TNPSC Thervupettagam

அவதூறு பிரசாரம்!

October 23 , 2024 8 days 23 0

அவதூறு பிரசாரம்!

  • இந்தியாவில் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் கடந்த 2023 ஜூன் 18-ஆம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
  • இந்தக் கொலையில் இந்திய உளவாளிகளுக்குத் தொடர்பு உள்ளதாக அப்போதிருந்தே கனடா குற்றஞ்சாட்டி வருகிறது. காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் கனடாவின் புதிய குற்றச்சாட்டால் இந்தியாவுடனான அந்த நாட்டின் உறவு முன்னெப்போதும் இல்லாதவகையில் சீர்குலைந்துள்ளது.
  • இந்தக் கொலை வழக்கில் விசாரணைக்கு உரியவர்களாக கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா, தூதரக அதிகாரிகள் உள்ளனர் என்று கனடா அரசு புதிதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்.13) கூறியது. இதனால் கடும் அதிருப்தி அடைந்த இந்திய அரசு, இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா, 5 அதிகாரிகளைத் திரும்பப் பெற்றதுடன் இந்தியாவில் இருந்து கனடா தூதர் உள்ளிட்ட 6 பேரை வெளியேறுமாறு உத்தரவிட்டது.
  • நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியத் தொடர்புக்கு ஆதாரமுள்ளது என்று கூறி வந்த கனடா பிரதமர் ட்ரூடோ பிரச்னை பூதாகரமாக ஆனவுடன், "இந்திய உளவாளிகளின் பங்கை நிரூபிக்க வலுவான ஆதாரமில்லை; இணைந்து பணியாற்றி ஆதாரத்தைக் கண்டறியலாம் என்று கூறிவந்தோம்; அதற்கு இந்தியா முன்வரவில்லை' என்று கடந்த புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
  • கனடாவில் ஆள்கடத்தல், போதைப் பொருள்கள், ஆயுதங்கள் கடத்தல் போன்ற சட்டவிரோத செயல்களில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் ஈடுபடுவது கடந்த பல ஆண்டுகளாகவே அதிகரித்து வந்துள்ளது. 2018-ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட ஆண்டறிக்கையில், காலிஸ்தான் தீவிரவாதச் செயல்கள் குறித்த எச்சரிக்கையை கனடா அரசின் பாதுகாப்பு நிபுணர்கள் குறிப்பிட்டிருந்தனர். ஆனால், காலிஸ்தான் குழுவின் அழுத்தத்தை தொடர்ந்து அந்தக் குறிப்பை ட்ரூடோ அரசு நீக்கியது.
  • சீக்கியரல்லாத ஹிந்துக்கள் கனடாவை விட்டு வெளியேற வேண்டும் என்று காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் பன்னுன் பகிரங்கமாகவே மிரட்டல் விடுத்து கடந்த 2023 செப்டம்பரில் விடியோ வெளியிட்டார். இவர் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோருக்கும் பகிரங்க மிரட்டல் விடுத்தார். ஆனால், ட்ரூடோ அரசு அவருக்கு சாதகமாகவே இதுவரையிலும் இருந்து வந்துள்ளது.
  • "கனடா அரசியல் களத்தில் பாகிஸ்தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்தியாவின் மதிப்பைக் குறைக்கும் செயலில் அவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். கனடாவில் உள்ள காலிஸ்தானியர்களுக்கு அவர்கள் நேரடியாக ஆதரவு அளிக்கின்றனர்' என்று கனடா உளவு அமைப்பின் இயக்குநர் வனீசா லாயிட் கடந்த மாதம் தெரிவித்த கருத்து சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதன்மூலம் பாகிஸ்தானுக்கும் காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கும் உள்ள தொடர்பு வெட்டவெளிச்சமாகி உள்ளது.
  • கனடாவில் பொதுத் தேர்தல் 2025 அக்டோபரில் நடைபெற உள்ளது. ட்ரூடோ பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டபோது 63 சதவீதமாக இருந்த அவருக்கான மக்கள் ஆதரவு கடந்த ஜூனில் எடுக்கப்பட்ட ஆய்வில் 28 சதவீதமாக குறைந்துள்ளது. ட்ரூடோ அரசுக்கு அளித்து வந்த ஆதரவை புதிய ஜனநாயகக் கட்சி கடந்த செப்டம்பரில் திரும்பப் பெற்றதையடுத்து, அவரது அரசுக்கு பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
  • இந்தச் சூழலில், தான் பதவி விலக வேண்டும் என்று தனது சொந்தக் கட்சி எம்.பி.க்களே போர்க்கொடி தூக்குவது குறித்து ஆலோசித்து வருவது ட்ரூடோவை கவலைகொள்ளச் செய்திருக்கிறது.
  • அதை எதிர்கொள்ளவே, நிஜ்ஜார் கொலை வழக்கை மீண்டும் ட்ரூடோ கையில் எடுத்துள்ளார் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். கனடாவின் மொத்த மக்கள்தொகை சுமார் 3.9 கோடி மட்டுமே. இதில் சீக்கியர்கள் 7.7 லட்சம் பேர் உள்ளனர். கடந்த 2021-இல் நடைபெற்ற தேர்தலில் 18 சீக்கியர்கள் அந்நாட்டு நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தனது செல்வாக்கு குறைந்து வருவதால், அடுத்த தேர்தலில் சீக்கியர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக ட்ரூடோ காலிஸ்தானிய பயங்கரவாதிகளை ஆதரிக்க முற்பட்டிருக்கிறார்.
  • பாகிஸ்தானின் அனுபவத்தை ட்ரூடோ கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவுக்கு எதிராகப் பயங்கரவாதத்துக்கு கொம்பு சீவிவிடும் வேலையை கடந்த பல பத்தாண்டுகளாக பாகிஸ்தான் செய்து வந்தது; இப்போதும் செய்து வருகிறது. ஆனால், அதன் பலனை அந்த நாடு இப்போது அனுபவித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவத்தினரையும், பொதுமக்களையும் பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்கி வருகின்றனர். வாக்கு வங்கிக்காக பயங்கரவாதத்தை ஊக்குவித்தால் அது இந்தியாவுக்கு மட்டுமல்ல, கனடாவுக்கும் பாதகமாகும்.
  • நமது நட்பு நாடுகளாக இருந்தபோதும், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், நியூஸிலாந்து ஆகிய நாடுகள் தங்கள் சொந்த காரணங்களுக்காக கனடாவின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என இந்தியாவை வலியுறுத்தி உள்ளன. தனது சுயநலத்துக்காக ஆதாரம் இல்லாமல் குற்றஞ்சாட்டி இந்தியாவின் நற்பெயருக்கு ட்ரூடோ களங்கம் விளைவித்துள்ளார்.
  • ஆதாரமில்லாத குற்றச்சாட்டு மூலம் இந்தியா-கனடா இருநாட்டு உறவில் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறார் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. உள்நாட்டு அரசியல் ஆதாயத்துக்காக சர்வதேச அரசியலில் குழப்பம் ஏற்படுத்த விளையும் ஜஸ்டின் ட்ரூடோவை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதரிப்பது வியப்பாக இருக்கிறது.

நன்றி: தினமணி (23 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்