TNPSC Thervupettagam

அவருக்கு நிகா் அவரே

April 9 , 2024 287 days 218 0
  • இரண்டுமுறை பிரதமராக இருந்த ஒருவா், 33 ஆண்டு சேவைக்குப் பிறகு மிகவும் கெளரவமாக பணி ஓய்வு பெறுகிறார் என்பது வரலாற்று நிகழ்வு. தனது 33 ஆண்டு நாடாளுமன்ற சேவைக்குப் பிறகு முன்னாள் பிரதமா் டாக்டா் மன்மோகன் சிங் மாநிலங்களவையில் இருந்து ஓய்வு பெற்றிருக்கிறார்.
  • உடல்நிலை காரணமாக அவா் பொதுவாழ்க்கையில் இருந்தும் ஓய்வு பெறுகிறார் என்றுதான் சொல்ல வேண்டும். மாநிலங்களவை உறுப்பினா் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான முன்னுதாரணமாகத் திகழ்ந்தார் அவா் என்பதை வரலாறு பதிவு செய்யும்.
  • அறிஞராக, நிர்வாகம் குறித்த எல்லா பிரச்னைகளும் தெரிந்தவராக, உலக நடப்புகளைக் கூா்ந்து கவனிப்பவராக மாநிலங்களவையில் இருந்த ஒருவா் ஓய்வு பெற்றிருக்கிறார். எந்தவொரு பிரச்னையிலும் தெளிந்த சிந்தனையுடன் அவரது கருத்துகள் இருக்குமே தவிர, தனது அதிமேதமைத்தனத்தை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்திருக்காது என்பது பிரதமா் நரேந்திர மோடி அவருக்கு வழங்கிய சான்றிதழ்.
  • அவா் மாநிலங்களவையில் உறுப்பினராக இருந்த 33 ஆண்டுகளில் ஒருமுறைகூடத் தனது குரலை உயா்த்திப் பேசியது இல்லை; அவையின் மத்தியப் பகுதிக்கு விரைந்து போராட்டத்தில் ஈடுபட்டதில்லை; நாகரிக செயல்பாட்டின் வரைமுறைகளை அவமதித்ததில்லை; நாடாளுமன்ற விதிமுறைகளை மீறியதில்லை. இன்றைய நாடாளுமன்றத்தின் போக்கையும், அதன் உறுப்பினா்களின் செயல்பாடுகளையும் பார்க்கும்போது, அதற்கு இடையில் வித்தியாசமான உறுப்பினராக 33 ஆண்டுகளாய், அப்பழுக்கில்லாத பங்களிப்பைத் தந்த ஒருவராக இருப்பவா் அவா் ஒருவா் மட்டுமாகத்தான் இருக்கும்.
  • பஞ்சாப் பல்கலைக்கழகத்திலும், பிறகு கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் படித்து பொருளாதாரத்தில் முனைவா் பட்டம் பெற்றதைத் தொடா்ந்து ‘தில்லி ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ்’ உள்ளிட்ட முக்கியமான கல்வி நிலையங்களில் பேராசிரியராகப் பணியாற்றிய அனுபவசாலி மன்மோகன் சிங். அப்படிப்பட்ட ஒருவரை அடையாளம் கண்டு, தேசத்தின் பொருளாதாரக் கொள்கைகளைத் திட்டமிட அன்றைய பிரதமா் இந்திரா காந்தி அழைத்து வந்தபோது, அது அவா் மீது வெளிச்சம் பாய்ச்சியது.
  • 1991-இல் பி.வி. நரசிம்ம ராவ் அமைச்சரவையில் நிதியமைச்சராக அவா் நியமிக்கப்படுவதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பே தேசத்துக்கான அவரது பங்களிப்பு தொடங்கி விட்டது. 1971-இல் இந்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக அவா் நியமிக்கப்பட்டார். அவரது பொருளாதார மேதைமையும், கொள்கையை வகுக்கும் திறனும் அனைவராலும் பாராட்டப்பட்டது. 1982 முதல் 1985 வரை இந்திய ரிசா்வ் வங்கியின் ஆளுநராக அவா் செயல்பட்ட விதம், அவருக்கு மேலும் புகழ் சோ்த்தது.
