TNPSC Thervupettagam

ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்

November 14 , 2022 635 days 347 0
  • இந்தக் கட்டுரையானது சட்டம், அரசியல், சமத்துவக் கோட்பாடு, சமூக நீதி ஆகியவற்றின் கூடுதுறை (சங்கமம்).
  • இன்றைய இந்தியாவில் ‘சமூக நீதி’ என்றால் என்ன, அது வருங்காலத்தில் மேலும் என்னென்ன விதமாக உருக்கொள்ளும் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. இந்தியச் சமூகம் எந்த அளவுக்கு அசமத்துவமானது, அதைச் சமப்படுத்த நாம் மேற்கொள்ள வேண்டிய நூற்றுக்கணக்கான பணிகள் என்ன என்பது குறித்து வலுவான கருத்துகள் உள்ளன. சமூக நீதியும் சமத்துவக் கொள்கையும் சந்திக்கும் இடங்களில், சில வேளைகளில் – ‘சமூக நீதி’ சேதப்படுகிறது, பிற சமயங்களில் ‘சமத்துவம்’ பலிகொடுக்கப்படுகிறது.
  • பெரும்பாலும் அரசியலர்களையே உறுப்பினர்களாகக் கொண்டுள்ள நாடாளுமன்றம் – சட்டமன்றம் போன்றவற்றால் சட்டங்கள் இயற்றப்படுகின்றன. அரசியலுக்குத் தொடர்பே இல்லாமல் விலக்கப்பட்டவர்களான நீதிபதிகள்தான், சட்டங்களைப் பரிசீலித்து உரிய வகையில் நியாயம் வழங்குகின்றனர். ஆட்சியாளர்கள்தான் நீதிபதிகளுக்கு அஞ்ச வேண்டும், நீதிபதிகள் ஆட்சியாளர்களுக்கு அஞ்சத் தேவை இல்லை. சட்டமும் அரசியலும் மோதும் இடங்களில் என்ன மாதிரியான முடிவுகள் கிடைக்கின்றன என்பதுதான், ஒரு நாட்டில் சட்டப்படியான ஆட்சி நடக்கிறதா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்கான உண்மையான அளவுகோல்.

கூடுதுறையில் நடந்தது என்ன?

  • சட்டம், அரசியல், சமூக நீதி, சமத்துவம் ஆகிய கோட்பாடுகள் சந்திக்கும் கூடுதுறையில் ஏற்படக்கூடிய இரண்டக நிலைக்கு (இரண்டும்கெட்டான்) நல்ல உதாரணம்தான் ‘ஜனஹித் அபியான்’ அமைப்பு தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் 2022 நவம்பர் 7இல் வழங்கிய தீர்ப்பு.
  • இந்திய அரசமைப்புச் சட்டத்துக்குக் கொண்டுவரப்பட்ட 103வது திருத்தத்துக்கு எதிரான மனுக்களை விசாரித்து அந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. ‘பொருளாதாரரீதியில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கான’ இடஒதுக்கீட்டு வழக்கு என்று இதைப் பொதுவில் அழைக்கின்றனர். அவர்களை நான் ‘ஏழைகள்’ என்றே அழைக்க விரும்புகின்றேன்.
  • இந்தத் தீர்ப்பு தொடர்பான என்னுடைய கருத்தைத் தெரிவிக்க வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறேன்; இந்த வழக்கின் முக்கிய அம்சங்களைத் தெரிவிக்கிறேன், இதில் தங்களுடைய கருத்தென்ன என்பதை வாசகர்களே தீர்மானித்துக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

