TNPSC Thervupettagam

ஆசீவகத்தின் இழப்பு ஆய்வறிஞர் நெடுஞ்செழியன் மறைவு

November 6 , 2022 643 days 329 0
  • தமிழறிஞர்களின் தொடர்ச்சியான மறைவுகள் இட்டு நிரப்ப முடியாத  வெற்றிடங்களை ஏற்படுத்திச் செல்கின்றன - இந்த நாளில் இழக்க நேரிட்டவர் பேராசிரியர் க. நெடுஞ்செழியன். 
  • 1943 இல் திருச்சி மாவட்டம் அன்பில் அருகேயுள்ள படுகை என்ற கிராமத்தில்  கந்தசாமி - மீனாட்சி இணையருக்கு, ஒரு சகோதரர், மூன்று சகோதரிகளுடன் பிறந்தவர் மறைந்த பேராசிரியர் க. நெடுஞ்செழியன் (79). முழுக்க விவசாயப் பின்னணி கொண்ட குடும்பம். உள்ளூரிலேயே பள்ளிக் கல்வியை முடித்து, கும்பகோணம் அரசுக் கல்லூரி, சென்னை மாநிலக் கல்லூரிகளில் உயர்கல்வியை முடித்தார்.
  • 'மெய்க்கீர்த்திகள்' என்பது இவரது எம்பில் ஆய்வுத் தலைப்பு, 'இந்திய  இலக்கியத்தில் உலகாயதம்' என்பது இவரது முனைவர் பட்ட ஆய்வுத் தலைப்பு. மரப்பாச்சி என்ற கவிதை நூலை எழுதியிருக்கிறார்.
  • கும்பகோணம் அரசுக் கல்லூரி, முசிறி அரசுக் கலைக் கல்லூரி,   திருச்சி தந்தை பெரியார் ஈவெரா அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியர். தொடர்ந்து திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயராய்வு மையத் தலைவர். அதனைத் தொடர்ந்து தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இலக்கியத் துறைத் தலைவராக இருந்து ஓய்வுபெற்றார்.
  • கல்வித் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தாலும் தமிழிய ஆய்வாளராகவும், செயற்பாட்டாளராகவும் திகழ்ந்தவர் நெடுஞ்செழியன்.

வழக்கும் சிறையும்

  • தமிழ்த் தேசிய நோக்கில் தமிழ்நாட்டைத் தனியாகப் பிரிக்க சதி செய்தார்  என்ற பொய்க் குற்றச்சாட்டில் நெடுஞ்செழியன் கர்நாடக போலீஸாரால் கைது செய்யப்பட்டார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியில் இருந்த  காலத்திலேயே பேராசிரியர் நெடுஞ்செழியன் தலைமறைவாக இருந்ததாகவும், தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் கர்நாடக  காவல்துறை நீதிமன்றத்தில் கூறியது. பல லட்சங்களை இழந்து, ஓராண்டுக்கும் மேலான சிறைக் கொடுமையை அனுபவித்து, பிறகு குற்றமற்றவராக வெளியே வந்தார்.
  • மறைமலையடிகள், தேவநேயப் பாவாணருக்குப் பிறகு தமிழ்ச் சமூகத்தின் மிக முக்கியமான ஆய்வாளராக, அறிஞராக நெடுஞ்செழியன் பார்க்கப்படுகிறார். திருக்குறளில் ஆழ்ந்த தெளிந்த சிந்தனையுடன் நேர்த்தியான உரைகளை  மேடைகளில் வழங்கக் கூடியவர். தமிழர் மெய்யியல் ஆய்வு நிறுவனத்தைத் தொடங்கி பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுடன் இணைந்து கருத்தரங்குகளையும் நடத்தினார்.

வேளாண்மையை நேசித்தவர்

  • கல்லூரி, பல்கலைக்கழகப் பணியின்போதும் சொந்த ஊருக்குச் சென்று விவசாயம் செய்வதைத் தன்னுடைய இணைப் பணியாக மேற்கொண்டார். கடைசிக் காலத்திலும்கூட வேலூர் மாவட்டம் ஆம்பூர் பனங்காடு பகுதியில் விவசாய நிலம் வாங்கி, கொய்யா, மிளகாய், கம்பு போன்ற பயிர்களை விளைவித்தவர். இயற்கை வேளாண்மை குறித்துப் பயிலரங்குகளையும் நடத்தியிருக்கிறார்.

வாழ்நாள் ஆய்வாக 'ஆசீவகம்'

  • தமிழர் சமயங்கள் குறித்து பலரும் பல்வேறு ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்துள்ளனர். அதில் குறிப்பாக அய்யனார் வழிபாட்டையும்ஆசீவகத்தின் தோற்றுவாயாக - மற்கலி நாதரின் பிறப்பிடம் திருச்சிக்கு அருகேயுள்ள திருப்பட்டூர் கோவிலில் உள்ள குறிப்புகள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொண்டு நூல்களை எழுதியவர். தொடர்ந்து ஆசீவகம் குறித்தே உரைகளை நிகழ்த்தியவர். ஏறத்தாழ தன்னுடைய வாழ்நாள் ஆய்வாக ஆசீவகத்தை மேற்கொண்டவர் தமிழ்ச் சூழலில் நெடுஞ்செழியன் மட்டுமே.
  • 'ஆசீவகம் என்றும் தமிழர் அணுவியம்', 'ஆசீவகமும் அய்யனார் வழிபாடும்', 'தமிழர் தறுக்கவியல்' என்பன உள்ளிட்ட 52 நூல்களை எழுதியிருக்கிறார்.
  • வெறுமனே பேச்சு, எழுத்தோடு நிற்காமல், தமிழ்நாட்டின் இளம் ஆய்வாளர்கள் பலரையும் திருச்சிக்கு வரவழைத்து திருப்பட்டூர், சித்தன்னவாசல் போன்ற இடங்களுக்கு நேரில் அழைத்துச் சென்று, களப்பயணமாக அவற்றைக் கற்றுத் தந்தவர்.

