TNPSC Thervupettagam

ஆணுக்கு ‘ஆறுதல்’, பெண்ணுக்கு

January 14 , 2024 226 days 209 0
  • மன்னர்களின் வெற்றியைத் தொடர்ந்து தோற்றுப்போன நாட்டு மகளிரின் மாண்பு சீர்குலைக்கப்பட்ட வேதனை வரலாறு இந்தியாவுக்கு உண்டு. அயல்நாடுகளிலும் இதே நிலைதான். ஆனால், வெற்றிக் களிப்பில் மட்டும் பெண்கள் சூறையாடப்படவில்லை. போருக்கு முன் பெண்களின் உடல்களே போர்க்களமாக்கப்பட்டுச் சீரழிக்கப்பட்டன.
  • அது இரண்டாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலம். சீனத்தின் பூசான் நகர் ஜப்பானின் ஆளுகையில் இருந்தது. அங்குள்ள வீதியொன்றில் 14 வயது சிறுமி லீ ஓக் சான் விளையாடிக்கொண்டிருந்தாள். மாலை ஐந்து மணிவாக்கில் அவளைச் சிலர் வலுக்கட்டாயமாகக் கடத்திச்சென்றனர். நடப்பது என்ன என்று அந்தச் சிறுமிக்குப் புரியவில்லை. மீண்டும் பெற்றோரைப் பார்க்கவே முடியாத புதைகுழிக்குள் தள்ளப்பட்டுவிட்டோம் என்பதை அவள் அறிந்திருக்கவில்லை.

வேட்டைக்குப் பலியான பெண்கள்

  • கடத்தப்பட்ட லீ ஓக் சான், ‘ஆறுதல் நிலையம்ஒன்றில் அடைக்கப்பட்டாள். ஆறுதல் நிலையமென்றால் யாருக்கு ஆறுதல்? அதற்கும் ஒரு வரலாறு இருக்கிறது. போர்க்காலத்தில் படைவீரர்களின் உடல்தேவையைத் தணிப்பதைத்தான்ஆறுதல்என்கிற நாகரிகப் பூச்சுடன் அன்றைக்குச் சொன்னார்கள். ‘ஆறுதல் நிலையங்களின் முந்தைய வடிவமானராணுவப் பாலியல்தொழில் மையங்கள் 1900களின் தொடக்கத்திலேயே செயல்பட்டுவந்ததையும் வரலாற்று ஆய்வாளர்கள் பதிவுசெய்திருக்கிறார்கள். இந்த மையங்களில் அடைத்துவைக்கப்படும் பெண்களை ராணுவ வீரர்கள் தங்கள் விருப்பம்போல் கையாண்டுவந்தனர். உலகையே உலுக்கிய கொடுமைக்குப் பிறகே ஜப்பான் அரசாங்கம்ஆறுதல் மையங்கள் அமைக்கிற முடிவை எடுத்தது.
  • இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பான் ராணுவம் சீன தேசத்துக்குள் தன் எல்லையை விஸ்தரித்து முன்னேறியது. 1937 டிசம்பர் மாதம் சீனாவின் நான்ஜிங் பகுதியில் நுழைந்து ஆறு வார வேட்டையில் ஜப்பான் ராணுவம் ஈடுபட்டது. சொற்ப சீன வீரர்கள் மட்டுமே அங்கே இருக்கிறார்கள் என்பதை அறிந்தும் வீரர்களோடு பொதுமக்களையும் பெண்களையும் குழந்தைகளையும் பாகுபாடின்றிக் கொன்று குவித்தது. பெண் குழந்தைகளும் பெண்களும் வயது வேறுபாடின்றிப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டனர். கூட்டுப் பாலியல் வல்லுறவும் அரங்கேறியது. வல்லுறவுக்குப் பிறகு அவர்கள் சடலம் மிக மோசமாக சிதைக்கப்பட்டு வீதிகளில் வீசப்பட்டது. இப்படிச் சீரழிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட பெண்களின் எண்ணிக்கை மட்டுமே 20 ஆயிரத்திலிருந்து 80 ஆயிரம் வரை இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. தோராயக் கணக்கே இவ்வளவு என்றால் உறுதியான புள்ளிவிவரக் கணக்கு அச்சமூட்டுவதாக இருக்கிறது.

