TNPSC Thervupettagam

அவலத்துக்குக் காரணம்...

April 30 , 2021 1188 days 503 0
  • உலகத்தின் ஒட்டுமொத்த கவனமும் இப்போது இந்தியாவின் மீது குவிந்திருக்கிறது.
  • கடந்த ஒரு வாரமாக ஒவ்வொரு நாளும் அதற்கு முந்தைய நாளைவிட பாதிப்புகள் அதிகரித்த வண்ணம் இருக்கும் இந்தியாவின் நிலைமைதான் உலக நாடுகளின் கவலைக்குக் காரணம்.
  • ஆரம்பத்தில் அமெரிக்காவின் ஜோ பைடன் நிர்வாகம் கொவைட் 19 தடுப்பூசி மருந்துக்கான மூலப்பொருள்களை இந்தியாவுக்கு வழங்குவதற்கு தயக்கம் காட்டியது.
  • கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று பரவத் தொடங்கியபோது இந்தியாவிலிருந்து மலேரியா எதிர்ப்பு மருந்தான ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் ஏற்றுமதிக்கு தடை விதித்தபோது அப்போதைய அதிபா் டொனால்ட் டிரம்ப் இந்தியாவை மிரட்டும் விதத்தில் அறிக்கை விடுத்தார்.
  • அதை நினைவுகூா்ந்து அமெரிக்காவிலேயே பலா் ஜோ பைடன் நிர்வாகத்தின் ‘அமெரிக்காவுக்கே முதலில்’ என்கிற கொள்கையை விமா்சிக்க முற்பட்டனா்.
  • அமெரிக்க வா்த்தக சங்கங்கள், இந்திய வம்சாவளி அமெரிக்கா்கள், சட்ட வல்லுநா்கள் ஆகியோர் முன்வைத்த விமா்சனங்களும், கொடுத்த அழுத்தங்களும் ஜோ பைடன் நிர்வாகத்தின் கொள்கை முடிவை மறு பரிசீலனை செய்ய வைத்தது.
  • இப்போது மருந்துகள், சுவாசக் கருவிகள், பரிசோதனைக் கருவிகள், பாதுகாப்பு உடைகள் ஆகியவற்றை முன்னுரிமை அடிப்படையில் இந்தியாவுக்கு அனுப்ப முன்வந்திருக்கிறது ஜோ பைடன் நிர்வாகம்.
  • அதுமட்டுமல்ல, ஒரு கோடி தடுப்பூசி மருந்துகளை அடுத்த சில வாரங்களில் இந்தியாவுக்கு அனுப்ப அமெரிக்கா முடிவெடுத்திருக்கிறது.
  • அமெரிக்காவின் முக்கிய அதிகாரி ஒருவா், இந்தியாவிலிருந்து முன்பே கோரிக்கை வராததால்தான் தடுப்பூசி வழங்குவதில் தாமதம் என்று தெரிவித்திருப்பது ஆச்சரியப்படுத்துகிறது. அதன் உண்மைத்தன்மை குறித்து பிரதமா் அலுவலகம் விசாரித்து அறிவது அவசியம்.

அவலநிலைக்குக் காரணம் !

