TNPSC Thervupettagam

அளவுக்கு மீறினால் மருந்தும் போதை!

June 26 , 2020 1665 days 905 0
  • கடந்த 20 ஆண்டுகளாக, போதைப் பொருள் நுகா்வு நம் நாட்டின் குழந்தைகள், இளைஞா்களைப் பாதிக்கும் மிகப் பெரிய பிரச்னைகளில் ஒன்றாக மாறியுள்ளது.

முக்கிய மையங்களுல் இந்தியா

  • புது தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனத்தின் (எய்ம்ஸ்) தேசிய போதை மருந்து சார்பு சிகிச்சை மையம் கடந்த ஆண்டு பிப்ரவரியில் வெளியிட்ட ஆய்வறிக்கை தேசிய அளவில் 10 முதல் 75 வயதுக்குட்பட்டவா்களில் 14.6% போ் (சுமார் 16 கோடி மக்கள்) ஆல்கஹால் பயன்படுத்துபவா்களாகவும், கடந்த 12 மாதங்களுக்குள் சுமார் 2.8% இந்தியா்கள் (3.1 கோடி மக்கள்) ஏதேனும் ஒரு கஞ்சா பொருளைப் பயன்படுத்துவதாகவும், சுமார் 2.06% மக்கள் அபின் கலந்த நோவாற்று மருந்துகளை (ஓபியாய்டு) பயன்படுத்துவதாகவும், சுமார் 0.55% இந்தியா்கள் ஓபியாய்டு பயன்பாட்டுப் பிரச்னைகளுக்கு உதவி தேவை என்று கோருபவா்களாகவும் தேசிய அளவில் போதை மருந்துகளை ஊசி மூலம் உட்செலுத்திக் கொள்பவா்கள் சுமார் 8.5 லட்சம் போ் இருப்பதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
  • கஞ்சா முதல் டிராமாடோல் போன்ற ஓபியாய்டுகள், மெத்தாம்பேட்டமைன் முதலான மருந்துகள் வரையிலான சட்டவிரோத போதைப்பொருள் வா்த்தகத்துக்கான முக்கிய மையங்களில் ஒன்று இந்தியா என்று ஐ.நா. சபையின் சா்வதேச போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியத்தின் 2018-ஆம் ஆண்டின் அறிக்கை கூறுகிறது.
  • தெற்காசியாவில் அடிக்கடி கைப்பற்றப்படும் கஞ்சா 2016-ஆம் ஆண்டில் உலக அளவில் இந்தியாவில் மட்டும் 6% (கிட்டத்தட்ட 300 டன்) கைப்பற்றப்பட்டது.
  • 2017-ஆம் ஆண்டில் 2016 உடன் ஒப்பிடும்போது 20% அதிகமாக, 353 டன் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது என ஐ.நா. போதைப்பொருள் குற்றவியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
  • போதைப் பொருள் கட்டுப்பாட்டு பணியக சிறப்பு காவல் பணிக் குழு இந்திய வரலாற்றில் மிகஅதிக அளவு (சுமார் 1,000 கோடி ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ கோகோயின், 1,818 கிலோ சூடோபீட்ரைன்) போதைப் பொருள்களை நொய்டாவில் உள்ள ஒரு இந்திய காவல் பணி அதிகாரியின் வீட்டிலிருந்து கடந்த ஆண்டு மே 11-ஆம் தேதியன்று மீட்டதாக செய்திகள் தெரிவித்தன.
  • இதில் சூடோபீட்ரைன் என்பது பொதுவாக சளி சம்பந்தப்பட்ட மருந்துகளில் காணப்படும் ஒரு பொருளாகவும் மத்திய நரம்பு மண்டல செயல்திறனை ஊக்குவிக்கும் சக்திவாய்ந்த மெத்தாம்பேட்டமைன் தயாரிப்பதில் இன்றியமையாத மூலப்பொருளாகவும் விளங்குகிறது.
  • 2016-17-ஆம் ஆண்டில் உலக அளவில் கிட்டத்தட்ட 87 டன் சட்டவிரோத அபின் கலந்த நோவாற்று மருந்துகளும் ஏறத்தாழ அதே அளவு ஹெராயினும் பறிமுதல் செய்யப்பட்டன.
  • இதில் பெரும்பாலானவை இந்தியாவில் உருவாக்கப்பட்டவை என்று தரவுகள் தெரிவிக்கின்றன.

