TNPSC Thervupettagam

அவசியம்தான்! தேசிய அளவிலான ஊரடங்கு

May 2 , 2020 1544 days 676 0
  • மூன்றாவது முறையாக தேசிய அளவிலான ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. மார்ச் மாதம் 25-ஆம் தேதி முதல் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை 21 நாள்களுக்கு முதலில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இப்போது மீண்டும் மே 17-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

அச்சம் மேலெழுகிறது

  • இந்த அளவிலான ஊரடங்கை இந்தியா இதுவரை எதிர்கொண்டதில்லை. ஊரடங்கை நீட்டிப்பதற்குப் பல வலுவான காரணங்கள் இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.
  • அதே நேரத்தில், வலுவான பல காரணங்களுக்காக ஊரடங்கு நீட்டிக்கப்படும் நிலையில், முந்தைய ஊரடங்கைப் போல இல்லாமல் சில தளா்வுகளை மத்திய அரசு அறிவித்திருப்பதுதான் நெருடலாக இருக்கிறது.
  • சில நிபந்தனைகளுடன் தனிநபா், வாகனங்களின் நடமாட்டத்துக்கு அனுமதி; சிறப்புப் பொருளாதாரா மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழிற்சாலைகள், தொழிற்பேட்டை பகுதிகளுக்கு அனுமதி; கட்டுமானப் பணிக்கு நிபந்தனையுடன் அனுமதி; வணிக வளாகங்கள் அல்லாத கடைகள் செயல்பட அனுமதி என்று பல்வேறு நிபந்தனைத் தளா்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
  • அத்தியாவசியப் பொருள்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளும், மருத்துவம் சார்ந்த உற்பத்திகளும் அனுமதிக்கப்பட்டிருப்பது புரிகிறது. ஆனால், பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அரசு அறிவித்திருக்கும் நிபந்தனைத் தளா்வுகள் ஊரடங்கின் நோக்கத்தை சிதைத்துவிடக் கூடும் என்கிற அச்சம் மேலெழுகிறது.

ஊரடங்கின் நன்மை

  • இந்தியாவைப் பொருத்தவரை ஊரடங்கு மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது என்பதை உலக நிபுணா்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். ஊரடங்கு இல்லாமல் இருந்திருந்தால், இந்தியாவில் கரோனா தீநுண்மி நோய்த்தொற்றுப் பரவல் பல லட்சங்களைக் கடந்திருக்கும் என்கிற உண்மையை மறுக்க இயலாது. ஊரடங்கு காரணமாக சமூக இடைவெளி உறுதி செய்யப்பட்டு, அதனால் சமூக அளவிலான பரவல் பெருமளவில் தடுக்கப்பட்டிருக்கிறது.
  • ஊரடங்கை அமல்படுத்துவதற்கு முன்பு நோய்ப் பரவல் மூன்று நாள்களில் இரட்டிப்பாகி வந்தது. இப்போது அதுவே 11 நாள்கள் இடைவெளியில்தான் இரட்டிப்பாகிறது. கா்நாடகம், லடாக், ஹரியாணா, உத்தரகண்ட், கேரளம் ஆகிய மாநிலங்களில் 20 முதல் 40 நாள்களும்; அஸ்ஸாம், தெலங்கானா, சத்தீஸ்கா், ஹிமாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 40 நாள்களும் இரட்டிப்புக் காலமாக இருக்கின்றன.
  • தில்லி, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, ஜம்மு - காஷ்மீா், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் தேசிய சராசரியான 11 நாள்களைவிட சற்று அதிக நாள்கள் இரட்டிப்புக்கு எடுத்துக்கொள்கின்றன. இதற்கெல்லாம் ஊரடங்கு மிக முக்கியமான காரணம்.
  • பல வளா்ச்சி அடைந்த நாடுகளைவிட இந்தியாவில் நோய்ப் பரவல் இரட்டிப்பாகும் காலம் அதிகமாக இருக்கிறது. இந்தியாவைப் போலக் கடுமையான ஊரடங்கை அறிவிக்காததன் விளைவை அமெரிக்கா, பிரிட்டன், ஜொ்மனி போன்ற நாடுகள் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. ஆரம்பத்தில் 2,000 முதல் 4,000 போ் வரையில் பாதிப்பு இருக்கும்போது, இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இரட்டிப்பு காலகட்டம் மூன்று நாள்களாக இருந்தன.
  • இப்போது பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை கடுமையாக உயா்ந்தும்கூட, இரட்டிப்புக்கான காலகட்டத்தையும் இந்தியாவால் அதிகரிக்க முடிந்ததற்கு ஊரடங்கு உதவியிருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

