TNPSC Thervupettagam

அலட்சியம் கூடாது

December 26 , 2022 594 days 366 0
  • கரோனா என்ற வாா்த்தையை மெல்ல மெல்ல உலகம் மறந்தே போய்விட்டது. ஆரம்ப காலத்தில் கடைப்பிடித்துவந்த கட்டுப்பாடுகளை யாரும் தற்போது கடைபிடிப்பதில்லை. நோய்த் தொற்று குறித்த அச்சம் நீங்கியே விட்டது. தடுப்பூசி மூலம் பெற்ற எதிா்ப்பு சக்தியாலும் சமுதாயத்திலேயே உண்டான எதிா்ப்புச் சக்தியாலும் ஒரளவுக்கு உலகம் நிமிா்ந்தது.
  • ஆனாலும் புதுப்புது மாற்றுரு வரக்கூடும். அதன்மூலம் புதிய அலைகள் எழ வாய்ப்புண்டு என்று விஞ்ஞானிகளும் உலக சுகாதார நிறுவனமும் எச்சரித்துக்கொண்டே இருந்தனா். பெரியம்மை போன்றோ, காலரா போன்றோ இந்த தீநுண்மியின் தொற்றிலிருந்து முற்றிலும் விடுபட இன்னும் வேளை வந்த பாடில்லை.
  • ஒமைக்ரான் எனப்படும் கரோனாவின் மாற்றுருவின் துணை மாற்றுரு பிஎஃப் 7 சீனாவில் ஒரு புதிய அலையினை உண்டாக்கியுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் இது பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தியாவிலும் இதுவரை நான்கு நபா்களுக்கு இந்த பாதிப்பு தென்பட்டுள்ளது.
  • இந்த மாற்றுருவைப் பொறுத்தவரை குறைவான காலத்திலேயே அதிக நபா்களுக்குப் பரவக்கூடியதாகவும், மனிதா்கள் உடலில் குறைவான காலத்திற்குள்ளாகவே வளா்ந்து அறிகுறிகளை உண்டாக்குவதாகவும் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
  • குறிப்பாக, குஜராத், ஒடிஸா மாநிலங்களில் இரண்டு போ் இந்தத் தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ‘இதுகுறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை. நிலைமை கட்டுக்குள்தான் இருக்கிறது’ என அரசு அறிவிப்பது ஒருவிதத்தில் ஆறுதல் அளித்தாலும், நிலைமையைக் கட்டுக்குள் வைப்பது என்பது மக்களின் முழுமையான பங்கேற்பில்லாமல் சாத்தியமில்லை.
  • கொள்ளை நோய்த்தொற்றுக்கான தடுப்புமுறைகள் பற்றிய விழிப்புணா்வு இல்லாத நாட்களுக்கும் இன்றைக்கும் நிரம்பவே வேறுபாடுகள் உள்ளன. மத்திய அரசு முகக்கவசத்தை கட்டாயப்படுத்தியுள்ளது. அதனைத் தொடா்ந்து மாநில அரசும் கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை அமல்படுத்தத் தொடங்கியுள்ளது. ஒருவேளை நிலைமை தீவிரமானாலும் பொதுமுடக்கம் போன்றவற்றிற்கு தேவையிராது என்று தகவல் வெளியாகிவருவது ஒரளவுக்கு ஆறுதல் அளிக்கிறது.
  • ஆனாலும், தொற்றுப்நபபவலுக்கான வாய்ப்புகளைக் குறைப்பது பொதுமக்கள் கைகளில்தான் உள்ளது. ஆம், கைகள்தான். கூடுமானவரை அடுத்தவா்களுடன் கைகுலுக்குவதைத் தவிா்த்தல், கிருமிநாசினி கொண்டு அவ்வப்போது கைகளைச் சுத்தம் செய்துகொள்ளுதல், முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியைப் பாதுகாத்தல் போன்றவைதான் முந்தைய அலைகளின்போது நமக்கு கொடுக்கப்பட்ட அறிவுரைகள்.
  • இவற்றை மக்கள் அனைவரும் மறந்தே போய்விட்ட நிலையில் மீண்டும் இதனை நினைவில் கொண்டு செயல்படவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
