TNPSC Thervupettagam

அருண் கோயல் ராஜிநாமாவும் விடை தெரியாத கேள்விகளும் தேர்தல் ஆணையத் தலைவலி

March 11 , 2024 311 days 166 0
  • மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் பற்றி ஆய்வு செய்வதற்காக மார்ச் 12 ஆம் தேதி செவ்வாய்க் கிழமை ஜம்மு – காஷ்மீர் மாநிலம் செல்லத் திட்டமிட்டிருந்தார் தேர்தல் ஆணையர் அருண் கோயல்.
  • ஒவ்வொரு மாநிலமாக தலைமைத் தேர்தல் ஆணையருடன் ஆய்வுக்காகச் சென்று வந்து கொண்டிருந்த நிலையில், மக்களவைத் தேர்தல் அறிவிக்க ஒரு வார காலம்கூட இல்லாத இக்கட்டான தருணத்தில் திடீரென அருண் கோயல் ராஜிநாமா செய்திருக்கிறார்.
  • கோயலின் ராஜிநாமாவை உடனடியாக ஒரே நாளில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூவும் ஏற்றுக்கொண்டுவிட்டார்.
  • 1985 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அணியைச் சேர்ந்தவரான அருண் கோயலின் பதவிக் காலம், உள்ளபடியே தேர்தல் ஆணையத்தில் 2027 ஆம் ஆண்டு டிசம்பர் 7 ஆம் தேதிதான் முடிவடைகிறது.
  • கடந்த 2022 நவம்பர் 21 ஆம் தேதிதான் தேர்தல் ஆணையத்தில் அருண் கோயல் இணைந்தார். 15 மாதங்களே முடிந்த நிலையில் திடீரென பதவி விலகியிருக்கிறார்.
  • ஏற்கெனவே, அரசியல் கட்சிகளின் தேர்தல் நன்கொடைப் பத்திரங்கள் தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் அதிரடியான கட்டங்களைக் கடந்துகொண்டிருக்கிறது. பி.எம். கேர்ஸ் நிதி பற்றியும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ‘புதிய தலைவலியாக’ அருண் கோயல் ராஜிநாமா நடந்திருக்கிறது.
  • தற்போது தலைமைத் தேர்தல் ஆணையராக இருக்கும் ராஜீவ் குமார், வரும் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஓய்வு பெறவிருக்கிறார். அவர் ஓய்வு பெறும்போது, தானாகவே தலைமைத் தேர்தல் ஆணையராக பொறுப்பேற்று, தன்னுடைய பதவிக் காலம் முடியும் வரையிலும் தொடர்ந்திருப்பார் அருண் கோயல்.
  • இத்தகைய சூழ்நிலையில்தான் அருண் கோயல் திடீரென ராஜிநாமா செய்துவிட்டிருக்கிறார். ராஜிநாமாவுக்கான காரணம் எதுவும் உடனடியாகத் தெரியவில்லை.
  • ஏற்கெனவே, கடந்த பிப்ரவரியில் தேர்தல் ஆணையர் அனூப் சந்திர பாண்டே, 65 வயதானதால், ஓய்வு பெற்றதன் காரணமாக, ஒரு தேர்தல் ஆணையர் பதவி காலியாக இருக்கிறது. அருண் கோயலின் ராஜிநாமாவைத் தொடர்ந்து, தற்போது இருப்பது தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டுமே. இரு இடங்கள் காலியாகிவிட்டன.
  • உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டில், மிகப் பெரிய ஜனநாயகக் கடமையை மக்கள் நிறைவேற்ற வேண்டியுள்ள சூழலில் - மக்களவைக்கான தேர்தலை விரைவில் அறிவிக்க வேண்டிய நிலையில், நாடு முழுவதும் இதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கும் நிலையில், இந்தத் தேர்தலை நடத்த வேண்டிய ஆணையத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஒருவரைத் தவிர மற்ற இரு இடங்களும் காலியாகிவிட்டன.
  • இந்த இரு காலிப் பணியிடங்களுக்கும் விரைவில் தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட வேண்டியிருக்கிறது (மார்ச் 15 கூட்டம் நடைபெறவுள்ளதாகத் தகவல்).
  • கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோரைக் கொண்ட குழுவே தலைமைத் தேர்தல் ஆணையரையும் தேர்தல் ஆணையர்களையும் தெரிவு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
  • எனினும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்குப் பதிலாக பிரதமர் நியமிக்கும் மத்திய அமைச்சர் ஒருவர் எனத் திருத்தம் செய்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சட்டம் நிறைவேற்றிவிட்டது.
  • கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டம் 2023-ன்படியே, தற்போதுள்ள இரு தேர்தல் ஆணையர் பணியிடங்களும்  நிரப்பப்படவுள்ளன.
  • மத்திய சட்டத் துறை அமைச்சர் தலைமையில் இரு மத்திய செயலர்களைக் கொண்ட தேடுதல் குழு, தேர்தல் ஆணையர்களுக்கான பெயர்ப் பட்டியலை முடிவு செய்யும்.
  • புதிய சட்டத்தின்படி, பிரதமர், பிரதமரால் நியமிக்கப்படும் மத்திய அமைச்சர் ஒருவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரைக் கொண்ட தேர்வுக் குழுவே இரு புதிய தேர்தல் ஆணையர்களின் பெயர்களை இறுதி செய்யும்.
  • இன்றைய சூழ்நிலையில், தேர்வுக் குழுவின் மூன்று உறுப்பினர்களில் பிரதமர் உள்பட இருவர் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஆளுங்கட்சி நினைப்பவர்கள்தான் தேர்தல் ஆணையராக வர முடியும்.
  • தேர்தல் ஆயத்தப் பணிகள் பற்றி ஆய்வுகள் மேற்கொள்வதற்காக வரும் 12 ஆம் தேதி ஜம்மு – காஷ்மீர் செல்லத் திட்டமிட்டிருந்த நிலையில் அருண் கோயல் ராஜிநாமா செய்திருப்பது பலருக்கும் புரியாத புதிராக இருக்கிறது. இவ்வாறு உடனடியாக, ராஜிநாமா செய்யும் அளவுக்கு என்ன நடந்திருக்கும் என்பதை யாராலும் ஊகிக்க முடியவில்லை.
  • தேர்தல் ஆணையத்தில் ஒற்றை உறுப்பினர் மட்டுமே இருப்பதைத் அரசியல் சட்டத்தின் 324 ஆவது பிரிவு அனுமதிக்கிறது. ஆனாலும், 1993 ஆம் ஆண்டிலிருந்தே ஆணையம் எப்போதும் ஒற்றை உறுப்பினருடன் இருந்ததில்லை.
  • உள்ளபடியே மத்திய அரசு செயலர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்த 24 மணி நேரத்தில் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டவர்தான் இந்த அருண் கோயல் என்பது குறிப்பிடத் தக்கது.
  • மத்திய அரசில் கனரகத் தொழில்கள் துறைச் செயலராக இருந்த அருண் கோயல், 2022 நவ. 18 ஆம் தேதி பதவியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.  ஒரு நாளுக்குப் பிறகு தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். அடுத்த சில நாள்களில் நவ. 21 ஆம் தேதி பதவிப் பொறுப்பேற்றார்.
  • தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமிக்கப்பட்டபோதே,  வழக்கமான நடைமுறைகள் எதுவும் கடைப்பிடிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டு அவர் நியமனத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கொன்றை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு தொடுத்தது. எனினும், ஏற்கெனவே இந்த நடைமுறைகளை அரசியல் சாசன அமர்வு பரிசீலித்துள்ள நிலையில் தலையிடுவதில்லை என்று உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. தவிர, அருண் கோயல் நியமனத்தில் எதற்காக இவ்வளவு அவசரம் காட்ட வேண்டும் எனத் தொடுக்கப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் கடந்த ஆகஸ்டில் தள்ளுபடி செய்துவிட்டது.
