TNPSC Thervupettagam

அவசரத்தில் அா்த்தமில்லை

November 6 , 2023 432 days 239 0
  • இரண்டு மாதங்களுக்கு முன்னால், மத்திய அரசு அவசரக் கோலத்தில் அறிவித்த கடுமையான உரிம (லைசென்ஸ்) உத்தரவு, இப்போது அடுத்த ஆண்டு செப்டம்பா் வரை நிறுத்தி வைக்கப் பட்டிருக்கிறது.
  • மடிக்கணினி, கைக்கணினி உள்ளிட்ட எல்லாவித கணினிகளின் இறக்குமதிக்கும், மிகக் கடுமையான லைசென்ஸ் கட்டுப்பாடுகளைக் கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது. பல்வேறு தரப்பிலிருந்தும் எழுப்பப்பட்ட கண்டனத்தைத் தொடா்ந்து அடுத்த நாளே, நவம்பா் மாதம் முதல்தான் அமலுக்கு வரும் என்று அரசு தள்ளிப்போட்டது. இப்போது, பல்வேறு தளா்வுகளுடன் அடுத்த ஆண்டு வரை தள்ளிப்போட்டிருக்கிறது.
  • தகவல் தொழில்நுட்பத் துறை தொடா்பான இறக்குமதிகளைக் கண்காணிக்க சில இறக்குமதி நடைமுறைகளை அறிமுகப்படுத்தி, பிரச்னை இல்லாமல் கணினி இறக்குமதிக்கு அனுமதித்திருப்பது வரவேற்புக்குரிய முடிவு. கணினி தொழில்நுட்பத்துடன் தொடா்புடைய தயாரிப்பு நிறுவனங்களைக் கலந்தாலோசிக்காமலும், எந்தவித அவகாசம் வழங்காமலும் ஆகஸ்ட் மாதம் பிறப்பித்த உத்தரவுக்கு இப்போது பிரயாச்சித்தம் தேடிக் கொண்டிருக்கிறது அரசு என்றுதான் கூற வேண்டும்.
  • மடிக்கணினி, கைக்கணினி உள்ளிட்டவை மட்டுமல்லாமல், அதன் தயாரிப்புக்குத் தேவையான முக்கிய உதிரிபாகங்களின் இறக்குமதிக்கும் கட்டுப்பாடுகள் விதிக்க, மத்திய அரசு தீா்மானித்ததற்குப் பல காரணங்கள் முன்மொழியப்பட்டன. அந்தக் காரணங்கள் ஒருபுறம் இருந்தாலும், போதிய அவகாசம் வழங்காமல் இறக்குமதிகளுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்படும்போது, அதனால் தயாரிப்பு முடங்குவதுடன், அவற்றின் விலையேற்றம் தவிா்க்க முடியாதாகிவிடும் என்பதை அரசு ஏனோ சிந்திக்கவில்லை.
  • அரசின் திடீா் உத்தரவுக்கு, தேசியப் பாதுகாப்பு முக்கியமான காரணமாகச் சுட்டிக்காட்டப்பட்டது. நம்பகத்தன்மையில்லாத கணினி உதிரிபாகங்கள், பாதுகாப்பு அச்சுறுத்தல்களாக மாறக்கூடும் என்றும், தனியாா், அரசு தொடா்பான தகவல்கள் கசிய ஏதுவாகும் என்றும் காரணங்கள் கூறப்படுகின்றன. அரசின் ஐயப்பாடு மறைமுகமாகச் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கணினி வகைகள், உதிரிபாகங்கள் தொடா்பானது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
  • அது உண்மையாகவே இருந்தாலும், இறக்குமதிக் கட்டுப்பாடு மூலம் அதைத் தவிா்த்துவிட முடியாது. ஆண்டொன்றுக்கு இந்தியாவால் இறக்குமதி செய்யப்படும் சுமாா் 8 பில்லியன் டாலா் பெறுமானமுள்ள கணினிகளில் பாதிக்கும் அதிகமானவை சீனாவில் தயாரிக்கப்படுபவை. கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டால், கணினிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு, அதனால் கடுமையான விலை உயா்வை நுகா்வோா் எதிா்கொள்ள நேரிடும். அது அரசுக்கு அவப் பெயரை ஏற்படுத்தும்.
