அறிவியலாளர் எல்லப்பிரகதா சுப்பாராவ்
ஹார்வேர்டில் சுப்பாராவ்:
- பாஸ்டனின் சார்லஸ் ஆற்றங்கரையில் உள்ள ஹார்வேர்டு பல்கலைக் கழகத்தில் வெப்ப மண்டல நோயியலில் பட்டயம் [Diploma in Tropical Medicine] தகுதிக்காகப் படித்துக்கொண்டே அங்குள்ள மருத்துவமனையில் துப்புரவாளராகவும் பணிபுரிந்தார் சுப்பாராவ். பட்டயத் தகுதியை 1924 ஜுன் மாதத்தில் பெற்றுக்கொண்டு, அதே ஆண்டு அந்தப் பல்கலைக் கழகத்திலேயே சைரஸ் ஃபிஸ்க் [Cyrus Fiske] எனும் பேராசிரியரின் கீழ் இணைந்து ஆராய்ச்சிப் பட்டத்திற்குப் பதிவு செய்துகொண்டார்.
- உடலின் பாஸ்பேட் மற்றும் பாஸ்பேட் இணைந்த பிற மூலக்கூறுகளை ஆராய்ந்தார். அதன் பயனாக 1925ஆம் ஆண்டு, குருதியில், சிறுநீரில், பாஸ்பேட் மூலக்கூறினை அளவிடும் முறையினை [colorimetric phosphate estimation method] வடிவமைத்து வெளியிட்டு, அறிவியல் உலகின் கவனத்தைப் பெற்றார். அடுத்த ஆண்டிலேயே ஃபிஸ்க்-சுப்பாராவ் பாஸ்பேட் அளவீட்டு முறை பரவலான பயன்பாட்டுக்கு வந்தது, பாட நூல்களிலும் இடம்பெற்றது. நூறாண்டுகளுக்குப் பின்னர் இன்றும் மருத்துவ அறிவியலில் ஃபிஸ்க்-சுப்பாராவ் முறை பயனில் இருப்பது இந்தக் கண்டறிதலின் மேன்மையை உணர்த்துகிறது. ஹார்வேர்டு ஆய்வகத்தில் பல சோதனைகள் ஒரே நேரத்தில் நடந்துகொண்டிருக்க, அவை அனைத்தையும் இடையறாது கண்காணித்தவாறு சுழன்று கொண்டேயிருப்பது அவரது இயல்பான தினசரிச் செயல்பாடு.
பாஸ்போகிரியாட்டைன்:
- எளிமையான பாஸ்பேட் அளவிடுமுறையினைப் பயன்படுத்தி பாஸ்பேட் இணைந்த பிற மூலக்கூறுகளை ஆராயத் தொடங்கிய சுப்பாராவ், உடலின் தசைநார்கள் சுருங்கி விரியும் செயல்பாட்டுக்கான ஆற்றலை பாஸ்போகிரியாட்டைன் [Phosphocreatine] மூலக்கூறே தருகிறது எனும் கோட்பாட்டினை உருவாக்கி, அது ஏடிபி [ATP - Adenosine TriPhosphate] மூலக்கூறுடன் இணைந்து செயல்படுகிறது என்பதையும் விளக்கினார். அதுநாள்வரை விளக்கப்படாத இதுபோன்ற அறிவியல் தத்துவங்கள் புதிய பல கண்டறிதல்களுக்கு இட்டுச் சென்று, மருத்துவ அறிவியலில் புதிய தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பித்தன.
