TNPSC Thervupettagam

ஆக்கபூர்வ முனைப்பு!

March 17 , 2021 1231 days 557 0
  • முதன்முறையாக "க்வாடரிலேடரல் செக்யூரிட்டி டயலாக்' எனப்படும் "க்வாட்' காணொலி மாநாடு கடந்த வாரம் நடைபெற்றது.
  • தலைவர்கள் அளவில் நடைபெறும் முதலாவது காணொலி மாநாடு என்பதால் இந்த மாநாடு தனி கவனம் பெற்றது.
  • அதுமட்டுமல்ல, அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்றதற்குப் பிறகு கலந்து கொள்ளும் முதல் மாநாடு என்பது அதன் முக்கியத்துவத்தை மேலும் அதிகரித்தது.
  • பிப்ரவரி 19-ஆம் தேதி மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அதிபர் பைடன், அமெரிக்காவின் ஐரோப்பிய நேச நாடுகளான ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கினார்.
  • சீனாவுக்கு எதிராக மேலை நாடுகளின் கூட்டணியை ஏற்படுத்த முனையும் அமெரிக்காவுக்கு, ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பு இல்லை. அந்தப் பின்னணியில்தான் "க்வாட்' மாநாட்டை நாம் அணுக வேண்டியிருக்கிறது.
  • அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளும் 2007-இல் ஏற்படுத்திக் கொண்ட ஒரு கூட்டணிதான் "க்வாட்'.
  • மன்மோகன் சிங் பிரதமராக இருக்கும்போது "க்வாட்' அமைப்பில் இந்தியா இணைந்தது கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது.
  • அமெரிக்கா உருவாக்க முயலும் மற்றுமொரு "நேட்டோ' கூட்டமைப்பில் இந்தியா இணைகிறது என்கிற விமர்சனம் எழுந்தது.
  • இப்போது "க்வாட்' அமைப்பு என்பது வலிமையான கூட்டணியாக மாறியிருப்பதற்கும், அதன் மீதான விமர்சனங்கள் முனைமழுங்கிப் போனதற்கும் அதிகரித்து வரும் சீன ஆதிக்கம் தான் காரணம்.
  • பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன், ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா ஆகிய நான்கு பேரும் காணொலி மாநாட்டைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை "வாஷிங்டன் போஸ்ட்' நாளிதழில் இணைந்து எழுதியிருக்கும் கட்டுரை "க்வாட்' அமைப்பின் இப்போதைய பார்வையையும், இலக்கையும் தெள்ளத்தெளிவாக விளக்குகிறது.
  • இந்து மகா கடலில் இருந்து ஜப்பான் வரையிலான இந்தோ - பசிபிக் பிராந்தியத்தை மையமாக வைத்து செயல்படும் அமைப்பாக "குவாட்' இருக்கப் போகிறது என்பதை மாநாட்டின் உரையும், "வாஷிங்டன் போஸ்ட்' கட்டுரையும் தெளிவுபடுத்துகின்றன.
  • உலகம் முழுவதும் உயர்ந்து கொண்டிருந்த கம்யூனிஸ சித்தாந்தத்துக்கும் ஆட்சிகளுக்கும் எதிராக அமெரிக்காவின் தலைமையில் உருவான ராணுவ கூட்டமைப்புதான் "நேட்டோ'. "க்வாட்' அப்படிப்பட்டதல்ல. சர்வாதிகாரத்தையும், அடக்குமுறையையும் ஜனநாயகத்தின் அடிப்படையில் எதிர்கொள்ளும் அமைப்பாக இது உருவாக்கப்படுகிறது என்று அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்திருக்கிறார்.
  • காணொலி மாநாட்டுக்குப் பிறகு கடந்த வெள்ளிக்கிழமை நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் "க்வாட்' அமைப்பு என்பது புதிய "நேட்டோ' என்கிற விமர்சனத்தை நிராகரித்தார் அவர். "நேட்டோ' என்பது ராணுவக் கூட்டமைப்பு. பொருளாதாரம், தொழில் நுட்பம், பருவநிலை, கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படைப் பாதுகாப்பு பிரச்னைகளில் ஒருங்கிணைந்து பணியாற்றுவதுதான் "க்வாட்' அமைப்பின் நோக்கம் என்பதை ஜேக் சல்லிவன் வலியுறுத்தினார்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!

