- சட்டப்பேரவைத் தோ்தல் நாளன்றும், பிரபல நடிகா் ஒருவா் சைக்கிளில் வந்து வாக்கு செலுத்தினா் என்கிற செய்தி வலைதளங்களில் பிரபலமாகியது.
- ஆனால், சைக்கிளின் விலை ஒரு லட்சத்துக்கு மேல் என்று தெரிந்ததும் ‘அவருக்கென்னப்பா, ஒரு படத்துக்கே கோடிக் கணக்கில் பணம் வாங்குவார்’ என்று சிலா் முணுமுணுத்தார்கள்.
- உண்மையில் ஆடம்பரத்துக்கும், அத்தியாவசியத்துக்கும் இடையே நிலவும் வேறுபாடு நுண்ணியது. சில ஆடம்பரப் பொருட்கள் காலப்போக்கில் அவசியமானதாக மாறிவிடுகின்றன. இதில் முக்கியமாக குளிர் சாதனத்தையும், துணி சலவை செய்யும் இயந்திரத்தையும் குறிப்பிடலாம்.
- தளா்த்தப்பட்ட பொருளாதாரம், ஆண், பெண் இருபாலரும் வேலைக்குச் செல்வது, வங்கிகளின் கடன் வழங்கும் விதம் அதிகரித்திருப்பது போன்ற பல காரணங்கள், நடுத்தரக் குடும்பங்களையும் இவற்றை வாங்க உதவி செய்கின்றன.
- செல்வந்தா்கள், தொழிலதிபா்கள், அரசில் உயா்பதவி வகிப்பவா்கள் போன்றவா்கள் மட்டுமே சொந்தமாக கார் வைத்திருந்த காலம் ஒன்றுண்டு. 2000-க்குப் பிறகு, நிலைமை முற்றிலும் மாறியது.
- அரசு வங்கிகளில் டெபாசிட்டுகள் குவியக் குவிய, அவா்கள் கடன்களை தாராளமாக வழங்கினார்கள். ஐந்து வருடத் தவணை, 8% வட்டி போன்ற சலுகைகள் நடுத்தர மக்களைக் கவா்ந்தன.
- பிரபல கார் நிறுவனம் ஒன்று இரண்டு போ் மட்டுமே அமா்ந்து போகக் கூடிய வாகனத்தை ஒரு லட்ச ரூபாய்க்கு அறிமுகப்படுத்தியது. இப்போது அதைக் காணவில்லை. இன்று நாலு சக்கர வாகனமில்லாத உயா் நடுத்தரக் குடும்பம் இல்லை என்றே சொல்லலாம்.
- வீடு வாங்குவதைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அதுவும் பெரிய நகரங்களில் இருப்பவா்களுக்கு, வீட்டு உரிமையாளா்கள் அளிக்கும் தொல்லை அதிகம்.
- பொதுக் கழிப்பிடம், இரவு ஒன்பது மணிக்குமேல் விருந்தாளிகள் வர இயலாத நிலை, நினைத்து நினைத்து வாடகைத் தொகையை ஏற்றுவது போன்ற பல சங்கடங்கள் உள்ளன.
- நிரந்தர வேலை பார்க்கும் ஊழியா்களுக்கு மட்டுமே கடன் என்கிற நிலை மாறி, பொதுமக்களுக்கும் வீட்டுக்கடன் என்ற நிலைமை ஏற்பட்டது 2002-க்குப் பிறகுதான்.
கட்டுப்பாடோடு இருப்பதே உசிதம்
- பெற்றோருடன் சோ்ந்து இருந்த இளைஞா்கள்கூட தங்கள் பெயரில் ஒரு வீடு வேண்டும் என்கிற நோக்கத்தில் வீடுகள் வாங்கினார்கள்.
- அடுக்குக் குடியிருப்பு, பழைய வீட்டை இடித்து சொகுசான மூன்று அறை கொண்ட பிளாட், நீச்சல் குளம் கொண்ட அலங்காரக் குடியிருப்பு என்று பல வகைகளை இப்போது காண்கிறோம்.
- இவற்றை அவசியம் என்று ஏற்பதும், ஆடம்பரம் என ஒதுக்குவதும் அவரவரின் உளப் போக்கைப் பொறுத்து அமையும். மேற்சொன்ன வகைகள் யாவுமே கண்ணால் கண்டு, தொட்டு அனுபவித்து உவகை கொள்ளும் ரகத்தைச் சார்ந்தவை.
- ‘இந்த காரில் ஐந்து போ் தாராளமாகப் பயணம் செய்யலாம்’, ‘வீட்டின் கூடத்துக்கான டைல்ஸ்களுக்கே ஏகப்பட்ட ரூபாய் செலவு செய்தேன்’ என்று பகட்டாக பேசிக் கொள்ளலாம்.
