- இரண்டரை நூற்றாண்டுகளுக்கு முன் - அதாவது 1776இல் அமெரிக்க குடியரசு உருவானதும், 1789இல் பிரெஞ்சு புரட்சி நிகழ்ந்ததும் ‘நவீன பொது மானுட வரலாறு’ அல்லது ‘உலக வரலாறு’ என்ற ஒரு சிந்தனைக்கு வித்திட்டன.
- வெகு காலமாக பல்வேறு வடிவங்களில், மொழிகளில் இயங்கிய மானுட அறவியல் சிந்தனைக்குச் ‘சுதந்திரம்’, ‘சமத்துவம்’, ‘சகோதரத்துவம்’ என்ற முழக்கம் புதிய வடிவத்தைத் தந்தது. இதன் பின் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நவீன தேசிய அரசுகள் திட்டவட்டமாக உருவானது பெரும் வரலாற்று நகர்வாகக் கொண்டாடப்பட்டது. குறிப்பாக பல்வேறு நகர அரசுகளாக, சிற்றரசுகளாக இருந்த இத்தாலியும், ஜெர்மனியும் தேசிய அரசுகளாக உருவானது உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
- தேசிய அரசுகளின் உருவாக்கம் என்பது பழைய மன்னராட்சி வடிவத்தை மாற்றி, சட்டத்தின் ஆட்சி என்ற குடியரசு, மக்கள் பிரதிநிதிகளின் அரசாங்கம் என்ற மக்களாட்சி ஆகியவற்றை உருவாக்கி, மக்களாட்சி குடியரசுகள் மலர வகை செய்தது. இதெல்லாம் மானுட தார்மீக எழுச்சியில் மிகப் பெரிய முன்னேற்றம் என்று நினைக்கும்போதே, தேசிய அரசுகளின் ஆதாரமாக விளங்கிய முதலீட்டிய குவிப்புகள் காரணமாக அவற்றினிடையே கடும் போட்டா போட்டியும், மோதல்களும் தோன்றின.
- மானுடத்தின் தார்மீக மறுமலர்ச்சிக்கும், அதனுடன் இணைந்தே பயணித்த முதலீட்டிய குவிப்பிற்கும் அடிப்படையில் தீவிர முரண்பாடு இருந்தது. தார்மீக, அற உணர்வு சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்று இலட்சியங்களை முழங்கினால் முதலீட்டியம் அமைதியாக அடிமைகளின் உழைப்புச் சுரண்டல், காலனியாதிக்கக் கொள்ளைகள், தொழிலாளர்களின் உழைப்புச் சுரண்டல், கண்மூடித்தனமான நுகர்வுப் பெருக்கம் (உதாரணம்: டீ, காபி, சக்கரை, புகையிலை, அபின்) ஆகியவற்றைச் செயல்படுத்தியது.
- இவற்றின் காரணமாக இருபதாம் நூற்றாண்டு இரண்டு முரண்பாடுகளின் களமானது. ஒருபுறம் தேசிய அரசுகளின் விரிவாக்க பேராசைகளால் உருவான போர்கள். மற்றொன்று அரசு மைய பொதுவுடமையா, சுதந்திரவாத தனியுடைமையா என்ற சித்தாந்த போர்.
- உலகின் பல பகுதிகளிலும் காலனிய ஆட்சியை நிறுவியிருந்த ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான இரண்டு உலகப் போர்கள் வரலாறு காணாத அழிவினைத் தோற்றுவித்தன. முதலில் 1914-1919 ஆகிய ஐந்தாண்டுகள் நடந்த முதல் உலகப் போரில், தரையில் ராணுவங்கள் மோதும் டிரென்ச் வார் என்பது முக்கியமாக இருந்தது என்றால், 1939-1945 ஆண்டுகளில் நடந்த போரில் வான்வழித் தாக்குதல், குடிமக்களைக் குண்டு வீசி தாக்குதல், குடியிருப்புகளை அழித்தல் ஆகியவை முதன்மை பெற்றன. குறிப்பாக ‘ஹோலகாஸ்ட்’ என்ற ஹிட்லரின் யூத இன அழிப்பும், ஹிரோஷிமா - நாகாசாகி நகரங்களின் மீது அமெரிக்கா வீசிய அணுகுண்டுகள் உருவாக்கிய கோரப்பேரழிவும் மானுட நாகரிகம் மேன்மையுறுகிறது என்ற பாவனையை முற்றிலும் தகர்த்து அழித்தன என்றால் மிகையாகாது.
