TNPSC Thervupettagam

அறிவியல் மகளிரை ஊக்குவிப்போம்

February 11 , 2020 1798 days 819 0
  • ஒரு நாட்டின்  நீடித்த  வளர்ச்சி  என்பது அதன் சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் ஆகியவற்றின்  இடையறாத வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டதாகும்  என வல்லுநர்கள் கூறுகிறார்கள். வளர்ச்சி என்பது மாற்றம் என்பதை அடித்தளமாகக் கொண்டது.
  • மாற்றங்கள் என்பன அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிகளின் வெளிப்பாடு ஆகும். 
  • இன்னொரு கோணத்தில் மக்களில் பெண்கள் சரிபாதி இருப்பதால், வளர்ச்சி என்பது பெண்கள் முழுமையாக அதிகாரம் பெற்று அனைத்துத் துறைகளிலும் பங்களிப்பு தரும்போதுதான் ஏற்படும். 

பெண்கள் பங்களிப்பு  

  • பெண்கள் பங்களிப்பு  குறைவாக இருக்கும் நாடுகள் சமூக, பொருளாதார முன்னேற்றக்  குறியீடுகளில் பின்தங்கி உள்ளதை யுனெஸ்கோ அமைப்பு சுட்டிக்காட்டுகிறது. எனவே, குறிப்பாக, பெண்களின்  பங்கேற்பும் பங்களிப்பும்   பணி  முடிவெடுத்தல் உள்ளிட்ட அதிகார அமைப்பு ஆகிய துறைகளிலும் இருப்பதை உறுதி செய்தல் அவசியம். அதற்கான முக்கியமான கருவியாக அமைவது, பெண்களுக்கான அறிவியல் கல்வியாகும். அதிலும் குறிப்பாக, அறிவியல் ஆராய்ச்சித் துறையில்  அவர்கள் பங்குபெறுவதும், பரிணமிப்பதும் மிக அவசியம் எனக் கருதப்படுகிறது.
  • இந்த அடிப்படையில், பெண்கள் முன்னேற்றம், அறிவியல்  என இந்த இரு தளங்களையும் ஒருங்கிணைத்து, "உலக நாடுகளின்  பெண்கள் - மாணவியர் அறிவியல் தினம்' என ஆண்டுதோறும் பிப்ரவரி 11-ஆம் தேதி யுனெஸ்கோ கொண்டாடுகிறது.
  • பல்வேறு நாடுகளின் அரசுகள், அரசு சாராத நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் முதலானவை  பெண்களின் உயர் கல்வி, அறிவியல் துறையில் ஈடுபடுவது குறித்த   விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும், அறிவியல் துறையில்   பெண்களின்  நிலை - பங்களிப்பு குறித்து அலசுவதற்கும்  ஏதுவாக  இந்த நாள் பயன்படுத்தப்படுகிறது.
    இந்தப் பின்னணியில் நமது நாட்டில் பெண்கள் சார்ந்த  அறிவியல் கல்வி, அவர்களது ஆராய்ச்சித் துறையில் பங்களிப்பினை நோக்குவோம்:
    இந்தியாவில் கல்வி கற்போர்  விகிதம் ஆண்களில் 81 சதவீதமாகவும்,  பெண்களில் 65சதவீதமாகவும் உள்ளது. கடந்த காலங்களைவிட, இவை நிச்சயமாக அதிகம் என்றாலும், பெண்கள் கல்வி இன்னும் அதிகரிக்க வேண்டியது என்பதை மறுப்பதற்கில்லை.
  • அடுத்தகட்டமாக, கல்லூரிக் கல்வி பயின்றவர்களில் 0.25 சதவீதத்துக்கும் குறைவானவர்களே மேற்படிப்பினைத் தொடர்ந்து  ஆராய்ச்சித் துறைக்குள் நுழைகின்றனர். அவர்களிலும் விகித அளவு ஆண்கள் 65 சதவீதமாகவும், பெண்கள் 35 சதவீதமாகவும் உள்ளது. இடைநிற்றல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெண்கள் ஆய்வைமுடிக்காமல் இருப்பதும் கவனிக்கத்தக்கது.

ஆராய்ச்சித் துறைகளில்....

