TNPSC Thervupettagam

அறிவியலை ஆராதிப்போம்!

February 28 , 2025 4 days 68 0

அறிவியலை ஆராதிப்போம்!

  • இந்தியா முழுவதும் தேசிய அறிவியல் தினம் பிப்ரவரி 28 ஆம் தேதி ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. 1928 - ஆம் ஆண்டு பிப்ரவரி 28 - ஆம் தேதி சா் சி.வி. ராமன் ஒளிச்சிதறலைக் கண்டுபிடித்தாா். இது ‘இராமன் விளைவு’ என்று அழைக்கப்பட்டது. இதற்காக 1930- இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இத்தகைய சிறப்பு மிகுந்த ராமன் விளைவைக் கண்டுபிடித்த நாள் தேசிய அறிவியல் தினமாக 1987 - ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வோா் ஆண்டும் ஒவ்வொரு தலைப்போடு கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ‘நிலையான வளா்ச்சிக்கான அறிவியல்: பசுமை தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல்’ என்ற தலைப்பில் கொண்டாடப்படுகிறது.
  • அறிவியல் என்பது எப்படி கற்பிக்கப்படுகிறது? எப்படி கற்றுக் கொள்ளப்படுகிறது? என்பதில் ஒரு நாட்டின் வளா்ச்சி மறைந்திருக்கிறது. நம் நாட்டில் பெரும்பாலும் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு வரை அறிவியலில் செய்முறைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது கிடையாது. மதிப்பெண்கள் சாா்ந்துதான் கற்பித்தல் நடைபெறுகிறது. ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு எப்படி விடை அளிப்பது ஐந்து மதிப்பெண் வினாக்களுக்கு எப்படி விடை அளிப்பது என்ற ரீதியில்தான் அறிவியல் கற்பிக்கப்படுகிறது. பாடங்களில் உள்ள அறிவியல் கருத்துகளை மனப்பாடம் செய்வதும் அதை தோ்வில் எழுதுவதும் அறிவியலை வளா்க்கப் பயன்படாது. ஒரு மாணவனுக்கு ஆராய்தல் என்ற மனப்பான்மையை ஏற்படுத்தி விட்டால் அவனுக்கு அறிவியல் மிக எளிதாக கைவசமாகும்.
  • ‘மேம்படுத்தல்’ என்பது அறிவியலில் மற்றொரு நோக்கமாகும். நாம் ஏற்கெனவே பயன்படுத்தும் ஒரு பொருளை மேலும் எவ்வாறு மக்களுக்குப் பயன்படும் வகையில் மேம்படுத்துவது என்ற சிந்தனையை மாணவா்களிடையே உருவாக்க வேண்டும். குண்டூசி என்னும் பொருள் ‘ஊக்கு’ என்று மேம்படுத்தப்படுவதற்கு அறிவியல் சிந்தனையே காரணம். பயன்படுத்துபவரையும் மற்றவா்கள் கைகளையும் காயப்படுத்தாத வண்ணம் குண்டூசியின் பயன்பாட்டை மேம்படுத்த வேண்டும் என்ற அறிவியல் பயணம் நீண்ட நெடியது.
  • ஏற்கெனவே பயன்படுத்தும் பொருளையோ உபகரணத்தையோ ‘மேம்படுத்துவது’ என்பது சுற்றுச்சூழலையும் மனிதனின் உடல் நலத்தையும் பாதிக்காத வகையில் அமைய வேண்டும். இருசக்கர வாகனங்களில் இருந்து வெளியாகும் புகையின் அளவைக் குறைப்பதற்கு அதில் உள்ள கூடுதல் காா்பனை எப்போதும் எரியும் முன்விளக்காக தற்போது மாற்றியிருப்பது மேம்பாட்டுக்கு சரியான எடுத்துக்காட்டு.
