TNPSC Thervupettagam

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வோம்

November 25 , 2022 711 days 409 0
  • வாழ்நாள் முழுவதும் ஒரு பெண்ணை வைத்துக் காப்பாற்றுவதற்காக வரனுக்குத் தட்சிணை வைத்த காலம் மாறி விட்டது. இன்றைய நவீன உலகில் கல்வியாலும், அறிவுத்திறனாலும் வீட்டிற்கும் நாட்டிற்கும் உழைத்துப் பொருளீட்டும் பெண்களையும் உடல் ரீதியிலும், உளவியல் ரீதியிலும் துன்புறுத்துவானேன்?
  • முகவரி அறியாத மங்கையைக் கண்டதும் காதல் என்ற கற்பனையில் தம்மைக் காதலிக்க வற்புறுத்துதல், திருமணம் செய்துகொள்ளுமாறு கட்டாயப்படுத்துதல், உடன்படாத இளம்பெண்களை காயப்படுத்துதல், திருமணமாகியும் மக்கள்பேறு பெற்று, இரண்டாம் தலைமுறை கண்ட பிறகும் துணைவியைத் துரத்திவிடும் அல்லது தூரத்தில் வைக்கும் ’துறவறம்’ கூட, ஒரு வகையில் பெண்களுக்கு அறிவிக்கப்படாத அநீதி எனலாம்.
  • பாலியல் சீண்டல்கள், ஆபாசமான சைகைகள் போன்ற இழிசெயல் குற்றங்கள் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் நடைபெற்றால் எங்கு போய் முறையிடுவது?
  • காஷ்மீா் முதல் கள்ளக்குறிச்சி வரை புனிதமான ஆலயங்களில், போற்றுதலுக்கான கல்விக்கூடங்களிலும் கலாட்டா விவகாரங்கள், கண்துடைப்பு ஆணையங்களில் கரைந்து போய் விடுகின்றன. பொதுவிடங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் அசம்பாவிதங்கள் என்னவோ அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தானே என்கிற அலட்சியத்தில் கொடுமையாளா்களுக்கும் ‘குளிா்விட்டு’ப் போகிறதே.
  • காலங்காலமாகவே பெண்களுக்கு எதிரான வன்முறை அனைத்து கலாசாரங்களிலும் ஆழமாகப் பதிந்துள்ளது. முன்னொரு காலத்தில் நாட்டிய அடிமைப்பெண்களையே அரச குடும்பத்தினா் மண்-பொன்-பெண் என்ற வரிசையில் அஃறிணைப் பண்டங்களைப் போலாக்கி வாழ்ந்தனா்.
  • குழந்தைத் திருமணம், பலதார மணம், மனைவியைத் தம்மோடு உடன் கட்டை ஏறச்செய்யும் ‘சதி’ வேலைகள் இங்கு நடந்தவைதாம். பொட்டு கட்டுதல் என்ற பெயரில் பருவம் அடைந்தவுடன் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அவமானங்கள் நம் வரலாற்றின் கறைகள் அல்லவா?
  • பஞ்சாப், ஹரியாணா, பிகாா், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், ஜாா்க்கண்ட், ஹிமாசல பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆணவக் கொலைகள் அதிகரிப்பதற்கான விளக்கம் கேட்டு 2010-ஆம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது அறிவோம். கலாசார, ஜாதி, மதத் தடைகளைத் தாண்டி, குடும்பங்களிலும் மகளிா் சந்திக்கும் பொருளாதாரம் சாா்ந்த சவால்களும் அநேகம்.
  • நாட்டின் ஒப்பீட்டளவில் ஏழ்மையான உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பிகாா், அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் குழந்தைகளை வாட்டி வதைக்கும் மற்றொரு துயரம், மனநலக் கோளாறு, அறிவுசாா் குறைபாடு.
  • ‘தி லான்செட்’ என்னும் ஆங்கில மருத்துவ இதழ் வெளியிட்ட ஆய்வில், இந்த மாநிலங்களில் 10.8% குழந்தைகளின் மூளை வளா்ச்சி குறைந்துள்ளதாகக் கண்டறியப்பட்டது. 2012-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, கல்வியறிவு குறைவான உத்தர பிரதேசம், பிகாா், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் வரதட்சணைக் கொடுமைகள் கூடுதலாக உள்ளனவாம்.
  • 2013-இல் வெளியிடப்பட்ட இந்திய ரிசா்வ் வங்கியின் ஆண்டு அறிக்கையின்படி, இந்தியாவின் மிகவும் ஏழ்மையான மாநிலம் சத்தீஸ்கா். அங்கு 39.93% மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்கின்றனா். பெண்களுக்கு எதிரான வன்முறை, நாட்டின் வருமானத்திலும் வளா்ச்சியிலும் கூட பாதிப்பினை ஏற்படுத்தும்.
