அறிவியல் விருதுகளிலுமா அரசியல்?
- இந்தியாவின் தலைசிறந்த அறிவியலாளர்களில் ஒருவரான சாந்தி ஸ்வரூப் பட்நாகரைப் பற்றி அறிந்திருக்கிறீர்களா? இந்தியா முழுவதும் 29 இடங்களில் அடிப்படை அறிவியலில் உலகத் தரம் வாய்ந்த ஆய்வுக்கூடங்களை உருவாக்கிக் கொடுத்த பெருமைக்குரியவர் சாந்தி ஸ்வரூப்.
- 1930களில் இந்தியாவின் இயற்கை வளங்களைப் புதிய தொழில் வளர்ச்சிக்குத் தேவையான ஆராய்ச்சி அடிப்படைகளுக்குப் பயன்படுத்த வேண்டிய அவசியம் குறித்து சி.வி.ராமன், ஜே.சி.கோஷ், தென்னிந்தியத் தொழிலதிபர் ஆர்க்காடு ராமசாமி போன்றோர் அறிவியல் ஆராய்ச்சிக்கான ஆலோசனைக் குழு ஒன்றை உருவாக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்களுக்கு அழுத்தம் கொடுத்தனர்.
- இதன் அடிப்படையில், உலகளவில் ‘நேச்சர்’ ஆய்விதழின் ஆசிரியராக இருந்த சர் ரிச்சர்ட் கிரிகரி பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அதிகாரபூர்வமான அறிவியல் ஆய்வுக்கூடங்கள் அமைக்கும் ஆலோசனைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். ஒரு பிரித்தானியர் இந்தியாவின் அறிவியல் ஆய்வுக்கூடங்களை நிறுவுவதில் எந்த அளவுக்கு முனைப்புக் காட்டுவார் என்கிற கேள்வியின் அடிப்படையில், அதற்காகத் தலைசிறந்த ஓர் அறிஞரை இந்தியாவிலேயே தேர்வுசெய்யக் கட்டாயப்படுத்தப்பட்டது. அப்படி இந்தியாவுக்கென்று கிடைத்த மாமனிதர்தான் சாந்தி ஸ்வரூப்.
- வைஸ்ராயின் நிர்வாகக் குழுவில் உறுப்பினராகவும் வணிகவியல் தொடர்பான நிபுணத்துவக் குழுக்களிலும் இடம்பெற்றிருந்த ஆர்க்காடு ராமசாமி, இரண்டாம் உலகப்போரின் தொடக்கத்தில் இந்தியாவில் அறிவியல் - தொழிலக ஆய்வு மன்றம் (Council of Scientific and Industrial Research – CSIR) என்னும் அமைப்பை உருவாக்குவதற்குப் பெரும் அழுத்தம் கொடுத்தார். அந்த நாள்களிலேயே ஆண்டுக்கு ரூ.10,00,000 பணம் ஒதுக்குவதற்குக் காரணமாக அமைந்தார்.
- சாந்தி ஸ்வரூப் முதலில் ஜாம்ஷெட்பூரில் தேசிய உலோகவியல் ஆய்வகத்தைத் தொடங்கினார். விடுதலைக்குப் பிறகு, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் முழு ஆதரவோடு புணேயில் ஒரு வேதியியல் ஆய்வகமும் அதற்கு அடுத்தடுத்த ஆண்டுகளில் 15 நிறுவனங்களும் நாடு முழுவதும் உருவாக்கப்பட்டன (தற்போது இந்தியா முழுவதும் 39 ஆய்வுக்கூடங்களை சிஎஸ்ஐஆர் நடத்திவருகிறது). சாந்தி ஸ்வரூப் 1955 ஆம் ஆண்டு காலமானார்.