காதல் வாழ்க்கை

  • பேராசிரியர் நெடுஞ்செழியனும் பேராசிரியர் சக்குபாயும் தமிழ்ப் பேராசிரியர்கள், பேச்சாளர்கள். ஒன்றாகத்தான் பொது நிகழ்வுகளுக்குப் போவார்கள். முன் - பின் மாறி மேடையில் பேசும்போது மற்றொருவர் கீழே அமர்ந்து கேட்பார். மேடையில், பெண்ணுரிமை குறித்து சளைக்காமல் வளைத்துக் கட்டி அடிப்பார் சக்குபாய். 'சரியாகத்தானே பேசுகிறார்' என கீழே அமர்ந்து வழிமொழிவார் நெடுஞ்செழியன்.
  • 1967-69-களில் சென்னை மாநிலக் கல்லூரியில் முதுகலைத் தமிழ் படித்தபோதுதான் நெடுஞ்செழியனுக்கும், சக்குபாய்க்கும் காதல் மலர்ந்தது. இருவரும் இருவேறு சமூகத்தினர்.
  • அப்போது, ஹிந்தி எதிர்ப்புப் போராட்டக் காலம். நெடுஞ்செழியனின் கனல் தெறிக்கும் கவிதைகளில் மயங்கியவர்தான் சக்குபாய். அதன்பிறகு, 1971 ஏப். 11 ஆம் தேதி இருவருக்கும் சுயமரியாதைத் திருமணம்.
  • 'காதல் அறிவது உயிரியற்கை' என்ற அகநானூற்றுப் பாடலையும்,  'குடிமக்களாகும் ஆளுமையும் உரிய வயதும் இருந்தால் யாவரும் திருமணம் செய்துகொள்ளலாம்' என்ற தொல்காப்பிய வழிகாட்டலையும் எப்போதும் சொல்வார் நெடுஞ்செழியன்.
  • 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி கர்நாடகச் சிறையில் இருந்தபோது தனது காதல் இணையர் சக்குபாய்க்கு எழுதிய கவிதை இது...
  • 'காணவும் பேசவும் காத்துக்கிடந்த காலங்கள் எத்தனை
  • நாணமும் வெட்கமும் பின்னிய கண்களில்
  • நாளும் வளர்ந்த கனவுகள் அத்தனை
  • ஆண்டுகள் முப்பத்து மூன்று நிறைந்தன
  • அன்போ சுரந்திடும் கொள்ளிட ஊற்றாம்
  • வேண்டிய அனைத்தும் அனைத்தும் துய்த்தனம்
  • விரும்பிய வாழ்க்கையை மகிழ்ந்து அமைத்தனம்
  • நல்ல தலைவர்கள் அன்பினைப் பெற்றோம்
  • நட்பின் சிறப்பினை நாளும் துய்த்தோம்
  • சொல்லி வருந்தக் குறையேதுமில்லை
  • தூயநற் பணியில் தொடர்ந்து நாம் வெல்வோம்'
  • உண்மைதான். அன்பினால் இணைந்து வாழ்ந்த இருவரின் வாழ்வை இந்தக் கவிதை பறைசாற்றுகிறது.
  • சமூக ஊடகங்களில் நெடுஞ்செழியனுக்கு அஞ்சலி செலுத்தும் பலரும்  குறிப்பிடுபவை இரண்டு:
  • ஒன்று - ஐயாவின் மாணவர் நான்.
  • இரண்டு - ஐயாவை இழந்துத் தவிக்கும் அம்மாவுக்கு எப்படி ஆறுதல் தேற்றுவோம் என்பனதான்.
  • தனது மகன் பண்ணன் சுமார் 18 வயதிருக்கும்போது, வீட்டை விட்டு வெளியேறி இலங்கை சென்று புலிகள் இயக்கத்தில் இணைந்துவிட்டதாகத் தெரிய வந்தபோதும், பின்னாளில் பண்ணன் துப்பாக்கிச் சண்டையின்போது உயிரிழந்ததாகக் கூறப்பட்டபோதும் ஏற்பட்ட துயர்களை, எதிர்கொள்ளவும்ஆற்றுப்படுத்தவும் சக்குபாய்க்கு உற்ற ஆறுதலாக நெடுஞ்செழியன் இருந்தார்.
  • இப்போது தனது உயிரணைய இணையர் இயற்கையால் தன்னை விட்டுப் பிரிந்த துயரை... மனமொத்த தமிழ்ச் சான்றோராய் சக்குபாய்  எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார் என்பது பெருந்துயரம்.

நன்றி: தினமணி (06 – 11 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்