- இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ‘ராக்கெட்ரி’ என்கிற திரைப்படத்தை நடிகர் மாதவன் இயக்கியுள்ளார்.
- இந்தப் படத்தைப் பிரபலப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, பஞ்சாங்கத்தைப் பார்த்தே செவ்வாய்க்கு மங்கள்யான் விண்கலத்தை அனுப்பியது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கோள்கள் எந்த இடத்தில் இருக்கும் என்பதைக் கணித்துக் கூறியிருந்ததால்தான், மற்ற நாடுகளைவிட செலவு குறைவாகவும் துல்லியமாகவும் மங்கள்யானை இஸ்ரோவால் விண்ணுக்கு அனுப்ப முடிந்தது” என்று கூறியிருந்தார்.
- நவீன அறிவியலின் பெரும்பாலான வளர்ச்சிகள், தொழில்நுட்ப வசதிகள் நமக்குக் கிடைத்துள்ளன. அவற்றை நாம் பயன்படுத்திப் பலனடையவும் செய்கிறோம். ஆனால், அறிவியல் அறிவு சார்ந்தும், அறிவியலின் அடிப்படைகள் சார்ந்த புரிதலிலும் நம் சமூகம் பின்னடைவையே கொண்டிருக்கிறது. இதற்குப் பல உதாரணங்களைச் சுட்டிக்காட்ட முடியும். மாதவன் கூறியது கவனப்பிசகால் நிகழ்ந்த பிழை என்று கடக்க முடியவில்லை.
- அறிவியல் அறிவும், ஆராய்ச்சிகளும் புத்தகங்களாக, குறிப்புகளாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன. குறிப்பிட்ட ஓர் ஆய்வைத் தொடங்குவதற்கு முன் நிச்சயமாக முந்தைய ஆராய்ச்சிகள், அடிப்படைகளை முழுமையாக உள்வாங்கிக்கொண்ட பிறகே புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முடியும். அந்த வகையில், மங்கள்யானை அனுப்பியதற்கும் முந்தைய தரவுகள், அடிப்படைத் தகவல்களைக் கொண்ட விண்வெளி அல்மனாக் (Almanac) பயன்படுத்தப்பட்டிருக்கும்.
- இதேபோல் கிரிக்கெட் அல்மனாக், விவசாயிகளுக்கான அல்மனாக் எல்லாம் வெளிநாடுகளில் புழக்கத்தில் உள்ளன. “அல்மனாக்கை இஸ்ரோ பயன்படுத்துகிறது, அது ஆண்டுதோறும் மாறக்கூடியது” என்கிறார் இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை. ஆனால், அந்த அல்மனாக் நிச்சயமாகப் பஞ்சாங்கம் அல்ல என்பது தெளிவு.
- விஞ்ஞானிகள், அவர்களது வாழ்க்கை குறித்து திரைத் துறையைச் சேர்ந்தவர்கள் படமெடுப்பது வரவேற்கத்தக்கது. அதே நேரம், அந்தப் படங்களில் பேசப்படும் அறிவியலுக்கு நேரெதிரான கருத்துகளை மிகுந்த மனஉறுதியோடு முன்வைப்பது, அவர்கள் எடுக்கும் படத்துக்கு வேண்டுமானால் பிரபலத்தைத் தேடித் தரலாம்.
- நிச்சயமாக அறிவியலர்கள் குறித்தும், அறிவியல் துறை குறித்தும் மோசமான ஒரு சித்திரத்தையே ஏற்படுத்தும். எனவே அறிவியல், வரலாறு போன்ற தங்களுக்கு நிபுணத்துவம் இல்லாத மற்ற துறைகள் சார்ந்து திரைத் துறையினர் அதிரடிக் கருத்துகளைக் கூறுவதைத் தவிர்ப்பது அவர்களுக்கும் அந்தந்தத் துறைகளுக்கும் நல்லது.
நன்றி: தி இந்து (03 – 07 – 2022)