TNPSC Thervupettagam

ஆசியான் மற்றும் அது தொடர்பான குழுக்கள்

November 9 , 2019 1890 days 7970 0
  • பிரதமர் நரேந்திர மோடி 2019 ஆம் ஆண்டு நவம்பர் 3 அன்று தாய்லாந்தின் பாங்காங்கிற்குப் பயணம் மேற்கொண்டார். அங்கு அவர் ஆசியான்-இந்தியா (ASEAN-India), கிழக்கு ஆசிய நாடுகள் உச்சி மாநாடு (East Asia Summit) மற்றும் விரிவான பிராந்தியப் பொருளாதார கூட்டுறவு  ஒப்பந்த (Regional Comprehensive Economic Partnership - RCEP) உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார்.
  • இந்த உச்சி மாநாடுகள் வர்த்தகம், கடல்சார் பாதுகாப்பு மற்றும் இணைப்பு போன்ற முக்கியத் துறைகளில் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்தப் பயன்படுகின்றன.

ஆசியான்

  • தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம்  ஆசியான் (Association of South East Asian Nations - ASEAN) என்பது ஒரு பிராந்திய அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும்.
  • இது ஆசிய-பசிபிக் காலனித்துவத்திற்குப் பின்பான,  நாடுகளிடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு இடையில் அரசியல் மற்றும் சமூக நிலைத் தன்மையை மேம்படுத்துவதற்காக நிறுவப்பட்டது.
  • ஆசியான் அமைப்பின் குறிக்கோள் “ஒரு தொலைநோக்குப் பார்வை, ஒரு அடையாளம், ஒரு சமூகம்” என்பதாகும்.
  • ஆகஸ்ட் 8 ஆம் நாள் ஆசியான் தினமாக அனுசரிக்கப் படுகின்றது.
  • ஆசியான் அமைப்பின் செயலகம் - இந்தோனேசியா, ஜகார்த்தா.
  • ஆசியான் உறுப்பு நாடுகளின் ஆங்கிலப் பெயர்களின் அகர வரிசைப்படி ஆசியான் அமைப்பின் தலைமைப் பொறுப்பு வகிக்கும் நாடு ஆண்டுதோறும் நியமிக்கப் படுகின்றது.
  • தலைவர் பதவியில் இருக்கும் உறுப்பு நாடானது  தலைமைப் பொறுப்பு வகிக்கும் காலத்தை  ஒரு இயல் ஆண்டாக வைத்திருக்கின்றது. மேலும் ஆசியான் உச்சி மாநாடு மற்றும் அது தொடர்புடைய உச்சி மாநாடுகளுக்கு அந்த நாடு தலைமை தாங்குகின்றது.
  • 2019 ஆம் ஆண்டிற்கான ஆசியானின் தலைமை நாடு தாய்லாந்து ஆகும்.

உறுப்பினர் நாடுகள்

  1. இந்தோனேஷியா
  2. மலேஷியா
  3. பிலிப்பைன்ஸ்
  4. சிங்கப்பூர்
  5. தாய்லாந்து
  6. புருனே
  7. வியட்நாம்
  8. லாவோஸ்
  9. மியான்மர்
  10. கம்போடியா

 

ஆசியான் அமைப்பின் உருவாக்கம்  

  • 1967 - ஆசியான் அமைப்பு அதன் நிறுவன நாடுகள் ஆசியான் பிரகடனத்தில் (பாங்காக் பிரகடனம்) கையெழுத்திட்டதன் மூலம் நிறுவப் பட்டது.
  • ஆசியான் அமைப்பு தோன்றக் காரணமாயிருந்த நாடுகள்: இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகியவை ஆகும்.
  • புருனே (1984), வியட்நாம் (1995), லாவோஸ் மற்றும் மியான்மர் (1997), மற்றும் கம்போடியா (1999) ஆகிய நாடுகளும் இந்த அமைப்பில் இணைந்தன.
  • 1995 - தென்கிழக்கு ஆசியாவில் அணுசக்தி இல்லாத மண்டலத்தை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தில் உறுப்பு நாடுகள் கையெழுத்திட்டன.
  • 1997 – “ஆசியான் தொலைநோக்குப் பார்வை 2020” என்பதை ஏற்றுக் கொள்ளுதல்.
  • 2008 - ஆசியான் சாசனம் நடைமுறைக்கு வந்து ஒரு சட்டப்படியான  கட்டுப்படுத்தும் ஒப்பந்தமாக அது மாறியது.
  • 2015 - ஆசியான் சமூகத்தின் துவக்கம்.
  • 2019 - 35வது ஆசியான் உச்சி மாநாடு - பாங்காக், தாய்லாந்தில் நடைபெற்றது.
  • ஆசியான் சமூகமானது மூன்று தூண்களைக் கொண்டுள்ளது:
    • ஆசியான் அரசியல் - பாதுகாப்புச் சமூகம்
    • ஆசியான் பொருளாதாரச் சமூகம்
    • ஆசியான் சமுதாய - கலாச்சாரச் சமூகம்

