TNPSC Thervupettagam

அறிவுக்குக் கிடைத்த பரிசு - மேரி கியூரி

October 31 , 2024 5 days 30 0

அறிவுக்குக் கிடைத்த பரிசு - மேரி கியூரி

  • உலகின் மிக உயரிய கெளரவமான விருதாகக் கருதப்படுவது நோபல் பரிசு. இந்த உயரிய விருதை ஒருமுறை பெறுவதே மிகவும் கடினம். நோபல் பரிசு வரலாற்றிலேயே இந்தப் பரிசை இரண்டுமுறை வென்ற பெருமையைப் பெற்றவர் ஒரு பெண். பெண்களுக்கு உரிமையே வழங்கப்படாத ஒரு காலக்கட்டத்தில், கலை, அறிவியல் போன்ற துறைகளில் பெண்களால் சாதிக்க முடியாது என்று கருதப்பட்ட ஒரு காலத்தில் இந்த மாபெரும் சாதனையை அவர் நிகழ்த்தினார். இந்தச் சாதனையை நிகழ்த்தியவர் மேரி கியூரி.

அறிவியல் கனவு:

  • 1867ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் நாள் போலந்தின் வார்ஷாவ் நகரில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார் Maria Salomea Skłodowska Curie என்கிற மேரி கியூரி. மரியாவின் தந்தை அறிவியல் ஆசிரியர். அதனாலயே மரியாவுக்கு அறிவியலில் அதிக ஆர்வம் ஏற்பட்டது.
  • கல்வியில் சிறந்து விளங்கிய மரியா சிறு வயதிலிருந்தே விஞ்ஞானியாக வரவேண்டும் என்று விரும்பினார். அந்தக் காலத்துப் பெண்கள் கற்பனைகூடச் செய்து பார்க்க முடியாத விஷயம் இது. ஆனால், தன் கனவை நனவாக்க முடியும் என்று நம்பினார் மரியா. கல்விக் கட்டணம் செலுத்தவும் குடும்பச் செலவுக்காகவும் அவர் பகுதிநேர ஆசிரியராகப் பணியாற்றினார்.
  • 24ஆவது வயதில் மேற்படிப்புக்காக பாரிஸுக்குச் சென்ற அவர் ஸாபான் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். இயற்பியலில் மிகச்சிறப்பாகத் தேர்ச்சியடைந்து பட்டமும் பெற்றார். அந்தக் காலக்கட்டத்தில் அவர் Pierre Curie என்பவரைச் சந்தித்தார். ஆரம்பத்தில் நட்பாக இருந்த பழக்கம் பின்னர் காதலாக மாறியது. நான்கு ஆண்டுகள் கழித்து அவரை மணந்து கொண்ட மரியா, மேரி கியூரி ஆனார்.

புதிய தனிமங்கள் கண்டுபிடிப்பு:

  • 1897இல் முனைவர் பட்டத்துக்காக யுரேனியம் என்னும் தனிமத்தைப் பற்றி ஆராயத் தொடங்கினார் மேரி கியூரி. கணவர் பியரி கியூரியும் அவரோடு சேர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டார். பல்வேறு தனிமங்களை அவர்கள் ஆராய்ந்தனர். தோரியம் போன்ற சில தனிமங்களுக்குக் கதிரியக்கச் சக்தி இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். அவர்களது தொடர்ச்சியான ஆய்வின் பலனாக இரண்டு புதிய தனிமங்கள் உலகுக்குக் கிடைத்தன.

பொலோனியம் மற்றும் ரேடியம்:

  • முதலாவது தனிமத்திற்குத் தான் பிறந்த போலந்தின் நினைவாக ‘பொலோனியம்’ என்று பெயரிட்டார் மேரி கியூரி. இரண்டாவது தனிமம்தான் புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படும் ‘ரேடியம்.’ கடுமையான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டாலும், கல்லூரியிலும் பேராசிரியர்களாக இருந்தனர். ஆராய்ச்சிகளில் ஆர்வம் இருந்த அளவுக்கு அவர்களிடம் வசதியில்லை. போதிய மின்வசதியில்லாத, ஒழுகும் கூரையைக்கொண்ட ஓர் அறைதான் அவர்களின் ஆய்வுக்கூடமாக இருந்தது. சக விஞ்ஞானிகள் அதை மாட்டுத்தொழுவம் என்று கிண்டலடித்தனர். அவர்களுக்குப் பண உதவி செய்து ஆதரிக்க எவரும் இல்லை.