  • இவருடைய நியமனத்தை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட வழக்கில் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றம் தேர்தல் ஆணையர்களைத் தெரிவு செய்வதில் சுயேச்சையான நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. எனினும், அருண் கோயல் நியமனம் தொடர்பான கோப்புகளைப் பெற்றுப் பரிசீலித்த நியமனம் தொடர்பாகக் கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டது.
  • அருண் கோயல் பெரும்பாலும் ஏற்றிருந்த பதவிகளைக் குறுகிய காலங்களே வகித்திருக்கிறார். தில்லி வளர்ச்சி ஆணையத்தின் துணைத் தலைவராகத் தொடங்கிய அவர், கலாசாரத் துறைச் செயலராக இருந்திருக்கிறார். பின்னர் அமிர்த  மகோற்சவம் கொண்டாட்டங்களுக்கான ஆயத்தப் பணிகளைக் கவனித்துக் கொண்டார். பதவி விலகும்போது கனரகத் தொழில்கள் துறைச் செயலராக இருந்தார்.
  • கடந்த 4  ஆண்டுகளில் தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்கக் கூடிய நிலையில், பதவியிலிருந்து விலகும் இரண்டாவது தேர்தல் ஆணையர் அருண் கோயல். பெரிய குழப்பமும் கேள்விக்குறியுமாக மாறியிருக்கிறது அருண் கோயலின் விலகல்.
  • இதற்கு முன்னர், 2020-ல் தேர்தல் ஆணையராக இருந்த அசோக் லாவாசா, பிலிப்பின்ஸைத் தலைமையிடமாகக் கொண்ட ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்பதற்காக என்று தெரிவித்துப் பதவியிலிருந்து ராஜிநாமா செய்தார்.  தேர்தல் விதிமுறை மீறல் குற்றச்சாட்டுகளிலிருந்து பிரதமர் நரேந்திர மோடியை விடுவிக்கும் தேர்தல் ஆணையத்தின் முடிவுகளுடன் அவர் இணங்கிச் செல்லவில்லை என்பதாக அப்போது பேசப்பட்டது.
  • அருண் கோயல் ராஜிநாமா செய்துள்ள விதமும் சூழலும்கூட பெரும் குழப்பமாகவும் கமுக்கமானதாகவும் தோன்றுகிறது.
  • ராஜிநாமா செய்வதற்கு முந்தைய நாளான மார்ச் 7 ஆம் தேதி வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருக்கிறார் அருண் கோயல். வெளியுறவுத் துறை ஒழுங்கு செய்திருந்த பன்னாட்டு ஊடகத்தினருடனான உரையாடலில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் கோயலும் பங்குகொண்டார்.
  • முன்னதாக, மார்ச் 4, 5 தேதிகளில் தேர்தல் ஆணையத்தின் வழக்கமான ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்பதற்காகத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருடன் மேற்கு வங்கத்தின் கொல்கத்தா நகரில் முகாமிட்டிருந்தார் கோயல். இந்தப் பயணத்துக்கு முன்னரே தனக்கு ஏதோ உடல்நலக் குறைவு என்பதாக அருண் கோயல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், மார்ச் 4 ஆம் தேதி தேர்தல் ஆணைய ஆய்வுக் கூட்டங்கள் இரவு 8 மணி வரைக்கும் நீடித்திருக்கின்றன. இந்தக் கூட்டங்களில் அருண் கோயலும் பங்கேற்றிருக்கிறார்.
  • இந்த நிலையில் 5 ஆம் தேதி காலையில் கோயல் தங்கியிருந்த விடுதிக்கு டாக்டர் வரவழைக்கப்பட்டதாகவும் அவர் மருந்துகள் எடுத்துக்கொள்ளத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகத்தான் அன்று மதியம் கொல்கத்தாவில் நடந்த தேர்தல் ஆணையர்களின் செய்தியாளர் சந்திப்புக்கு அருண் கோயல் வரவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், தலைமைத் தேர்தல் ஆணையருடனான ‘கருத்து வேறுபாடு’தான் காரணம் என்றும் கூறுகிறார்கள்.
  • இந்த செய்தியாளர்கள் சந்திப்புக்குப் பிறகு தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் ஆணைய அலுவலர்களுடன் ஒரே விமானத்தில்தான் கொல்கத்தாவிலிருந்து தில்லி திரும்பியிருக்கிறார் அருண் கோயல்.