ஏடிபி:
- மேலே கூறிய ஏடிபி, உடலின் மிக முக்கிய ஆற்றல் சேமிப்பு மூலக்கூறு எனும் கருத்து அறிவியல் உலகில் உறுதிபட்டுக் கொண்டிருக்கிறது. நாம் உண்ணும் உணவில் உள்ள குளுக்கோஸ் மூலக்கூறுகளின் வளர்சிதை மாற்றத்தால் ஆற்றல் வெளிப்பட்டு, அந்த ஆற்றல் ஏடிபி மூலக்கூறில்தான் சேமித்து வைக்கப்படுகிறது. பின்னர் அந்த மூலக்கூறு சிதைக்கப்பட்டு, தேவைக்கேற்ப ஆற்றல் வெளிப்படுகிறது எனும் சித்தாந்தம் புதிது, சிறப்பானது. ஏடிபி கண்டறிதலை ஃபிஸ்க்-சுப்பாராவ் குழு ஆங்கில ஆய்விதழிலும், ஒரு ஜெர்மானியக் குழுவும் அதேகாலத்தில் கண்டறிந்து, அவர்கள் ஜெர்மானிய ஆய்விதழிலும், 1929இல் வெளியிட்டனர். எனினும், ஜெர்மானிய வெளியீடு, ஆங்கில வெளியீட்டிற்கு இரண்டு வாரங்கள் முன்னதானதால், ஏடிபி புகழ், ஜெர்மானிய ஆய்வுக் குழுவுக்குச் செல்ல, ஃபிஸ்க், சுப்பாராவ் புறக்கணிக்கப்பட்டனர். இதனால் ஃபிஸ்க் மனதளவில் பாதிக்கப்பட்டார்.
ஹார்வேர்டில் முனைவர் பட்டம்:
- இன்றைய ஆய்வகச் செயல்பாட்டு நெறிமுறைகளுடன் ஒப்பிடும்போது, அன்றைய உயிரியல் ஆராய்ச்சிக்கான விதிமுறைகள் தளர்ந்தவை. பாஸ்டனின் கசாப்புக் கடைகளில் சேகரிக்கப்பட்ட பன்றியின் குருதியைப் பீப்பாய்களில் நிரப்பி, காரிலேயே அதனை ஆய்வகம் கொண்டு சேர்ப்பது, பல்கலைக் கழகத்தின் சந்துகளில் சுற்றித் திரியும் பூனைகளை ஆய்வகத் தேவைக்குப் பிடித்துப் பயன்படுத்துவது போன்றவை, இன்று நகைப்பிற்குரியவையாக இருந்தாலும், அன்று சுப்பாராவ் தாமே முன்னின்று செய்தார்.
- சிறப்பான ஆராய்ச்சிகளின் விளைவாக 1930இல், தனது அறிவியல் முனைவர் பட்டத்தை ஹார்வேர்டு பல்கலைக் கழகத்தில் பெற்றார். சுப்பாராவின் கண்டறிதல்கள், பட்டம், ஹார்வேர்டில் நிலையான பேராசிரியர் பதவிக்கோ, நிர்வாகத் தகுதிக்கோ வழிவகுக்கவில்லை. தனிப்பட்ட ஆய்வகம் இல்லை, நிதியுதவி இல்லை, ஆராய்ச்சி மாணவரை வழிநடத்த உரிமையில்லை. ஏன், பேராசிரியப் பெருமக்களுடன் சமமாக அமர்ந்து உண்ணக்கூட அனுமதி இல்லை. அமெரிக்காவில் வெள்ளையர் அல்லாத பிற இனத்தவர் மேல்நோக்கி நகர்வது கடினமாயிருந்த காலம். இவரது காலத்திற்குப் பின்னரே அமெரிக்காவில் மனித உரிமை இயக்கம் மார்டின் லூதர் கிங் II தலைமையில் தலையெடுத்து, சமுதாய மாற்றத்திற்கு வித்திட்டது என்பதைக் கருத்தில் கொண்டு, அந்தக் கோணத்தில் அக்கால அமெரிக்கச் சமுதாய சூழலை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.
முயற்சிகளில் பின்னடைவு:
- பாஸ்போகிரியாட்டைன், ஏடிபி கண்டறிதல்களுக்குப் பல ஆண்டுகளுக்குப் பின்னரும் ஹார்வேர்டில் வெறும் பயிற்றாசிரியராகவே ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து கொண்டிருந்தார் சுப்பாராவ். 1932இல், இந்தியாவில் ஒரு புதிய மக்கள் நலத்துறை சார்பான ஆய்வுக் கழகம் [All India Institute of Hygiene and Public Health] ராக்பெல்லர் நிறுவனத்தின் சார்பில் கல்கத்தாவில் நிறுவப்பட்டது. அதில் இணைவதற்கு அவர் முயற்சித்தும், ஐரோப்பியர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டதால், சிறப்பான தகுதியிருந்தும் அந்த முயற்சி நிறைவேறாமல் போனது. பின்னர் 1928-30இல், மனைவி சேஷகிரி அமெரிக்காவிற்கு இடம்பெயர முயற்சி செய்தார். ஏதோ காரணத்தால் அதுவும் நிறைவேறவில்லை.