ஆசியான் அமைப்பின் நோக்கங்கள்

  • பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றம் மற்றும் கலாச்சார வளர்ச்சியை துரிதப் படுத்துதல்.
  • பிராந்திய அளவில் அமைதி மற்றும் நிலைத் தன்மையை மேம்படுத்துதல்.
  • பொருளாதார, சமூக, கலாச்சார, தொழில்நுட்ப, அறிவியல் மற்றும் நிர்வாகத் துறை போன்ற பொது நல விவகாரங்களில் ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உதவியை ஊக்குவித்தல்.
  • வேளாண்மை மற்றும் தொழில்களின் அதிகப் பயன்பாடு மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு மிகவும் திறம்பட ஒத்துழைத்தல்.

ஆசியான் அமைப்பின் தலைமையிலான மன்றங்கள்

  • ஆசியான் பிராந்திய மன்றம்:
    • பிராந்திய அளவில் நம்பிக்கையை வளர்ப்பதற்கும் தடுப்பு இராஜதந்திரத்திற்கும் பங்களிப்பதற்காக இருபத்தேழு உறுப்பினர்களைக் கொண்ட பலதரப்பு குழு ஒன்று 1993 ஆம் ஆண்டில் உருவாக்கப் பட்டது.
  • ஆசியான் + மூன்று:
    • 1997 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த ஆலோசனைக் குழு, ஆசியானின் பத்து உறுப்பினர்களுடன் சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளை ஒன்றிணைக்கின்றது.
  • கிழக்கு ஆசிய உச்சி மாநாடு:
    • 2005 ஆம் ஆண்டில் முதன்முதலில் மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற இந்த உச்சி மாநாடு இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் செழிப்பை ஊக்குவிக்க முயல்கின்றது.
    • கிழக்கு ஆசிய உச்சி மாநாடானது ஆசியான் அமைப்பை  மையப்படுத்திய மற்றும் ஆசியான் உறுப்பினரால் மட்டுமே தலைமைத் தாங்கக் கூடிய ஒரு மன்றமாகும். இதன் தற்போதைய தலைமை நாடு தாய்லாந்து ஆகும்.
    • இது ஆரம்பத்தில் ஆசியான்+ஆறு நாடுகள் என்ற  செயல்முறையின் அடிப்படையில் கிழக்கு ஆசிய, தென்கிழக்கு ஆசிய மற்றும் தெற்காசியப் பிராந்தியங்களில் 16 நாடுகளின் தலைவர்களால் ஆண்டுதோறும் நடத்தப்படும் பிராந்திய மன்றமாகத் திகழ்ந்தது .
    • இந்தோனேசியாவின் பாலி நகரில் 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆறாவது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டிலிருந்து அதன் உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையானது 18 ஆக விரிவாக்கப் பட்டது.
    • பின்வரும் நாடுகள் அதன் உறுப்பு நாடுகளாகும்.
      • ஆசியான் அமைப்பின் 10 உறுப்பு நாடுகள். 
      • ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், இந்தியா, நியூசிலாந்து, கொரியக் குடியரசு (தென் கொரியா), ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள்.

