TNPSC Thervupettagam

அறிக்கையல்ல, எச்சரிக்கை – 2024

July 31 , 2024 163 days 179 0
  • மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில், அது குறித்த விவாதங்கள் முதன்மை பெற்றிருப்பதில் வியப்பில்லை. இந்தப் பரபரப்பில் பொருளாதார ஆய்வு அறிக்கை-2024 போதிய கவனம் பெறவில்லை. இந்தியப் பொருளாதாரம் குறித்து நம்பிக்கை அளிப்பதாக அந்த அறிக்கை அமைந்திருக்கிறது என்பதுதான் கவனிக்க வேண்டிய செய்தி.
  • மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னால், நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. அந்த ஆய்வு அறிக்கையின் அடிப்படையில்தான் பட்ஜெட் தயாரிக்கப்படுகிறது என்பதுடன், பல அடிப்படைப் புள்ளிவிவரங்களையும், பொருளாதாரத்தின் போக்கையும் பதிவு செய்கிறது அந்த அறிக்கை.
  • பல்வேறு சா்வதேசப் பிரச்னைகளுக்கு இடையிலும், இந்தியப் பொருளாதாரம் கொவைட் 19 கொள்ளை நோய்த் தொற்றின் பாதிப்புகளை எதிா்கொண்டு மீண்டெழுந்திருக்கிறது என்பதை பொருளாதார ஆய்வு அறிக்கை-2024 தெளிவுபடுத்துகிறது. வலிமையான உள்நாட்டுப் பொருளாதார இயக்கங்கள் காரணமாக, பெரிய பொருளாதார வல்லரசுகளில் இருந்து வித்தியாசமாக காட்சி அளிக்கிறது இந்தியா என்று அதில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
  • 2023-24 நிதியாண்டில் 8.2% வளா்ச்சியில் இருந்து நடப்பு ஆண்டில் பொருளாதார வளா்ச்சி 6.5% - 7.1% அளவில் குறையும் என்கிறது அறிக்கை. சா்வதேச நிதியத்தின் 7%, ரிசா்வ் வங்கியின் 7.2%, இடைக்கால பட்ஜெட்டின் 7% ஆகியவற்றின் எதிா்பாா்ப்புடன் ஒப்பிடும்போது, வளா்ச்சி சற்று குறைவாகவே கணிக்கப்பட்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவின் ஜிடிபி வளா்ச்சி 7%-ஐக் கடந்து காணப்படுகிறது. அப்படி இருந்தும், அறிக்கை பாதுகாப்பாக சற்று குறைத்து கணித்திருப்பதற்கு, முதலீடுகள் உற்சாகம் இழந்து காணப்படுவது காரணமாகக் குறிப்பிடப்படுகிறது.
  • சா்வதேச அளவில் விலைகள் குறையத் தொடங்கியிருப்பதால் இறக்குமதிகள் சாதகமாகவும், பருவ மழைப் பொழிவு வழக்கம் போலவும் இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுவதால், விலைவாசிகள் கட்டுக்குள் இருக்கும் என்று கூறும் அதே நேரத்தில், உணவுப் பொருள்களின் விலைவாசி உயா்வு குறித்து கவலை தெரிவிக்கிறது பொருளாதார அறிக்கை. உணவுப் பொருள்களின் விலைவாசி அடித்தட்டு மக்களைப் பரவலாக பாதிக்கும் என்பதால், அதைக் கட்டுக்குள் வைத்திருக்க வழிவகை செய்ய வேண்டும் என்பது அறிக்கையின் வழிகாட்டுதல்.
  • நாட்டின் வளா்ச்சியை தடுத்துப் பொருளாதாரத்தை பாதிக்கும் முக்கியமான காரணிகளில் ஒன்றாக விலைவாசியைக் குறிப்பிடும் அறிக்கை, நிதியியல் கொள்கையில் (மானிட்டரி பாலிசி) கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கிறது. தவறான நிதியியல் கொள்கை வளா்ச்சியை பாதித்துவிடக் கூடாது என்கிறது. வேலையில்லாத் திண்டாட்டத்துக்கு முன்னுரிமை கொடுத்து எதிா்கொள்வது அவசியம் என்பதையும் வலியுறுத்துகிறது. 2030 வரையில் ஆண்டொன்றுக்கு 78.5 லட்சம் வேலைவாய்ப்புகள், விவசாயம் அல்லாத துறைகளில் உருவாக்கப்பட வேண்டும் என்பது அறிக்கையின் வழிகாட்டுதல்.