- இரண்டாம் உலகப் போருக்குப் பின் காலனி ஆதிக்கத்திலிருந்து உலக நாடுகள் பலவும் விடுதலை பெற்றதும், இந்தியாவில் காந்தி உருவாக்கிய ஆன்மிக மறுமலர்ச்சியால் உருவான அகிம்சை, சகவாழ்வு குறித்த நம்பிக்கைகளும், சீனாவில் மாவோவின் குடியானவப் புரட்சியால் உருவான பொதுவுடமை அரசும், ஐக்கிய நாடுகள் சபையின் தோற்றமும், வேகமெடுத்த அறிவியல் - தொழில்நுட்ப வளர்ச்சிகளும் மீண்டும் ஓரளவு நம்பிக்கை துளிர்க்க காரணமாயிருந்தன. அதாவது, மானுடத்தால் தன்னுடைய அறிவாற்றலையும், அறவுணர்வையும் பிணைத்து பண்பும், பகிர்தலும் கொண்ட, அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்த மானுட வாழ்வை உலகளாவிய அளவில் உருவாக்க முடியும் என்ற எண்ணம் பலருக்கு ஏற்பட்டது.
- ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு முன்னெடுப்புகளை பரிசீலித்தால் இந்த உண்மை விளங்கும்.
- இருப்பினும், 1950 முதல் 1990 வரையிலான இந்தக் காலகட்டம் அமெரிக்க, ரஷ்ய வல்லரசுகளுக்கு இடையிலான பனிப்போரின் விளைவால் பல்வேறு அநீதிகளும், வன்முறையும் அரங்கேறக் கண்டது. அதில் பிரதானமானது வியட்நாமை வடக்கு தெற்காக பொதுவுடமை, தனியுடமை சித்தாந்தங்கள் பங்கு போட்டுக்கொள்ள அமெரிக்கா நேரடியாக ராணுவத்தை அனுப்பி ஹோசிமின் தலைமையிலான வடக்கு வியட்நாமின் மீது கொடும் தாக்குதலைத் தொடுத்ததுதான்.
- இது 1960களின் இறுதியில் உலகெங்கும் மாணவர் கிளர்ச்சிகளை உருவாக்கியது. முதலீட்டிய குவிப்பு, மொத்தத்துவ அரசு ஆகிய இரண்டு வடிவங்களின் ஆதிக்கத்திற்கு எதிராகவும் மானுட தன்னுணர்வை கிளர்ந்தெழச் செய்ய வேண்டிய தேவையைச் சிந்தனையாளர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் உணர்ந்தார்கள். இந்த எழுச்சியின் ஒரு நல்விளைவாக தென்னாப்பிரிக்காவில் நிறவெறி அரசு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு அங்கே மக்களாட்சி குடியரசு உருவானது.
- இந்தச் சூழலின் அடுத்த கட்ட நகர்வாக, சீனா அமெரிக்க முதலீட்டுக்கு வாயில்களைத் திறந்துவிட்டது. மக்களின் குறைந்தபட்ச வாழ்வாதாரத்தை உறுதிசெய்த சீனா, அரசின் மேற்பார்வையில் முதலீட்டிய குவிப்பினையும், உற்பத்தி நுகர்வுப் பெருக்கத்தையும் அனுமதித்தது. அது மெள்ள மெள்ள சீனாவை பொருளாதார வல்லரசாக மாற்றியது. அதேசமயம், ரஷ்யாவின் உள்நாட்டுப் பொருளாதாரம் பெரிதும் சீர்குலைந்ததால் கோர்பசேவ் தலைமையில் கிளாஸ்நாஸ்ட், பெரஸ்தொரய்கா என்று தொடங்கி இறுதியில் பொதுவுடமை அரசு வீழ்ந்து, சோவியத் ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகள் தனி நாடுகளாயின.
