TNPSC Thervupettagam

ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தியா எட்டிய மைல்கல்

October 12 , 2023 441 days 277 0
  • சீனாவின் ஹாங்சோவில் நடந்துமுடிந்த 19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இந்தியா முதல் முறையாக நூற்றுக்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்று வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறது. இந்தியாவின் சார்பில் பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளில் பங்கேற்று நாட்டைப் பெருமைப்படுத்தியதோடு, பதக்கங்களையும் வென்று திரும்பியுள்ள வீரர், வீராங்கனைகள் பாராட்டுக்குரியவர்கள். மதிக்கத்தக்க இந்த வெற்றி, 2024இல் பாரிஸில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவிருக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு உத்வேகம் அளிப்பதாக இருக்கும்.
  • 2018இல் இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் வென்ற 70 பதக்கங்களே, இந்தியாவின் அதிகபட்ச சாதனையாக இருந்தது. தற்போது 107 பதக்கங்களை (28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம்) வென்று சீனா, ஜப்பான், தென் கொரியாவுக்கு அடுத்தபடியாகப் பதக்கப் பட்டியலில் 4ஆவது இடத்தைப் பிடித்திருப்பது, விளையாட்டுத் துறையில் இந்தியா வளர்ந்துவருவதைக் காட்டுகிறது.
  • கடந்த 20 ஆண்டுகளாகவே ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வெல்வதில் முன்னேற்றம் கண்டுவந்த இந்தியா, தற்போது ஒரு புதிய மைல்கல்லைத் தொட்டிருப்பதன் மூலம் விளையாட்டுத் துறையில் முன்னேற்றம் அடைந்துவருவது உறுதியாகியுள்ளது.
  • ஆசியப் போட்டிகளில் இந்தியா எப்போதும் ஆதிக்கம் செலுத்தும் தடகளம், துப்பாக்கி சுடுதல், வில்வித்தை, ஸ்குவாஷ், பாட்மின்டன், டென்னிஸ், ஹாக்கி, மல்யுத்தம், டேபிள் டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் இந்த முறையும் முத்திரை பதித்திருக்கிறது. 2010 முதல் ஆசியப் போட்டிகளில் இடம்பெற்றுவரும் கிரிக்கெட்டில் இந்த முறை 2 தங்கப் பதக்கங்களை இந்தியா வென்றது. 41 ஆண்டுகளுக்குப் பிறகு குதிரையேற்றத்தில் இந்திய அணி தங்கப் பதக்கத்தை வென்றது. ஆடவர் ஹாக்கியில் கிடைத்த வெற்றி, 2024 பாரிஸ் ஒலிம்பிக்குக்கு இந்தியாவுக்குப் பாதை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
  • அதிகம் பரிச்சயம் இல்லாத ரோலர்-ஸ்கேட்டிங், விண்ட் சர்ஃபிங், வூஷூ, செபக் டக்ரா போன்ற விளையாட்டுகளில் புதிய வீரர், வீராங்கனைகளின் திறமைகளை இந்தியா கண்டறிந்தது உள்பட ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியில் மனநிறைவு தரும் நிகழ்வுகள் பல அரங்கேறியுள்ளன. இதற்குத் திறமையான வீரர், வீராங்கனைகளைக் கண்டறிந்து, வாய்ப்புகளையும் உதவிகளையும் ஏற்படுத்தித் தந்து, தொடர்ந்து பயிற்சிகள் வழங்கிய மத்திய அரசு, இந்திய விளையாட்டு ஆணையம், பல்வேறு மாநில அரசுகள் பாராட்டுக்குரியவை.
  • ஆசிய விளையாட்டுப் போட்டி இனிய தருணமாக அமைந்தாலும், வழக்கமான விளையாட்டுகளுக்கு அப்பால் மேலும் பல விளையாட்டுகளிலும் ஒலிம்பிக்கிலும் இந்தியா சாதிக்க வேண்டிய தொலைவு அதிகமாகவே உள்ளது. அதற்கு விளையாட்டுகளுக்கான உள்கட்டமைப்புகள் உலகளாவிய தரத்துடன் இருக்க வேண்டியது அவசியம். மேலும், சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் குறிப்பிட்ட இடைவெளியில் இந்தியாவில் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்தியாவில் ஒலிம்பிக் போட்டியை நடத்த வேண்டும் என்பதை இந்திய ஒலிம்பிக் கமிட்டி லட்சியமாகக் கொண்டிருக்கிறது.
  • அதற்கு முன்பாக 1951, 1982 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் நடைபெறாத ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்த இந்திய விளையாட்டுத் துறை முன்முயற்சிகளைத் தொடங்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகள் ஒலிம்பிக் போன்ற சர்வதேச விளையாட்டுத் திருவிழாக்களில் இந்தியர்கள் சாதிக்கவும் வழிவகுக்கும்.

நன்றி: இந்து தமிழ் திசை (12 - 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்