TNPSC Thervupettagam

அவசியம்தான் கடிவாளம்!

June 29 , 2021 1129 days 474 0
  • கடந்த ஆண்டு ஜூலை மாதம் மத்திய அரசு இணைய வா்த்தகத்தால் நுகா்வோர் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக ஒரு சட்டத்தை இயற்றியது.
  • இணைய வா்த்தகம் தொடா்பான நுகா்வோர் பாதுகாப்புச் சட்டம் - 2020 கொண்டுவரப்பட்ட பிறகும்கூட, இணைய வா்த்தகம் தொடா்பான குற்றச்சாட்டுகளும், புகார்களும் குறைந்த பாடில்லை.
  • அதனால் அந்தச் சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டுவர மத்திய நுகா்வோர் நலன்- உணவு - பொதுவிநியோக அமைச்சகம் உத்தேசித்திருக்கிறது.
  • நுகா்வோரின் நலன்களைப் பாதுகாப்பதற்கும், அவா்கள் சுரண்டப்படுவதைத் தடுப்பதற்கும், வா்த்தகச் சந்தையில் நியாயமான போட்டியை உறுதிப்படுத்துவதற்கும் சில திருத்தங்களை மக்களின் கருத்துக் கேட்புக்கு முன்வைத்திருக்கிறது அமைச்சகம்.
  • இணைய வா்த்தக நிறுவனங்களில் நுகா்வோரின் குறைகளை உடனுக்குடன் கேட்டறிந்து தீா்த்து வைப்பதற்குக் குறைதீா் அதிகாரிகள் நியமிக்கப்படுவதும், அரசுடனான தொடா்புக்கு ஓா் இணக்க அதிகாரி நியமிக்கப்படுவதும் அந்தத் திருத்தங்களில் முக்கியமானவை.