  • இதனிடையே, தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கும் அருண் கோயலுக்கும் இடையேயான ‘கருத்து வேறுபாட்டை’ப் போக்க முயற்சிகள் நடைபெற்றதாகவும் ஆனால், ராஜிநாமா செய்வதில் அருண் கோயல் உறுதியாக இருந்துவிட்டதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • மார்ச் 8 ஆம் தேதி மத்திய உள்துறைச் செயலர் அஜய் பல்லாவுடன் தேர்தல் ஆணையம் நடத்தவிருந்த ஆலோசனைக் கூட்டத்தில் அருண் கோயலும் பங்கேற்றிருக்க வேண்டும். இந்தக் கூட்டத்தில்தான் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி விரிவாக ஆய்வு செய்யப்பட்டு, எத்தனை கட்டங்களாக, என்னென்ன தேதிகளில் தேர்தல் வாக்குப் பதிவுகள் நடத்தலாம் என்பது பற்றியெல்லாம் இறுதி செய்யப்படும்.
  • ஆனால், தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கே தேர்தல் ஆணையர் அருண் கோயல் வரவில்லை; குடியரசுத் தலைவருக்கு நேரடியாக ராஜிநாமா கடிதத்தை அனுப்பிவிட்டார். தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு ராஜிநாமா கடித நகல்கூட அனுப்பப்படவில்லை. அவருக்கு அதுபற்றிய தகவலே தெரிவிக்கப்படவில்லை எனத் தகவலறிந்த வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. ராஜிநாமாவுக்கு எந்தக் காரணமும் தெரிவிக்கப்படவில்லை. உடனடியாக குடியரசுத் தலைவரும் ஏற்றுக்கொண்டுவிட்டார்.
  • அருண் கோயலின் கருத்தை அறிய பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து முயன்றுவந்த போதிலும் இதுவரையில் அவரிடமிருந்து எவ்வித பதிலும் கிடைக்கப் பெறவில்லை. அவராகவும் எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை.
  • அருண் கோயல் ராஜிநாமா செய்தது ஏன்?
  • ராஜிநாமா செய்வதில் இவ்வளவு அவசரம் ஏன்?
  • அவராக ராஜிநாமா செய்தாரா? யாரேனும் அறிவுறுத்தி ராஜிநாமா செய்தாரா?
  • அவர் பதவியில் தொடருவதில் ஏதேனும் அச்சுறுத்தல் இருந்ததா?
  • ஒரு வாரத்துக்குள் தேர்தல் அறிவிக்கப்பட வேண்டிய நிலையில் ராஜிநாமா ஏன்?
  • மக்களவைத் தேர்தல் முடியும் வரைகூட காத்திருக்க முடியாத அவசரம் என்ன?
  • ஏற்கெனவே, பதவிக்குத் தேர்வு செய்யப்படும்போதே ஒப்புக்கொண்டுதானே வந்திருப்பார், திடீரென ஏன் விலகுகிறார்?
  • பொதுவெளியில் தெரிவிக்க முடியாத அளவுக்கு என்ன காரணம் இருக்க முடியும்?
  • ஒற்றை ராஜிநாமாவின் பின்னணியில் தொக்கிக் கொண்டிருக்கும் இவற்றைப் போன்ற எண்ணற்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கக் கூடியவர் ஒருவர் மட்டுமே – அருண் கோயல்.
  • அதுவரை எல்லாமே ரகசியங்களாகப் புதைந்தே கிடக்கும். ராஜிநாமா செய்தார், வீட்டுக்குப் போனார் என்று முடித்துக்கொண்டுவிட ஏதோ கடைக்கோடியில் பணி செய்துகொண்டிருக்கும் அரசு ஊழியர் அல்லர் அருண் கோயல், நாட்டின் மிக உயரிய பதவியொன்றில் இருந்தவர்; அதுவும் அவர் பணி தீவிரமாகத் தேவைப்படுகிற காலகட்டத்தில்!

நன்றி: தினமணி (11 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்