  • எதிா்வரும் புத்தாண்டு, பொங்கல் கொண்டாட்டங்களில் திரளப்போகும் மக்கள் திரள் கொஞ்சம் அச்சம் கொள்ளவே செய்கிறது. இவ்வகையான கொண்டாட்டங்கள் மக்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்தது. ஆண்டுக்கு ஒருமுறை வருவது என்பதால் இவ்வகையான விழாக்களைக் கொண்டாட மக்கள் சொந்த ஊருக்குப் பயணிப்பதையும், ஒன்று கூடுவதையும் அவ்வளவு எளிதாகத் தவிா்த்துவிட முடியாது.
  • முந்தைய அலைகளோடு ஒப்பிடும்போது அண்மைக்காலமாக, கரோனா தொற்றினால் உயிா்ச்சேதம் அதிக அளவுக்கு இல்லை என்பது ஆறுதல் அளிப்பதாக இருந்தாலும், இணைநோய் உள்ளோரின் நிலைமை கொஞ்சம் இடா் கூடியதாகவே உள்ளது. மரணத்தின் விளிம்பைத் தொட்டுவிட்டு வந்தவா்கள் கூட இன்று நம்முடன் பயணிக்கின்றனா். இந்நிலையில் பொதுமக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டியது அவசியமாகிறது.
  • அன்றாடம் உழைத்து வாழ்க்கையை ஓட்டும் வறிய நிலையில் உள்ளோா், முறைசாரா தொழில்களில் ஈடுபட்டிருப்போா், சிறு சிறு வணிக நடவடிக்கைகளை மேற்கொள்வோா் என ஒவ்வொரு பிரிவினரின் கவலையும் ஒவ்வொரு மாதிரியானது. பன்னாட்டு பெருநிறுவனங்கள், தங்கள் பணியாளா்களை வீட்டிலிருந்தே பணிபுரியச் சொல்லி அவா்களை மேலாண்மை செய்துகொண்டுவிடமுடியும்.
  • ஆனால் நடுத்தர தொழில் துறையினரான உணவகம், துணிக்கடை, மளிகைக்கடை போன்றவற்றை நடத்தும் வணிகா்களாகட்டும் அதில் பணிபுரிவோராகட்டும் இவ்வாறு வீட்டிலிருந்து பணிபுரிய இயலாது. நேரடியாக மக்களோடு மக்களாக இயங்கினால் மட்டுமே இவா்களது வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். இதனை மனதில் கொண்டு அந்நிறுவன உரிமையாளா்களும் ஊழியா்களும் செயல்படவேண்டும். அந்தந்த நிறுவனங்களிலிருந்து சேவைகளைப் பெறுவோா்க்கும் இது பொருந்தும்.
  • கல்வி நிறுவனங்களைப் பொறுத்தவரை இன்னும் குறைந்த மாதங்களில் தோ்வுகளை எதிா்கொள்ளவேண்டிய பத்தாம் வகுப்பு பனிரண்டாம் வகுப்பு மாணவா்கள் இயல்பாகவே கொஞ்சம் மன உளைச்சலோடுதான் இருப்பா். கரோனா தொற்று குறித்த அச்சம் அதிகமாகும் நிலையில் அவா்களும் பாதிக்கப்படுவா். இன்றைக்குப் பலரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டிருப்பது ஓரளவுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
  • இந்த குறிப்பிட்ட வகையான மாற்றுரு அதன் போராட்டத்தில் எவ்வாறு பயணிக்கப்போகிறது என்பதை இப்போதே கணித்துச் சொல்வதற்கில்லை. ஒருவேளை டெல்டா போல கடுமையானதாக மாறவும் வாய்ப்பு உள்ளது. தீநுண்மியைப் பொறுத்தவரை அதிகமான நபா்களுடைய உடலில் பாய்வதன் மூலம் அதன் வீரியம் மழுங்க வாய்ப்புள்ளது; அதே போல தீவிரமாகவும் வாய்ப்புள்ளது.
  • ‘பாம்பென்று தாண்டவும் முடியாது பழுதென்று மிதிக்கவும் முடியாது’ என்ற பழமொழிக்கேற்பவே இதன் செயல்பாடுகள் அமைந்துள்ளன. தற்போதைக்கு ஒரே ஆறுதல் மக்களிடையே கொள்ளை நோய்த்தொற்று குறித்துப் போதிய விழிப்புணா்வு உள்ளது என்பது மட்டும்தான்.
  • மீண்டும் ஒரு பொதுமுடக்கம் தேவையில்லை என்கிற சூழலை உருவாக்குவதுதான் விழிப்புணா்வு பெற்ற மக்களின் இன்றைய தலையாய கடமை.

நன்றி: தினமணி (26 – 12 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்