TNPSC Thervupettagam

அலட்சியத்தால் விளையும் பேரழிவுகள்

May 30 , 2024 32 days 83 0
  • குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் அமைந்துள்ள தனியார் விளையாட்டு மையத்திலும் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் அடுத்தடுத்து ஏற்பட்ட தீ விபத்துகளில் குழந்தைகள் உள்படப் பலர் உயிரிழந்திருப்பது பெரும் வேதனையளிக்கிறது.
  • மே 25 சனிக்கிழமை மாலை ராஜ்கோட் விளையாட்டு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், ஒன்பது குழந்தைகள் உள்பட 35 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்த சில மணி நேரத்தில், டெல்லி விவேக் விஹாரில் அமைந்துள்ள தனியார் குழந்தைகள் மருத்துவமனையில் நிகழ்ந்த தீ விபத்தில், பிறந்து ஒரு மாதம்கூட நிறைவடையாத ஏழு குழந்தைகள் பலியாகியுள்ளன.
  • விபத்து நடந்த இரண்டு இடங்களிலும் தீயணைப்புக் கருவிகள், ஆபத்துகளின்போது விரைவாக வெளியேறுவதற்கான தனி நுழைவாயில்கள் போன்ற அடிப்படைப் பாதுகாப்பு ஏற்பாடுகள்கூட முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது.
  • குஜராத்தில் நகர்ப்புற வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவதற்காக 2017இல் அமல்படுத்தப்பட்ட ஒழுங்காற்று விதிமுறைகளில் விளையாட்டு-பொழுதுபோக்கு மையங்களின் கட்டுமானம், அவற்றின் பாதுகாப்பு சார்ந்த விதிமுறைகள் முறையாக வழங்கப்படவில்லை என்றும், இதன் காரணமாகப் பல தனியார் நிறுவனங்கள் தகரக் கொட்டகை உள்ளிட்ட தற்காலிகக் கூடாரங்களில் விளையாட்டு மையங்களை அமைத்து, அரசு நிறுவனங்களின் முறையான ஒப்புதலைப் பெறாமல் செயல்பட்டுவந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
  • ராஜ்கோட் விளையாட்டு மைய வளாகத்துக்குள் ‘வெல்டிங்’ பணிகள் நடந்துவந்ததாகவும் அதிலிருந்து எழுந்த தீப்பொறிதான் விபத்துக்குக் காரணம் என்றும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. டெல்லி மருத்துவமனையைப் பொறுத்தவரை, அந்தக் கட்டிடத்தின் இரண்டு நுழைவுவாயில்களில் ஒன்று பயன்படுத்த முடியாத நிலையில் வைக்கப்பட்டிருந்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  • மருத்துவமனையின் உரிமம் மார்ச் 31ஆம் தேதியுடன் காலாவதியான நிலையில், புதுப்பிக்கப்படாமலும் ஐந்து படுக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், 12 படுக்கைகளுடனும் இந்த மருத்துவமனை செயல்பட்டு வந்ததுள்ளது. தகுதிவாய்ந்த மருத்துவர்களும் இங்கு இல்லை. இது குறித்து அதிகாரிகளுக்கு முன்பே தெரிவித்திருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அந்தப் பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
  • ராஜ்கோட் விபத்து தொடர்பாக குஜராத் உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு விசாரணையைத் தொடங்கியுள்ளது. “இது மனிதர்கள் ஏற்படுத்திய பேரழிவு” என்றும் கண்டித்திருக்கிறது. ராஜ்கோட் நகராட்சி ஆணையரையும் காவல் துறை ஆணையரையும் குஜராத் அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது. விபத்து நேர்ந்த விளையாட்டு மையம், மருத்துவமனையின் உரிமையாளர்களும் வேறு சிலரும் கைது செய்யப்பட்டுவிட்டார்கள்.
  • ஆனால், பாதுகாப்பு விதிகளைப் பின்பற்ற மறுக்கும் தனியார் முதலாளிகளின் லாபவெறியும் விதிகள் முறையாகப் பின்பற்றப்படுவதைக் கண்காணித்து உறுதிசெய்ய வேண்டிய அரசு அதிகாரிகளின் அலட்சியப் போக்கும் களையெடுக்கப்படும்வரை இதுபோன்ற விபத்துகளைத் தடுக்க முடியாது.
  • மருத்துவமனையும் விளையாட்டு மையமும் இத்தனை விதிமீறல்களுடன் இயங்கிவந்தாலும், இப்படி ஒரு விபத்து நேரும் வரை அவற்றின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இது நமது கண்காணிப்பு ஏற்பாடுகளில் உள்ள போதாமைகளைக் காண்பிக்கிறது.
  • விபத்துகளைத் தவிர்ப்பதற்கான, வலுவான பாதுகாப்பு விதிமுறைகள் வகுக்கப்பட்டு, அவை தொடர்ந்து மேம்படுத்தப்பட வேண்டும். விதிமுறைகளைப் பின்பற்றாத நிறுவன உரிமையாளர்கள் மீதும் அவர்களைக் கண்காணிக்கத் தவறிய அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். தனிநபர்கள் சிலரின் அலட்சியத்தால் அப்பாவி உயிர்கள் பலியாகும் அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அரசுகளின் கடமை.

நன்றி: இந்து தமிழ் திசை (30 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்