- எங்கெங்கும் ஆண்கள் இறந்துகொண்டிருக்கிறார்கள். ஏழை, பணக்காரர், தொழிலாளர்கள், அலுவலகத்தில் பணிபுரிபவர்கள், அனைத்து இனங்களையும் சேர்ந்தவர்கள், அனைத்து மதங்கள், இனக்குழுக்கள் என்று அனைத்தையும் சேர்ந்த ஆண்கள் இறந்துகொண்டிருக்கிறார்கள். பாலினம் மட்டுமல்லாமல், இறந்துகொண்டிருக்கும் இந்த ஆண்களுக்குப் பொதுவான பண்பு ஒன்று உண்டு: அவர்கள் யாரும் இளைஞர்கள் அல்ல. கோடிக்கணக்கான ஆண்கள் அவர்களின் எதிர்பாலினத்தவர்கள் இருக்கும்போது இறந்துகொண்டிருக்கிறார்கள், அதை யாரும் கண்டுகொள்வதுபோல் இல்லையே, எப்படி?
- அமெரிக்கா முழுவதும், ஒட்டுமொத்த மக்கள்தொகையில் ஆண்களின் சதவீதம் 49. ஆனால், 65 வயதைக் கடந்தவர்களில் பெண்கள் 57%. அந்த வயதில் பிழைத்திருப்போர் எண்ணிக்கை பாலினம் சார்ந்து பெரிதும் வேறுபடுகிறது. 80 வயதுக்கும் மேல் உயிரோடு இருக்கும் பெண்களின் எண்ணிக்கையில் ஆண்கள் பாதியளவுக்குத்தான் இருக்கிறார்கள். அமெரிக்காவில் 100 வயதைக் கடந்தவர்களில் 81% பெண்கள்தான். ஐநாவைப் பொறுத்தவரை அதன் கண்காணிப்பில் உள்ள 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒருசிலவற்றைத் தவிர, பெரும்பாலானவற்றில் ஆண்களைவிடப் பெண்கள்தான் அதிக காலம் உயிர் வாழ்கிறார்கள்.
ஆண்களை எது சீக்கிரமே கொல்கிறது?
- பாலினங்களுக்கு இடையிலான இந்த வேறுபாடுகள் சில சுவாரசியமான கேள்விகளை எழுப்புகின்றன: ஏன், எதனால் வயதான ஆண்கள் இறக்கின்றனர்? உயிரியலானது உயிரோடு இருப்பதற்கான வாய்ப்பைப் பெண்களுக்கு அதிகம் வழங்குகிறதா? சமூகரீதியாக, கலாச்சாரரீதியாக, மருத்துவரீதியாக ஆண்களைக் கொல்லும் ஏதோ ஒன்றைச் செய்துகொண்டிருக்கிறோமா?
- மனித உயிரியலானது பெண்கள் அதிக காலம் வாழ்வதற்கு உதவுவதைப் போலவே தெரிகிறது. மற்ற உயிரினங்களில் அப்படி இல்லை என்பதால், இந்தத் தன்மையானது மனித குலத்துக்கே உரித்தானது என்ற முடிவுக்கு அறிவியலாளர்கள் வந்திருக்கிறார்கள். அதேநேரத்தில், ஆண்கள் குறைவான ஆண்டுகாலம் வாழ்வது என்பது, எல்லாக் காலத்துக்கும் எல்லா இடத்துக்கும் உரித்தானது இல்லை. ஆகவே, உயிரியல்ரீதியிலான பாலினம் என்ற வகைப்பாடானது ஆயுட்காலத்தைத் தீர்மானிக்கும் ஒரே சக்தி இல்லை: இங்குதான் கலாச்சாரம் உயிரியலுடன் உறவாடுகிறது.
- 1800-களின் நடுப்பகுதியிலிருந்து மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களில் பிரசவத்தின்போது நிகழும் மரணங்கள் குறைக்கப்பட்டிருப்பதும் பாலினம் சார்ந்த நீண்ட ஆயுளின் இடைவெளியைப் பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையே அதிகப்படுத்தியிருக்கும் காரணிகளில் ஒன்று. ஆனால், அதுவே பிரதானமான காரணம் அல்ல. 20-ம் நூற்றாண்டின் முதல் சில 10 ஆண்டுகளில் தொற்றுநோய்கள் பெருமளவு குறைந்திருப்பதும் ஒரு முக்கியமான காரணம். ஏனெனில், தொற்றுநோய்கள் அதிக அளவு இளம் பெண்களுக்குத்தான் முன்பு பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன.
- பெண்களைவிட ஆண்கள் விரைவில் இறப்பவர்களாக இருந்தாலும், வயது ஆக ஆகப் பெண்களைவிட ஆண்களே அதிக நலமுடன் இருப்பதும் ஒரு முரணே. வயதான காலத்தில் பெண்களுக்குத்தான் அதிகம் நாள்பட்ட நோய்கள், உடல் முடியாத தன்மை, அல்சைமர் நோய் போன்றவை ஏற்படுகின்றன. ஆண்களைவிட அவர்களுக்கே மருத்துவப் பராமரிப்பு அதிகம் தேவைப்படுகிறது.