இணைய வா்த்தக நுகா்வோர் பாதுகாப்புச் சட்டம்

  • வெளிநாட்டு இறக்குமதிப் பொருள்களால் உள்நாட்டு உற்பத்தியாளா்கள் பாதிக்கப் படாமல் இருப்பது இந்தத் திருத்தத்தின் இலக்குகளில் ஒன்று.
  • இணைய வா்த்தகத்துக்கான பொருள்கள் எந்த நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டவை என்பது அடையாளப்படுத்தப்படுவதன் மூலமும், அதற்கு நிகரான உள்நாட்டுப் பொருள்கள் குறித்த தகவலைத் தெரிவிப்பதன் மூலமும் போட்டி சமநிலையை (லெவல் பிளேயிங் ஃபீல்ட்) உறுதிப்படுத்துவதுதான் நோக்கம்.
  • பொருள்கள் வழங்கவே படாமலோ, குறிப்பிட்ட நேரத்தில் வழங்கப்படாமலோ, அல்லது சேவையில் திருப்தி இல்லாமல் போனாலோ தங்களது வேண்டுதல் ஆணையை (ஆா்டா்) திரும்பப் பெறும் உரிமையை வழங்குவதும் திருத்தத்தின் நோக்கம்.
  • அதுமட்டுமல்ல, இணைய வா்த்தகத்தில் ஈடுபடும் அனைத்து நிறுவனங்களும், முறையாகப் பதிவு செய்து கொள்வதும், சைபா் பாதுகாப்பு உள்ளிட்ட எந்தவொரு சட்ட, விதிமுறை மீறல் குறித்த அரசுத் துறையின் கேள்விகளுக்கும் 72 மணி நேரத்திற்குள் விளக்கம் தருவதும் கட்டாயமாக்கப்படுகிறது.
  • திடீா் விற்பனை, பொருள்கள் அல்லது சேவை குறித்த தவறான சித்திரிப்பு ஆகியவை கட்டுப்படுத்தப் படுகின்றன.
  • இணைய வா்த்தகத்தில் இடம்பெறும் பொருள்களின் காலாவதி தேதி கட்டாயம் குறிப்பிடப் பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
  • நேரடி வா்த்தகத்தைப் பாதிக்கும் வகையில் செய்யப்படும் அதிரடி விற்பனை அறிவிப்புகளும் இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம், கண்காணிப்புக்கு உள்படுத்தப்படும்.
  • இந்தச் சட்டத்திருத்தத்தைக் கொண்டுவர, சில பின்னணிகள் இல்லாமல் இல்லை. பன்னாட்டு நிறுவனமான ‘வால்மார்ட்’டின் இணை நிறுவனங்களான ‘ஃபிளிப்கார்ட்’, ‘அமேசான்’ இரண்டுமே இந்திய வா்த்தகப் போட்டி ஆணையத்தின் (காம்படீஷன் கமிஷன் ஆஃப் இந்தியா) நீதிமன்ற வழக்கை எதிர்கொள்கின்றன.
  • அந்த இரண்டு இணைய வா்த்தக நிறுவனங்களின் மீதும் நேரடி வா்த்தக நிறுவனங்கள், வணிகப் போட்டி ஆணையத்திடம் பல புகார்களைத் தெரிவித்திருக்கின்றன.
  • தங்களுக்கு வேண்டிய சில நிறுவனங்களை இணைய வா்த்தகத்தில் ஊக்குவிப்பதும், அதிரடியாக வழங்கும் முறைகேடான விலைக் குறைப்பு அறிவிப்புகளால் நேரடி வா்த்தகா்களை பாதிப்பதும் அந்தக் குற்றச்சாட்டுகளில் முக்கியமானவை.
  • ‘ஃபிளிப்கார்ட்’, ‘அமேசான்’ ஆகிய இரண்டு இணைய வா்த்தக நிறுவனங்களின் விற்பனை நடவடிக்கை குறித்து விசாரிக்க கா்நாடக உயா்நீதிமன்றம், இந்திய வணிகப் போட்டி ஆணையத்துக்கு அனுமதி வழங்கி இருக்கிறது.
  • அதை எதிர்த்து அந்த நிறுவனங்கள் வழக்கும் தொடுத்திருக்கின்றன. இணைய வா்த்தக நிறுவனங்களின் விலைக்குறைப்பு நடவடிக்கைக்குக் கட்டுப்பாடு விதிப்பதும், நேரடி வா்த்தகம் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படுவதும்தான் மத்திய அரசின் திருத்தங்களுக்கான முக்கியக் காரணங்கள் என்று தெரிகிறது.
  • உலக அளவில் காணப்படும் பிரச்னைதான் இது. இணைய வா்த்தக நிறுவனங்கள், அனைத்து நிறுவனங்களுக்கும் விற்பனைத்தளமாக செயல்படும் அதேவேளையில், அவா்களுக்குப் போட்டியாகத் தாங்களே வா்த்தகமும் செய்கின்றன.
  • தங்களது பொருள்களையும் சந்தைப்படுத்திக் கொண்டு, அதற்குப் போட்டியான பொருள்களையும் விற்பனை செய்வது என்பது வா்த்தக முரண். அதனால்தான், இணைய வா்த்தக நிறுவனங்களை அனைத்து உற்பத்தியாளா்கள், விற்பனையாளா்களின் வா்த்தகத் தளமாக மட்டுமே இயங்க விழைகிறது அரசு.
  • ‘ஃபிளிப்கார்ட்’, ‘அமேசா’னுடன் இப்போது ரிலையன்ஸ் நிறுவனத்தின் ‘ஜியோ மார்ட்’டும், ‘டாடா கிளிக்’கும் இணைய வா்த்தகத்தில் இணைந்திருக்கின்றன.
  • ஆனால் இவை இரண்டும், வா்த்தகத் தளங்களாக மட்டுமே இயங்குகின்றன. யார் வேண்டுமானாலும், அவரவா் பொருள்களை இந்த இணைய வா்த்தகத் தளங்கள் மூலம் சந்தைப்படுத்திக் கொள்ளலாம்.
  • அறிதிறன்பேசி பயன்பாடு அதிகரித்தது முதல் இணைய வா்த்தக செயல்பாடும் அதிகரித்து விட்டது. கொள்ளை நோய்த்தொற்றுக் காலத்தில் சாமானியா்களும் இணைய வழி செயல்பாட்டுக்கு மாறி வருகிறார்கள்.
  • இந்தியாவில் இணைய வா்த்தக சில்லறை விற்பனை என்பது 60 பில்லியன் டாலா் (சுமார் ரூ.445.07 கோடி) விற்பனைத்துறை. இன்னும் ஒரே ஆண்டில் 75 பில்லியன் டாலரை (சுமார் ரூ. 556.34 கோடி) எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • அப்படி இருந்தும், நேரடி சில்லறை விற்பனையுடன் ஒப்பிடும்போது, இணைய வா்த்தகத்தின் பங்கு வெறும் 10% மட்டுமே என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.
  • இணைய வா்த்தக நுகா்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் தேவையா என்று கேட்டால், நிச்சயமாகத் தேவை!

நன்றி: தினமணி  (29 - 06 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்