- பனிப்போர் முடிந்து உலகம் முழுவதும் சுதந்திரவாத தனியுடமையே செல்நெறியாகிவிட்டதாகக் கருதப்பட்டது. மானுட வரலாற்றுப் பயணத்தின் இறுதி இலக்கே எட்டப்பட்டதாக ஃபிரான்சிஸ் ஃபூகயாமா நூல் எழுதினார். இடதுசாரி தத்துவவாதி அண்டோனியோ நெக்ரி, தேசிய அரசுகளின் காலம் முடிந்துவிட்டது என்றும் உலகப் பேரரசு உருவாகிவருவதாகவும், அது தாற்காலிமாக அமெரிக்காவால் தலைமையேற்று நடத்தப்பட்டாலும், உலகெங்கும் மக்கள்திரள் வடிவங்கள் பேரரசு ஆதிக்கத்திலிருந்து விடுபட்டுப் புத்துலகை உருவாக்கப் போராடும் என்றெல்லாம் சிந்தனை செய்தார்.
- கணினி யுகத்தின் எழுச்சி, வோர்ல்ட் வைட் வெப் என்ற உலகளாவிய தகவல் வலைப்பின்னல் இவ்வாறான புதிய கோளவியல் சிந்தனைக்கு உரமிட்டது.
- இருபத்தோராம் நூற்றாண்டின் முதல் கால்பாகம் நிறைவுறும் இந்த நேரத்தில் இந்த உலகப் பொதுமை கணிப்புகளெல்லாம் முற்றிலும் பொய்த்துவிட்டன என்றுதான் கூற வேண்டும். இருபதாம் நூற்றாண்டின் தொடர்ச்சியாக தேசிய அரசுகளிடையேயான வல்லாதிக்கப் போட்டி மீண்டும் கூர்மையடைந்துள்ளது. என்ன வித்தியாசமென்றால் இப்போது அப்பட்டமான சுயநலமே வரலாற்று விசை என்று கூறப்படுவதுதான்.
- அறம், தர்மம் போன்ற உணர்வுகளெல்லாம் அநாவசியம் என்ற எண்ணம் மானுடத்தின் ஒட்டுமொத்த அழிவுக்குக் கட்டியம் கூறுகிறது. மானுட அறம் அடைந்துள்ள வீழ்ச்சியினை புரிந்துகொள்ள இரண்டு சர்வதேசப் பிரச்சினைகளை நாம் ஆராய்ந்தால் போதும். ஒன்று ரஷ்ய - உக்ரைன் போர். இரண்டு காஸாவில் இஸ்ரேல் நிகழ்த்தும் இனப்படுகொலை.
முடிவுறா யுத்தம்: ரஷ்ய - உக்ரைன் போர்
- இன்றைய உலக அரசியலின் முக்கியமான அம்சம் அணு ஆயுதங்கள் வைத்துள்ள நாட்டின் மீது ராணுவ தாக்குதல் தொடுக்க முடியாது என்பதுதான். சோவியத் ஒன்றியத்திலிருந்து முப்பதாண்டுகளுக்கு முன்னால் உக்ரைன் பிரிந்தபோது, அதில் நிறுவப்பட்டிருந்த அணு ஆயுத ஏவுகணைகளை ரஷ்யா அகற்றி எடுத்துக்கொண்டது.