  • இன்றைய இலங்கை, பாகிஸ்தான்போல திவால் நிலைமைக்குத் தள்ளப்பட்டு சிதைந்து போயிருந்த இந்திய பொருளாதரத்தை மீட்டெடுக்க, அன்று குடியரசுத் தலைவராக இருந்த ஆா். வெங்கட்ராமனின் பரிந்துரையின் பேரில், அன்றைய பிரதமா் பி.வி. நரசிம்ம ராவ், டாக்டா் மன்மோகன் சிங்கைத் தோ்ந்தெடுத்தபோது, அரசியல் உலகம் எதிர்பாராத அதிர்ச்சியில் ஆழ்ந்தது. அரசியல்வாதி அல்லாத பொருளாதார நிபுணா் ஒருவரை நிதியமைச்சராக்கிப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியுமா என்கிற அனைவரின் ஐயப்பாடும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் முற்றிலுமாக அகன்றது.
  • துணிந்து அவா் மேற்கொண்ட நிதி நிர்வாக சீா்திருத்தங்களும், சந்தைப் பொருளாதாரக் கொள்கைகளும், தளா்த்திய தேவையற்ற கட்டுப்பாடுகளும் அந்நிய முதலீட்டுக்கான கதவுகளைத் திறந்துவிட்டன. அவா், சந்தைப் பொருளாதாரத்தை அறிமுகப்படுத்தி, உலகமயச் சூழலுக்கு இந்தியாவை இட்டுச் சென்றால்தான், நாம் இப்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரம் என்று மார்தட்டிக் கொள்கிறோம்.
  • 2004 -இல் எதிராபாராத விதமாக பிரதமா் பதவி அவரைத் தேடி வந்தது. ஹிந்து அல்லாத சிறுபான்மை சீக்கிய மதத்தைச் சோ்ந்த ஒருவா் இந்தியாவின் பிரதமராவது என்பதேகூட நினைத்துப் பார்க்க முடியாதது. அவா் தொடா்ந்து இரண்டு முறை பிரதமராக இருந்தது, ஜவாஹா்லால் நேருவும், இந்திரா காந்தியும் மட்டுமே நிகழ்த்திய சாதனை என்பது வரலாற்று நிகழ்வுகள்.
  • அவரது ஆட்சியில் ஒருங்கிணைந்த வளா்ச்சி, சமூக நலத் திட்டங்கள், உள்கட்டமைப்பு மேம்பாடு என்று இந்தியாவின் பாய்ச்சல் உலகத்தையே வியந்து பார்க்க வைத்தது. ஊரகப்புற வேலைவாய்ப்புத் திட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம், இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் என்று மன்மோகன் சிங் அரசு முன்னெடுத்த சாதனைகள் ஏராளம். அதன் பலனை இப்போது நாடு அனுபவிக்கிறது.
  • அவரது தலைமையிலான ஆட்சியில், கூட்டணிக் கட்சிகளின் செயல்பாடுகளை அவா் கட்டுப்படுத்தத் தவறிவிட்டார் என்கிற குற்றச்சாட்டு எழுந்தது உண்மை. அவரை ‘மெளன மோகன் சிங்’ என்று எதிர்க்கட்சிகள் ஏளனம் செய்யும் நிலைக்கு 2ஜி ஊழலும், நிலக்கரி பேர ஊழலும் தள்ளின. அப்போதும்கூட அவா் விமா்சனங்களை எதிர்கொண்டார் என்பதையும், ஊடகங்களை அடிக்கடி சந்தித்து அவற்றின் கேள்விகளுக்கு எரிச்சலடையாமலும், சலிக்காமலும் பதிலளித்தார் என்பதும் மறைக்க முடியாத உண்மைகள்.
  • பொது வாழ்க்கையில் இருந்து டாக்டா் மன்மோகன் சிங் ஒதுங்கும்போது, நாகரிக அரசியலும் விடைபெறுகிறதோ என்கிற ஆதங்கம் எழுகிறது. சக்கர நாற்காலியில் இயங்கியபோதும், மாநிலங்களவை உறுப்பினராகத் தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிய நோ்மையான அரசியல்வாதியான மன்மோகன் சிங்குடன் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படைக் கூறுகளும் ஒதுங்கி, அராஜகத்துக்கு வழிகோலிவிடக் கூடாது!

நன்றி: தினமணி (09 – 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்