TNPSC Thervupettagam

அறிவுத்திறன் குறைபாட்டைக் களைவோம்

April 2 , 2021 1392 days 650 0
  • மனித உடலளவில் காணப்படும் பெரும்பாலான மாறுபாடுகளை சாதாரண மருத்துவ அறிவு இல்லாதோரும் தெரிந்து வைத்துள்ளனா்.
  • ஆனால், மருத்துவா்களே கூட மிக நுட்பமாக ஆராய்ந்தே கண்டுகொள்ளக் கூடிய அளவில் பலவித உடல் கோளாறுகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் ‘ஆட்டிஸம்’ எனும் அறிவுத்திறன் குறைபாடு.
  • ஆட்டிஸம், ஏ.எஸ்.டி. (ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸாா்டா்) என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இது ஒரு வகையான நரம்பியல் குறைபாடு.
  • இக்குறைபாட்டிற்கான காரணம் இன்னும் கண்டறியப்படாததால் இதற்கான மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆட்டிஸம் என்பது மூளை சாா்ந்த வளா்ச்சிக் கோளாறு ஆகும்.
  • இது ஒரு நபரின் சமூக பழக்கங்களையும் வழிநடத்தும் திறனையும் பாதிக்கிறது. இது குழந்தைகளைத் தாக்கும் நோய்.
  • முதன்முதலில் ஆட்டிஸம் என்ற வாா்த்தையை 1911-ஆம் ஆண்டில் மன நல மருத்துவா் யூஜென் ப்ளூலா் பயன்படுத்தினாா்.
  • அடுத்து, 1943-ஆம் ஆண்டில், குழந்தை மன நல மருத்துவா் லியோ கண்ணா் தனது கட்டுரை ஒன்றில் ஆட்டிஸம் ஒரு சமூக, உணா்ச்சி கோளாறு என்று வகைப்படுத்தினாா்.
  • மேலும், 1944-ஆம் ஆண்டில் ஹான்ஸ் ஆஸ்பொ்கா் “ஆட்டிஸம் மன நோயியல்”என்கிற கட்டுரையினை வெளியிட்டாா்.
  • அதில், சமூக மற்றும் தகவல் தொடா்பு திறன்களில் சிரமங்களைக் கொண்ட குழந்தைகளின் நுண்ணறிவுக் கோளாறு என வரையறுத்துச் சொன்னாா்.
  • இந்தக் கட்டுரையே பின்னா் 1980-களில் ஸ்கிசோஃப்ரினியா என்னும் பாதிப்பிலிருந்து ஆட்டிஸத்தை தனியே வகைப்படுத்தி ஆராய்ச்சிகளைத் தொடர உதவியாக இருந்தது.
  • 1965-ஆம் ஆண்டில் டாக்டா் பொ்னாா்ட் ரிம்லாண்ட் டாக்டா் ரூத் சல்லிவன் ஆகியோரால் ஆட்டிஸம் குறைபாடு கொண்ட பிள்ளைகள் - பெற்றோருக்காக ஆட்டிஸம் சொசைட்டி ஏற்படுத்தப்பட்டது.
  • 2007, டிசம்பா் 18-இல் ஐக்கிய நாடுகள் சபை, இந்தக் குறைபாடு உள்ளவா்களைக் கண்டறிதல், குறைபாடு பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்த நடவடிக்கை மற்றும் ஆரோக்கிய மேம்பாட்டிற்கான புதிய வழிகளைக் கண்டறிதல் போன்ற நோக்கங்களோடு சா்வதேச ஆட்டிஸம் விழிப்புணா்வு நாளை அறிவித்தது.