அடிப்படையான அம்சங்கள்

  • கல்வி நிலையங்களிலும் அரசு வேலைவாய்ப்புகளிலும் பல வகையான இடஒதுக்கீடுகள் இன்றைக்கு அமலில் இருக்கின்றன. இவை அனைத்தும் ‘சமூகரீதியாகவும் கல்விரீதியாகவும் பின்தங்கிய நிலையில் உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கானவை’; அதாவது பட்டியல் இனத்தவர் (எஸ்சி), பழங்குடிகள் (எஸ்டி) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஒபிசி) ஆகியோருக்கானவை.
  • இவர்கள் எல்லாம் ஏன் சமூகரீதியாகவும் கல்விரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ளனர் என்பதற்கு வரலாற்றுரீதியிலும் மறுக்க முடியாத வகையிலும் பல காரணங்கள் இருக்கின்றன. இடஒதுக்கீடு என்பது பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் அளித்து முன்னேறச் செய்வதற்கு ‘உடன்பாடான நடவடிக்கை’ என்ற வகையில் சட்டப்பூர்வ அங்கீகாரமும், ஒப்புதலும் பெற்ற செயல்திட்டமாகும்.
  • இடஒதுக்கீடுகளால் எந்தப் பலனையும் பெறாத மக்களிடையே - குறிப்பாக பட்டியல் இனத்தவர், பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட்டவகுப்பினர் என்று எதிலுமே சேராதவர்களிடம் - இந்த இடஒதுக்கீட்டு நடவடிக்கைகள் ‘தாங்க முடியாத துயரத்தை’ தொடர்ந்து ஏற்படுத்துவதாகக் கருதப்படுகிறது. இந்தப் பிரிவைச் சேர்ந்த ஏழைகளும், கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் இடஒதுக்கீட்டுப் பலனை இப்போது பெறுவோர் முன்னர் அடைந்த துயரங்களைச் சந்திக்க வேண்டியிருப்பதாக ஒரு எண்ணம் வலுத்தது. இதற்காக ‘ஏழ்மையை மட்டும்’ அடிப்படையாகக் கொண்டு, புதிய ஒதுக்கீட்டைச் செய்ய முடியுமா? சிந்தனை அளவில் இது நல்லதுதான், ஆனால் இதற்குத் தடைக் கற்கள் பல உண்டு.
  • புதிய இடஒதுக்கீட்டுக்கு அடையாளம் கண்டுள்ள ஏழைகளை, சமூக – கல்விரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களாகக் கருத முடியுமா? ஏனென்றால், அவர்களுக்கு மட்டும்தான் இடஒதுக்கீடு வழங்கலாம் என்று அரசமைப்புச் சட்டம் அங்கீகாரம் அளித்துள்ளது.
  • பொருளாதார நீதி வழங்க, ஏழைகளுக்கு இடஒதுக்கீடு வழங்குவது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பை மீறும் செயலாகிவிடுமா?
  • நீதிபதிகள் வகுத்த சட்டப்படி, இடஒதுக்கீட்டின்படியான அனைத்து இடங்களும் அல்லது வேலைகளும் மொத்தமாக 50 சதவீதத்தைத் தாண்டக் கூடாது என்று உச்ச வரம்பு நிர்ணயித்த பிறகு, ஏழைகளுக்கான புதிய இடஒதுக்கீடு 10% அந்த உச்ச வரம்பை மீறுவதாகிவிடாதா?
  • அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பு என்பதும் இடஒதுக்கீட்டுக்கான மொத்த இடங்கள் தொடர்பான உச்ச வரம்பு 50% என்பதும், அரசமைப்புச் சட்டத்துக்கு விளக்கம் அளித்த நீதிபதிகளின் தீர்ப்பில் இடம்பெற்றவை. நீதிபதிகளால் வகுக்கப்பட்ட இந்தத் தடைக்கட்டுகளை மீறலாம்; தவறில்லை என்று நீதிபதிகள் நினைத்துவிட்டால், இனி எதிர்காலப் பாதை எப்படியிருக்கும் என்பது தெளிவாகிவிடுகிறது.
  • அமர்வில் இருந்த ஐந்து நீதிபதிகளுமே, ‘பொருளாதார நிலை அடிப்படையில் வழங்கப்படும் நீதி - சமூக நீதியைப் போன்றதே, பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பை மீறாது’ என்பதை ஏற்றுக்கொண்டுள்ளனர்; இந்த நடவடிக்கையில் இடஒதுக்கீட்டுக்கான மொத்த உச்ச வரம்பு 50% என்ற அளவைத் தாண்டுவது அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமல்ல என்பதையும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
  • பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதையும், 10% என்ற ஒதுக்கீட்டையும்கூட ‘செல்லும்’ என்று ஒருமித்துத் தீர்ப்பளித்துள்ளனர். விமர்சகர்கள்கூட இந்த இரு அம்சங்கள் தொடர்பாகப் பெரும்பாலும் வாயே திறக்காமல் உள்ளனர். எதில் ஐந்து நீதிபதிகளுக்கும் கருத்து வேறுபாடு என்றால் பொருளாதார அடிப்படையிலான 10% இடஒதுக்கீடு – பட்டியல் இனத்தவர், பழங்குடிகள், பிற்படுத்தப்பட்ட பிரிவினர் ஆகியோரை விலக்கலாமா என்பதில்தான்!

