TNPSC Thervupettagam

ஆ.இரா.வேங்கடாசலபதி நேர்காணல்

December 23 , 2024 3 hrs 0 min 18 0

ஆ.இரா.வேங்கடாசலபதி நேர்காணல்

  • சாகித்திய அகாடமி விருது, வரலாற்று ஆய்வாளர் ஆ.இரா.வேங்​கடாசலப​திக்கு அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. வ.உ.சி. பாரதி, புது​மைப்​பித்தன் உள்ளிட்ட ஆளுமைகள் குறித்த இவரது ஆய்வுகள் அறியப்​பட்​டவை. ஆங்கிலத்​தி​லும் கட்டுரை நூல்களை எழுதிவரு​கிறார். ஆய்வின் செறி​வுக்​காக​வும் சுவாரஸ்​யமான எழுத்​துநடைக்​காக​வும் மதிக்​கப்​பட்ட க. கைலாசபதி போல் கல்விப்புல எல்லை​யைக் கடந்த ரசிகர்கள் சலபதிக்​கும் உண்டு. இவர் எழுதிய ‘திருநெல்​வேலி எழுச்​சி​யும் வ.உ.சி​யும்​-1908’ நூலுக்​காகவே இந்த விருது. அது குறித்து மேற்​கொண்ட நேர்​காணல் இது.

இம்முறை புனைவு அல்லாத படைப்​புக்கு விருது வழங்​கப்​பட்​டுள்​ளது...

  • தொ.மு.சி. ரகுநாதன் எழுதிய ‘பாரதி: காலமும் கருத்​தும்’ விருது பெற்ற நாற்பது ஆண்டு​களுக்​குப் பிறகு ‘திருநெல்​வேலி எழுச்​சி​யும் வ.உ.சி.​யும்’ நூலுக்​காகப் பெறுகிறேன். நான் இலக்கிய உலகில் அடியெடுத்து​வைத்த காலத்​தில் ரகுநாதன்​மீது பெரிய பிரமிப்பு இருந்​தது. அவருடைய பாரதி நூல்​களைப் படித்​துப் பித்து பிடித்தது போல் திரிந்​திருக்​கிறேன். வ.உ.சி.யைத் தேடிச்​சென்​று​தான் ஆராய்ச்​சி​யாளனாக மாறினேன். எனவே வ.உ.சி. பற்றிய நூலுக்காக விருது கிடைத்​திருப்பது மகிழ்ச்சி. முற்றி​லும் எதிர்​பாராதது என்ப​தில் கூடுதல் மகிழ்ச்சி. இளைய தலைமுறை ஆராய்ச்​சி​யாளர்​களுக்கு இது உற்சாகத்​தைத் தரும் என்ற நம்பிக்கை​யும் எனக்​கிருக்​கிறது.

1908இல் வ.உ.சி.க்காக திருநெல்​வேலி மக்களிடையே உருவான எழுச்​சியை உங்கள் நூல்​தான் முதன்​முதலாகப் பதிவு செய்​தது...