  • வடகொரியா, மியான்மரில் மீண்டும் நிலைநாட்டப்பட்டிருக்கும் ராணுவ சர்வாதிகாரம், ஹாங்காங்கின் ஜனநாயக எழுச்சி, தைவானின் பாதுகாப்பு, சீனாவின் ஷின்ஜியாங் உய்குர் இன அழிப்பு, ஜப்பானிய தென்காக்கு தீவுகள் பிரச்னை, கிழக்கு லடாக் ஊடுருவல் உள்ளிட்ட பிரச்னைகளில் சீனா முக்கியப் பங்கு வகிக்கும் நிலையில், "க்வாட்' என்பது சீனாவுக்கு எதிரான கூட்டமைப்பு என்கிற கருத்தை நிராகரித்துவிட முடியாது.
  • "க்வாட்' மாநாட்டின் கவனக்குவிப்பு (ஃபோகஸ்) சீனா அல்ல என்றாலும், பின்னணியில் சீனாவுக்கு எதிரான கூட்டமைப்பை உருவாக்கும் எண்ணம் அழுத்தமாக இருந்ததை மறுத்துவிட முடியாது.
  • நடந்து முடிந்த "க்வாட்' மாநாடு ஆக்கபூர்வமான செயல்திட்டத்தை முன்மொழிந்து நடைமுறைப்படுத்துவதில் இறங்கியிருக்கிறது.
  • 2022-க்குள் 100 கோடி தடுப்பூசி மருந்துகள் தயாரிக்கப்பட்டு, அவை இந்தோ - பசிபிக் பிராந்தியத்திலுள்ள அனைத்து நாடுகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதுதான் "க்வாட்' எடுத்திருக்கும் தீர்மானம்.
  • அமெரிக்க தொழில் நுட்பம், ஜப்பானிய முதலீடு, இந்தியாவின் உற்பத்தித் திறன், ஆஸ்திரேலியாவின் விநியோகக் கட்டமைப்பு ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு, அதன் மூலம் ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளும் பயன்படும் வகையில் முன்மொழியப்பட்டிருக்கும் ஆக்கபூர்வமான முயற்சிக்காக "க்வாட்' அமைப்பை உலகம் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறது.
  • இந்த முயற்சியில் இந்தியா மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. ஏற்கெனவே உலகின் தடுப்பூசித் தயாரிப்புக் கேந்திரமாகவும், உலகின் மருந்தகமாகவும் இந்தியா உயர்ந்திருக்கிறது.
  • உலகின் மூலக்கூறு (ஜெனரிக்) மருந்துகளில் 20%-ம், உலகின் தடுப்பூசித் தயாரிப்பில் 62%-ம் இந்தியத் தயாரிப்புகள் என்பது நமது தனிப்பெருமை.
  • நமது அண்டை நாடுகள் உள்பட 60-க்கும் மேலான நாடுகளுக்கு நாம் தடுப்பூசி மருந்து வழங்கியிருக்கிறோம் என்பது இந்தியாவின் பெருமைக்குரிய சாதனை.
  • கொவைட் 19 கொள்ளை நோய்க்கான தடுப்பூசி மருந்து தயாரித்து வழங்கும் முயற்சியில் ஒருங்கிணைந்திருக்கும் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளும் அதன் மூலம் "க்வாட்' அமைப்புக்கு வலு சேர்த்திருப்பதுடன், சீனாவை எதிர்கொள்ளும் வலிமையுள்ள ராணுவ கூட்டமைப்பாகவும் தங்களை நிலைநிறுத்திக் கொண்டிருக்கின்றன.

நன்றி: தினமணி  (17 – 03 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்