- உலகில் மொத்தம் 3.9 கோடிக்கும் மேலாக பார்வைக் குறைபாடுள்ளவர்கள் உள்ளனர்; இவர்களில் 1.2 கோடி பேர் இந்தியாவில் உள்ளனர்.
- இவர்களில் பலர் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றை அணுகும்போது, பார்வையற்றவர் எனும் ஒரு தகுதியினாலேயே புறக்கணிக்கப்படுகின்றனர்.
- தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) நடத்திய கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் பார்வையற்றவர்களில் 29.16 சதவீதம் பேர் மட்டுமே ஏதேனும் ஒரு கல்வி முறையின் பகுதியாக உள்ளனர் என்பதும், இந்தியாவின் 6.86 சதவீத பள்ளிகளுக்கு மட்டுமே பிரெய்லி புத்தகங்கள், ஆடியோ கருவிகள் உள்ளன என்பதும் அதிர்ச்சியான உண்மை.
வறுமை
- வறுமைக்கு பார்வையின்மை ஒரு முக்கியக் காரணி என்ற நிபுணர்களின் கூற்றுப்படி, உலகிலேயே அதிக பார்வையற்ற மக்களைக் கொண்ட நம் நாடு உள்பட அனைத்து நாடுகளிலும் பெரும்பாலும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு அவர்கள் வறுமையில் வாழ்கின்றனர்.
- இந்தியாவில் தற்போது 20 லட்சத்துக்கும் அதிகமான பார்வையற்ற குழந்தைகள், கல்வியறிவினைப் பெற இயலாமல் உள்ளனர்; சுமார் ஐந்து சதவீதம் பேர் மட்டுமே ஏதேனும் ஒரு வகை கல்வியைப் பெறுகின்றனர்.
- பார்வையற்றோருக்கான கனிவான அணுகுமுறைகளின் தொட்டிலாக விளங்கிய பிரான்ஸ் நாட்டின் பதினைந்தாம் லூயி மன்னரின் மருத்துவரான டிடெரோட் பார்வையற்ற குழந்தைகளுக்கான முதல் பள்ளியைத் தொடங்கி, 1749-ஆம் ஆண்டில், "பார்ப்பவர்களின் பயன்பாட்டிற்காக பார்வையற்றோருக்கான கடிதம்' வெளியிட்டார். 1784-ஆம் ஆண்டில் பாரிஸில் வாலண்டைன் ஹாய் என்பவர் பார்வையற்ற இளைஞர்களுக்காக உருவாக்கிய கல்வி நிறுவனம் மற்றொரு மைல்கல்லாகும்.
லூயி பிரெய்லி
- பிரான்ஸின் பாரீஸ் நகருக்கு அருகே உள்ள ஒரு கிராமத்தில் 1809 ஜனவரி 4-ஆம் நாள் குதிரை லாடம், சேணம் தயாரிக்கும் பட்டறை வைத்திருந்த தந்தையின் 3-ஆவது குழந்தையாகப் பிறந்தார் லூயி பிரெய்லி; குழந்தைப் பருவத்தில் ஊசியை வைத்து விளையாடியபோது கண்ணில் காயம் ஏற்பட்டு பார்வையை இழந்தார்.
- பார்வையற்றோருக்கான ராயல் கல்வி நிறுவனத்தில் லூயி படித்துக் கொண்டிருக்கும்போது, போர்க்களத்தில் ராணுவத்தினர் இரவு நேரத்தில் ரகசியத் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்காக "நைட் ரைட்டிங்' என்ற முறையை சார்லஸ் பார்பியர் என்ற ராணுவத் தளபதி உருவாக்கினார்; அது குறித்து விளக்க லூயியின் பள்ளிக்கு அவர் வந்தார். தொடர்ந்து, பார்வையற்ற மாணவர்களுக்குக் கல்வி கற்றுத்தர 12 புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டிருந்த சார்லஸ் பார்பியர் முறைக்கு மாற்றாக எளிதாகவும், வேகமாகவும் பயில, ஆறே புள்ளிகளை மட்டும் பயன்படுத்தி ஒரு புதிய எழுத்து முறையை லூயி உருவாக்கினார்.
- உயிரில்லா பொருள்களாகக் கருதி சமூகத்தால் நிராகரிக்கப்படுகின்ற பார்வைக் குறைபாடுள்ளவர்கள் பல்வேறு சோதனைகளைக் கடந்து திறமையான நபர்களாக இவ்வுலகம் தங்களை அங்கீகரிக்கும் உயரத்துக்குக் காரணமான கல்வியின் அடிப்படை பல்வேறு மொழிகளில் உபயோகிக்கப்பட்ட "பிரெய்லி' முறை என்பது யாரும் மறுக்கமுடியாது.
