TNPSC Thervupettagam

அழுத்தம் போதாது

April 11 , 2024 280 days 216 0
  • இஸ்ரேலுக்குள் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் ஊடுருவி தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக காஸாமுனை மீது இஸ்ரேல் நடத்திவரும் போர் தொடங்கி ஆறு மாதம் கடந்துவிட்டது. ஆனால், போர் முடிவுக்கு வருவதற்கான எந்த அறிகுறியும் தென்படாதது சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.
  • கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸ் அமைப்பினரால் முதலில் நடத்தப்பட்ட தாக்குதல் இஸ்ரேல் வரலாற்றில் இதுவரை சந்தித்திராததாகும். தரை வழியாகவும், கடல் வழியாகவும், வான் வழியாகவும் ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலில் சுமார் 1,200-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
  • இஸ்ரேலில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் உள்பட 200 பேர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர்.
  • இதற்கு பதிலடியாக காஸாமுனையில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 30,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். குடியிருப்பு, மருத்துவமனை, கல்விக்கூடம் என எந்த வித்தியாசமும் பார்க்காமல் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்களும், பச்சிளங்குழந்தைகளும் உயிரிழந்த கொடுமையை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.
  • பின்னர் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே தற்காலிக போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டு பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டதும், அதற்கு பதிலாக ஹமாஸ் பிடித்து வைத்திருந்த பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டதும் சிறிது நம்பிக்கையை ஏற்படுத்தின என்றாலும் அது பெரிய அளவில் பலன் தரவில்லை. காஸாவில் மனிதாபிமான உதவிகள் சென்றடைவதற்கு வசதியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என இஸ்ரேலை வலியுறுத்தி பல்வேறு நாடுகளால் ஐ.நா. சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களும் உதவவில்லை.
  • உச்சபட்சமாக காஸாவில் "வேல்ர்டு சென்ட்ரல் கிச்சன்' (டபிள்யுசிகே) என்ற அமெரிக்காவைச் சேர்ந்த அறக்கட்டளை வாகனங்கள் மீது இஸ்ரேல் ராணுவம் ட்ரோன் மூலம் கடந்த வாரம் நடத்திய தாக்குதலில் பிரிட்டனைச் சேர்ந்த 2 பேர், 2 ஆஸ்திரேலியர்கள், ஒரு கனடா நாட்டவர், அமெரிக்க-கனடா இரட்டை குடியுரிமை பெற்ற ஒருவர், ஒரு பாலஸ்தீனர் உயிரிழந்தனர். இது சர்வதேச அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த அறக்கட்டளை சைப்ரஸிலிருந்து கடல் வழியாக கப்பல் முலம் 200 டன் உணவுப் பொருள்களை எடுத்து வந்து காஸாவில் விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டுவந்தது.
  • இந்தத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு, இஸ்ரேல் தொடர்பான கொள்கையை மறு ஆய்வு செய்ய வேண்டியிருக்கும் என எச்சரித்தார். மேலும், மனிதாபிமான உதவிகளைக் கருத்தில் கொண்டு உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் எனவும் இஸ்ரேலை வலியுறுத்தினார். அமெரிக்காவின் கூட்டாளியான பிரிட்டனும் இதே கருத்தை முன்வைத்துள்ளது.
  • போர் நிறுத்தம் தொடர்பாக சர்வதேச அளவில் அழுத்தம் அதிகரித்தாலும் இஸ்ரேல் அதை ஒரு பொருட்டாகக் கருதவில்லை. போரால் புலம்பெயர்ந்த பாலஸ்தீனர்களின் கடைசி புகலிடமாகத் திகழும் ராஃபாவுக்குள் தரைவழித் தாக்குதல் நடத்துவதற்கான தேதி குறித்தாகிவிட்டது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது இஸ்ரேலின் பிடிவாதத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.
  • இஸ்ரேலுக்கு அமெரிக்க அதிபர் பைடன் கொடுத்திருக்கும் அழுத்தம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருக்கிறது. இதை ஒரு மாதத்துக்கு முன்பே அமெரிக்கா செய்திருந்தால் வடக்கு காஸாவில் மக்கள் பஞ்சத்தால் அவதிப்படும் நிலை ஏற்பட்டதைத் தவிர்த்திருக்கலாம் எனப் பரவலாக கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. அமெரிக்கா உண்மையாகவே காஸாவில் மனிதப் பேரழிவைத் தவிர்க்க விரும்புமானால், இஸ்ரேலுக்கான ஆயுத விநியோகத்தைத் தொடர வெளிப்படையான நிபந்தனைகளை விதிக்க வேண்டியது அவசியம்.
  • ஹமாஸ்-இஸ்ரேல் இடையிலான போர் தொடங்கிய சில மாதங்களிலேயே, இந்த விவகாரத்துக்கு நிரந்தரத் தீர்வு, பாலஸ்தீனம் என்ற தனிநாட்டை ஏற்படுத்துவதுதான் எனறு அமெரிக்கா தெரிவித்தது. இந்தியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் இந்தக் கருத்துக்கு உடன்பட்டன. ஆனால், இஸ்ரேல்-ஹமாஸ் போரில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்புள்ள அமெரிக்கா தனது கருத்தை உரக்கச் சொல்லாதது பலவீனம்.
  • காஸாவில் ஹமாஸ் அமைப்பினரால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகள் மீட்கப்படும்வரை தற்காலிக போர் நிறுத்தத்துக்கு ஆதரவு அளிப்பதாக அமெரிக்கா கூறி வந்தது. ஆனால், காஸாவில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி அல்ஜீரியா உள்ளிட்ட நாடுகள் ஐ.நா. பாதுகாப்பு சபையில் கொண்டுவந்த தீர்மானங்களைப் பலமுறை தனது வீட்டோ அதிகாரத்தால் அமெரிக்கா ரத்து செய்தது. இதை எப்படிப் புரிந்துகொள்வது என்றே தெரியவில்லை.
  • பிணைக் கைதிகள் அனைவரும் மீட்கப்படும் வரை, ஹமாஸ் அமைப்பினர் முற்றிலும் ஒழிக்கப்படும் வரை போரை நிறுத்துவதில்லை என்பதில் இஸ்ரேல் உறுதியாக இருக்கிறது.இன்னமும் நூற்றுக்கு மேற்பட்ட பிணைக் கைதிகள் ஹமாஸ் வசம் உள்ளனர் என நம்பப்படும் நிலையில், அனைத்து பிணைக் கைதிகளும் தங்களிடம் இல்லை எனவும், பாலஸ்தீனத்தைச் சேர்ந்த பிற ஆயுதக் குழுவினர் வசமும் இஸ்ரேல் பிணைக் கைதிகள் இருக்கலாம் எனவும் ஹமாஸ் கூறுவது குழப்பத்தை உருவாக்குவதாக இருக்கிறது.
  • காஸா போரானது பிராந்திய மோதலாக உருவெடுக்கும் அபாயம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இனியும் இந்த விஷயத்தில் அமெரிக்கா மிதமான போக்குடன் நடந்துகொள்வது
  • காஸாவுக்கு மட்டுமல்ல உலக நாடுகளுக்கும் நல்லதல்ல.

நன்றி: தினமணி (11 – 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்