TNPSC Thervupettagam

அறிவியல் மனப்பான்மையின் அவசியம்!

March 5 , 2024 140 days 119 0
  • ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அறிவியல் மிகவும் முக்கியம். அதேபோல் ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கு அறிவியல் மனப்பான்மை முக்கியம். அறிவியல் மனப்பான்மையின் முக்கியத்துவத்தை உணர்ந்ததால் தான் இந்திய அரசமைப்புச் சட்டம் 51A(h) கூறு, ‘ஒவ்வொரு குடிமகனும் அறிவியல் மனப்பான்மையோடு இருப்பது அடிப்படைக் கடமை’ என வலியுறுத்துகிறது. அறிவியல் மனப்பான்மையோடுதான் வாழ்கிறோமா என்று நம்மை நாமே கேட்டுக்கொள்வது காலத்தின் தேவை.

அறிவியல் மனப்பான்மை என்றால்?

  • நடைமுறை உலகில் நாம் கேட்கும், பார்க்கும், படிக்கும் தகவல்கள், கருத்துகளை அப்படியே நம்பாமல் அதன் உண்மைத்தன்மையை ஆராயும் உணர்வுதான் அறிவியல் மனப்பான்மை. வள்ளுவர் சொன்ன ‘எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு’ என்பதும் அறிவியல் மனப்பான்மைதான்.
  • மனிதர்கள் இயற்கையிலேயே கேள்வி கேட்கும் இயல்புடையவர்கள். குழந்தையாக இருக்கும்போதே பல விஷயங்கள் பற்றிக் கேள்வி கேட்கிறோம். அதற்கான பதில்களைத் தத்தமது அனுபவத்திலிருந்து அல்லது பெற்றோர், சுற்றத்தார் சொல்லக் கேட்கிறோம். இவர்களுக்கு இந்தப் பதில்கள் எங்கிருந்து கிடைத்திருக்கும்? பெரும்பாலான பதில்கள் சமூகத்தின் கலாச்சாரம், பண்பாடு, மதம், சாதியைச் சார்ந்திருக்கிறது. பதில்களை அப்படியே ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், அறிவியல் மனப்பான்மை என்பது இவை சரிதானா என்று ஆராய்ந்து பார்ப்பது.
  • 1990களுக்கு முன்பு வரை சூரிய கிரகணம், சந்திர கிரகணம் நிகழும்போது பெரும்பாலானோர் வீட்டுக்குள் முடங்கிக்கிடந்தார்கள். காரணம், சூரிய கிரகணம், சந்திர கிரகணம் பற்றிச் சமூகத்தில் நிலவிவந்த மூடநம்பிக்கை. ஆனால், அறிவியல் மனப்பான்மை வளரவளர தற்போது இந்நிகழ்வுகளின்போது மனிதர்கள் வெளியில் இருப்பதைக் காணமுடிகிறது. மருத்துவம், அறிவியலின் வளர்ச்சியால் எளிய மருந்துகள் மூலம் நோய்களைக் குணப்படுத்தி விடுகிறோம். அறிவியலும் அறிவியல் மனப்பான்மையும் சமூகத்துக்கு எவ்வளவு முக்கியம் என்பதை இதிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.

அறிவியலின் வளர்ச்சி:

  • அறிவியலைப் பொறுத்தவரை ஒரு கேள்விக்கான பதிலை ஒருவர் கூறும்போது, அப்பதில் எல்லா நேரத்திலும், எல்லாச் சூழ்நிலையிலும் ஒத்து வருகிறதா, சான்றுகளின் அடிப்படையில் சரியாக இருக்கிறதா என்பதை உறுதிசெய்வது முக்கியம்.
  • ஒரு கருத்தின் உண்மைத்தன்மை என்பது யார் அந்தக் கருத்தைச் சொல்கிறார் என்பதல்ல. நோபல் பரிசே வாங்கியவராக இருந்தாலும் அக்கருத்து அறிவியல்ரீதியாகச் சரியாக இருந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் உலகின் தலைசிறந்த அறிவியலாளர் என்றாலும், அவர் கூறிய எல்லாக் கருத்துகளையும் அறிவியல் உலகம் ஏற்றுக்கொள்ளவில்லை.
  • இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு சி.வி. ராமனுக்கு முன்பு வாழ்ந்த இயற்பியல் அறிஞர் லார்ட் ராலே. வானம் ஏன் நீலமாக இருக்கிறது என்று லார்ட் ராலே விளக்கினார். மேலும் கடல் நீல நிறமாக இருப்பதற்குக் காரணம், வானத்தின் நீல நிறம் கடல் நீரில் பிரதிபலிப்பதால்தான் என்றும் கூறினார். அக்காலத்தில் இயற்பியல் உலகின் மிகப்பெரிய ஆளுமையாக லார்ட் ராலே இருந்ததால் அவர் கூறியது சரியாகத்தான் இருக்கும் என்று அனைவரும் நம்பினர். ஆனால், ராமன் கடல் நீரின் நீல நிறத்துக்கு நீரின் ஒளிச்சிதறல், உட்கவர் திறன்தான் காரணம் என்று பரிசோதனை மூலம் நிரூபித்தார். இப்படித்தான் அறிவியல் வளர்கிறது.

