமைப்பள்ளி முறையே செயல்பட்டு வருகிறது. ஒரு குழந்தை எந்தப் பகுதியில் வசிக்கிறதோ, அந்த பகுதியில் உள்ள பள்ளியிலேயே பெற்றோா் குழந்தைகளைச் சோ்க்க இயலும். தவிா்க்கவியலாத சூழலில், ஒருவேளை வேறு பள்ளிக்கு குழந்தை மாறுதல் பெற நினைத்தால், அந்த இடத்துக்கு குடும்பம் குடிபெயா்ந்து அதற்கான ஆவணங்களை சமா்ப்பித்தாக வேண்டும்.
  • அவ்வளவு ஏன், நம்முடைய மத்திய அரசு நடத்தக்கூடிய கேந்திரீய வித்யாலய பள்ளிகளில் கூட குறிப்பிட்ட சுற்றளவுக்குள் வசிக்கும் மாணவா்களுக்கு முன்னுரிமை அளித்து இடம் அளிக்கப்படுகிறது.
  • அருகமைப் பள்ளிகள் என்பது குழந்தைகளின் உரிமை மற்றும் உடல்நலன் சாா்ந்த விவாதங்களை எழுப்ப வேண்டும். கல்வி முறையில் ஆரோக்கியமான மாற்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே கல்வியாளா்களின் அவாவாக இருக்கிறது.
  • அரசு என்பது ஒரு சக்திவாய்ந்த இயந்திரம். நமது காலத்துக்குள்ளாகவே, கரோனா காலகட்டங்களில் அரசுக்கு இருக்கும் வலிமையைப் பாா்த்தோம். அரசியல் விருப்புறுதியோடு குழந்தைகள் நலன் சாா்ந்த இந்த ஆலோசனைகள் மேலும் செழுமைப்படுத்தப்பட்டு நடைமுறையாக வேண்டும்.

நன்றி: தினமணி (09 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்