- இந்தியாவில் 1923-ஆம் ஆண்டில் பிரெய்லி புத்தகங்களைத் தயாரிக்க ஒரு பிரெய்லி அச்சகம் அமைக்க முடிவெடுக்கப்பட்டது; 1950-இல் இந்திய மொழிகளுக்கான பொதுவான பிரெய்லி குறியீடான "பாரதி பிரெய்லி' உருவாக்கப்பட்ட பின், 1951-ஆம் ஆண்டு டெஹ்ராடூனில் முதல் அச்சகம் அமைக்கப்பட்டது.
தொழில் பயிற்சி
- அதே டெஹ்ராடூனில்1967-இல் பார்வையற்ற பெண்களுக்கான முதல் தொழில் பயிற்சி மையமும், 1959-இல் பார்வையற்றோருக்கான முதல் பள்ளியும், 1961-இல் முதல் எளிய பொறியியல் கல்வி நிறுவனமும் உருவாக்கப்பட்டது. அதிகாரம், சுதந்திரம் கொண்டு தங்கள் வாழ்க்கையை உயர்ந்த அளவுக்கு மாற்ற புனர்வாழ்வடைய கல்விக்கான கருவியாக பிரெய்லி விளங்குகிறது.
- பார்வைக் குறைபாடுடையவர்கள் உலகளவில் மற்றவர்களுடன் சமத்துவதுடன் வாழ வழிவகை செய்து சமூக நலக் கருவியாக பிரெய்லி செயலாற்றுகிறது. ஐ.நா. மனித உரிமைகள் சபை நியூயார்க்கில் ஒருங்கிணைத்த மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான மாநாட்டின் தீர்மானம் 30-இன் படி கலாசார வாழ்க்கை, பொழுதுபோக்கு, ஓய்வு, விளையாட்டு ஆகியவற்றில் பங்கேற்க பார்வைக் குறைபாடுடையவர்களுக்கு சம உரிமை உண்டு.
- மேலும், திரையரங்கம், அருங்காட்சியகம், நினைவுச் சின்னங்கள் போன்ற பொழுதுபோக்கு கலாசார தளங்களில் அவர்கள் எளிதில் நடமாட, எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் பிரெய்லி வடிவில் தகவல் பலகைகள் இருப்பதை உறுதி செய்யவேண்டும் என்பதையும் அந்தத் தீர்மானம் எடுத்துரைக்கிறது.
- அந்தத் தீர்மானத்தின்படி பிரெய்லி மூலம் கல்வி கற்கும் ஒருவர் சுதந்திரமாக எளிதில் நடமாடலாம். இனிவரும் காலங்களில் லிஃப்ட், விமானம், உணவகங்கள், வங்கிகள், போக்குவரத்துப் பகுதிகளில் நீங்கள் பிரெய்லியைக் காணலாம்.
நவீன காலக் கருவிகள்
- நவீன கால கருவியாக செல்லிடப்பேசிகளிலும், கணினிகளிலும் மென்பொருளாக பிரெய்லி பயன்பட்டு, கற்றலை எளிமைப்படுத்துகிறது. ஆப்பிள் செல்லிடப்பேசி தயாரிப்புகளில் பார்வையற்றோர் சொற்கள் மூலம் புகைப்படங்களை எடுத்து, எடுத்த புகைப்படம் குறித்து செல்லிடப்பேசி வார்த்தைகள் மூலம் தெரிந்துகொள்ள "ஐபிரைலர் நோட்ஸ்' அண்மையில் வெளியிடப்பட்டது.
- இது, மேலும் தொடுதிரையில் பிரெய்லி குறிப்புகளை விரைவாக தட்டச்சு செய்வதற்கான வழியை வழங்குகிறது. பார்வையற்றவர்கள் பி 2 ஜி பிரெய்லி விசைப்பலகை மற்றும் வலைதளங்களை உரக்கப் படிக்கும் ஜாவ்ஸ் மென்பொருள் மூலம் இணையதளத்தில் உலா வரலாம்.
- தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக பார்வையற்றவர்கள் குறைவாக உபயோகிக்கும் கருவியாக பிரெய்லி மாறி வருகிறது என்று கூறுகின்ற போதிலும், இன்றும் உலகெங்கிலும் 15 கோடிக்கும் அதிகமான மக்கள் பல காரணங்களுக்காக தொடர்ந்து பிரெய்லியைப் பயன்படுத்துகின்றனர்.
- தன்னம்பிக்கை மனிதர் லூயி பிரெய்லி காசநோயால் பாதிக்கப்பட்டு 43-ஆவது வயதில் உயிர் நீத்தாலும், பார்வையற்றவர்கள் தங்களைச் சுற்றியுள்ள எதார்த்தங்கள் குறித்த அறிவையும், இந்த எதார்த்தங்களைச் சமாளிக்கும் நம்பிக்கையையும், அந்த நம்பிக்கை உருவாக்கும் அங்கீகாரத்தினையும் கொண்டவர்களாக விளங்க அணையா நம்பிக்கை ஒளி ஏற்றி இருக்கிறார்.
நன்றி: தினமணி (04-01-2020)