- ரஷ்யாவின் அங்கமாகவே இருநூறு ஆண்டுகளாக இருந்துவந்த உக்ரைன் அதனுடன் அணுக்கமான உறவுகொண்ட நாடாகவே இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கேற்றபடி ரஷ்ய ஆதரவு அரசியல் சக்திகளே உக்ரைனை ஆண்டுவந்தன. நாளாவட்டத்தில் அமெரிக்க - மேற்குலக ஆதரவு சக்திகள் தலையெடுத்தன.
- உள்நாட்டு அரசியலில், முரண்களில் வெளிநாட்டு தலையீடு மறைமுகமாகவும், நேரடியாகவும் தொடங்கியது. விளாதிமீர் புடின் ரஷ்யாவின் மக்களால் ‘தேர்ந்தெடுக்கப்பட்ட’ சர்வாதிகாரியாக நிலைபெற்றவுடன், அவர் உக்ரைன் மேற்குலக நாடுகளின் கைப்பாவையாக மாறுவது, நேட்டோ கூட்டமைப்பின் அங்கமாவது, ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு நல்லதல்ல, அதனை ஏற்க முடியாது என வெளிப்படையாகவே பல முறை கூறினார். ஆனாலும் மேற்கத்திய அரசுகள் ரஷ்யாவைத் தனிமைப்படுத்த, பலவீனப்படுத்த விரும்பின.
- முதலில் ரஷ்யா உக்ரைனின் சில பகுதிகளை 2014ஆம் ஆண்டு கைப்பற்றியது. அதன் பின்னரும், உக்ரைன் மேற்கு நாடுகள் பக்கம் சாய்ந்ததால் இரண்டாண்டுகளுக்கு முன் நேரடியாகவே உக்ரைன் மீது போர் தொடுத்தது. புடினை சர்வாதிகாரி, ஆக்கிரமிப்பாளர் என்று மேற்கத்திய நாடுகள் கண்டித்தன. ஆனால், சீனா புடினுக்கு ஆதரவாக நின்றது. ரஷ்யாவைத் தாக்கினால் அணு ஆயுதப் போர் தொடங்கும் என்பதால் மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு பெரிய அளவில் ஆயதங்களைத் தருகின்றன.
- ரஷ்யாவால் பெருத்த சேதமின்றி உக்ரைனைக் கைப்பற்ற முடியாது. உக்ரைனாலும் ரஷ்யாவை முற்றிலும் முறியடிக்க முடியாது. இந்த நிலையில் போர் தொடர்ந்து நடந்துவருகிறது. இருபுறமும் தாக்குதல்கள் தொடர்கின்றன. உயிர்ச்சேதம், பொருட்சேதமும் தொடர்கிறது.
- ரஷ்யாவின் மீது பொருளாதரத் தடைகள் விதிக்கப்பட்டன. ஆனால், சீனாவின் உதவியுடன் ரஷ்யா அதனை சமாளித்துவிட்டது. சீனா மட்டுமன்றி, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இந்த நெருக்கடியில் ரஷ்யாவிடமிருந்து மலிவு விலையில் எண்ணெய் வாங்கலாம் என்றுதான் நினைக்கின்றனவே தவிர, ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைக் கண்டித்து அதனைத் தனிமைப்படுத்த வேண்டும் என நினைப்பதில்லை. பிற அணு ஆயுத நாடுகளான வட கொரியா, ஈரான் ஆகியவையும் ரஷ்யா - சீனா அணியில்தான் உள்ளன.
- இவ்வளவு தூரம் மானுட சிந்தனை வளம்பெற்ற பிறகும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண்பதும் சாத்தியமாக இல்லை என்பதுதான் சோகம். உலகம் தன் கண் எதிரிலேயே மீண்டும் உலகப் போரை நோக்கிச் செல்வதைத் தடுக்க முடியாமல்தான் உலகின் குடிமைச் சமூகம் இருக்கிறது. இந்திய வல்லுநர்கள் நாளிதழ்களில் வெளிப்படையாகவே இந்தியா தனக்கென்ன ஆதாயம் என்றுதான் பார்க்க வேண்டுமே தவிர, நேரு போல அணிசேரா நாடுகள் என்றெல்லாம் அபத்தக் கனவு காணக் கூடாது என்று எச்சரிக்கின்றனர்.