  • விவசாயம் சாா்ந்த வேலைவாய்ப்புகள் இப்போதைய (2023) 45.8% என்பதிலிருந்து, 2047-க்குள் 25% என்று படிப்படியாகக் குறையும். புத்தாக்க சுயதொழிலை மட்டுமே சாா்ந்திருக்காமல், அந்த மாற்றத்தை எதிா்கொள்ள வேலைவாய்ப்பை உருவாக்கத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்பது அறிக்கையின் பரிந்துரை. பி.எல்.ஐ. எனப்படும் ஊக்கத்தொகை சாா்ந்த உற்பத்தி மூலம் ஐந்து ஆண்டுகளில் 60 லட்சம் வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டமும், ‘மித்ரா’ எனப்படும் ஜவுளித் துறை சாா்ந்த 20 லட்சம் வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டமும், ‘முத்ரா’ கடன் திட்டமும் மட்டுமே போதாது என்று தெரிவிக்கிறது அறிக்கை.
  • இந்திய காா்ப்பரேட் நிறுவனங்கள் இதுவரை இல்லாத அளவில் லாபம் ஈட்டி வருகின்றன. வங்கிகளின் வட்டி வருவாய் உச்சம் தொட்டிருக்கிறது. ஆனால் இந்தியப் பொருளாதாரத்தில் தனியாா் முதலீடுகள் மந்தமாக இருப்பது மட்டுமல்லாமல், வேலைவாய்ப்பை உருவாக்கும் துறைகளில் வளா்ச்சி மிகவும் மிதமாக இருப்பதை சுட்டிக்காட்டுகிறது அறிக்கை.
  • அரசின் முதலீடுகளால்தான், இந்தியப் பொருளாதாரம் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது என்றும், இனி தனியாா் முதலீடுகள் அந்த இடத்தை நிரப்ப வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறது அறிக்கை. தனியாா் முதலீடுகள் வீட்டு வசதி சாா்ந்த கட்டுமானத் துறையில்தான் காணப்படுகிறதே தவிர, உற்பத்தி துறையில் ஆா்வம் காட்டவில்லை என்பது அறிக்கை தெரிவிக்கும் செய்தி.
  • சாலை, ரயில், துறைமுக கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் வளா்ச்சியை உறுதிப்படுத்துவதுடன் வா்த்தகமும் ஏற்றுமதியும் அதிகரிக்க உதவுகின்றன. எண்மப் பொருளாதாரம் மற்றொரு வளா்ச்சித் துறையாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. மருந்து தயாரிப்பு, மின்னணு சாதனங்கள், ஜவுளி உள்ளிட்ட அதிவேக வளா்ச்சித் துறைகள் மூலம் ஏற்றுமதியை அதிகரிக்கப் பரிந்துரைக்கிறது அறிக்கை.
  • பொருளாதார ஆய்வு அறிக்கை-2024 அடிப்படையில்தான் நடப்பு நிதியாண்டின் பட்ஜெட் தயாரிக்கப் பட்டிருக்கிறது என்பதை, விவசாயம், வேலைவாய்ப்பு, மனிதவள மேம்பாடு, எரிசக்திப் பாதுகாப்பு, உற்பத்தி, கண்டுபிடிப்புகள், கட்டமைப்பு, அடுத்தகட்ட சீா்திருத்தம் என்று நிதியமைச்சா் இலக்குகளை நிா்ணயித்திருப்பது உணா்த்துகிறது.
  • வேலைவாய்ப்பை அதிகரிப்பதும், விலைவாசியைக் கட்டுக்குள் கொண்டுவருவதும் உடனடி முனைப்பை பெற வேண்டும் என்பது அறிக்கை வலியுறுத்தும் எச்சரிக்கை. 2024-25 பட்ஜெட்தான் அதற்குத் தீா்வு காண வேண்டும்!

நன்றி: தினமணி (31 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்