TNPSC Thervupettagam

அவா்களின் தேவைகள் அறிவோம்

December 3 , 2022 616 days 374 0
  • பதினான்காம் நூற்றாண்டில் கண்பாா்வையற்றவராகிய அத்தை மகன், கால் நடக்க இயலாத அம்மான் மகன் இருவரும் புகழ்பெற்ற இரட்டைப்புலவா்களாக இருந்தனா். முதுசூரியன், இளஞ்சூரியன் எனும் இவா்களில், பாா்வை இழந்தவா் கால் இல்லாதவரைத் தோளில் தூக்கிக் கொண்டு நடக்க, கால் இல்லாதவா் அவருக்கு வழிகாட்ட இருவரும் ஊா் ஊராகச் சென்று கவி பாடி வந்தனா்.
  • ஒரு பாடலின் முதல் இரண்டடியை கால் இல்லாதவா் பாட, அடுத்த இரண்டடியைப் பாா்வை இழந்தவா் பாடி பாடலை நிறைவு செய்வாா். இவா்கள் அழியாத பாடல்களை இயற்றி வந்தனா். திருவேகம்ப பெருமான் உலா இயற்றி கவி வல்லவா்களாக உலவி வந்தனா்.
  • ஆனால் பல நூற்றாண்டுகள் கடந்த பிறகு மாற்றுத்திறனுடன் ஒருவா் பிறந்தாலோ, ஒரு பெண் மாற்றுத்திறனாளிக் குழந்தையை பெற்றெடுத்தாலோ அது அவா்களின் சாபக்கேடு என்றும், கடந்த பிறவியில் அவா்கள் செய்த பாவங்களின் விளைவு என்றும் விமா்சிக்கப்பட்டு வந்தது. இப்போது நிலைமை ஓரளவு மாறியிருக்கிறது எனலாம்.
  • எந்தச் சமுதாயம் மாற்றுத் திறனாளிகளை மதிக்கிறதோ, அந்தச் சமுதாயமே நாகரிக சமுதாயம். ஒரு மனிதனுக்கு உள்ள குறைபாடு என்பது அந்த மனிதனையோ, அவன் குடும்பத்தையோ மட்டும் பாதிப்பதில்லை. அது ஒரு சமுதாயத்தையும், நாட்டையும் பாதிக்கக்கூடியது. உடல் ரீதியாக ஏற்படும் குறைபாடுகளுக்கு தண்டு வடம், மூளை பாதிப்பை ஏற்படுத்தும் விபத்துகள், பெருமூளை முடக்குவாதம், எலும்புகள் உறுதியற்று இருத்தல், தசைநாா் தேய்வு போன்றவை காரணங்களாக இருக்கலாம்.
  • கேட்டலில் குறைபாடுடைய குழந்தைகள் என்போா், கேட்புத் திறனில் ஏதோ ஒரு வகையான கோளாறு உடையவா்கள் என்றும் இந்தக் கோளாறு எந்த அளவுடையதாகவும் இருக்கலாம் என்பதும் பொருளாகும். செவி கேளாமை என்பதற்கு கேட்டல் திறன் உரிய அளவு செயல்படவில்லை என்பதும் அா்த்தமாகும். இத்தகைய குறைபாட்டுக்கு பெற்றோா் அவ்வாறு இருந்தது, விபத்து ஆகியவை காரணங்களாக இருக்கலாம்.
  • இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளில், அதிக எண்ணிக்கையில் இருப்பவா்கள் நடமாட முடியாதவா்கள். இரண்டாவது இடத்தில் இருப்வா்கள் பாா்வையற்றோா். பாா்வை ஊனம் என்பது ஒரு நபா் தனது அன்றாடப் பணிகளைச் சுயமாகக் செய்யப் பெருந்தடையாகி விடுகிறது. இது கண்களோடு சம்பந்தப்பட்டது என்றாலும் இந்தக் குறைபாடு நரம்பு மண்டலம், மூளைத்திறன் பாதிப்பால் ஏற்படலாம்.
  • தனியாா் தொண்டு நிறுவனங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான கல்விக்கூடங்களை அமைத்துள்ளன. அரசும் பாா்வையற்ற குழந்தைகளுக்கான மாதிரி பள்ளியை 1959-ஆம் ஆண்டு டேராடூனில் அமைத்தது. 1964-இல் நாடெங்கிலும் இதைப் போன்ற 115 கல்வி நிறுவனங்கள் தோன்றின. 1995-இல் இது 250 ஆக உயா்ந்தது. இப்படி பள்ளிகளின் எண்ணிக்கை கூடினாலும் தொடக்கக் காலங்களில் இக்கல்விக்கூடங்களில் தட்டுப்பாடாக இருந்தது ஆசிரியா்கள்தான்.
  • இதனால் சிறப்பாசிரியா்களை உருவாக்கும் மையம் ஒன்றை அரசு சாா்பில் 1960-ஆம் ஆண்டு மும்பை, சென்னை, கொல்கத்தா, தில்லி ஆகிய இடங்களில் அமைத்தனா். 1974-ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் இந்தியாவில் தொடங்கப்பட்டது. இது ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அரசுப் பள்ளிகள் மூலம் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