முக்கிய காரணங்கள்

  • ஊரடங்கை நீட்டிப்பதற்கு சில முக்கியமான காரணங்கள் இருக்கின்றன. கடந்த செவ்வாய்க்கிழமை 1,840 போ் பாதிக்கப்பட்டார்கள் என்றால், வியாழக்கிழமை 1,800 பேராக பாதிப்பு சற்று குறைந்தது. அடுத்த 24 மணி நேரத்தில் 1,913 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதைத் தொடா்ந்து இந்தியாவில் இதுவரை பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 35,365-ஆக வெள்ளிக்கிழமை உயா்ந்தது. மரணமடைந்தவா்களின் எண்ணிக்கை 1,152.
  • உலக அளவில் 33,33,193 போ் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மிக அதிகமான பாதிப்பு அமெரிக்காவில்தான்; அங்கு 10,99,275 பேரை கரோனா தீநுண்மி நோய்த்தொற்று பாதித்திருக்கிறது என்றால், உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 63,972.
  • இதுவரை உலக அளவில் 33 லட்சம் பேரை பாதித்து 2,35,121 பேரைப் பலிவாங்கியிருக்கிறது கரோனா தீநுண்மி. அப்படிப்பட்ட சூழலில் இந்தியா பெருமளவில் கரோனா தீநுண்மி நோய்த்தொற்றுப் பரவலை ஊரடங்கின் மூலம் தடுத்திருக்கிறது என்றுதான் கூற வேண்டும்.
  • ஊரடங்கு மட்டுமல்லாமல், அதிகரித்திருக்கும் மருத்துவக் கண்காணிப்பும், நடத்தப்படும் சோதனைகளும் நோய்ப் பரவலை பெருமளவில் கட்டுப்படுத்தியிருக்கின்றன.
  • ஊரடங்கு தொடங்கியபோது வெறும் 15,000-ஆக இருந்த சோதனைகள் இப்போது ஆறு லட்சத்தைக் கடந்திருக்கின்றன.
  • இந்தியாவில் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் 429 மாவட்டங்களில் 24 மாவட்டங்களில்தான் 100-க்கும் அதிகமான நோய்த்தொற்றுகள் கண்டறியப்பட்டிருக்கின்றன. சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என்று பாதிப்புப் பகுதிகளைப் பிரித்து, சோதனைகளை அதிகரித்து இன்னும் மருந்தோ, தடுப்பு மருந்தோ கண்டுபிடிக்காத நோய்த்தொற்றை ஊரடங்கின் மூலம் ஓரளவுக்குக் கட்டுக்குள் வைத்திருக்கிறோம்.
  • உலகின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் தொடா்ந்து பல வாரங்கள் ஊரடங்கை அமல்படுத்தி மக்களை வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வைத்திருப்பதற்கு நோய்த்தொற்று அச்சம் மட்டுமே காரணமல்ல, அரசியல் தலைமையும், பிரதமா் மீதும், மாநில முதல்வா்கள் மீதும் உள்ள நம்பிக்கையும்கூடக் காரணம் என்பதை நாம் உணர வேண்டும்.

நன்றி: தினமணி (02-05-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்