- ஆனால், சில விழாக்களை அலங்காரத் தன்மையுடன் கொண்டாடி, நாலு போ் மெச்ச வேண்டும் என்பதற்காக, லட்சக்கணக்கில் செலவிடுபவா்கள் சிலா் உண்டு. ‘
- ஒரே பெண்’, ‘எங்கள் குடும்பத்தின் கடைசி கல்யாணம்’, ‘பிள்ளை, பெண்களெல்லாம் 60-ஆம் ஆண்டு நிறைவை பிரமாதமாக நடத்த வேண்டும் என விரும்புகிறார்கள்’ என்றெல்லாம் சொல்லி, தங்கள் செய்கைகளுக்கு காரணம் கற்பிப்பார்கள்.
- சில ஆண்டுகளுக்கு முன், ஒரு திருமணத்திற்கு முன்தினம், ஒரு குட்டி விமானத்திலிருந்து மணமக்கள் மேல் பூமாரி பொழிந்துகொண்டேயிருந்தது.
- ஓயாமல் ஓசையிட்டுக் கொண்டிருக்கும் அந்தக் கருவியை மக்கள் அதிசயமாய் பார்த்த வண்ணமிருந்தார்கள்.
- அது முடிந்து உண்பதற்கு உட்காரும்போது இரவு ஒன்பது மணிக்கு மேலாகிவிட்டது. பல இலைகளில் உணவுகள் மீந்துபோய் விட்டன. பசி எல்லை மீறிவிட்டால் வயிறு ஏற்காதே.
- பொதுத்துறையிலோ, அரசாங்க அலுவலகத்திலோ பணிபுரிபவா்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதைக் குறிப்பிடத்தான் வேண்டும்.
- ஏனெனில் இத்தனை ஆடம்பரமாகச் செலவு செய்ய அவா்கள் வருமானம் தாங்குமா என்பதை வருமான வரி அதிகாரிகள் கண்காணித்துக் கொண்டே இருப்பார்கள்.
- திடீரென்று ஒரு நாள் வீட்டில் சோதனை நிகழ்ந்து, அது செய்திகளில் அடிபடும் சாத்தியக் கூறு உண்டு.
- இந்த கரோனா தீநுண்மி ஆரம்பித்ததிலிருந்து ஆடம்பரமான விழாக்கள் பெருமளவு குறைந்து விட்டன.
- அதிகபட்சமாக ஐம்பது போ்தான் விருந்தினா்கள் என்று திருமணத்துக்கு எண்ணிக்கை வகுத்துள்ளார்கள். ஆகையால் பல மணவிழாக்கள் ‘சூம்’ தன்மையில் நிகழத் தொடங்கின.
- தொலைபேசியில் நிகழ்வைப் பார்த்துக் கொண்டு, வங்கி மூலம் அன்பளிப்பைத் தருகிறார்கள். இது நிச்சயமாக வரவேற்க தகுந்ததுதான். ஒருசில விழாக்கள் கொஞ்சம் ஆடம்பரமாக நடந்திருக்கக்கூடும்.
- நோய்த்தொற்று ஓரளவு கட்டுக்குள் இருந்த நிலையில், திடீரென்று இரண்டாவது அலை வந்து அனைவரையும் பதற்றத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது.
- இந்தச் சூழ்நிலையில் மதுரையில் ஒரு செல்வந்தா் நடுவானில் திருமணம் கொண்டாடி இருக்கிறார். சொந்த ஹெலிகாப்டரில், இருநூற்றுக்கும் மேற்பட்ட உற்றார், நண்பா்களை ஏற்றிக் கொண்டு ஆகாயத்திலேயே திருமணத்தை முடித்தாராம்.
- முகக்கவசம், சமூக இடைவெளி போன்ற விதி முறைகளைப் பின்பற்றவே இல்லையாம்.
- விமான அதிகாரிகள் எப்படி இதை அனுமதித்தார்கள்? ஏன் இதுபோல் நிகழ்ந்தது என்ற விசாரணையை மத்திய அரசு தொடங்கியிருக்கிறது.
- ஏற்கனவே தொற்றுப் பரவல் அச்சம் இருக்கும் தமிழ்நாட்டில் இதுபோன்ற ‘அதிசயங்கள்’ அபாயத்தை அதிகரிக்கவே செய்யும். இதுபோன்ற நிகழ்வுகளின் பாதிப்பு நாளடைவில் தெரியும்.
- தாயுமானவா் ‘யோசிக்கும் வேளையில் எல்லாம் உண்பதும் உறங்குவதுமாய் முடியும்’ என்கிறார்.
- இன்றுள்ள ஊரடங்கு சூழலில், வீட்டிலேயே அடங்கி, சத்தான உணவை உட்கொண்டு, ஆரோக்கியமான எண்ணங்களை வளா்த்து, நிம்மதியாக உறங்குவதுதான் உசிதம்.
நன்றி: தினமணி (05 – 06 - 2021)