காஸா இனப் படுகொலை
- ஹிட்லர் யூதர்களை இனப்படுகொலை செய்ததால் யூதர்களுக்கென்று ஒரு நாட்டை உருவாக்கின இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள். அது யூதர்களுக்கு கடவுளால் வாக்களிக்கப்பட்டதாக நம்பப்படும் பாலஸ்தீனத்தில் உருவானது. அந்த தொன்ம வரலாற்றுக்கும், சமகாலத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் அங்கே பாலஸ்தீனியர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்துவந்தார்கள். புதிதாக உருவான இஸ்ரேல் பாலஸ்தீனியர்களுடன் இணக்கமான உறவை மேற்கொள்ளவில்லை. திடீரென தங்கள் நிலத்தில் வந்து குடியேறும் யூதர்களைப் பாலஸ்தீனியர்களும் விரும்பியிருக்க முடியாது.
- அவர்களிடையே நல்லுறவை உருவாக்கும் எந்தச் சக்தியும், ஆற்றலும் மானுட சமூகத்திற்கு இருக்கவில்லை. இப்படிச் செயற்கையாக இஸ்ரேல் எந்த நாட்டை உருவாக்குவதை காந்தி உள்பட உலகின் அறவுணர்வாளர்கள் பலரும் ஏற்கவில்லை. ஆனால், மேற்கத்திய ஏகாதிபத்திய மனப்போக்கு யார் பேச்சைத்தான் கேட்கும்.
- எழுபத்தைந்து ஆண்டுகளாக பல போர்கள், போராட்டங்கள், பேச்சு வார்த்தைகள், உடன்பாடுகள் எல்லாவற்றிற்கும் பிறகும் இஸ்ரேல் பாலஸ்தீனியர்களுக்கான சுயாட்சி பிரதேசங்களை அங்கீகரிக்க மறுக்கிறது. யூதர்களும், பாலஸ்தீனியர்களும் சேர்ந்து மொத்தமாகவே ஒன்றரைக் கோடி பேர்தான். ஆனால், அவர்கள் அந்த நிலப்பகுதியைப் பிரித்துக்கொண்டு ஒற்றுமையாக வாழ வகை செய்ய முடியவில்லை என்றால் எத்தனை பல்கலைக்கழங்கள் இருந்தும், ஆயிரக்கணக்கான அறவியல் நூல்கள் இருந்தும் என்ன பயன் என்பதுதான் கேள்வி. அதனால்தான் மேற்கத்திய பல்கலைக்கழகங்கள் பலவற்றிலும் மாணவர்கள் கொதித்தெழுந்தார்கள். ஆனால், அமெரிக்கா வெட்கமின்றி இஸ்ரேலின் கண்மூடித்தனமான இனப்படுகொலையை ஆதரிக்கிறது.
அது என்ன இனப் படுகொலை?
- காஸா பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் என்ற தீவிரவாத அமைப்பு இஸ்ரேலின் புகுந்து இரக்கமற்ற கொலைகளைச் செய்தது. அதனை நிச்சயம் உலக மக்கள் அனைவரும் கண்டித்தார்கள். அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு தீவிரவாத தாக்குதல் இல்லை என்றார்கள். ஆனால், ஏன் எழுபதாண்டுகளாக அரசியல் பிரச்சினை தீர்க்கப்படாமல் இருக்கப்படுகிறது என்பதில்தான் வரலாற்றுப் புதிர் அடங்கியுள்ளது.