- இந்தியாவின் தலைசிறந்த கண்டுபிடிப்புகள் உருவாவதை ஊக்கப்படுத்த நேரு அரசு, 1958ஆம் ஆண்டு சாந்தி ஸ்வரூப் பெயரில் அறிவியல் விருதுகள் வழங்குவதற்குப் பரிந்துரைத்தது. உயிரியல், வேதியியல், புவியியல், வளிமண்டலவியல், பெருங்கடல் இயல் என்று 27 துறைகளில் ரூ.5,00,000 ரொக்கப் பணமும் மாதத்துக்கு ரூ.15,000 உதவித்தொகையும் (65 வயது வரை) வழங்குவதற்காக விருதுகள் முன்மொழியப்பட்டன.
- ஒவ்வொரு பிரிவிலும் குறைந்தபட்சம் இரண்டு நபர்களுக்கு விருது வழங்க வேண்டும்; விருது பெறுபவர் மனித அறிவு மற்றும் முன்னேற்றத்துக்கு அடிப்படையான கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்திருப்பதோடு, மூடநம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் என்கிற ஒரு சிறப்பு விதி ஆரம்பத்திலேயே சேர்க்கப்பட்டது. கனடா, ஆஸ்திரேலியா உள்படப் பல நாடுகள் இந்த முன்னுதாரணத்தை எடுத்துக்கொண்டு, தங்கள் நாடுகளில் இதே போன்ற விருதுகளை அறிவிக்கும் அளவுக்கு இந்த விருது உலகளாவிய புகழைப் பெற்றிருந்தது.
பெயர் மாற்றப்பட்ட அறிவியல் விருதுகள்:
- 2023ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவியல் விருதுகள் அனைத்தையும் ரத்து செய்தது. அறிவியல் அறிஞர்கள், விஞ்ஞானிகள் போன்றவர்களுக்கு வழங்கப்படும் விருதுகள் மாற்றப்பட வேண்டும் என்று அறிவித்தது. விருது வழங்குவதில், அதிகாரிகள் அளவிலும் உயர்மட்டத்திலும் அரசியல் புகுந்துவிட்டது; வெளிப்படைத்தன்மையுடன் விருதுகள் வழங்கப்பட வேண்டும் என்றெல்லாம் கூறிய மத்திய அரசு, இனி விருதுகள் ‘ராஷ்ட்ரிய விஞ்ஞான் புரஸ்கார்’ என்று அழைக்கப்படும் என்று அறிவித்தது.
- பத்மஸ்ரீ விருதைப் போல விஞ்ஞான் ஸ்ரீ விருது, பாரத ரத்னா விருதைப் போல விஞ்ஞான ரத்னா விருது என விருதுகள் பிரிக்கப்பட்டன. ‘இந்திய அறிவியல் ஆய்வகங்களின் பிதாமகன்’ என்று அழைக்கப்பட்ட சாந்தி ஸ்வரூப்பின் பெயர் கைவிடப்பட்டது.
- ஆனாலும் இந்த விருதுக்கான அறிவியலாளர்களைத் தேர்வுசெய்வதில் அரசு ஒருபோதும் தலையிடாது என்றும், அதற்கென்று தேசிய முதன்மை அறிவியல் ஆலோசகர் தலைமையில் ஓர் அறிவியலாளர்கள் குழு அமைக்கப்படும் என்றும், அந்தக் குழு முழுமையாக ஆய்வுசெய்து எவ்வகையான அதிகாரத் தலையீடும் இன்றி விருதாளர்களைத் தேர்வுசெய்து அறிவிக்கும் என்றும் அரசு தெரிவித்தது.
ஒரே இரவில் மாற்றப்பட்ட பெயர்கள்:
- ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கான விருதுகள் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 7இல் ராஷ்ட்ரிய விஞ்ஞான் புரஸ்கார் விருது பெறுவோரின் முதல் பட்டியல் வெளியிடப்பட்டது. தேசிய முதன்மை அறிவியல் ஆலோசகர் தேர்வுசெய்து கொடுத்த பட்டியலில் இடம்பெற்றிருந்த பலரது பெயர்கள் மறுநாள் காலையில் காணாமல் போயிருந்தன.