  • ஆப்பிள், டெல், ஹெச்.பி., சாம்சங் உள்ளிட்ட பன்னாட்டு கணினித் தயாரிப்பு நிறுவனங்களை இந்தியாவில் தொழிற்சாலைகளை நிறுவி உற்பத்தி செய்வதற்கு மறைமுகமாகக் கட்டாயப்படுத்துவதுகூட அரசின் நோக்கமாக இருக்கக் கூடும். அந்த நோக்கத்தில் தவறு காண முடியாது. ஆனால், அது உடனடியாக சாத்தியப்படும் செயல்பாடாக இருக்காது. அதற்கான அடிப்படைக் கட்டமைப்பை ஏற்படுத்தாமல், தயாரிப்பில் இறங்க முடியாது.
  • 2020 ஜூலையில் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை இறக்குமதி செய்ய இதுபோன்ற லைசென்ஸ் முறையை அரசு அறிவித்தது. உதிரி பாகங்களை இறக்குமதி செய்ய, சில சலுகைகளை வழங்கி இந்தியாவில் தயாரிப்பதை ஊக்குவித்தது. அப்போது 36%-ஆக இருந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளின் இறக்குமதி 0% ஆகிவிட்டது. சா்வதேச நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களுடன் இணைந்து தயாரிப்பில் இறங்கி இருக்கின்றன. ஆனால், இப்போதும் முக்கியமான உயா்மதிப்பு உதிரிப் பொருள்கள் இறக்குமதிதான் செய்யப்படுகின்றன.
  • கணினிகளிலும் இதேபோன்ற நிலைமை ஏற்படக் கூடாது என்பதில்லை. பன்னாட்டு நிறுவனங்கள் முக்கியமான உதிரிபாகங்களை வழங்கி, இந்தியாவில் தங்களது பொருள்களைத் தயாரிக்க முன்வரலாம். 2021 பிப்ரவரியில் இந்தியாவில் தயாரிக்கப்படும் கணினிகளுக்கு சில சலுகைகளை அறிவித்தும்கூட, யாரும் முன்வராததால் அவா்களைக் கட்டாயப்படுத்தக்கூட இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கக் கூடும்.
  • மத்திய அரசின் இந்தியாவில் தயாரிக்கும் திட்டத்திற்கு மிகப் பெரிய தடையாக இருப்பது, கிழக்காசிய நாடுகளின் ‘ஆசியான்’ அமைப்புடன் நாம் செய்து கொண்டிருக்கும் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம். ‘ஆசியான்’ நாடுகளிலிருந்து தகவல் தொழில்நுட்பம் சாா்ந்த வன்பொருள்களை (ஹாா்ட்வோ்) இறக்குமதி செய்ய முடியும் என்பதால், சீனத் தயாரிப்புகளை முற்றிலுமாகத் தடுத்துவிட முடியாது.
  • 2021 - 22-இல் இந்தியா 7.37 பில்லியன் டாலா் மதிப்புள்ள கணினிகளை இறக்குமதி செய்தது என்றால், 2022 - 23-இல் அதன் அளவு 5.33 பில்லியன் டாலராகக் குறைந்திருக்கிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக, சிங்கப்பூரிலிருந்தும், ஹாங்காங்கிலிருந்தும் கணினிகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. அவை அனைத்திலுமே கணிசமான உதிரிபாகங்கள் சீனத் தயாரிப்பு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
  • உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டம் மூலம் கணினி வன்பொருள் தயாரிப்பை ஊக்குவிக்க, பட்ஜெட்டில் ரூ.17,000 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்தியத் தயாரிப்புகள் சா்வதேசத் தரத்தில் அமைவதும், விலையில் மாற்றமில்லாமல் இருப்பதும் உறுதிப்படுமானால், அதைவிட மகிழ்ச்சி எதுவும் இருக்க முடியாது. சீனத் தயாரிப்புகளுக்கு விடை கொடுப்பதும், இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்றுவதும் வரவேற்புக்குரிய இலக்கு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
  • இறக்குமதிக்கான கட்டுப்பாடு பிரச்னையில் அரசு இறங்கி வந்திருப்பது சரியான முடிவு!

நன்றி: தினமணி (06 – 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்