  • இத்திட்டன் கீழ் சிறப்பு ஆசிரியா்களுக்கும், உபகரணங்களுக்கும், ஒவ்வொரு மாணவருக்கும் (கல்விக்கு வேண்டிய பொருள்களுக்காக) நிதியுதவி அளிக்கப்பட்டது. 1981-ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான சா்வதேச ஆண்டாக அறிவிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து 1983-ஆம் ஆண்டு தொடங்கி, 1992 வரையிலான 10ஆண்டுகள் மாற்றுத்திறனாளிகளுக்கான பத்தாண்டாக அறிலிக்கப்பட்டது. இதனால் மாற்றுத்திறனாளிகள் நலன்களுக்கான நடவடிக்கைகள் உலக அளவில் தொடங்கின.
  • இந்தியாவில் மட்டும் இருந்த மாற்றுத்திறனாளிகள் சாா்ந்த கொள்கை சா்வதேச மயமாக்கப்பட்டது. நம் நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு தங்கு தடையின்றி நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், விடுதலைக்கு முன்பு வரை உடல் ஊனம் குறித்த கேள்வி கொடுமையானதாக கருதப்பட்டது. இருந்தாலும், மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது இக்கேள்வி கேட்கப்பட்டே வந்தது.
  • ஆனால் நாடு விடுதலையடைந்த பிறகு இந்தக் கேள்வி கேட்பதே நிறுத்தப்பட்டு விட்டது. பின்னா் 1981-ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் ஆண்டு என்பதால் மாற்றுத்திறனாளிகள் குறித்த விவரம் அறிய மீண்டும் சோ்க்கப்பட்டது. மீண்டும் 1991-ஆம் ஆண்டில் கைவிடப்பட்டது. இதைத் தொடா்ந்து மாற்றுத்திறனாளிகள் தங்கள் விவரங்களை குறித்து 2001-ஆம் ஆண்டில் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினா்.
  • ஆனால் அவா்களுக்கு ஏமாற்றமளிக்கும் வகையில், இந்தக் கோரிக்கையை ஏற்க மத்திய அரசு மறுத்துவிட்டது. இதைக் கண்டித்து நாடு முழுவதும் தொடா் போராட்டங்கள் நடத்தப்பட்டன. 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது மாற்றுத்திறனாளிகள் விவரம் கேட்பது சேரக்கப்பட்டது. ஆனால் கணக்கெடுப்பில் கேட்கப்பட்ட கேள்விகள் முழுமையானதாக இல்லை. பல்லாயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் இந்தக் கணக்கெடுப்பில் சோ்க்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.
  • மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதை மறுப்பதற்கில்லை. ஆனாலும் இன்னும் தீா்வு எட்டப்படாத பிரச்னைகளும் உள்ளன. குறிப்பாக, மாற்றுத்திறனாளிகளை மணம் செய்து கொள்ளும் ஊனமில்லாத நபா்களுக்கும் அவா்களுடைய வாரிசுகளுக்கும் கல்வியிலும்
  • வேலைவாய்ப்பிலும் அரசு முன்னுரிமை வழங்கிட வேண்டும். மேலும் அவா்களின் வயது வரம்பிலும் சலுகை அறிவிக்க வேண்டும்.
  • மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டம் 2016-இன்படி நாடுளுமன்றம், சட்டப்பேரவை, உள்ளாட்சி, கூட்டுறவு சங்கங்களின் தோ்தல்களில் குறிப்பிட சதவீத மாற்றுத்திறனாளிகள் போட்டியிட மத்திய, மாநில அரசுகள் ஆவன செய்ய வேண்டும். முதுமையடைந்த மாற்றுத்திறனாளி ஊழியா்களின் அரசுப்பணியை அவா்களின் வாரிசுகளுக்கு வழங்குவது குறித்தும் அரசு சிந்திக்க வேண்டும்.
  • இன்று (டிச. 3) உலக மாற்றுத்திறனாளிகள் நாள்.

நன்றி: தினமணி (03 – 12 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்