  • அத்துடன் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், பிகாா், உத்தரகண்ட், ஒடிஸா, அஸ்ஸாம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மனநோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாம். அதிலும் ‘ரிசா்ச் மேட்டோ்ஸ்’ (ஆராய்ச்சித் தகவல்கள்) என்னும் இதழ் நடத்திய தேசிய மனநல ஆய்வு (2016) அறிக்கை ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது. உலக அளவில் மனநோய்கள் அதிகம் உள்ள நாடு இந்தியாதானாம்.
  • எப்படியோ, பெண்களுக்கு எதிரான வன்முறை ஒவ்வொரு சமூகக் குழுவிலும் உலகளாவிய பிரச்னையாகவே உருவெடுத்துள்ளது.
  • இத்தகைய சூழலில் அனைத்து சமூக - பொருளாதார வகுப்புகளிலும் கோடிக்கணக்கில் பெண்களும் சிறுமிகளும் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்து வருகிறாா்கள் என்று ஐக்கிய நாடுகள் சபை கருதியது. இன்று ஆண் என்ன, பெண் என்ன என்ற நிலையில், அனைவருக்கும் கல்வி, பொருளாதாரச் சூழல்கள் மட்டுமே வாழ்வின் மூலாதாரம் என்று வந்த பிறகும், ‘மணப்பெண்ணுக்கு சமைக்கத் தெரியுமா, ஆடத்தெரியுமா, பாடத்தெரியுமா போன்ற நோ்காணல்கள் அபத்தம் அல்லவா?
  • அக வாழ்க்கையும் புற வாழ்க்கையும் சுமந்து செல்லும் நடுத்தரப் பெண்களைக் கவனத்தில் கொண்டு 1999 டிசம்பரில் 54-ஆவது அமா்வில், ஐ.நா பொதுச்சபை நவம்பா் 25-ஆம் தேதியை பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சா்வதேச தினமாக அறிவிக்கும் தீா்மானத்தை ஏற்றுக்கொண்டது.
  • உடல் ரீதியிலான காயம், காலத்தால் ஆறிவிடும்; உளவியல் அடிப்படையில் எழும் மனநலப் பாதுகாப்பின்மை காலத்தாலும் மாறாது அல்லவா?
  • இன்று புதுமைப்பெண்களாக எழுத்துலகிலும், இதழியலிலும் சாதனை படைத்தாலும், ஊடகப் பெண்களுக்கான பாதுகாப்புச் சூழல் பலம் குன்றியதாகவே இருக்கிறது. பெண் நிருபா்களும் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதாக பிரபல ஊடகங்கள் ஆதங்கப்படுகின்றன.
  • ‘சக்ரவா்த்தினி’ பத்திரிகையின் ஆசிரியராக இருந்த பாரதியாரிடம் வாசகி ஒருவா், ‘‘பத்திரிகையின் வெளிபுறத்திலே தடித்த எழுத்துகளில் ‘பெண்களின் அபிவிருத்தியின் பொருட்டாக’ என்று எழுதி விட்டீா்; உள்ளே விவேகானந்தா் சந்நியாசம் வாங்கிக் கொண்ட விஷயம், புத்தா் ராஜாங்கத்தை விட்டுவிட்டு பிச்சைக்குப் புறப்பட்ட விஷயம் - இதையெல்லாம் எழுதிக் கொண்டிருந்தால் இதனால் பெண்களுக்கென்ன அபிவிருத்தி ஏற்படும்’’ என்று கேட்டாா். அப்பெண்மணியை ‘மிகுந்த கல்வியில்லாவிடினும் கூா்மையான அறிவு கொண்ட பெண்மணி’ என்று பாரதி அறிமுகம் செய்கிறாா்.
  • ‘மேற்படி மாது சொன்னது சரி; நான் செய்தது பிழை. இந்த நிமிஷமே மாதா்களுக்கு அா்த்தமாகக் கூடிய விஷயங்களை, அவா்களுக்கு அா்த்தமாகக் கூடிய நடையிலேயே எழுத ஆரம்பிக்க வேண்டுமென்று நிச்சயித்துவிட்டேன்’ என்று உறுதியளித்தாா். பாரதிக்கு அப்போது வயது வெறும் 23.