- அது எதுவானாலும், ஹமாஸ் அமைப்பினர் காஸாவின் மக்கள் அனைவராலும் ஆதரிக்கப்படுபவர்கள் கிடையாது. அந்த அமைப்பினரின் செயல்பாட்டுக்கு காஸாவில் வசிக்கும் இருபது லட்சம் பாலஸ்தீனியர்களையும் கொன்று குவிக்க முடியாது. இஸ்ரேல் அவ்வாறு செய்வதைத்தான் இனப்படுகொலை என்று உலகம் முழுவதும் சிந்தனையாளர்கள், மாணவர்கள் கண்டிக்கிறார்கள். ஆனால், அரசாங்கங்கள் வேடிக்கை பார்க்கின்றன.
- அரசியல் பிரச்சினைக்கு எப்படி ஹமாஸின் வன்முறை தீர்வில்லையோ, அதேபோலத்தான் இஸ்ரேலின் இனப்படுகொலையும் தீர்வல்ல. ஹிட்லரின் யூத இனப்படுகொலையைக் காரணம் காட்டி உருவாக்கப்பட்ட இஸ்ரேல் இன்று பாலஸ்தீனியர்களை இனப்படுகொலை செய்வதன் மூலம் தன் வரலாற்று நியாயத்தை இழந்து நிற்கிறது. இந்த உண்மையை எடுத்துரைத்து பேச்சு வார்த்தை மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காணும் ஆற்றலை உலக நாடுகளின் அரசுகள் இழந்து நிற்கின்றன.
- ஏனெனில், எல்லா நாடுகளிலும் ஆளும் வர்க்கத்திற்கு அவர்கள் சுயநலமே பெரிதாக இருக்கிறது. இஸ்ரேலைக் கண்டித்து மேற்குலக நாடுகளைப் பகைத்துக்கொள்ள இந்தியா உள்பட எந்த நாடும் தயாராக இல்லை. ஒப்புக்கு கண்டனங்களை தெரிவிப்பதுதானே தவிர அதில் ஆத்மார்த்தமில்லை. ஈரான், சீனா உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலைத் தனிமைப்படுத்தி தாக்குவதற்கான வாய்ப்பினை எதிர்நோக்கியுள்ளன என்று அஞ்ச வேண்டியுள்ளது. பாலஸ்தீனியர்களை அழித்துவிட்டு இஸ்ரேல் நிம்மதியாக வாழ்ந்துவிட முடியாது.
- ஒட்டுமொத்தத்தில் உலக வல்லரசுகள் மீண்டும் அணிசேர்க்கையை தொடங்கிவிட்டன. அனைவரும் சேர்ந்து சூழலியல் சீர்கேட்டிலிருந்து ஒட்டுமொத்த மானுட அழிவிலிருந்து காத்துக்கொள்ள இயங்க வேண்டிய நேரத்தில், மீண்டும் ஒரு உலகப் போருக்கு, அநேகமாக அணு ஆயதப் போருக்கு ஒத்திகை பார்க்கிறார்கள் என்றுதான் தோன்றுகிறது.
- முதலீட்டிய குவிப்பு, பொருளாதர வளர்ச்சி என்ற மாயையில் சிக்குண்ட உலகை நாடுகளை ஆளும் சக்திகளுக்கும், அறம் தார்மீகம் போன்ற கருத்தாக்கங்களுக்கும் அதிக தொடர்பு இருப்பதாக நம்ப முடியவில்லை. இந்த நிலையில்தான் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அரிய அறவியல் கருத்துக்களை போதிக்க முயல்கிறார்கள். அவர்கள் சொற்களின் வெறுமை அவர்களைச் சுடுகிறது. தத்துவத்தின் ஆன்மா நூலகங்களின் இருட்பகுதிகளில் சுருண்டு கிடக்கிறது. ‘வளர்ச்சி! ஜிடிபி!!’ ‘வளர்ச்சி! ஜிடிபி!!’ என்ற பேயோசை உலகை நிறைக்கிறது.
நன்றி: அருஞ்சொல் (02 – 06 – 2024)