TNPSC Thervupettagam

அறிவியலைக் கௌரவிக்கும் நோபல்

October 14 , 2020 1558 days 710 0
  • மனித குலத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வகையில் தத்தம் துறையில் பெரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றியிருக்கும் அறிவியலாளர்களுக்காக அறிவிக்கப்பட்டிருக்கும் நோபல் பரிசுகள் நம் கவனம் கோருகின்றன.
  • 2020-க்கான உடற்கூற்றியல் அல்லது மருத்துவத் துறைக்கான விருது ஹார்வே ஜே. ஆல்ட்டெர், மைக்கேல் ஹாட்டன், சார்லஸ் எம். ரைஸ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
  • இயற்பியலுக்கான நோபல் பரிசின் பாதித் தொகை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிரபல இயற்பியலாளர் ரோஜர் பென்ரோஸுக்கும், மீதமுள்ள பாதிப் பரிசுத் தொகை ஜெர்மனியின் மாக்ஸ் பிளாங்க் நிறுவனத்தைச் சேர்ந்த ரெய்ன்ஹார்டு ஜென்ஸலுக்கும் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஆண்ட்ரியா கெஸ்ஸுக்கும் பகிர்ந்து வழங்கப்படுகிறது.
  • வேதியியலுக்கான பரிசு இம்மானுயேல் ஷார்ப்பான்ட்டியே, ஜெனிஃபர் டௌட்னா ஆகிய இரண்டு பெண்களுக்கும் வழங்கப்படுகிறது.
  • ஹெபடைடிஸ் சி வைரஸானது ஹெபடைடிஸ் பி போன்றே மனித குலத்துக்குப் பெரும் பாதிப்பு ஏற்படுத்திவருகிறது. உலக சுகாதார அமைப்பின் உலக ஹெபடைடிஸ் அறிக்கையின்படி 2015-ல் 13.4 லட்சம் பேர் ஹெபடைடிஸ் பி வைரஸாலும், ஹெபடைடிஸ் சி வைரஸாலும் மரணமடைந்திருக்கிறார்கள்.
  • ஹார்வே ஜே. ஆல்ட்டர், மைக்கேல் ஹாட்டன், சார்லஸ் எம். ரைஸ் மூவரும் ஹெபடைடிஸ் சி வைரஸில் செய்த ஆய்வுகளுக்காக அவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
  • ஹெபடைடிஸ் சி வைரஸின் தோற்றுவாயைக் கண்டுபிடித்தது அவர்களின் முக்கியமான சாதனை. இதன் மூலம் ஹெபடைடிஸ் சி நோய்ப் பரவலை நம்மால் கட்டுப்படுத்த முடிந்திருக்கிறது.
  • எதிர்காலத்தில் ஒட்டுமொத்தமாக ஹெபடைடிஸ் சி வைரஸ் அழிக்கப்படுமானால் அதற்குத் தற்போதைய மூன்று நோபல் சாதனையாளர்களின் பணிகளும் முக்கியக் காரணமாக இருக்கும்.
  • கருந்துளை பற்றிய ஆய்வுகளுக்காக இயற்பியலுக்கான பரிசை ரோஜர் பென்ரோஸ், ரெய்ன்ஹார்டு ஜென்ஸல், ஆண்ட்ரியா கெஸ் ஆகியோர் பகிர்ந்துகொள்கிறார்கள்.
  • 1915-ல் ஐன்ஸ்டைன் முன்வைத்த பொதுச் சார்பியல் கோட்பாடானது கருந்துளைகளின் இருப்பு பற்றிய கணிப்புகளைத் தன்னகத்தே கொண்டிருந்தது.
  • 1960-களில் கருந்துளைகளின் இருப்பை உறுதிப்படுத்தும் கோட்பாடுகளை ரோஜர் பென்ரோஸ் உருவாக்கினார். ரெய்ன்ஹார்டு ஜென்ஸலும் ஆண்ட்ரியா கெஸ்ஸும் வேறு வகையில் பங்காற்றியிருக்கிறார்கள்.
  • நமது சூரிய மண்டலம் இருக்கும் பால்வெளியின் மையத்தில் இருப்பது ஒரு கருந்துளையே என்பதை இவர்களின் ஆராய்ச்சி உறுதிப்படுத்தியிருக்கிறது.
  • ரோஜர் பென்ரோஸின் பங்களிப்பு கோட்பாட்டுரீதியிலானது என்றால் இவர்களுடைய பங்களிப்பு அவதானிப்புரீதியிலானது. இயற்பியலுக்காக நோபல் பரிசு பெறும் நான்காவது பெண் ஆண்ட்ரியா கெஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
  • அறிவியல் துறைகள் சில சமயம் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாதது என்பதற்கான அடையாளம்தான் இந்த ஆண்டு வேதியியலுக்காக அறிவிக்கப்பட்டிருக்கும் நோபலும்.
  • சி.ஆர்.ஐ.எஸ்.பி.ஆர்-கேஸ்9’ மரபணு செம்மையாக்கத் தொழில்நுட்பத்துக்காக இம்மானுயேல் ஷார்ப்பான்ட்டியே, ஜெனிஃபர் டௌட்னா ஆகிய இருவருக்கும் அறிவிக்கப்பட்டிருக்கும் பரிசானது மருத்துவத் துறைக்கும் மிகவும் நெருக்கமானதே.
  • ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு நோபல் வழங்கப்படும்போது அனைவரும் பெண்களாக இருப்பது நோபல் வரலாற்றில் இதுவே முதன்முறை ஆகும்.
  • விலங்குகள், தாவரங்கள் போன்றவற்றைப் பொறுத்தவரை இந்த மரபணு செம்மையாக்கத் தொழில்நுட்பம் பெரிய பிரச்சினை தராதவையாக இருந்தாலும் இதை மனிதர்கள் அளவில் கொண்டுசெல்லும்போது ஆபத்தாக மாறிவிட வாய்ப்பிருக்கிறது.

நன்றி: தி இந்து (14-10-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்