வீரர்களின் நலனுக்காக

  • ஜப்பான் படைவீரர்களின் இந்த மனிதத்தன்மை யற்ற செயல் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சர்வதேச அளவில் தங்கள் நாட்டைப் பற்றிய எண்ணம் தாழ்ந்துவிடக் கூடாது என்பதற்காக அப்போதைய ஜப்பான் அரசர் ஹிரோஹிதோ ஒரு முடிவெடுத்தார். தன் நாட்டுப் படைவீரர்கள் தங்கள் வெறியைத் தணித்துக்கொள்ள பொதுமக்களைச் சூறையாடுவதைவிட, நாமே அதற்குத் தனியாக வாய்ப்பை அமைத்துத் தரலாம் என்பதுதான் அந்த முடிவு. அதன்படி ஏற்கெனவே செயல்பட்டுவந்த ராணுவப் பாலியல் தொழில் மையங்களை மேலும் விரிவாக்கும்படிச் சொன்னார். அவற்றுக்குஆறுதல் மையங்கள் என்கிற பெயரைச் சூட்டியதோடு அவை ராணுவ வீரர்களின் நல்வாழ்வுக்கு என அறிவித்தார். காரணம், பொதுமக்கள் சிதைக்கப்பட்டால் அது பேசுபொருளாகும். இதற்கெனத் தனியாகப் பெண்களை அடைத்து வைத்தால் பெயரும் கெடாது, விஷயமும் வெளியே தெரியாது என்பது மன்னரின் கணக்கு. அது போன்றதொரு மையத்தில்தான் சிறுமி லீ ஓக் சான் அடைக்கப்பட்டாள். அங்கே லீயைப் போலவே ஆயிரக்கணக்கான சிறுமிகளும் பெண்களும் இருந்தனர்.
  • ஜப்பானின் ஆளுகைக்கு உள்பட்ட நாடுகளைச் சேர்ந்த பெண்கள், குறிப்பாகச் சிறுமிகள் இந்த மையங்களில் அடைக்கப்பட்டனர். ஜப்பான் ஆக்கிரமிப்பு சீனா, கொரியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளைச் சேர்ந்த பெண்களே பெரும்பாலும்ஆறுதல் மையங்களில் அடைக்கப்பட்டனர். இந்தப்பணிக்கு ஆள்கள் தேர்வும் நடைபெற்றது. ஜப்பான் ராணுவ வீரர்கள், தங்கள் நாட்டு ஆளுகைக்கு உள்பட்ட பகுதிகளுக்குச் சென்று அங்கிருக்கும் இளம்பெண்களைச் சுற்றிவளைத்து வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர். அந்தப் பெண்கள் அனைவரும் போர்முனையில் செவிலிப் பணியாற்றவோ வேறு ஏதாவது கடினமான வேலைக்காகவோதான் தாங்கள் அழைத்துச் செல்லப்படுவதாக நினைத்தார்கள். ஆனால், அது திரும்ப வழியே இல்லாத நரகம் எனத் தங்களுக்கு அப்போது தெரியாது என லீ ஓக் சான் தெரிவித்திருக்கிறார்.

மீள முடியாத நரகம்

  • தனக்கு நேர்ந்த கொடுமை குறித்துச் சொல்வதற்கு லீ ஓக் சானுக்கு 70 நெடும் ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன. அவர் மூன்று கொடூரமான ஆண்டுகளைஆறுதல் மையம்ஒன்றில் கழித்திருக்கிறார். உயிரைச் சிதைக்கிற வேதனையில் ஒரு நொடியைக் கடப்பதே பெரும் வாதையாக இருந்தபோது மூன்று ஆண்டுகள் என்பது அவருக்கு முடிவே இல்லாத யுகங்களாக இருந்ததாம். “மனிதர்களுக்கான இடமல்ல அது. ஆடு, மாடுகளை அறுக்கும் கசாப்புக்கடைகளைவிட மோசமான இடம் அது. ராணுவ வீரர்கள் எங்களை இடைவிடாமல் சீரழித்தனர். 11 முதல் 14 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளே அதிகமாக இருந்தோம். வீரர்கள் எங்களை அடித்தும் மிரட்டியும் கத்தியால் காயப்படுத்தியும் தங்கள் தேவையை நிறைவேற்றிக்கொண்டனர்என்று 2013இல் தன் 86ஆவது வயதில் ஜெர்மன் ஊடகம் ஒன்றில் லீ ஓக் சான் தெரிவித்திருக்கிறார்.
  • தொடர்ச்சியான வல்லுறவால் பலர் இறந்து விட்டனர். கருவுற்றும் பால்வினை நோய்களால் பாதிக்கப்பட்டும் பலர் இறந்தனர். தங்கள்மீது நிகழ்த்தப்பட்ட கொடுமையைத் தாங்கும் சக்தியின்றிப் பலர் தற்கொலை செய்துகொண்டனர். லீ ஓக் சானும் இறந்துவிடுவதுதான் ஒரே வழி என நினைத்தார். “ஆனால், அது அவ்வளவு எளிதாக இல்லை. எனவே, போர் முடியும் வரை உயிரோடு இருப்பது என முடிவெடுத்தேன்எனத் தன் நேர்காணலில் அவர் குறிப்பிட்டிருக்கிறார். அதன் பிறகு அவருக்கு என்ன ஆனது? அடுத்த வாரம் தெரிந்துகொள்வோம்.

நன்றி: இந்து தமிழ் திசை (14 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்