கணவர் பியரி கியூரியுடன் மேரி கியூரி

  • ரேடியத்திற்குக் காப்புரிமை எடுத்தால் நிறைய பணம் கிடைக்கும் என்று தெரிந்தும் அதை அவர்கள் செய்யவில்லை. இதற்குக் காரணம், கதிரியக்கம் பற்றி விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து மனித குலத்துக்குப் பயனுள்ள வகையில் பல நன்மைகளைச் செய்ய வேண்டும் என்று நினைத்ததுதான்.

சோதனை எலி:

  • ரேடியத்தின் உண்மையான விளைவைக் கண்டறிய தன்னையே சோதனைக்கூட எலியாக மாற்றிக்கொண்டார் பியரி கியூரி. தன் உடலின் மேல் ரேடியத்தைப் பயன்படுத்திப் பார்த்தார். முதலில் எரிச்சல் உண்டானது. பின்னர் புண் ஏற்பட்டது. அதன் பிறகு உடலில் ஏற்படும் கட்டிகளுக்குச் சிகிச்சையளிக்க ரேடியம் பயன்படுத்தப்பட்டது. அதனை ‘கியூரி தெரபி’ என்று அழைத்தனர்.

நோபல் பரிசு:

  • ரேடியத்தையும் இயற்கையான கதிரியக்கத்தையும் கண்டுபிடித்ததற்காக கியூரி தம்பதிக்கு 1903ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்த மகிழ்ச்சி அதிக நாள்கள் நீடிக்கவில்லை. கதிரியக்கத்தின் தாக்கத்தாலும் கடும் உழைப்பாலும் நலிவுற்றிருந்தார் பியரி கியூரி. 1906ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் நாள் பாரிசில், புயலுடன் கூடிய கடுமையான மழை பெய்துகொண்டிருந்தது. அப்போது ரியூடௌபைன் என்கிற இடத்தில் சாலை விபத்தில் பியரி கியூரி மரணம் அடைந்தார். தன் கணவரின் எதிர்பாரா மறைவையடுத்து, மேரி கியூரியும் இரண்டு பிள்ளைகளும் தவித்துப் போயினர்.

கூடுதல் சுமை:

  • ஒரு பக்கம் ஆராய்ச்சி, இன்னொரு பக்கம் இரண்டு பிள்ளைகள். இரண்டு பொறுப்புகளையும் திறம்படக் கவனிக்கச் சிரமப்பட்டுப் போனார் கியூரி. பியரி கியூரி இறந்ததும் அவர் வகித்துவந்த பாரிஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் பணி மேரி கியூரிக்கு வழங்கப்பட்டது. அந்தப் பொறுப்பை வகித்த முதல் பெண்மணி மேரி கியூரிதான்.

மீண்டும் நோபல் பரிசு:

  • முதல் நோபல் பரிசை வென்ற எட்டே ஆண்டுகளில், அதாவது 1911ஆம் ஆண்டில் மேரி கியூரிக்கு இரண்டாவது நோபல் பரிசு வழங்கப்பட்டது. இம்முறை ரேடியத்தின் அணு எடையை அளக்கும் முறையைக் கண்டுபிடித்ததற்காக வேதியியல் துறையில் விருது வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 1914 ஆம் ஆண்டு பாரிஸில் அவர் ரேடியக் கழகத்தை நிறுவினார்.

முதல் உலகப்போர்:

  • நோபல் பரிசு வழங்கப்பட்ட அதே ஆண்டு, முதல் உலகப்போர் மூண்டது. ‘X’ கதிர்கள் மூலம் உடலின் எந்தப் பகுதியில் குண்டு பாய்ந்திருக்கிறது என்று கண்டுபிடித்து அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்று நம்பினார் கியூரி. அதே நேரத்தில் காயம் அடைந்தவர்களை நகர்த்தக் கூடாது என்பதற்காக, ‘எக்ஸ்-ரே’ வாகனத்தை உருவாக்கிச் சுமார் 150 தாதியர்களுக்குப் பயிற்சியும் அளித்தார். மேரி கியூரியின் மகள் ஐரினும் ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.

