- நம் நாட்டில், பல்வேறு காரணங்களுக்காக கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் மாநிலங்களவை உறுப்பினர்களாக நியமிக்கப்படுகின்றனர்.
- இவர்களில் சிலர் தீவிர அரசியலில் ஈடுபட்டு, ஏதாவதொரு கட்சியின் உறுப்பினராகி, சட்டப்பேரவைக்கோ நாடாளுமன்றத்துக்கோ தேர்ந்தெடுக்கப்படுவதும்
- உண்டு.
சிறப்பான பணி
- ஜெயலலிதா, அமிதாப் பச்சன், ஜெயா பச்சன், ஜெயபிரதா, சச்சின் டெண்டுல்கர், கீர்த்தி ஆசாத், தாசரி நாராயண ராவ், முகமது அசாருதீன், நவ்ஜோத் சிங் சித்து, கெளதம் கம்பீர் உள்ளிட்ட பலர் இவ்வகையில் நியமனம் மூலமாகவும், தேர்தலில் போட்டியிட்டும் வெவ்வேறு அவைகளின் உறுப்பினர்களாகியிருக்கிறார்கள். இப்பட்டியலில் இன்னும் பல பிரபலங்களும் உண்டு.
- இத்தகைய பிரபலங்களில் பலரும் அவைக்கு வருகை தந்து ஆக்கபூர்வமான விவாதங்களில் ஈடுபடுவது என்பது அரிதாகவே நடைபெறுகிறது. இதனை அவ்வப்போதைய ஊடகச் செய்திகளும் ஊர்ஜிதம் செய்கின்றன.
- பிற்காலத்தில் தமிழக முதல்வராக விளங்கிய ஜெயலலிதா, தான் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த காலத்தில் சில முக்கிய பிரச்னைகளைப் பற்றிய விவாதங்களில் கலந்துகொண்டு, அன்றைய பிரதமர் இந்திரா காந்தி உள்ளிட்டவர்களின் பாராட்டுகளைப் பெற்றிருக்கின்றார்.
- முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, பஞ்சாப் மாநில அமைச்சராக இருந்த காலத்தில், அம்மாநிலத்தைச் சேர்ந்த பாரம்பரியமான பித்தளைப்பாத்திர உற்பத்தித் தொழிலின் மறுவாழ்விற்காக குரல் கொடுத்தார்.
- மற்றபடி அவருடைய அரசியல் ரீதியிலான செயல்பாடுகள் அவ்வப்போது சர்ச்சைக்குரியனவாகவே இருந்துவந்துள்ளன.
- அமிதாப் பச்சன், ஜெயா பச்சன் போன்றவர்கள் பல்வேறு காரணங்களால் பதவி கிடைத்தும் அதில் நாட்டம் காண்பிக்கவில்லை.
தற்போதைய நிலை
- சச்சின் டெண்டுல்கர் மிகக் குறைவான நாள்களே மாநிலங்களவையின் நடவடிக்கைகளில் பங்கு பெற்றார். சபைக்கு அவரது வருகை ஏழு சதவீதம் என்ற குறைந்த அளவிலேயே இருந்தது. மேலும், அவர் தன்னுடைய பதவிக் காலத்தில் இருபத்துரெண்டு கேள்விகளை மட்டுமே அவையில் எழுப்பியுள்ளார்.
- ஹிந்தி நடிகை ரேகாவின் செயல்பாடு இன்னும் மோசம். அவரது வருகையே நான்கு சதவீதம்தான். அது மட்டுமன்றி, அவையில் அவர் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை.
- இவ்விருவருக்கும் லட்சக்கணக்கில் சம்பளம் மற்றும் படிகள். இவர்களைப் போன்று மாநிலங்களவைக்கு நியமனம் செய்யப்பட்ட மேரி கோம் (குத்துச்சண்டை வீராங்கனை), நடிகை ரூபா கங்குலி, நடிகர் சுரேஷ் கோபி ஆகியவர்களின் செயல்பாடுகளும் கூட மெச்சத் தகுந்தவையாக இல்லை.