  • வ.உ.சிதம்​பரனார் குறித்த ஆய்வு, திருநெல்​வேலி எழுச்​சி​யைப் பற்றி அறியச் செய்​தது. 1984இல் வ.உ.சி. பற்றிய தரவுகள் தேடி சென்னை எழும்​பூரில் உள்ள வரலாற்று ஆவணக் காப்​பகத்​துக்​குச் சென்​ற​போது, ஆறு மாதங்​களுக்​குள் ஆய்வை முடித்து ஓராண்​டுக்​குள் ஒரு நூலை எழுதி முடித்து​விடலாம் என்று நினைத்​தேன்.
  • ஆனால், அந்தத் தேடல் ஆண்டுக் கணக்​கில் தொடரும் என எதிர்​பார்க்க​வில்லை. அந்தளவுக்கு வ.உ.சி. பற்றி புதுப்பு​துத் தகவல்கள் கிடைத்தன. இனியும் தரவுகள் கிடைக்​கக்​கூடும். வ.உ.சி​.யின் வீச்சு அத்தகையது. வ.உ.சி. கடிதங்களை 1984இல் பதிப்​பித்​தேன். அப்பொழுதே திருநெல்​வேலி எழுச்​சி​யைப் பதிவுசெய்​யும் வகையில் நீண்ட கட்டுரை ஒன்றை​யும் எழுதினேன்.
  • அக்காலத்​தில் இது போன்ற எழுத்து​களுக்கு வெளி​யீட்டு வாய்ப்பே கிடை​யாது. 1986இல் வ.உ.சி. பெயரில் தூத்​துக்​குடி மாவட்டம் உருவாக்​கப்​பட்​ட​போது அதற்கான தொடக்க விழா தூத்​துக்​குடி​யில் நடைபெற்​றது. அங்குச் சென்​றிருந்த​போது, முன்னோடி ஆய்வறிஞர் ஆ. சிவசுப்​பிரமணியன் வீட்​டில் ஒரு வாரம் தங்கி​, தீவிரமான உரையாடலில் ஈடுபட்​டேன்.
  • ஆங்கிலேய அரசை எதிர்த்​துப் போராடிய வ.உ.சி. மீது மக்கள் எந்தளவுக்கு அன்பும் மதிப்பும் கொண்​டிருந்​தனர் என்பதை வெளிப்​படுத்​தும் திருநெல்​வேலி எழுச்சி நிகழ்வு​களைப் பதிவுசெய்ய வேண்​டும் என்கிற உந்துதல் ஏற்பட்​டது. அந்த வேகத்​தில் எழுதினேன். ‘வ.உ.சி.​யும் திருநெல்​வேலி எழுச்​சி​யும்’ என்ற சிறு நூலாக அது அமைந்​தது.

இந்த நூலுக்கான வரவேற்பு எப்படி இருந்​தது?

