TNPSC Thervupettagam

அறிவியல் ஆயிரம்: குறைவாகத் தூங்கினால் நோய்கள் அதிகமாகும்

November 12 , 2022 637 days 370 0
  • நாள் ஒன்றுக்கு 5 மணி நேரத்திற்கும் குறைவான தூக்கம் என்பது பல நோய்களின் ஆபத்துக்கு வழிவகுக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. 
  • வாழ்க்கையின் நடுப்பகுதி எனப்படும்  45 வயது முதல் பிற்பகுதி வரை ஐந்து மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குவது என்பது குறைந்தது இரண்டு நாள்பட்ட நோய்களையும் மற்றும் பல நோய்களின் அதிக ஆபத்தை  உருவாக்கும் என்று யு.சி.எல் (University College London)எனும் லண்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது. PLOS மருத்துவ நாளிதழில் இதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஆய்வாளர்களின் வயது

  • 50, 60 மற்றும் 70 வயதுடைய 7,000க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களின் ஆரோக்கியத்தில் தூக்க காலத்தின் தாக்கத்தை வைட்ஹால் II கூட்டு ஆய்வில் (Whitehall II cohort) இருந்து பகுப்பாய்வு செய்தது.

ஆய்வுத் தன்மை 

  • ஆய்வாளர்கள் 7,௦௦௦ மனிதர்களை ஆய்வு செய்ததில், ஒவ்வொரு பங்கேற்பாளரும் எவ்வளவு நேரம் தூங்கினார்கள் என்பது அறியப்பட்டது. பின்னர் அவர்களிடம் இருந்த நோயின் தன்மையும் அறியப்பட்டது. பின்னர்  அவர்களின் இறப்பு/ இதய நோய்/புற்றுநோய்/ நீரிழிவு போன்ற இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாள்பட்ட நோய்கள் கடந்த 25 ஆண்டுகளில் கண்டறியப்பட்டதா என்பதையும்  ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்.

5 மணி நேரத்துக்கும் குறைவான தூக்கம்

  • 50 வயதில் 5 மணி நேரம் அல்லது அதற்கும் குறைவான உறக்கம் பெற்றவர்கள், ஒரு நாளில் 7 மணி நேரம் தூங்கியவர்களைவிட, நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் 20% அதிகம் இருந்தது. மேலும் அவர்களுக்கு 25 ஆண்டுகளில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாள்பட்ட நோய்களால் கண்டறியப்படுவதற்கான வாய்ப்புகள் (40%), 7 மணி நேரம் தூங்கியவர்களைவிட அதிகம் காணப்பட்டன.
  • கூடுதலாக, 50, 60 மற்றும் 70 வயதில் ஐந்து மணி நேரம் அல்லது அதற்கும் குறைவான நேரம் தூங்குவது, ஏழு மணி நேரம் வரை தூங்குபவர்களுடன் ஒப்பிடும்போது, ​​30% முதல் 40% வரை பல்நோய் அபாயத்துடன் தொடர்புடையது என்பதும் அறியப்பட்டது.

இறப்பு அபாயமும், குறைவுத் தூக்கமும்

  • 50 வயதில் 5 மணி நேரம் அல்லது அதற்கும் குறைவான தூக்கம் 25 வருட பின்தொடர்தலில் 25% இறப்பு அபாயத்துடன் தொடர்புடையது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். குறுகிய தூக்க காலம் என்பது நாள்பட்ட ஆபத்தை அதிகரிக்கிறது மற்றும் நோய்(கள்) அதையொட்டி இறப்பு அபாயத்தை அதிகரிக்கிறது என்பதும் தெரிய வந்துள்ளது. 

ஆய்வாளர்கள் கருத்து

  • முன்னணி எழுத்தாளர்களான, டாக்டர் செவெரின் சபியா (UCL Institute of Epidemiology & Health, and Inserm, Université Paris Cité-  இன்ஸ்டிடியூட் ஆஃப் எபிடெமியாலஜி & ஹெல்த், மற்றும் இன்செர்ம், யுனிவர்சிட்டி பாரிஸ் சிட்டே-) குறைவான தூக்கம் கொள்பவர்களைப் பற்றிக் கூறுவதாவது:
  • அதிக வருமானம் உள்ள நாடுகளில் பல்வகை நாள்பட்ட நோய்கள்   அதிகரித்து வருகின்றன. மேலும் பாதிக்கும் மேற்பட்ட வயதான பெரியவர்களுக்கு இப்போது குறைந்தது இரண்டு நாள்பட்ட நோய்களாவது இருக்கின்றன.  இது உயர் சுகாதார சேவை பயன்பாடு, மருத்துவமனையில் சேர்க்கப்படுதல் மற்றும் இயலாமை ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருப்பதால், பொது சுகாதாரத்திற்கு ஒரு மிகப்  பெரிய சவாலாக உள்ளது.

மனிதனின் தூக்க நேரம்

  • ஒரு மனிதர் ஓர் இரவில் 7 முதல் 8 மணி நேரம் வரை உறக்கம்கொள்ள மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது/பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் அல்லது அதற்குக் கீழே உள்ள தூக்க நேரங்கள் என்பவை முன்பு தனிப்பட்ட நாள்பட்ட நோய்களுடன் தொடர்புடையவைகளாக இருந்தன. குறுகிய தூக்க காலமும் நாள்பட்ட நோய்களுடன் தொடர்புடையது என்பதை தங்கள் கண்டுபிடிப்புகள் காட்டுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.  