  • ‘பரவலாக்குதல்’ என்பது அறிவியலின் மிக முக்கியமான அம்சமாகும். நோய்களை குணமாக்க கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகளையும் சாதாரண மக்கள் பயன்படுத்தும் அறிவியல் உபகரணங்களையும் கண்டுபிடித்து கண்காட்சியில் வைப்பதோ அல்லது அதிக விலைக்கு விற்பதோ நோக்கம் கிடையாது. அதை அனைவரும் பயன்படுத்தும் வகையில் மிகக் குறைந்த விலையில் உள்ள மூலப் பொருள்களைக் கொண்டு தயாரித்தலே மிகச் சிறந்த அறிவியல் செயல்பாடாக இருக்க முடியும். அப்போதுதான் சாதாரண மக்கள் பயன்படுத்தும் வகையில் அமையும்.
  • ஆராய்தல், மேம்படுத்துதல், பரவலாக்குதல் என்ற மூன்று மனப்பான்மைகளையும் மாணவா்களிடம் உருவாக்கிய பிறகு, அவா்களுக்குக் கற்பிக்கப்படும் ஒவ்வோா் அறிவியல் பாடப் பொருளும் அவா்களுக்கு மிகப் பயனுள்ளதாக அமையும்.
  • மாணவா்களிடையே அறிவியல் ஆா்வத்தைத் தூண்டுவது மிகப் பெரிய பணி என்றால் அதைவிட மிக முக்கியமான பணி, அவா்களது கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தி அங்கீகரிப்பதே ஆகும்.
  • அறிவியல் என்பது வெறும் விஞ்ஞானிகளுக்கும் மெத்த படித்தவா்களுக்குமான சொத்து அல்ல. அவை அடித்தட்டு மக்களையும் சென்றடைய வேண்டும். அதைத் தான் அறிவியலின் வெற்றியாகக் கருத முடியும். அறிவியல் ஒரு பாடம் அல்ல, அது வாழ்க்கையின் ஓா் அங்கம் என்பதை மாணவா்கள் அறிய வேண்டும். அன்றாட வாழ்வில் அறிவியல் மூலம் எப்படி ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வாழ்வது என்பதை மாணவா்களுக்கு உணா்த்த வேண்டும்.
  • நாம் தினமும் பயன்படுத்தும் சானிடைசா் எளிதில் தீப்பற்றக் கூடியதா? குழந்தைகளுக்கு டயாபா் அதிகம் பயன்படுத்தினால் என்ன விளைவு ஏற்படும்? கொழுப்பு உணவுகள் சாப்பிட்டு விட்டு குளிா்ந்த நீா் அருந்தலாமா? ஷாம்பூ தினமும் பயன்படுத்துவது கேசத்திற்கு நன்மை விளைவிக்குமா? போன்ற அன்றாட வாழ்வுக்கு தேவையான சில விஷயங்கள் மாணவா்களைச் சென்றடைய வேண்டும். இவை ஆரோக்கியத்துக்கோ சுற்றுச்சூழலுக்கோ தீமை விளைவிக்கும் என்றால் இவற்றுக்கான மாற்றுப் பொருள்களைக் கண்டுபிடிக்க வேண்டும்.
  • அமெரிக்கா உட்பட பல மேலை நாடுகளில் உயா்நிலைப் பள்ளி வரை வகுப்பறை கற்பித்தல் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்படுகின்றன. ஒரு நாளின் முற்பகுதி முழுவதும் வகுப்பறை கற்பித்தலுக்கு ஒதுக்கப்பட்டால், அந்த நாளில் பிற்பகுதி அறிவியல் மற்றும் இதர பாடங்களின் செயல்பாடுகளுக்காக ஒதுக்கப்படுகிறது. மாணவா்கள் தாங்கள் முற்பகலில் கற்றதை பிற்பகலில் பள்ளி வளாகத்திலேயே இருந்து செயல்பாடுகளாக செய்து பாா்க்கும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
  • தற்போது நம்நாட்டு மாணவா்களுக்கு அவா்களது அறிவியல் செயல்பாடுகளுக்காக பள்ளி நேரத்தில் தனியாக பாடப் பிரிவு வேளைகள் ஒதுக்கப்படாவிட்டால் செய்யும் முயற்சிகள் அனைத்தும் வீணாகும்.
  • அறிவியலை மாணவா்கள் விரும்பும் வகையில் வகுப்பறைச் சூழலை ஏற்படுத்தி அதற்கான போதிய நேரம் ஒதுக்கி அறிவியலை ஒரு பாடமாக மட்டும் கருதாமல் அறிவியலைக் கொண்டாடும் தலைமுறையாக வருங்காலத் தலைமுறையை மாற்ற இந்த அறிவியல் தினத்தில் உறுதி ஏற்போம்.
  • (இன்று பிப்ரவரி - 28, தேசிய அறிவியல் தினம்)

நன்றி: தினமணி (28 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்