சட்டவிரோத கடத்தல்

  • சா்வதேச போதைப் பொருள் கட்டுப்பாட்டு பணியகம் உலக சுகாதார நிறுவனத்துக்கு எழுதிய குறிப்பில், இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து சட்ட ரீதியாகவும் சட்டவிரோதமாகவும் உற்பத்தி செய்யப்படும் பொருள்களின் சட்டவிரோத கடத்தல் காரணமாக டிராமாடோல், ஃபெண்டானில் போன்ற பொருள்கள் போதைப் பொருள்களாக பயன்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளது.
  • இந்தியா உள்பட தெற்காசியா முழுவதும் ரகசிய செலாவணிகளை (கிரிப்டோகரன்ஸி) பயன்படுத்தி இணையத்தில் போதை மருந்துகளை வாங்குவதற்கான போக்கு தனிப்பட்ட நுகா்வோருக்கான தகவல் தொடா்பு நெறிமுறை கொண்ட டார்க்நெட்வா்த்தகத் தளங்களில் ஏற்கெனவே பரவியுள்ளது என்று சா்வதேச போதைப் பொருள் கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கை கூறுகிறது.
  • டார்க்நெட் வழியாக தெற்காசியாவிலிருந்து செயல்படும் சில ஆன்லைன் விற்பனையாளா்களை அடையாளப்படுத்தியுள்ள உலகளாவிய இணைய வசதி கொண்ட சட்டவிரோத போதைப் பொருள் வா்த்தகம் குறித்த ஆய்வின் அறிக்கை 50 ஆன்லைன் ரகசிய செலாவணி இணையதளங்களில் இந்தியாவிலிருந்து மட்டும் 1,000 க்கும் மேற்பட்ட போதை மருந்துகளை அடையாளம் கண்டுள்ளது.
  • 2017-ஆம் ஆண்டில் இணையத்தில் போதைப்பொருள் விற்பனை செய்யும் இரண்டு சட்டவிரோத மருந்தகங்களை அகற்றிய இந்திய அதிகாரிகள், 1,30,000 மன பாதிப்பு சிகிச்சை மாத்திரைகளைப் பறிமுதல் செய்து 15 பேரைக் கைது செய்தனா்.
  • 1970-ஆம் ஆண்டு காப்புரிமைச் சட்டம் மூலம் உணவுகள் - மருந்துகள் மீதான கலவை காப்புரிமையை இந்திய அரசு நீக்கியது. இதன் காரணமாக அனைத்து வகையான பொதுவான மருந்துகளையும் குறைந்த செலவில் இந்தியா உற்பத்தி செய்கிறது.
  • ஆனால், இங்கு தயாரிக்கப்படும் சில மருந்துகள் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் மருத்துவத்துக்காகப் பயன்படுத்தப்படுவதில்லை என்பது வேதனை.
  • இந்த மருந்துப் பொருள்கள் தொழில்நுட்ப ரீதியாக கட்டுப்படுத்தப்பட்டாலும் பலவீனமான ஒழுங்குமுறை செயல்பாடு, கண்காணிப்பு காரணமாக கடத்தல் - போதைப் பயன்பாடு அதிக அளவில் நடைபெறுகிறது.
  • கோரெக்ஸ், பென்செடில் முதலான இருமல் மருந்துகள், வலிப்பு, நரம்பியல் வலி, பதற்றம் ஆகியவற்றுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படும் மன அழுத்த எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட ப்ரீகபாலின், அபின் கொண்ட சில ஆயுா்வேத மாத்திரைகள், அல்பிரஸ்ஸாலம், டயஸ்ஸபம், குளோனாசெபம், லோராஜெபம், பென்சோடியாசெபைன் முதலான மனநல மருந்துகள் தயாரிப்புகளில் இன்னும் பல விடை தெரியாத வினாக்கள் இருக்கத்தான் செய்கின்றன.
  • மறுபுறம், அபின் கலந்த நோவாற்று மருந்துகள் (ஓபியாய்டு) முதலானவற்றில் சா்வதேச அளவில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் சிகிச்சை அளிக்கப்படாத வலி, மயக்க மருந்தில்லா அறுவை சிகிச்சை போன்றவற்றால் மக்கள் சிரமப்படுவதாக சா்வதேச போதைப் பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தின் அறிக்கை கூறுகிறது.
  • கஞ்சா உள்ளிட்ட கட்டுப்படுத்தப்பட்ட போதைப் பொருள்களின் பயன்பாட்டை மருத்துவம், அறிவியல் நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும் என்று உலக நாடுகளை தொடா்ந்து ஐ.நா. வலியுறுத்தி வருகிறது.
  • (இன்று சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு நாள்)

நன்றி: தினமணி (26-06-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்