  • மேலை நாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில், கல்லூரிக் கல்வி பயின்றவர்களில் ஐந்து சதவீதத்துக்கும் அதிகமானோர்  ஆராய்ச்சிகளில் ஈடுபடுகின்றனர்; அவர்களில் பெண்கள்  சரி பாதியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
  • நம் நாட்டில், அறிவியல் ஆராய்ச்சியில் பெண்கள் குறைவாக ஈடுபடுவதன் காரணங்களையும், அவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க என்ன செய்ய முடியும் என்பதை நோக்குவோம். பல்கலைக்கழகங்களின் பார்வை, மாணவர்கள்' வேலைவாய்ப்பு' என்பதை நோக்கமாக இருப்பது என்ற நிலையை மாற்றி, ஆராய்ச்சியை நோக்கி மாணவர்களைத் திருப்ப வேண்டும். கல்வி பயில்வோரும் வேலை தேடுவதைத் தாண்டி பரந்த பார்வையுடன் கல்வியை அணுக வேண்டும்.
  • தவிர, பெண்கள் உயர்  கல்வி, மற்றும் ஆராய்ச்சி சார்ந்த கல்வியில் ஈடுபடுவதை ஊக்கப்படுத்துவதில் பெற்றோருக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. சமூகம் ஏற்படுத்திய சில கட்டுப்பாடுகள், தவறான நம்பிக்கைகள் முதலானவை, பெண்களின் ஆராய்ச்சி சார்ந்த  கல்விக்குப் பெரும் தடையாக விளங்குகின்றன. எடுத்துக்காட்டு: குறிப்பிட்ட வயதுக்குள் பெண்களின் திருமணம், குழந்தைகளைப் பராமரித்தல், பெண்கள்  கணவனைச் சார்ந்திருக்க வேண்டும் என்ற கோட்பாடுகள் முதலானவை.
  • இவற்றைக் கடந்து  பெண்கள் ஆராய்ச்சிக்குள் நுழைந்தாலும், அவர்களுக்கு கணிசமான  உதவித்தொகை வழங்கப்பட்டாலும், ஆராய்ச்சி என்பது காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணிக்கான பணி அல்ல; மாறாக, நேர வரையறையற்ற ஒன்றாகும். இதுவும் பெண்களுக்கு ஒரு முக்கிய தடைக்கல். இவை காரணமாக ஆராய்ச்சி சார்ந்த  கல்வியில் ஈடுபட பெரும்பாலான பெண்கள்   தயங்குகின்றனர்.
    இவற்றைக் கருத்தில் கொண்டு, சமுதாயத்தில் பெண்களின் மேல்படிப்பு  குறித்த  அணுகுமுறையில்  மாற்றத்தை ஏற்படுத்துவதில்  மகளிர் அமைப்பு உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும்   ஈடுபட வேண்டும்.

சாதனைகள்

  • பெண் அறிவியலாளர்கள், அவர்களது சாதனைகள் போன்றவை, அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் பொது வெளியில் அதிகம் கொண்டாடப்படும் சூழல் நிலவ வேண்டும்; அது நம் நாட்டு மாணவியர்களுக்கு ஊக்கமாக அமையும்.
    ஆராய்ச்சிப் பணிகளில் பெண்கள்  ஈடுபடும்போது,  குடும்பம் - குறிப்பாக குழந்தைகள் குறித்த கவலை தோன்றாதிருக்க, பல  பன்னாட்டு நிறுவனங்கள்  ஆய்வு வளாகத்தில் மழலையர் காப்பகங்களை  நிறுவுகின்றன. இதை இங்குள்ள பல்கலைக்கழகங்களும் செயல்படுத்தலாம்.
  • பெண்கள் ஆராய்ச்சி செய்யும் பல்கலைக்கழகங்கள் அமைந்திருக்கும் ஊரிலோ அல்லது அதற்கு மிக அருகிலோ அவர்களின் கணவருக்குப் பணியிட மாற்றம், குழந்தைகளுக்குப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கும் முன்னுரிமை எனத்  தனியார் - அரசுத் துறை ஆகியவை உறுதி செய்ய வேண்டும்.
    இது போன்ற ஊக்கங்கள் தரப்படும்போது, பெண்கள் தம்மைச் சுற்றி ஏற்படுத்தப்பட்டிருக்கும் தடைகளைத் தகர்த்து மேன்மேலும் உயர் கல்வி, ஆராய்ச்சித் துறையில் ஈடுபட முன்வருவர். இதன் பலனாக  அதிக முனைவர்கள் உருவாவது மட்டுமின்றி நாட்டு மக்களிடையே அறிவியல் நோக்கு அதிகரிப்பதும் உறுதி.
  • குறிப்பாக,  தாய்மார்களின் அரவணைப்பில் குழந்தைகள் வளர்வதால், சிறு வயதிலேயிருந்தே குழந்தைகளுக்கு அறிவியல் நோக்கு விசாலப்படும் . இவை  எல்லாவற்றையும்விட, நம்  நாட்டு மக்களிடையே சுதந்திரம் கலந்த தன்னம்பிக்கை  உணர்வு வலுப்பெறும் என்பதும்  உறுதி.

நன்றி: தினமணி (11-02-2020)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்