சிறப்பு அதிகாரங்கள் மற்றும் வாய்ப்புகள்

  • ஆசிய-பசிபிக் வர்த்தகம், அரசியல் மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகளில் அதன் உறுப்பு நாடுகள் தனித்தனியாகப் பெறும் செல்வாக்குகளை விட ஆசியான் அமைப்பானது அதிக செல்வாக்கைக் கொண்டுள்ளது.
  • மக்கள்தொகை ஈவு - இது உலகின் மூன்றாவது பெரிய மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் முப்பது வயதுக்குக் குறைவானவர்களாக உள்ளனர்.
  • பொருளாதாரம்சார் சிறப்புகள் :
    • உலகின் மூன்றாவது பெரிய சந்தை - ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் வட அமெரிக்கச்  சந்தைகளை விட இது பெரியது.
    • இந்து உலகின் ஆறாவது பெரிய பொருளாதாரம், ஆசியாவில் மூன்றாவது பொருளாதாரம்.
  • சீனா, ஜப்பான், தென் கொரியா, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுடன் இந்த அமைப்பு தடைகளற்ற வர்த்தக ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளது.
  • உலகளவில் நான்காவது பிரபலமான முதலீட்டு இலக்கு கொண்ட அமைப்பு இதுவாகும்.
  • உலகளாவிய ஏற்றுமதியில் ஆசியானின் பங்கு 1967 ஆம் ஆண்டில் 2 சதவீதத்திலிருந்து 2016 ஆம் ஆண்டிற்குள் 7 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது ஆசியான் அமைப்பின் பொருளாதார வாய்ப்புகளுக்கு இருக்கும் வர்த்தகத்தின் முக்கியத்துவத்தைக் குறிக்கிறது.
  • ஆசியான் அமைப்பின் ஒற்றை விமானச்  சந்தை மற்றும் தடையற்ற வான்வெளிக் கொள்கைகளானவை அதன் போக்குவரத்து மற்றும் இணைப்புத் திறனை அதிகரித்துள்ளன.
  • ஆசியான் அமைப்பானது பிராந்திய நிலைத் தன்மைக்கு மிகவும் தேவையான விதிமுறைகளை உருவாக்குவதன் மூலமும், பகிரப்பட்ட சவால்களை எதிர்கொள்ள ஒரு நடுநிலைச் சூழலை வளர்ப்பதன் மூலமும் உறுப்பு நாடுகளின் வளர்ச்சிக்குப் பங்களித்துள்ளது.

35வது ஆசியான் உச்சி மாநாடு

  • தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கத்தின் (ஆசியான்) 35வது உச்சி மாநாடு தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடைபெற்றது.
  • இது ஆண்டிற்கு இரு முறை நடைபெறும் மாநாடு ஆகும்.
  • 35வது ஆசியான் உச்சி மாநாட்டின் கருப்பொருள் – “நிலைத் தன்மைக்கான ஒரு மேம்பட்ட கூட்டாண்மை” என்பதாகும்.
  • மாநாட்டின் தலைமை – தாய்லாந்து (2019), சிங்கப்பூர் (2018).

 

  • 10 உறுப்பு நாடுகளைத் தவிர, பத்து உரையாடல் கூட்டாளர் நாடுகளும் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்றன.

 

