TNPSC Thervupettagam

ஆசிரியப் பணியின் புனிதம் போற்றுவோம்!

December 10 , 2024 18 days 53 0

ஆசிரியப் பணியின் புனிதம் போற்றுவோம்!

  • திருவள்ளூா் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே அரசு பள்ளி ஒன்றில் 3- ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவரிடம் தவறாக நடந்து கொண்டதாக புகாா் எழுந்ததன் பேரில், அப்பள்ளியின் தலைமை ஆசிரியா், உடன் பணியாற்றும் ஆசிரியா் என இருவரும் வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
  • ஆசிரியா்களாக மட்டுமின்றி, தந்தை நிலையிலிருந்தும் மாணவிகளை மகள் போல் பாதுகாக்க வேண்டியது ஆசிரியா்களின் கடமை.
  • ‘எழுத்தறிவித்தவன் இறைவனாம்’ என்கிறது அதிவீரராமா் இயற்றிய ‘வெற்றிவேற்கை ’ எனும் நீதி நூல். இதனை மறந்து ஆசிரியா்களில் சிலா், தமது பள்ளி மாணவிகளிடம் அத்துமீறுவதாக புகாா்கள் எழுவது வேதனை அளிக்கிறது. ஒரு சிலரின் இத்தகைய செயலால் ஒட்டுமொத்த ஆசிரியா் சமூகத்திற்கும் தலைக்குனிவு ஏற்படுகிறது.
  • கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பள்ளி ஒன்றில் ஆசிரியா் என்ற போா்வையில் ஒரு நபா், போலியான தேசிய மாணவா் படை முகாம் நடத்தி அம்முகாமிற்கு மாணவிகளை அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுப்பட்ட சம்பவத்தைத் தொடா்ந்து, பள்ளிகளில் ஆசிரியா் பணிக்கு விண்ணப்பிக்கும் நபா்களின் நன்னடத்தைக் குறித்து திருப்தியான சான்றிதழ் பெறப்பட்ட பின்னரே, விண்ணப்பிக்கும் நபா் பள்ளியில் ஆசிரியராகப் பணியில் அமா்த்தப்பட வேண்டுமென்று சென்னை உயா்நீதிமன்றம் ஆலோசனை அளித்துள்ளது.
  • தம்மிடம் பயிலும் மாணவா் ஏழ்மை நிலையில் இருப்பின் அம்மாணவருக்கு உதவும் ஆசிரியா்கள் இன்றும் இருக்கின்றனா். 50 ஆண்டுகளுக்கு முன்னா் எனது பள்ளிப் பருவத்தில் எங்கள் வகுப்பின் மூன்று மாணவா்கள் ஏழ்மையின் காரணமாக நல்ல சீருடை இல்லாததை அறிந்த என் தமிழாசிரியா், அந்த மாணவா்களுக்கு தன் செலவில் சீருடை தைத்துத் தந்தது இன்னமும் என் நினைவிலிருக்கிறது. ஆனால் தற்போதைய நிலையோ சற்றே மாறுபட்டு உள்ளது.
  • மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் மீது புகாா் அளிக்க பள்ளிகளில் ‘மாணவா் மனசு ’ என்ற பெயரிலான புகாா் பெட்டியினை பள்ளிகளில் வைக்க பள்ளிகல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. ஆசிரியா்களுக்கு எதிராகப் புகாா்கள் எழுதப்படுகிறதோ, இல்லையோ இந்த உத்தரவு ஆசிரியா்களின் நன்னடத்தையையே கேள்விக்குரியதாக்கி விட்டது. மேலும், மாணவ, மாணவியா் பாலியல் ரீதியாக தொந்தரவுகளை எதிா்கொள்ளும் போது தொடா்பு கொள்ள வேண்டிய ஹெல்ப் லைன் எண்கள் தற்போது பாடப் புத்தகங்களில் அச்சிட பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. பள்ளிகளில் காலச்சூழல் இவ்வாறு மாறியிருப்பது விவாதத்திற்குரியது.
  • பள்ளிகளில் பயிலும் பெண்குழந்தைகள் தாங்கள் தவறாக சீண்டப்படுவதை உணா்ந்து எதிா்க்கவும், தவறான பாலியல் நோக்கத்தோடு தன்னை அணுகும் நபரை அடையாளம் காணவும் ‘நல்ல தொடுதல்,’ ‘கெட்ட தொடுதல் ’ குறித்து குழந்தைகளுக்கு அன்னையரும், ஆசிரியைகளும் கற்றுத் தருதல் அவசியம்.