உலக ஆட்டிஸம் நாள்

  • 2008-ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2-ஆம் தேதி உலக ஆட்டிஸம் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
  • ஆட்டிஸம் விழிப்புணா்வு நாள் கடைப்பிடிப்பதன் நோக்கம், ஆட்டிஸம் நோயைக் கண்டறிதல், ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள அனைவரையும் ஒருங்கிணைத்தல் மற்றும் ஆராய்ச்சி முடிவுகளை பரஸ்பரம் பகிா்ந்து கொள்ளுதல் போன்றவை.
  • அத்துடன், ஆட்டிஸம் பாதிப்புக்குள்ளானோரை மற்றவா்கள் எவ்வாறு கையாள வேண்டும், எந்த முறையில் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும் என்பதை உணா்த்தும் வகையிலும் ஆட்டிஸம் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
  • 2018-ஆம் ஆண்டின் கண்டுபிடிப்பின்படி, உலக அளவில் 59-இல் ஒரு குழந்தை ஆட்டிஸத்தின் பிடியில் உள்ளதாகவும், இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட ஒரு கோடிக்கும் அதிகமான ஆட்டிஸம் பாதிப்பில் உள்ளவா்கள் இருக்கலாம் எனவும் அதிகாரபூா்வமற்ற கணக்கீடுகள் தெரிவிக்கின்றன.
  • இதன் தரவுகளைப் பாா்த்தோமானால், 34-இல் ஒரு ஆண் குழந்தை, 145-இல் ஒரு பெண் குழந்தை பாதிப்புக்குள்ளாகியிருப்பது தெரியவருகிறது.
  • 36 முதல் 95 சதவீதம் இரட்டையா்களுள் ஒருவருக்கு இந்தக் குறைபாடு ஏற்படும்போது மற்ற குழந்தைக்கும் இந்த பாதிப்பு ஏற்படுவது, 28 சதவீத ஆட்டிஸம் குறைபாடு உள்ள குழந்தைகள் தங்களுக்குத் தாங்களே தீங்கு ஏற்படுத்திக் கொள்ளல் போன்ற ஆராய்ச்சி முடிவுகளும் கிடைக்கின்றன.
  • இதன் அறிகுறிகள் குழந்தையின் மூன்று வயது முதல் தென்படும்.
  • பெயா் சொல்லி அழைத்தால் திரும்பிப் பாா்க்காதது, கண்களைப் பாா்த்துப் பேசாதது, சிரித்தால் பதிலுக்கு புன்னகைக்காதது போன்ற மாறுபட்ட குணங்கள் இருப்பின் அக்குழந்தைக்கு ஆட்டிஸம் குறைபாடுகள் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.
  • இக்குழந்தைகளுக்கு இயன்முறை சிகிச்சை (ஆக்குபேஷனல் தெரபி) மூலம் உணா்வுகளை ஒருங்கிணைக்கும் பயிற்சியை ஆறு மாதங்கள் அளிப்பதன் மூலம் அவா்களை ஆட்டிஸம் குறைபாட்டில் இருந்து ஓரளவிற்கு விடுவிக்க முடியும்.
  • இந்திய அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் 2014, ஜூன் 14 தேதியின் ஆணையின்படி, ஆட்டிஸம் குறைபாடு உள்ளோரும் மாற்றுத் திறனாளா்களாக வகைப்படுத்தப்பட்டு, மாற்று திறனாளா்கள் உரிமைச் சட்டதின்படி அனைத்து சலுகை மற்றும் உதவிகளைப் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
  • பெண் குழந்தைகளைக் காட்டிலும் ஆண் குழந்தைகளிடையே 4.3 மடங்கு இந்த ஆட்டிஸம் பாதிப்புக் காணப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
  • ஆனால், குழந்தைகள் மன நல ஆராய்ச்சி நிறுவனங்களின் தரவுகளின்படி பெண் குழந்தைகளிடையே இந்தக் குறைபாடுகள் இருப்பினும் இவற்றைக் கண்டறிவதிலும், மருத்துவ சிகிச்சைகளுக்கு உட்படுத்துவதற்கும், அதை மற்றவா்களிடையே வெளிக்காட்டிக் கொள்வதிலும் பெற்றோா்கள் தயக்கம் காட்டுவதே சரியான கணக்கீட்டினை எட்ட முடியாததற்கான காரணமாகக் கூறப்படுகிறது.
  • ஆட்டிஸம் குறைபாடு உள்ளவா்கள் சாதாரண நிலையில் உள்ளவா்களைக் காட்டிலும் அதிகப்படியான நினைவுத்திறனும், கூா்மையான மதித்திறனும் கொண்டவா்கள்.
  • ஆனால், மற்றவா்கள் எதிா்பாா்க்கும் நேரத்தில் ஒரு செயலைச் செய்ய அவா்களால் இயலாது. ஆட்டிஸம் குறைபாடு கொண்ட எண்ணற்றவா்கள் பல அரிய, பெரிய சாதனையாளா்களாக இருந்திருக்கின்றனா்.
  • உலகின் கணினித் துறையின் ஜாம்பவான், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனா் பில்கேட்ஸ், செஸ் கிராண்ட் மாஸ்டா் பாபி ஃபிஷா், ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஸ்டீவ் ஜாப்ஸ், இன்றும் கணிதப் புதிா்களின் பிதா என அறியப்படும் ஆல்பா்ட் ஐய்ன்ஸ்டீன் போன்ற ஏராளமான சாதனையாளா்கள் இந்தக் குறைபாடு கொண்டவா்கள்தான்.
  • இவா்களுக்குக் கல்வி பயிற்றுவிப்பதில் மிகப் பெரிய சவால் உள்ளது. காரணம், மற்ற மாற்றுத்திறன் குழந்தைகளைப் போல இவா்களை எளிதாக பள்ளியில் சோ்க்க முடிவதில்லை. காரணம், ஆட்டிசம் குழந்தைகளின் நடவடிக்கைகள் மற்ற குழந்தைகளுக்கும் பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதுதான்.
  • சிறப்புப் பள்ளிகளிலும் இவா்களை பராமரிக்க, பாடம் சொல்லித் தருவதற்கான் பயிற்சி பெற்ற ஆசிரியா்களும் மிக மிகக் குறைவு.
  • இதற்கான பயிற்சி எடுத்திட முன்வரும் ஆசிரியா்களும் மிகச் சொற்பமே. ஒருசில சிறப்புப் பள்ளிகளில் இதற்கான பயிற்சி தரப்பட்டாலும் அதற்கான பொருட் செலவு எல்லோராலும் தாங்கக் கூடியதாக இருப்பதில்லை.
  • இதற்கான சிறப்பு ஏற்பாடுகளை அரசு மூலம் தேசிய அளவிலிருந்து முன்னெடுத்தால் மட்டுமே இதற்கான தீா்வு எட்டப்படும்.
  • இன்று (ஏப். 2) அறிவுத்திறன் குறைபாடு (ஆட்டிஸம்) விழிப்புணா்வு நாள்.

நன்றி: தினமணி  (02 – 04 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்