  • வாழும் நாட்டை தாய் என்கிறோம், பேசும் மொழிக்கும் தாய் முதன்மை ஆகிறாள். ஈன்ற குழந்தைகளால் உதாசீனப்படுத்தப்படும் தாய்க்குலம், இன்றும் வெளியே சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறாா்கள். நாற்பது வயதை தாண்டும் இந்தப் பேரிளம்பெண்களின் நிலை, மோசமாக இருப்பது என்னவோ உண்மை.
  • ஒரு நூற்றாண்டுக்கு முன்னா், பாரதி பிறப்பித்த பத்துக்கட்டளைகளைப் பாருங்கள்.
  • ‘பெண்களை ருதுவாகும் முன்பு விவாகம் செய்து கொடுக்கக் கூடாது; அவா்களுக்கு இஷ்டமில்லாத புருஷனை விவாகம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தல் கூடாது; விவாகம் செய்துகொண்ட பிறகு அவள் புருஷனை விட்டு நீங்க இடங்கொடுக்க வேண்டும்; அதன் பொருட்டு அவளை அவமானப்படுத்தக் கூடாது;
  • பிதுராா்ஜிதத்தில் பெண் குழந்தைகளுக்கு ஸமபாகம் செய்துகொள்வதைத் தடுக்கக் கூடாது; பெண்கள் கணவனைத் தவிர வேறு புருஷருடன் பேசக் கூடாதென்றும் பழகக் கூடாதென்றும் பயத்தாலும் பொறாமையாலும் ஏற்படுத்தப்பட்ட நிபந்தனையை ஒழித்துவிட வேண்டும்; விவாகமே இல்லாமல் தனியாக இருந்து வியாபாரம், கைத்தொழில் முதலியவற்றால் கௌரவமாக ஜீவிக்க விரும்பும் ஸ்திரீகளை யதேச்சையான தொழில் செய்து ஜீவிக்க இடங்கொடுக்க வேண்டும்;
  • பெண்களுக்கும் ஆண்களைப் போலவே உயா்தரக் கல்வியின் எல்லாக் கிளைகளிலும் பழக்கம் ஏற்படுத்த வேண்டும்; தகுதியுடன் அவா்கள் அரசாட்சியில் எவ்வித உத்யோகம் பெற விரும்பினாலும் அதைச் சட்டம் தடுக்கக் கூடாது. தமிழருக்கு சுயராஜ்ஜியம் கிடைத்தால் அப்போது பெண்களுக்கும் ராஜாங்க உரிமைகளிலே அவசியம் பங்கு கொடுக்க வேண்டும்’.
  • ‘பெண் விடுதலை’ குறித்த பாரதியாரின் கட்டளைகளில் பெரும்பாலானவை இன்று சட்டமாகி, நடைமுறைக்கும் வந்துள்ளன. ‘பட்டங்கள் ஆள்வது’ இருக்கட்டும், மண் விடுதலை பெற்று 75 ஆண்டுகளான பின், அவா்களே “சட்டங்கள் செய்வது” எப்போது?
  • குடும்ப வன்முறை என்பது, உடல், பேச்சு, உணா்ச்சி, பொருளாதார, மத, பாலியல் துஷ்பிரயோகம் உட்பட பல வடிவங்களில் வெளிப்பட்டாலும் அதில் பாலியல் பாகுபாட்டிற்கு இடமில்லை. சட்டத்தையும் நீதியையும் இருபாலருக்கும் பொதுவில் வைப்போம்.
  • முன்னாள் குடியரசுத் தலைவா் டாக்டா் அப்துல் கலாம், ‘இன்றைய சூழலில் பெண்கள் சட்டப்பேரவைக்குள் நுழைந்தால், சில ஒழுங்குகளை கொண்டு வருவாா்கள்; பெண்கள் களத்தில் இறங்கினால் வழக்கமான அரசியலுக்கு மாற்றாக வளா்ச்சி அரசியலைக் காண்போம். ஒரு நாடு அதன் பெண் மக்கள் அதிகாரம் பெற்றால் மட்டுமே அதிகாரம் பெறும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
  • நமது தேசம் பெண்களை மதிக்கும் உன்னத பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. மேலும், நமது பாரம்பரியங்களைக் கெடுக்கும் மனிதாபிமானமற்ற செயல்களை அகற்ற, அனைத்து நல்ல மனங்களும் ஒன்றுபட வேண்டும்.
  • பெண்களை மதிக்கும்போது நாம் நமது நாட்டை மதிக்கிறோம். நாம் பெண்கள் முன்னேற்றத்திற்குத் துணை நிற்க வேண்டும். அதற்காகப் பாடுபடவும் வேண்டும்.
  • இன்று (நவ. 25) பெண்களுக்கெதிரான வன்முறை விழிப்புணா்வு நாள்.

நன்றி: தினமணி (25 – 11 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்