புற்றுநோய்க்குச் சிகிச்சை:

  • மேரி கியூரியின் கண்டுபிடிப்புகளால்தான் புற்றுநோய்க்கான சிகிச்சை பிறந்தது. பல ஆண்டுகள் ரேடியத்தோடு ஆராய்ச்சி செய்ததால் அவருக்குக் கடும் கதிரியக்கத் தாக்கம் ஏற்பட்டது. மனித குலத்தின் நலனுக்காக ஆராய்ச்சியில் ஈடுபட்ட மேரி கியூரிக்கு ‘லுக்கிமீயா’ வகை புற்றுநோய் ஏற்பட்டது. புற்றுநோயாளிகளின் வாழ்க்கையை மீட்டுத்தர எந்தக் கண்டுபிடிப்பு மேரி கியூரிக்கு உதவியதோ, அதே கண்டுபிடிப்பு அவரது வாழ்க்கையையும் முடித்தது.
  • கதிரியக்கத்தால், கிட்டத்தட்ட தனது விரல்களையும் பார்வையையும் இழந்த நிலையில் மேரி, 1934 இன் முற்பகுதியில் கடைசி முறையாகத் தனது தாய்நாடான போலந்துக்குச் சென்றார். சில மாதங்கள் கழித்து, 1934 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி தனது 67ஆவது வயதில் மேரி கியூரி, பச்சியில் உள்ள சன்செல்லிமொஸ் சானடோரியத்தில் இறந்தார். கதிரியக்கப் பாதிப்பால் ஏற்பட்ட அப்பிலாச்டிக் ரத்தச்சோகைதான் அவர் இறக்கக் காரணம் என்றனர் மருத்துவர்கள்.
  • மேரி கியூரியின் சடலம், பிரான்ஸில் அவருடைய கணவர் புதைக்கப்பட்ட கல்லறையிலேயே புதைக்கப்பட்டது. 60 ஆண்டுகளுக்குப் பிறகு, 1995ஆம் ஆண்டு மேரி கியூரி மற்றும் அவருடைய கணவரின் அஸ்தி அந்தச் சாதாரண கல்லறையில் இருந்து எடுக்கப்பட்டு, பாரிஸில் உள்ள புகழ்பெற்ற பாந்தியன் அரங்குக்கு 1995இல் மாற்றப்பட்டது. வரலாற்றில் மிக முக்கியமானவர்களுக்கு பிரெஞ்சு தேசம் வழங்கும் உயரிய மரியாதை இது. இதுவரை இப்படி மரியாதை செய்யப்பட்டிருக்கும் ஒரே பெண் மேரி கியூரிதான்.

மகளுக்கும் நோபல் பரிசு:

  • தாய், தந்தை வழியில் ஆராய்ச்சிப் பணிகளைத் தொடர்ந்த ஐரின், பின்னாளில் செயற்கைக் கதிரியக்கத்தைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசைப் பெற்றார்.
  • 1890 காலத்து மேரியின் ஆவணங்களைக் கையாளுதல் மிகவும் ஆபத்தானது என்று கருதப்படுகின்றது. ஏனெனில், அவை கதிரியக்க வெளிப்பாட்டைக் கொண்டிருக்கின்றன. அவரது சமையல் புத்தகம்கூட அதிகக் கதிரியக்க வெளிப்பாட்டைக் கொண்டது என நம்பப்படுகிறது.
  • மேரி கியூரி நினைத்திருந்தால், ரேடியம் என்ற அரிய தனிமத்தைக் கண்டுபிடித்ததற்காக நிறைய சம்பாதித்திருக்கலாம். ஆனால், தன் கண்டுபிடிப்பு மனித குலத்துக்குப் பயன்பட வேண்டும் என்று நினைத்ததால் அவர் இதை விரும்பவில்லை.

நன்றி: இந்து தமிழ் திசை (31 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்