இந்தியா மற்றும் ஆசியான்

  • ஆசியான் அமைப்புடனான இந்தியாவின் உறவு இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் முக்கியத் தூணாகவும், கிழக்கு நோக்கிய செயல்பாட்டுக் கொள்கையின் அடித்தளமாகவும் உள்ளது.
  • ஜகார்த்தாவில் ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டிற்கான ஒரு சிறப்புத்  தூதரகத்தை இந்தியா ஏற்படுத்தியுள்ளது.
  • இந்தியா மற்றும் ஆசியான் ஏற்கனவே 25 வருட உரையாடல் கூட்டாண்மை, 15 ஆண்டுகள் உச்சி மாநாடு நிலைத் தொடர்பு மற்றும் ஆசியானுடன் 5 ஆண்டுகள் மூலோபாய கூட்டு ஆகியவற்றைக் கொண்டுள்ளன.
  • பொருளாதார ஒத்துழைப்பு:
    • ஆசியான் அமைப்பானது இந்தியாவின் நான்காவது பெரிய வர்த்தகப் பங்காளர் அமைப்பாகும்.
    • ஆசியானுடனான இந்தியாவின் வர்த்தகம் தோராயமாக இந்தியாவின் ஒட்டு மொத்த வர்த்தகத்தில் 10.6% ஆகிய உள்ளது.
    • ஆசியான் அமைப்புக்கு இந்தியாவின் ஏற்றுமதி நமது மொத்த ஏற்றுமதியில் 11.28% ஆகும்.
    • ஆசியான்-இந்தியா தடைகளற்ற வர்த்தகப் பகுதி மீதான ஒப்பந்தம்  நிறைவடைந்துள்ளது.
    • ஆசியான் இந்தியா - வர்த்தக மன்றமானது 2003 ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் ஆசியான் நாடுகளைச் சேர்ந்த முக்கியத் தனியார் வர்த்தக உரிமையாளர்களை ஒரே தளத்தில் கொண்டு வருவதற்காக அமைக்கப் பட்டது.
  • சமூக-கலாச்சார ஒத்துழைப்பு:
    • ஆசியான் நாடுகளைச் சேர்ந்த மாணவர்களை இந்தியாவுக்கு அழைப்பது, ஆசியான் தூதர்களுக்கான சிறப்புப் பயிற்சி பாடநெறி அளிப்பது, ஆசியான் நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் பரிமாற்றம் போன்ற ஆசியான் அமைப்புடனான மக்கள் தொடர்பை அதிகரிக்கும் திட்டங்கள் உள்ளன.
  • நிதிகள் தொடர்பான ஒத்துழைப்பு:
    • ஆசியான் நாடுகளுக்கு பின்வரும் நிதிகளில் இருந்து நிதி உதவி வழங்கப் பட்டுள்ளது:
      • ஆசியான் - இந்தியா ஒத்துழைப்பு நிதி
      • ஆசியான் - இந்தியா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி
      • ஆசியான் - இந்தியா பசுமை நிதி
  • டெல்லி பிரகடனம்:
    • ஆசியான் - இந்தியா மூலோபாயக் கூட்டுறவின் கீழ் ஒத்துழைப்பின் முக்கிய பகுதியாக கடல்சார் களத்தில் ஒத்துழைப்பை அடையாளம் காணுதல் இந்தப் பிரகடனத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.
  • ஆசியான் - இந்தியா மையம்:
    • இந்தியா மற்றும் ஆசியான் அமைப்பில் உள்ள நிறுவனங்கள் மற்றும் சிந்தனைக் குழுக்களுடன் கொள்கை ஆராய்ச்சி, எடுத்துரைத்தல் மற்றும் அமைப்புசார் நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த மையம் ஏற்படுத்தப் பட்டுள்ளது.

16வது இந்தியா ஆசியான் உச்சி மாநாடு

  • தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடத்தப்பட்ட 16வது ஆசியான் - இந்தியா உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்து கொண்டார்.
  • “இந்தியாவின் கிழக்கு நோக்கியக் கொள்கை மற்றும் அண்டை நாடுகள் முதலில்” ஆகிய கொள்கைகளுக்காக மியான்மரின் முக்கியத்துவத்தை இந்த மாநாட்டில் இந்தியப் பிரதமர் எடுத்துரைத்தார்.
  • CLMV நாடுகளுக்கான (CLMV - கம்போடியா, லாவோஸ், மியான்மர் மற்றும் வியட்நாம்) வணிக நிகழ்ச்சியை 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதியில் யாங்கோனில் நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.
  • இந்தியாவும் இந்தோனேசியாவும் இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்ட 70வது ஆண்டு நிறைவை அனுசரித்தன.
  • இந்தியப் பிரதமர் பாங்காக்கில் நடைபெற்ற 'சவாஸ்தீ பிரதமர் மோடி' என்ற நிகழ்ச்சியில் இந்தியச் சமூகத்தினரிடையே உரையாற்றினார்.
  • தாய் மொழியில், ‘சவாஸ்தீ’ என்ற சொல்லானது வாழ்த்துகளுக்கும் விடை பெறுவதற்கும் பயன்படுத்தப் படுகின்றது.
  • இந்த உச்சி மாநாட்டைத் தொடர்ந்து தாய்லாந்தில் நடைபெற்ற மற்ற உச்சி மாநாடுகள் பின்வருமாறு:
    • 35வது ஆசியான் உச்சி மாநாடு,
    • 14வது கிழக்கு ஆசிய உச்சி மாநாடு மற்றும்
    • 3வது பிராந்திய ஒட்டுமொத்தப் பொருளாதாரக் கூட்டமைப்பின்  கூட்டம்.

ó ó ó ó ó ó ó ó ó ó

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்