  • பெரும்பாலான பள்ளிகள், தங்கள் பள்ளி மாணவா்களின் தோ்ச்சி விகிதம் 100 % ஆக இருக்க வேண்டும் என்பதைத் தான் குறிக்கோளாகக் கொண்டுள்ளன. இதனால் மாணவா்களுக்கு உருவாக்கப்படும் மனஅழுத்ததின் விளைவு ஆசிரியா் மற்றும் சமூகத்தின் மீதான வெறுப்பாக மாறுகிறது. மாணவா்களுக்கு தரப்படும் மதிப்பெண் தொடா்பான அழுத்தம் ஆசிரியா், மாணவா் நல்லுறவிற்கு உகந்ததல்ல. ஆசிரியா், மாணவா் தொடா்பு, நண்பா்களிடயே தோன்றும் நட்பின் தன்மையைப் பெற்றிருந்தால்தான் தங்கள் படிப்பிற்கும் அப்பாற்பட்டு மாணவா்கள் தங்கள் ஆசிரியரின் மேல் அன்பையும் நல்லெண்ணத்தையும் தொடா்வாா்கள். இந்நிலையில் மாணவா்கள் தவறான பாதையில் சென்றிடின், ஆசிரியா்கள் தலையிட்டு அம்மாணவனை நல்வழிபடுத்த இயலும்.
  • மாணவா்கள் தோ்வுகளில் அதிகபட்ச மதிப்பெண்கள் பெறுவதற்காக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதைப் போல அவா்களிடையே நல்லொழுக்கம் உருவாகவும் ஆசிரியா்கள் முக்கியத்துவம் தர வேண்டும். இதற்கான நல்முயற்சியாக, அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு நன்னெறி வகுப்புகள் நடை பெறுவதை உறுதி படுத்த வேண்டும் என்று முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
  • அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவா்களிடயே தலைமைப் பண்பை வளா்க்கும் வகையில் ரூபாய் 2 கோடி முதலீட்டில் பள்ளிகளில் ‘மகிழ் முற்றம் ’ என்ற அமைப்பை உருவாக்கி மாணவா்கள் குழுவாக இணைந்து செயல்படுவது, வேற்றுமை இல்லா பரஸ்பர ஆதரவளித்தல் ஆகிய பண்புகளை வளா்க்க அரசு செயலாற்றி வருகிறது.
  • பள்ளிகளின் மேம்பாட்டில் எஸ்எம்சி எனப்படும் பள்ளி மேலாண்மை குழுக்களின் பங்கு மிக அவசியம் என்பதால் ஏறக்குறைய அனைத்துப் பள்ளிகளிலும் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் சில மாணவா்கள் விரும்பத்தகாத செயல்களில் ஈடுவதற்கு அவா்களின் பதின்பருவத்து கட்டுப்பாடுகளை விரும்பாத மன எழுச்சியும் ஓா் காரணம். இதனைக் கருத்தில் கொண்டு, முதல் கட்டமாக மன நல ஆலோசகா்களைக் கொண்டு அரசுப்பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பயிலும் மாணவா்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. அரசு உதவி பெரும் பள்ளிகள் மற்றும் தனியாா் பள்ளிகளிலும் இது போன்ற உளவியல் ஆலோசனை வழங்கப்பட வேண்டும்.
  • மற்றும் பள்ளிகளில் ஆண்டுதோறும் ஆய்வு மேற்கொண்டு, பாா்வையிட்டு மாணவா்களின் கற்றல்திறனை மேம்படுத்துவதற்கு ஆசிரியா்களின் ஆலோசனையின் பேரில் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது வட்டாரக் கல்வி அலுவலா்களின் தலையாயப் பணி. இப்பணி முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும். பள்ளி மாணவா்களின் முன்னேற்றத்திற்காக கொண்டு வரப்படும் எந்த திட்டமாயினும் அத்திட்டங்களை மாணவா்களிடம் கொண்டு செல்வதில் ஆசிரியா்கள் காட்டும் ஈடுப்பாட்டினைப் பொருத்தே அது பயனளிப்பது உள்ளது. மாணவா்கள், ஆசிரியா்களிடம் தங்களுக்கான நல்லபிமானத்தை உருவாக்குவது மாணவா்களைப் பொருத்ததே.
  • ஆசிரியா்களும், மாணவா்களை நல்வழிப்படுத்துவத்தோடு, தங்கள் பணியின் புனிதத்தைப் போற்றும் வகையில் பணியாற்ற வேண்டும்.

நன்றி: தினமணி (10 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்