  • 1987இல் இந்நூலை அறிஞர் மே.து.ராசுகு​மார் தனது ‘மக்கள் வெளி​யீடு’ மூலம் வெளி​யிட்​டார். 96 பக்கம்​தான். 30 பக்கத்​திற்கு மேல் பிற்​சேர்க்கைகள். விலை ரூ.10். நூலக ஆணை கிடைக்க​வில்லை. ஒரு மதிப்பு​ரைகூட வந்ததாக நினை​வில்லை. நூலைப் படித்து​விட்டு சுந்தர ராமசாமி எனக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்​பினார்.
  • இளம் புதுக்க​விஞர் ஒருவர், ‘ஆய்வு நூல் என்கிறீர்​கள். படித்​தால் புதினம் போல இருக்​கிறதே” என்றார். தனிப்​பிர​தி​களாக முற்​போக்கு இலக்கிய வட்டாரங்​களில் நூல் பரவியது. ஆயிரம் பிரதிகள் விற்றுத் தீர ஆறேழு ஆண்டு​களுக்கு மேலா​யின. தமிழகம் கண்ட விடு​தலைப் போராட்​டத்​தின் ஒரு முக்​கியமான பகுதி​யும் வ.உ.சி.​யின் வாழ்க்கை​யில் ஒரு திருப்பு​முனை​யு​மாகத் திருநெல்​வேலி எழுச்​சி​யைக் கூறலாம்.
  • ஆங்கிலேய அதிகாரி​களுக்கு அடங்கி நடந்த மக்களிடையே வ.உ.சி​.யின் தாக்​கத்​தால் ஆங்கிலேயர்களை நோக்கிய எதிர்ப்பு, அலட்​சி​யம், சட்ட மீறல்கள் போன்றவை உருவாகின. இந்த மாற்றம் ஆங்கிலேயரது அதிகார மனநிலைக்​குப் பெரும் அடியாக இருந்​தது. வ.உ.சி. கைது செய்​யப்​பட்​ட​போது திருநெல்​வேலி ஒரு போர்க்​களம் போல மாறியது.
  • காவல் நிலையம் உள்ளிட்ட அரசாங்கக் கட்டடங்கள் தாக்​கப்​பட்டன. ஆங்கிலேயர்கள் தங்கள் குடும்பத்​தினருடன் பொது இடங்​களில் நடக்​க​வும் அஞ்சினர். மக்களுக்​குப் பயந்து அவர்கள் இரவில் தூங்​கு​வதற்​குக் கப்பலுக்​குச் சென்​று​விடுமளவுக்கு தூத்​துக்​குடி​யில் நிலைமை இருந்​தது. வ.உ.சி​.யின்​பொருட்டு இப்படிப்​பட்ட கொந்​தளிப்பு மிக்க நிகழ்வுகள் திருநெல்​வேலி​யில் அரங்​கேறின என்பதை முதன்​முதலாக வெளிச்​சத்​துக்​குக் கொண்டு​வந்​த​தில் இந்நூலின் பங்களிப்​பைத் தமிழகம் உணரப் பல ஆண்டுகள் ஆகின.
  • ‘காலச்​சுவடு’ கண்ணன் மறுப​திப்பு வெளியிட விரும்​பினார். டெல்லி, கொல்​கத்தா, லண்டன், பாரிஸ், அமெரிக்கா, அயர்​லாந்து ஆகிய இடங்​களில் உள்ள ஆவணக் காப்​பகங்​களி​லும் நூலகங்​களி​லும் வ.உ.சி. குறித்த தரவுகள் கிடைத்​திருந்தன. ஒரு வரலாற்று மாணவனாக​வும் ஆசிரியனாக​வும் எனக்​குக் கிடைத்த பயிற்​சி​யும் என் பார்​வையைச் செழு​மைப்​படுத்​தி​யிருந்தது. எனவே, இரண்​டாம் பதிப்பாக வெளியிட விரும்ப​வில்லை. நூலை விரிவாக்கி​யும் மாற்றி​யும் எழுதினேன். மூன்று மடங்கு பெரிய​தாக, 250 பக்க அளவில், அது ஒரு புதுநூலாக, ‘திருநெல்​வேலி எழுச்​சி​யும் வ.உ.சி​.யும், 1908’ என மாறி​விட்​டது.

வ.உ.சி.யை நோக்கி உங்களை வழிநடத்​தியது எது?

  • ஒரு நடுத்தர வர்க்கச் சிறு​வனான என்னை வ.உ.சி.​யின் தன்னலமற்ற தியாக​மும் வினை​யாற்​றலும் ஈர்த்தன. ஆங்கிலேயர்​களின் ஆதிக்​கத்​தைப் பொருளாதார நோக்​கில் எதிர்​கொள்ள வ.உ.சி. கப்பல் நிறு​வனம் நடத்​தி​யதும், பல இழப்பு​களுக்கு உள்ளானதும் காவி​யத்​தன்மை கொண்​டது. வரலாற்றில் அவர் ஒரு துயர நாயகன். ‘காற்​றடிக்​கும் பக்கமெல்​லாம் போகும் நீர்மை (குணம்) வ.உ.சி.​யிடம் இல்லை’ எனத் ​திரு.​வி.க. கூறியது​தான் எவ்​வளவு பொருத்​த​மானது. வ.உசி. குறித்த ஆய்வு என்னைத் தமிழக, இந்​திய வரலாற்றுக்கு இட்டுச் சென்​றது. இந்த ​விருது, வ.உ.சி.க்கு அளிக்​கப்​பட்ட மரி​யாதை​யாகவே பலரும் நினைப்​ப​தாகத் தோன்றுகிறது. அது எனக்​குப்​ பெரும்​ மனநிறைவை அளிக்கிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (23 – 12 – 2024)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்