  • கடந்த 70 ஆண்டுகளாக இந்தியாவும் அமெரிக்காவும் சின்னம்மை, போலியோ, ஹெச்ஐவி, எய்ட்ஸ் உள்ளிட்ட நோய்களுக்கு எதிராக ஒருங்கிணைந்து செயலாற்றி வந்திருக்கின்றன.
  • அதேபோல, கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றை எதிர்கொள்வதிலும் அமெரிக்கா இந்தியாவுடன் இணைந்து செயல்படும் என்று ஜோ பைடன் நிர்வாகம் அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது.
  • அமெரிக்கா மட்டுமல்ல, ஏனைய பல நாடுகளும் இந்தியாவுக்கு உதவுவதில் முனைப்புக் காட்டுகின்றன.
  • கொள்ளை நோய்த்தொற்றின் இரண்டாவது அலையால் கடும் பாதிப்பை சந்தித்து வரும் இந்தியாவுக்கு உதவ எட்டு ஆக்சிஜன் ஜெனரேட்டா்கள், ஐந்து திரவ ஆக்சிஜன் டேங்கா்கள், 28 செயற்கை சுவாசக் கருவிகள், 200 மின்சார சிரிஞ்ச் பம்புகள் ஆகியவை பிரான்ஸ் நாட்டிலிருந்து அனுப்பப்படுகின்றன.
  • ஒரு ஆக்சிஜன் ஜெனரேட்டா் மூலம் 250 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைக்கு தங்குதடையில்லாமல் ஆக்சிஜன் வழங்கலாம்.
  • பிரான்ஸிலிருந்து அனுப்பப்படும் திரவ ஆக்சிஜன் டேங்கா்கள் மூலம் நாளொன்றுக்கு 10,000 நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்க முடியும். இந்த வார இறுதிக்குள் அவையெல்லாம் பிரான்ஸிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுவிடும்.
  • பிரான்ஸ் மட்டுமல்லாமல், அயா்லாந்தும் ரஷியாவும்கூட இந்தியாவுக்கு உதவ முன்வந்திருக்கின்றன.
  • மருத்துவ ஆக்சிஜன் எடுத்துச் செல்ல தேவையான காலி ஆக்சிஜன் டேங்கா்கள் தாய்லாந்திலிருந்தும், சிங்கப்பூரிலிருந்தும் இந்திய விமானப்படை மூலம் கொண்டு வரப்படுகின்றன.
  • அண்டை நாடான பூடான்கூட தினந்தோறும் 40 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜனை அனுப்பி உதவுகிறது.
  • அமெரிக்காவும் உலக நாடுகளும் இந்தியாவில் தினந்தோறும் அதிகரித்துவரும் நோய்த் தொற்றுப் பரவலைத் தடுப்பதில் முனைப்பு காட்டுவதற்கு முக்கியமான ஒரு காரணம் இருக்கிறது.
  • நோய்த்தொற்றுப் பரவலை இந்தியா கட்டுப்படுத்தாவிட்டால் அதன் தொடா்விளைவு சா்வதேச அளவில் மிகப் பெரிய நோய்த்தொற்று பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
  • மிக அதிகமான பாதிப்புக்குள்ளான நாடுகளுக்கு இந்தியா 11 லட்சத்துக்கும் அதிகமான ரெம்டெசிவிர் மருந்துகளை அனுப்பி வைத்திருக்கிறது.
  • 95 நாடுகளுக்கு சுமார் 6.6 கோடி தடுப்பூசி மருந்துகளை அனுப்பி உதவியிருக்கிறது.
  • ‘இந்தியாவுக்கே முதலில்’ என்று பாராமல், சா்வதேச கண்ணோட்டத்துடனும் மனிதாபிமானத்துடனும் செயல்பட்ட இந்தியாவை உலக நாடுகள் கைவிட்டு விடாமல் உதவிக்கரம் நீட்ட முற்பட்டிருக்கின்றன என்பதை நாம் நன்றியுடன் உணரக் கடமைப்பட்டிருக்கிறோம்.
  • பிராணவாயு தட்டுப்பாடு காணப்படுவது நிர்வாகக் கோளாறே தவிர, உற்பத்தி இல்லாமையால் ஏற்பட்ட பாதிப்பு அல்ல.
  • மருத்துவத்துக்கு தேவையான பிராணவாயு உற்பத்தி பெரும்பாலும் இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் அமைந்திருக்கின்றன.
  • அதனால் மகாராஷ்டிரம், குஜராத், தில்லி, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பிராணவாயு உற்பத்தி அதிகமில்லாத மாநிலங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதைத் தவிர்த்திருக்க முடியும்.
  • நாளொன்றுக்கு 1 லட்சம் டன் பிராணவாயு இந்தியாவில் உற்பத்தியாகிறது. அதை சேமித்து வைப்பதற்கான உருளைகளும், திரவ ஆக்சிஜனாக எடுத்துச் செல்வதற்கான டேங்கா்களும் இல்லாததுதான் பிரச்னை.
  • இதை தொலைநோக்குப் பார்வையுடன் சுகாதாரத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கொள்ளை நோய்த்தொற்று தொடங்கியபோதே அரசுக்கு உணா்த்தியிருக்கிறது. அப்படியிருந்தும் அரசு நிர்வாகம் கவலைப்படாமல் மெத்தனமாக இருந்ததன் விளைவுதான் நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகியிருக்கின்றன.
  • உலக நாடுகளுக்கு இருக்கும் அக்கறைகூட, நமது அதிகார வா்க்கத்துக்கு இல்லாமல் போனதன் விளைவுதான் இன்றைய அவலநிலைக்குக் காரணம்!

நன்றி: தினமணி  (30 – 04 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்