சமூக வலைதளங்களில்...

  • உலகம் தகவல்களால் நிரம்பி வழிகிறது. ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டகிராம், யூடியூப் எனச் சமூக வலைதளங்களில் எங்கு நோக்கினும் ஏதாவது கருத்து பகிர்ந்துகொள்ளப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இளையோர், முதியோர் என எல்லாத் தரப்பினரும் சமூக வலைதளங்களில் குறிப்பிடத்தக்க நேரத்தைச் செலவிடுகிறார்கள்.
  • மருத்துவம், உணவுப்பழக்கம், சுற்றுச்சூழல், மனநலம் என ஏதாவது ஒரு துறையைச் சார்ந்து யாரோ ஒருவர் அறிவுரை கூறிக்கொண்டிருக்கிறார். அறிவியல் மனப்பான்மை இருந்தால் மட்டுமே இதில் எது அறிவியல்ரீதியாகச் சரியென்று முடிவெடுத்துப் பின்பற்ற முடியும்.
  • அறிவியல் மனப்பான்மை என்பது ஏதோ அறிவியல் துறை சார்ந்த தகவல்களுக்குத்தான் தேவை என்று நினைக்கக் கூடாது. வரலாற்று ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி, உளவியல் ஆராய்ச்சி என எல்லாத் துறைகளுக்கும் இது பொருந்தும். இன்று கீழடி இவ்வளவு பேசப்படுவதற்குக் காரணம், அறிவியல்ரீதியாகக் கீழடி அகழ்வாராய்ச்சி அணுகப்பட்டதே.

முன்னோர்கள் முட்டாள்களா?

  • ‘அந்தக் காலத்தில் எல்லாரும் நோய்நொடியில்லாமல் வாழ்ந்தார்கள், நீண்ட நாள்கள் வாழ்ந்தார்கள். முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்களல்ல’ என்று கடந்த காலத்தைப் புனிதப்படுத்தும் பழக்கம் அதிகரித்து வருகிறது. முன்னோர்கள் சொல்லிவிட்டால் அது சரியாகத்தான் இருக்கும் என்று நினைப்பதும் அறிவியல் மனப்பான்மைக்கு எதிரானதுதான்.
  • அறிவியலின் சிறப்பம்சமே அது காலந்தோறும் தன்னை மாற்றிக்கொள்ள, மெருகேற்றிக்கொள்ளத் தயாராக இருப்பதுதான். ஒரு கருத்தை அறிவியல் ரீதியாகத் தவறென்று உணரும்பட்சத்தில், அதை மாற்றிக்கொள்ளும் மனநிலைதான் அறிவியல் மனப்பான்மை. கேள்வி களுக்கான பதில்களைத் தேடுவது மட்டுமே அறிவியல் அல்ல, காலங்காலமாகச் சொல்லப்பட்ட பதில்களை நோக்கிக் கேள்வி எழுப்புவதும் அறிவியல் மனப்பான்மையின் ஓர் அங்கம்தான்.

கல்விக்கூடங்களில்..

  • கல்விக்கொள்கையில் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும்வண்ணம் அரசு திட்டங்களை வகுக்க வேண்டும். அறிவியல் மனப்பான்மையை மாணவர்கள் மனதில் உருவாக்குவதில் ஆசிரியர்களுக்கு பெரும் பொறுப்பு இருக்கிறது. பல கேள்விகளோடு பள்ளிக்குள் நுழையும் ஒரு குழந்தை, பள்ளிப்படிப்பை முடித்து வெளியில் செல்லும்போது சிந்தனை முறையில் மாற்றம் ஏற்பட்டு, அறிவியல் மனப்பான்மை உள்ளவராக மாறவில்லை என்றால் அக்கல்வியால் எந்தப் பயனும் இல்லை.
  • நாட்டில் உள்ள அனைவரும் அறிவியல் அறிஞராக வேண்டும் என்கிற அவசியமில்லை. ஆனால், ஒவ்வொரு குடிமகனும் தன்னுடைய வாழ்க்கையைச் சிறந்த முறையில் அமைத்துக்கொள்ள, சமூகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்ல அறிவியல் மனப்பான்மை உடையவராக இருப்பது மிக அவசியம்.
  • (தேசிய அறிவியல் நாள் பிப்.28இல் கொண்டாடப்பட்டது.)

நன்றி: இந்து தமிழ் திசை (05 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்