கருத்து வேறுபட்ட நீதிமன்றம்

  • ஊட்டச்சத்துக் குறைவு, இள வயதில் போதிய உயரம் – எடை இல்லாத வளர்ச்சி, மிகச் சிறு வயதிலேயே கல்வி கற்பதில் ஏற்படும் திறன் குறைவு ஆகியவற்றுக்கு வறுமைதான் முக்கிய காரணம். இந்தக் குறைபாடுகள் கல்வி – வேலைவாய்ப்பில் உரிய வாய்ப்புகளைப் பெற முடியாமல் தடுக்கின்றன அல்லது கட்டுப்படுத்துகின்றன. இப்போது எழும் கேள்வி எதுவென்றால், ஏழைகள் என்போர் யார்?
  • அரசமைப்புச் சட்டத்துக்குக் கொண்டுவரப்பட்ட 103வது திருத்தமானது, ஏழைகள் யார் என்பதை நிர்ணயிக்கும் பொறுப்பை அந்தந்த மாநில அரசுகளிடமே விட்டுவிட்டது. வறுமையை அளவிடுவதற்கான குடும்ப மொத்த ஊதியம், பொருளாதாரரீதியாக பின்னடைவைச் சந்தித்திருப்பதற்கான அடையாளங்கள் ஆகியவற்றை மாநில அரசுகள்தான் நிர்ணயிக்க வேண்டும் என்கிறது.
  • பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்கு எதிராக கருத்து தெரிவித்த நீதிபதி, 2010 ஜூலையில் வெளியான சைனோ ஆணையத்தின் தரவுகளைத் தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருக்கிறார். அதன்படி நாட்டில் 31.7 கோடிப் பேர் வறுமைக்கோட்டுக்கும் கீழே உள்ள நிலையில் வாழ்கின்றனர். அவர்களில் பட்டியல் இனத்தவர் 7.74 கோடிப்பேர், பழங்குடிகள் 4.25 கோடி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 13.86 கோடி. இம்மூன்று பிரிவினரும் சேர்ந்து 25.85 கோடி அல்லது 81.5% பேர் வறுமைக்கோட்டுக்கும் கீழே வாழ்கின்றனர். 2010க்குப் பிறகு இந்த அளவு கணிசமாக நிச்சயம் மாறியிருக்கும்.
  • இதில் முக்கியமான கேள்வி எதுவென்றால், புதிய இடஒதுக்கீட்டு முறையில் பட்டியல் இனத்தவர், பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைச் சேர்க்காமல் விலக்குவது, அரசமைப்புச் சட்டப்படி செல்லுபடியாகுமா என்பதுதான். இந்த அம்சத்தில்தான் நீதிபதிகள் கருத்து மாறுபட்டுள்ளனர். ‘செல்லும்’ என்று மூன்று பேரும் ‘செல்லாது’ என்று 2 பேரும் தீர்ப்பளித்துள்ளனர்.
  • வலுவான எதிர்க்கருத்தை நீதிபதி ரவீந்திர பட் எழுதியிருக்கிறார், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி லலித் அதே கருத்துதான் தன்னுடையதும் என்று பதிவுசெய்திருக்கிறார். “நம்முடைய அரசமைப்புச் சட்டம் யாரையும் தனித்து ஒதுக்கும் குரலில் பேசாது” என்று அழுத்தம் திருத்தமாக ரவீந்திர பட் எழுதியுள்ள தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் இனி வரும் காலங்களில் தொடர்ந்து எதிரொலித்துக்கொண்டே இருக்கும்.
  • இந்த மாறுபட்டக் கருத்துதான், அனைவரையும் அரவணைக்கும் நம்முடைய அரசமைப்புச் சட்டத்தின் உணர்வுக்கேற்ப மேல்முறையீடு செய்வதற்கு வழி செய்துள்ளது, எதிர்காலத்தில் அறிவார்த்தமான தீர்ப்பு வருவதற்கு வழியேற்படுத்தியிருக்கிறது, இனி வரும் நாளில் இந்தத் தவறைத் திருத்துவதற்கும் காரணமாக அமைந்திருக்கிறது என்பது என்னுடைய கருத்து (தலைமை நீதிபதி சார்லஸ் ஈவான்ஸ் ஹியூஸா கருத்தும்).
  • இந்தத் தீர்ப்பினால் சாத்தியமாகக்கூடிய முடிவுகளைப் பார்ப்போம்:  ஏழைகளுக்காக புதிய இடஒதுக்கீட்டை ஏற்படுத்துவது பொருளாதார நீதி வழங்கப்படுவதை விரைவுபடுத்தும். பட்டியல் இனத்தவர், பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் உள்ள ஏழைகளை இந்த ஒதுக்கீட்டிலிருந்து விலக்குவது (மொத்த ஏழைகளில் 81.5%) சமத்துவத்தை மறுப்பதாகவும், ஏழைகளிலும் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ளவர்களுக்கு நீதியையும் மறுப்பதாகும்.

நன்றி: அருஞ்சொல் (14 – 11 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்