- இது குறித்துப் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ராஷ்ட்ரிய விஞ்ஞான் புரஸ்கார் விருதுக்காக இணையத்தில் அறிவிக்கப்பட்டிருந்த விதிமுறைகள் எதுவும் மீறப்படவில்லை என்றும், தேவைப்பட்டால் விதிமுறைகளை வாசித்துக் கொள்ளுமாறும் தேசிய முதன்மை அறிவியல் ஆலோசகர் தெரிவித்தார்.
- இரவோடு இரவாக விதிகள் மாற்றப்பட்டிருந்தது பின்னர் தெரியவந்தது. முன்பிருந்த விதிகளின்படி தேசிய முதன்மை அறிவியல் ஆலோசகர் தலைமையிலான குழு ‘விருதாளர்களைத் தேர்வுசெய்யும்’ என்று இருந்ததை ‘விருதாளர்களைப் பரிந்துரைக்கும்’ என்று மாற்றப்பட்டிருந்தது. அமைச்சரவையின் முடிவு இறுதியானது என்கிற ஒரு பிரிவும் சேர்க்கப்பட்டிருந்தது.
விருது மறுக்கப்பட்ட மாமனிதர்கள்:
- முந்தைய விருதுகளில் இருந்த அரசியல் முழுவதும் நீக்கப்பட்டு, கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட விருதுகள் நிறுத்திவைக்கப்பட்டு, இந்த ராஷ்ட்ரிய விஞ்ஞான் புரஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தாலும் இதில் வேறொரு பிரச்சினை இருப்பது தெரியவந்திருக்கிறது. இந்த ஆண்டின் புதிய விருதுப் பரிந்துரையிலிருந்து நீக்கப்பட்ட பெயர்கள் அனைத்துக்கும் ஒரு பொதுத்தன்மை இருக்கிறது. இவர்கள் அனைவருமே, அறிவியல் துறை சார்ந்து மத்திய அரசினுடைய போக்குகளை வெளிப்படையாக விமர்சித்தவர்களாக இருப்பவர்கள் என்பதுதான் அது!
- உதாரணமாக, கொல்கத்தா இந்திய அறிவியல் கழகத்தின் பேராசிரியரும் இந்தியாவின் தலைசிறந்த வானியல் அறிஞருமான அயன் பானர்ஜியின் பெயர் நீக்கப்பட்டது. பழமைவாத நம்பிக்கைகளுக்கு எதிராக வீதி நாடகங்கள் நடத்துகின்ற ஓர் அமைப்பை நடத்திவருபவர் இவர். இன்னொரு உதாரணம் - கடல் ஆய்வாளர் அதிதி பந்த். இவர் நரேந்திர தபோல்கர் நடத்திய அமைப்பில் இணைந்து செயல்பட்டவர்.
அறிவியல் மீதான தாக்குதல்கள்:
- எப்போதெல்லாம் அறிவியலுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவோ அப்போதெல்லாம் தார்மிகரீதியிலும் ஜனநாயக முறையிலும் அதை விமர்சித்து அரசுக்குக் கடிதம் அனுப்புவதை அறிவியலாளர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். பொதுவெளியிலும் தங்கள் எதிர்ப்பைப் பதிவுசெய்துவருகின்றனர்.
- உதாரணமாக, தற்கால இயந்திரக் கற்றல் எனும் செயற்கை நுண்ணறிவுக்கான கற்கும் முறையில் எளிதான ஒரு மொழி சம்ஸ்கிருதம்தான் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவித்தபோது, அதை அறிவியலாளர்கள் விமர்சித்தனர்.
- இந்த அறிவியலாளர்கள், ‘பொது அறிவியலின் நன்மைக்காக இந்திய இறையாண்மையைக் கட்டிக்காப்போம்’ என்கிற கடமை உணர்வோடு செயல்படுபவர்கள். அவர்களின் பெயர்கள் விருதுப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பது இந்திய அறிவியலுக்குப் பின்னடைவையே ஏற்படுத்தும்!
நன்றி: இந்து தமிழ் திசை (10 – 10 – 2024)