தூக்கத்தின் முன்னர் செய்ய வேண்டியவை

  • ஒரு சிறந்த இரவு தூக்கத்தை உறுதி செய்ய படுக்கையறை அமைதியாகவும், இருட்டாகவும் இருக்க வேண்டும்.
  • தூங்கத் தேவையான  வசதியான வெப்பநிலை இருப்பதை உறுதிசெய்வது அவசியம்
  • முக்கியமாக படுக்கை அருகிலுள்ள எலக்ட்ரானிக் சாதனங்களை அப்புறப்படுத்த வேண்டும்
  • படுக்கைக்குச் செல்லுமுன் அதிக உணவைத் தவிர்க்கவும்.
  • பகல் நேரத்தில் உங்களின் சுறுசுறுப்பான செயல்பாடு, உடற்பயிற்சி மற்றும் பகலில் வெளிச்சத்தில் இருப்பது போன்றவையும்  நல்ல ஆழ்ந்த தூக்கத்தை ஊக்குவிக்கும். 
  • இது போன்ற நல்ல சூழல்தான் தூக்க சுகாதாரத்தை மேம்படுத்தும். இது அவசியமும் கூட.

அதிக உறக்கம் நல்லதா?

  • ஆய்வின் ஒரு பகுதியாக, 9 மணி நேரம் அல்லது அதற்கு மேல் நீண்ட நேரம் தூங்குவது உடல்நல விளைவுகளை பாதிக்கிறதா என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் மதிப்பீடு செய்தனர். 50 வயதில் நீண்ட தூக்கம் என்பதில் ஆரோக்கியமான நிலையில் உள்ள மக்களில் பல நோய்களுக்கு இடையே தெளிவான தொடர்பு இல்லை. இருப்பினும், ஒரு பங்கேற்பாளர் என்பவர் ஏற்கனவே ஒரு நாள்பட்ட நிலையில் உள்ள நோயுடன் கண்டறியப்பட்டிருந்தால், நீண்ட நேர தூக்க காலம் என்பதும்  மற்றொரு நோயை உருவாக்கும் அபாயத்துடன் 35% அதிகரித்தது. இது தூக்கத்தை பாதிக்கும் அடிப்படை சுகாதார நிலைமைகள் காரணமாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
  • பிரிட்டிஷ் ஹார்ட் ஃபவுண்டேஷனின்(British Heart Foundation) மூத்த இருதய சிகிச்சை  செவிலியர் ஜோ விட்மோர் (Jo Whitmore)தூக்கம் பற்றி சொல்வதாவது :
  • 1. போதுமான தூக்கம் உங்கள் உடலை ஓய்வெடுக்க அனுமதிக்கிறது.
  • 2. மோசமான தூக்கம் இதய நோய் அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.
  • 3. தூக்கம் குறைவு என்பது வீக்கத்தை அதிகரிப்பது மற்றும் ரத்த அழுத்தத்தை அதிகரிப்பது என பல வழிகள் உள்ளன.
  • 4. குறைவான தூக்கத்தால் ரத்த அழுத்தம் கூடுகிறது
  • இந்த ஆராய்ச்சி வளர்ந்து வரும் ஆராய்ச்சிக்கு உதவி சேர்க்கிறது. இது ஒரு நல்ல இரவு தூக்கத்தைப் பெறுவதன் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது என்று கூறியுள்ளார்.  

ஆய்வு வரம்புகள்

  • ஆராய்ச்சியாளர்கள் தூக்கம் குறித்த சுய-அறிக்கை தரவைப் பயன்படுத்தினர். இது சார்பு அறிக்கைக்கு உட்பட்டதாக இருக்கலாம். இருப்பினும் 4,000 பங்கேற்பாளர்களின் தரவைப் பயன்படுத்தி, ஒரு மின்னணு சாதனம் மூலம் அவர்களின் தூக்கம் அளவிடப்பட்டது. அவற்றின் கண்டுபிடிப்புகள் உறுதிப்படுத்தப்பட்டன.  
  • இதற்கிடையில், தூக்கத்தின் தரம் குறித்த தரவு 60 மற்றும் 70 வயதுடையவர்களுக்கு மட்டுமே செய்யப்பட்டது. வைட்ஹால் II ஆய்வு என்பது சிவில் சர்வீஸ் உறுப்பினர்களை மட்டுமே உள்ளடக்கியது, அவர்கள் அனைவரும் ஆய்வுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டபோது பணியமர்த்தப்பட்டவர்கள் மற்றும் பொதுமக்களை விட ஆரோக்கியமும்கூட கூடுதலாக இருக்கக்கூடும். லண்டன் பல்கலைக்கழக கல்லூரி ஆய்வாளர்கள் 'ஒரு இரவில் ஐந்து மணி நேரத்திற்கும் குறைவான தூக்கம் பல நோய்களின் அதிக ஆபத்துடன் இணைக்கப்பட்டுள்ளது' என்று உறுதியாகத் தெரிவிக்கின்றனர். 

நன்றி: தினமணி (12 – 11 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்