- ஹார்வேர்டில் சுப்பாராவின் பதவி உயர்வு தடைப்பட்டதற்கு மற்றொரு வலுவான காரணம் இருந்ததெனத் தெரிகிறது. சைரஸ் ஃபிஸ்க்கின் மனநோய், அவரது துறைத் தலைவர் பதவி உயர்வுக்குச் சிக்கலாக இருந்தது. சுப்பாராவ் தனது பேராசிரியருக்கு உதவும் எண்ணத்துடன், பாஸ்போகிரியாட்டைன், ஏடிபி கண்டறிதல்களில் (தான் முக்கியப் பங்கு வகித்தும்) தனது பங்களிப்பு குறைவென்றும், ஃபிஸ்கின் பங்களிப்பே மிகுதி எனவும் எழுத்துப்பூர்வமாக 1935இல் ஹார்வேர்டு நிர்வாகத்திற்கு எழுதிய கடிதம், அந்தப் பல்கலைக் கழகத்தில் சுப்பாராவின் வளர்ச்சியை முழுமையாகத் தடுத்துவிட்டது என்றும் கூறப்படுகிறது.
கல்லீரல் திசுவில் ஆராய்ச்சி:
- இந்நிலையில், விலங்குகளின் கல்லீரல் திசுக்களில் சில இனம் காணப்படாத காரணிகள் மனிதரில் நோய்களைச் சீராக்குகின்றன எனும் கொள்கை வலுப்பெற்றது. நோய் தீர்க்கும் காரணி அறியப்படாத நிலையில், அரை லிட்டர் அளவுக்கு, கூழாக்கப்பட்ட கல்லீரல் நேரடியாக நோயாளிகளுக்குப் புகட்டப்பட்டது. ஹார்வேர்டில் சுப்பாராவ் கல்லீரலின் செயல் மூலக்கூறுகளைக் கண்டறியும் ஆய்வில் அனுபவம் பெற்றார். அவரது திறமையினை அடையாளம் கண்டுகொண்ட நியூயார்க் லெடெர்லி ஆய்வகம் வார இறுதிநாள்களில் சுப்பாராவ் அங்கு சென்று ஆய்வு செய்ய அழைத்து, வசதி வாய்ப்பளித்தது.
ஹார்வேர்டிலிருந்து லெடர்லி ஆய்வகத்திற்கு...
- ஹார்வேர்டிலும் லெடர்லியிலும் தீவிர கல்லீரல் ஆய்வில் ஈடுபட்டார் சுப்பாராவ். கல்கத்தா ஆய்வுக்கழக வாய்ப்பு நழுவிச் சென்றுவிட, ஹார்வேர்டில் வளர்ச்சிக்கு வாய்ப்பற்ற அவ்வாறான சூழலில், அமெரிக்காவில்தான் ஆய்வினைத் தொடர வேண்டுமெனும் நிலையில், லெடெர்லி ஆய்வகம் அவரை முழுநேர ஆராய்ச்சிப் பணிக்கு வரவேற்றது. முதலில் தயங்கிய சுப்பாராவ், 1940இல் அந்த நிறுவனத்தின் ஆராய்ச்சித்துறை இணை இயக்குநராக இடம்பெற்றார் [லெடெர்லி பிற்காலத்தில் Wyeth கம்பனியில் இணைக்கப்பட்டு, Wyeth இன்று Pfizer எனும் பெரிய மருந்து நிறுவனத்தின் ஒரு பகுதியாக உள்ளது]. அங்கு தனித்த ஆய்வகமல்ல, மாறாகத் தனித்த ஆய்வுக் கட்டிடமே தரப்படும் எனும் லெடெர்லி உத்தரவாதம் உறுதியான நிலையில் முழுமையான ஆய்வக வசதிகளுடன் ஆய்வுகளுக்குத் தலைமையேற்றுத் தொடங்கினார். விரைவில் ஆராய்ச்சித்துறை இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றார்.
நன்றி: இந்து தமிழ் திசை (05 – 03 – 2025)