TNPSC Thervupettagam

அறிவியல் செயல்பாடுகளில் அரசியல் தலையீடு

May 4 , 2023 572 days 369 0
  • ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு அறிவியல் பாடப் புத்தகங்களிலிருந்து சார்லஸ் டார்வினின் பரிணாமவியல் கோட்பாடு குறித்த பாடங்களைத் தேசியக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மன்றம் (என்சிஇஆர்டி) நீக்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. முகலாயர் ஆட்சி தொடர்பான பாடங்களை, 12ஆம் வகுப்புப் பாடப் புத்தகங்களிலிருந்து என்சிஇஆர்டி சமீபத்தில் நீக்கியது. தற்போது அறிவியலின் அடிப்படை அம்சங்கள்மீதும் தாக்குதல் நிகழ்த்தப்படுகிறது.
  • 1859இல் டார்வினின் ‘உயிரினங்களின் தோற்றம்’ (On the Origin of Species) புத்தகம் வெளியான போது, பிரிட்டனில் மத அடிப்படைவாதிகள் அதிர்ச்சியடைந்தனர். இன்றைக்கும் பல்வேறு நாடுகளில் மத அடிப்படைவாதிகள் இக்கோட்பாட்டை ஏற்க மறுக்கின்றனர். எகிப்து, ஜோர்டான் போன்ற நாடுகளில் டார்வின் கோட்பாடு தவறானது என்றே பாடப் புத்தகங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.
  • ஆனால், அறிவியல் சமூகத்தின் பெரும்பான்மையானோர் பரிணாமவியல் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டுள்ளனர். அறிவியல் உலகில் டார்வினின் பரிணாமவியல் கோட்பாடு ஏற்படுத்திய தாக்கம் தொடர்பாகத் தனது ‘உலக வரலாறு’புத்தகத்தில் ஜவாஹர்லால் நேரு புகழ்ந்து எழுதியிருக்கிறார்.
  • பாஜக ஆட்சியில், அறிவியல் மாநாடுகளில்கூட, ‘வேத காலத்திலேயே விமானங்கள் இருந்தன’ எனத் தொடங்கி, அறிவியலுக்குப் பொருந்தாத நம்பிக்கை சார்ந்த பல வாதங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சராக இருந்த சத்யபால் சிங், டார்வின் கொள்கையில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும், பாடப் புத்தகங்களிலிருந்து அது குறித்த பாடம் நீக்கப்பட வேண்டும் என்றும் பகிரங்கமாகப் பேசியவர்.
  • மேலும், ‘இந்தியர்கள் குரங்கிலிருந்து வந்தவர்கள் அல்லர்’ என்று நாடாளுமன்றத்திலும் அவர் பேசினார். அதன் நீட்சியாகவே இந்த நடவடிக்கையைக் கருத வேண்டியிருக்கிறது.
  • கரோனா காலத்தில் தற்காலிகமாக இந்த மாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆசிரியர்களின் துணை இல்லாமல் குழந்தைகள் படிக்க ஏதுவாக இந்தப் பாடத்தை நீக்குவதாகவும், கருப்பொருளுக்கு வெளியே இந்தப் பாடத்தின் பகுதிகள் இருப்பதாகவும் சொல்லப்பட்ட காரணங்களில் தர்க்கம் ஏதும் இல்லை. தற்போது இப்பாடம் நிரந்தரமாக நீக்கப்பட்டிருக்கிறது.
  • இதைக் கண்டித்து அறிவியலாளர்கள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் உள்பட 4,000க்கும் மேற்பட்ட அறிஞர்கள் கடிதம் எழுதியிருக்கிறார்கள். ஆனால், மத்திய அரசின்கீழ் தன்னாட்சி அந்தஸ்து பெற்ற அமைப்பாக இயங்கிவரும் என்சிஇஆர்டி இதுவரை இதற்குச் செவிசாய்க்கவில்லை.
  • முன்னதாக, தன்னாட்சி அமைப்பான விஞ்ஞான் பிரச்சார் மூடப்படுவதாகவும் அதற்குப் பதிலாக வேறொரு அமைப்பை உருவாக்க அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை திட்டமிடுவதாகவும் பிப்ரவரி மாதம் தகவல்கள் வெளியாகின.அறிவியல் வளர்ச்சிமீது அக்கறை கொண்டிருந்த மறைந்த பிரதமர் ஜவாஹர்லால் நேரு, தன்னாட்சி பெற்ற அறிவியல் அமைப்புகளை நிறுவுவதில் ஆர்வம் காட்டினார்.
  • நேருவியக் கொள்கையின் நீட்சியாக 1989இல் விஞ்ஞான் பிரச்சார் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின்கீழ், அறிவியல் தொடர்பான வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டன. புகழ்பெற்ற விஞ்ஞானிகள், கண்டுபிடிப்புகள் தொடர்பான ஆவணப்படங்கள் உருவாக்கப்பட்டன. இனி அந்த அறிவியல் செயல்பாடுகள் தொடருமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
  • மருத்துவம், உயர் கல்வி, ஆராய்ச்சி என மாணவர்களின் ஒவ்வொரு வளர்ச்சிப் படிநிலையிலும் ஆதார அம்சமாக விளங்கும் அறிவியல் பாடங்களை நீக்குவதும், அறிவியல் அமைப்புகளை நீர்த்துப்போக அனுமதிப்பதும் அவர்களின் எதிர்காலத்தைச் சிதைத்துவிடும். அரசு இவ்விஷயத்தில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்!

நன்றி: தி இந்து (04 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்