- அரசியல் கட்சிகளில் இணைந்த பிரபலங்களில், நடிகை ஜெயபிரதா முதலில் தெலுங்கு தேசம் கட்சியிலும் பின்னர் சமாஜவாதி கட்சியிலும் இணைந்ததன் மூலம் பதவிகளைப் பெற்றார்.
- கிரிக்கெட் வீரர்களாகிய கீர்த்தி ஆசாத், நவ்ஜோத் சிங் சித்து இருவருமே வெவ்வேறு கட்சிகளுக்கு மாறியவர்கள் ஆவர். காங்கிரஸ் கட்சியின் சார்பில் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் கிரிக்கெட் கேப்டன் முகமது அசாருதீனின் செயல்பாடுகளும் பரவலாகப் பேசப்படவில்லை.
- திரைப்பட இயக்குநர் தாசரி நாராயண ராவ் மாநிலங்களவை உறுப்பினராகி, மத்திய அமைச்சராகவும் இருந்தவர். ஆனால், அவர் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானார்.
- நவஜோத் சிங் சித்துவுக்கும் சர்ச்சைகளுக்கும் எப்போதும் ஒரு நீங்காத உறவு உண்டு. பாகிஸ்தான் பிரதமராக தனது நண்பர் இம்ரான் கான் பதவி ஏற்றுக்கொண்டபோது சிறப்பு விருந்தினராக அவர் பங்கு பெற்றது கடும் கண்டனத்துக்கு உள்ளானது.
- முன்னாள் கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு தில்லி கிழக்கு மக்களவைத் தொகுதி உறுப்பினராக கடந்த வருடம் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.
- கடந்த நவம்பர் மாதம் தில்லியின் தலையாய பிரச்னையாகிய காற்று மாசு பற்றிய கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.
- நகர்ப்புற வளர்ச்சிக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத கெளதம் கம்பீர், அதே சமயத்தில் இந்தூர் நகரில் நடைபெற்ற இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டியைக் கண்டு களித்ததும் சர்ச்சையைக் கிளப்பியது.
- இதுபோன்ற பதவிகளுக்கு நியமிக்கப்படுகின்ற மற்றும் தேர்ந்தெடுக்கப்படுகின்ற கலைஞர்களும், விளையாட்டு வீரர்களும் இப்பதவிக்கு உண்டான சம்பளத்தை நம்பி வாழ்க்கை நடத்துபவர்களல்ல.
- சிலர் தங்கள் கைப்பணத்தைச் செலவழித்து நற்பணிகளைச் செய்வதும் உண்டு.
- குறிப்பாக, நடிகர் அமிதாப் பச்சன் மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம் ஆகிய மாநில விவசாயிகளின் வங்கிக் கடன்களை அடைப்பதற்காக கோடிக்கணக்கில் தனது சொந்தப்பணத்தைக் கொடுத்து ஒவ்வொரு வருடமும் உதவி வருகிறார்.
- சச்சின் டெண்டுல்கரைப் பொருத்த வரை, தனது மாநிலங்களவை உறுப்பினர் ஊதியத்தை பிரதம மந்திரி நிவாரண நிதிக்குக் கொடுத்ததுடன், மகாராஷ்டிரம் மற்றும் ஆந்திரத்தில் பின்தங்கிய கிராமங்களைத் தத்தெடுத்து, அவற்றின் வளர்ச்சிப் பணிகளுக்கு உதவி வருவதும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
- வேறு சில பிரபலங்களும் இத்தகைய தாராள உள்ளத்தை வெளிப்படுத்தியவர்கள்தாம். இவர்கள் மீது பெரிதாக ஊழல் குற்றச்சாட்டுகள் கிளம்பவில்லை என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.
- ஆனால், அதற்காக, சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றங்களில் இவர்கள் சரியாகப் பங்களிக்காததை நியாயப்படுத்த முடியாது.
- இந்நிலையில், அரசியல் கட்சிகள், மக்களாட்சி நடவடிக்கைகளில் துடிப்புடன் ஈடுபடுவதற்கான விருப்பமும் நேரமும் வாய்த்திருப்பவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்க உறுதி பூண வேண்டும்.
நன்றி : தினமணி (27-10-2020)