TNPSC Thervupettagam

ஆட்டோ கட்டணம்: ஒப்பந்தத்தை மதித்தால் தீர்வு கிடைக்கும்!

December 16 , 2024 9 days 36 0

ஆட்டோ கட்டணம்: ஒப்பந்தத்தை மதித்தால் தீர்வு கிடைக்கும்!

  • சென்னை உள்ளிட்ட நகரங்களில் அத்தியாவசிய போக்குவரத்து வசதியாக இருந்து வரும் ஆட்டோக்களின் கட்டணம் குறித்த சர்ச்சை 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. அரசு சார்பில் அவ்வப்போது குறைந்தபட்ச கட்டணம் மற்றும் கி.மீட்டருக்கான கட்டணம் நிர்ணயிப்பதும், அதையும் மீறி பிரச்சினைகள் எழுவதும் தொடர்கதையாக உள்ளது. இன்றைய பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வை மனதில் கொண்டு புதிய கட்டணத்தை வரையறுக்க வேண்டும் என்ற கோரிக்கை ஆட்டோ ஓட்டுநர்கள் தரப்பில் இருந்து வருகிறது.
  • சென்னையில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. ஆண்டுக்கு 8 முதல் 10 ஆயிரம் புதிய ஆட்டோக்கள் இந்த எண்ணிக்கையுடன் இணைந்து வருகின்றன. மொத்த ஆட்டோக்களில் 70 சதவீதம் சொந்த ஆட்டோக்களாகவும், 30 சதவீதம் வாடகை ஆட்டோக்களாகவும் இயங்கி வருகின்றன. ஆட்டோ ஓட்டுநர்கள் நாள் ஒன்றுக்கு தலா 2,000 ரூபாய் சம்பாதிக்கும் நிலை இருந்தது.
  • சமீபகாலமாக இந்த தொகையைக்கூட சம்பாதிக்க முடியவில்லை என்று ஆட்டோ ஓட்டுநர்கள் புலம்பும் நிலையே உள்ளது. ஓலா, ஊபர், ரேபிடோ போன்ற நிறுவனங்கள் அவர்களது ‘ஆப்’ மூலம் கட்டணத்தை நிர்ணயிப்பதால், பொதுமக்கள் அந்த ஆட்டோக்களை வாடகைக்கு எடுக்கின்றனர். இந்நிறுவனங்கள் ஒரு கமிஷன் தொகையை எடுத்துக் கொண்டு மீதத்தை தருவதால் கட்டுபடியாகவில்லை என்ற புலம்பலும் ஆட்டோ ஓட்டுநர்கள் மத்தியில் நிலவுகிறது. இதுபோக, பைக் டாக்சி வருகையும் ஆட்டோ ஓட்டுநர்களின் வருவாயை மேலும் பதம் பார்த்துள்ளதாக தெரிவிக்கின்றனர். ஆட்டோ கட்டணத்தைவிட குறைந்த கட்டணத்தில் அவர்கள் சேவை அளிப்பதால், ஆட்டோவில் செல்லும் வாடிக்கையாளர்கள் பைக் டாக்சி மூலம் செல்வதையே விரும்புகின்றனர்.
  • இந்த இக்கட்டான நிலையில் இன்றைய விலைவாசிக்கு ஏற்ப ஆட்டோ கட்டணத்தை திருத்தியமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக வைக்கப்படுகிறது. 2014-ம் ஆண்டு கடைசியாக கட்டணம் திருத்தியமைக்கப்பட்டது. அதன்பிறகு குழு அமைக்கப்பட்டு, அக்குழு அடிப்படைக் கட்டணமாக 40 ரூபாயும், கூடுதல் கி.மீட்டருக்கு தலா 18 ரூபாயும் பரிந்துரை செய்துள்ளது. ஆனால், இந்த கட்டணமும் கட்டுபடியாகாது என்று ஆட்டோ ஓட்டுநர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுவதால், இதுகுறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
  • ஓலா, ஊபர் போன்று அரசே ஒரு ‘ஆப்’ உருவாக்கி, அதன்மூலம் நிலையான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கையும், அகமதாபாத்தில் இருப்பதைப்போல் ஜிபிஎஸ் மீட்டர் மூலம் தூரத்தை கணக்கிட்டு கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது. அவசரப் பணிக்காக செல்வோருக்கு ஆட்டோக்களின் முக்கியத்துவம் தெரியும். அந்த அளவுக்கு அத்தியாவசிய போக்குவரத்தாக ஆட்டோக்கள் அமைந்துள்ளன. ஆனால், அரசு எந்தக் கட்டணம் நிர்ணயித்தாலும் அதற்குமேல் கூடுதலாக கட்டணத்தை வசூலிக்க நினைக்கும்போது, அந்த நடைமுறை பொதுமக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தி, திட்டம் தோல்வியடைகிறது. புதிய கட்டணம் நிர்ணயிக்கும்போது, ஒப்பந்தத்தை மதித்து கடைபிடித்தால் மட்டுமே இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்!

நன்றி: இந்து தமிழ் திசை (16 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்