எக்ஸ் இனக்கீற்றுகள்
- ஹார்மோன்களில் உள்ள பாலின வேறுபாடுகள், நோயெதிர்ப்பு சக்தி, மரபணுக் கூறுகள் போன்றவை ஆரோக்கியம் குறைந்த பெண்கள் நீண்ட காலம் ஏன் உயிர்வாழ்கிறார்கள் என்பதற்கும், ஆரோக்கியமான ஆண்கள் ஏன் சீக்கிரம் இறந்துபோகிறார்கள் என்பதற்குமான விளக்கங்களாக உள்ளன. ஆண்களில் காணப்படும் டெஸ்டோஸ்டிரோன் அவர்கள் அதிகம் ஆபத்தான காரியங்களில் ஈடுபடுவதோடும் வன்முறையில் ஈடுபடுவதோடும் தொடர்புபடுத்தப்படுகிறது.
- ஆனால், அது உடல்ரீதியிலான தீங்குகளையும் ஏற்படுத்துகிறது. அதனால்தான், விதைநீக்கம் செய்யப்பட்ட ஆண்கள் அப்படிச் செய்யப்படாத ஆண்களைவிட பத்தாண்டுகளோ இருபதாண்டுகளோ அதிகமாக உயிர்வாழ்கிறார்கள். இதற்கு மாறுபட்ட விதத்தில், பெண்களில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் கொழுப்பை நீக்குகிறது, பணக்கார நாடுகளில் அதிகம் பேரைக் கொல்லும் இதய நோய்க்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது.
- டெஸ்டோஸ்டிரோனில் இல்லாத அழற்சித் தடுப்புக் கூறுகளையும் ஆக்ஸிஜனேற்றத் தடுப்புக் கூறுகளையும் ஈஸ்ட்ரோஜன் கொண்டிருப்பதால், உடலின் நோய் எதிர்ப்புசக்தியை அது அதிகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உடல் சார்ந்த அழுத்தங்களுக்கும் அது எதிர்வினையாற்றுகிறது.
- மேலும், பெண்கள் இரண்டு எக்ஸ் இனக்கீற்றுகளை (குரோமோசோம்) கொண்டிருக்கிறார்கள். ஆகவே, மரபணுவில் ஏற்படும் தீய மாற்றங்களுக்கு அவர்களால் எளிதில் ஈடுகட்டிக்கொள்ள முடியும். ஆனால், ஆண்களுக்கு ஒரு எக்ஸ் இனக்கீற்றுதான் இருப்பதால், ஒய் இனக்கீற்றோடு தொடர்புடைய பாதிப்புகளை அனுபவிக்கிறார்கள்.
வயதானவர்களைப் புறக்கணிக்கும் மருத்துவம்
- எனினும், ஆண்கள் எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாத தன்மை, அதிக அளவில் புகைபிடித்தல், தங்கள் குடும்பத்தைக் காத்து அவர்களின் வாழ்க்கைப்பாட்டுக்கு வழிவகை செய்வதால் ஏற்படும் மன அழுத்தம், ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது போன்றவற்றையே ஆண்களின் குறைவான ஆயுட்காலத்துக்குக் காரணமாக மக்கள் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.
சமூகப் பொருளாதார அந்தஸ்து, அலுவல் பணிகள், நடத்தைகள் எல்லாமே உடல்நலத்தில் குறிப்பிட்ட விளைவுகளை ஏற்படுத்துகின்றன. அதேபோல்தான் மருத்துவக் கலாச்சாரமும். நவீன மருத்துவத்தின் முதல் நூற்றாண்டில் வயதானவர்கள் மீதோ மூப்பின் மீதோ மருத்துவர்கள் கவனம் செலுத்தவில்லை.
- அதிர்ஷ்டவசமாக, உயிரியலும் கலாச்சாரமும் இரண்டு பாலினத்துக்கும் (எல்லாப் பாலினங்களுக்கும்தான்) நல்ல வழியைக் காட்டுகின்றன. ஆண், பெண் இருவரின் மரபணுக் கூறுகள், ஹார்மோன்கள் மற்றும் மூப்புக்குக் காரணமான பிற காரணிகள் போன்றவற்றின் தீமைகளையும் நன்மைகளையும் அறிவியலாளர்கள் ஆராய வேண்டும். தங்கள் ஒய் இனக்கீற்றும் டெஸ்டோஸ்டிரோனும் நீக்கப்படுவதைப் பெரும்பாலான ஆண்கள் விரும்ப மாட்டார்கள் என்பதால், முன்கூட்டியே நிகழும் மரணத்தைத் தவிர்ப்பதற்கான உயிரியல், சமூகவியல், நடத்தையியல் சார்ந்த உத்திகளை அறிவியலாளர்கள் கண்டறிய வேண்டும்.
- அமெரிக்காவில் உடல்நலத் துறையைவிட மருத்துவப் பராமரிப்புக்கே அதிக கவனம் கொடுக்கப்படுகிறது. இதனால், ஐநாவின் உடல்நலத் தரப்பட்டியலில் உலகிலேயே அமெரிக்காவுக்கு 37-வது இடம்தான் கிடைத்திருக்கிறது. ஆரோக்கியமான மக்களைக் கொண்ட நாடுகள் மூன்று விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும்: ஆரம்ப சுகாதாரம், தடுப்பு, சமூகப் பராமரிப்பு. ஆனால், அமெரிக்கா போன்ற பல நாடுகளில் இதைப் பின்பற்றுவதில்லை.
- மருத்துவப் பராமரிப்பு, உடல்நலப் பராமரிப்பு என்று இரண்டு வகைகள் உண்டு. அமெரிக்காவில் இருப்பது மருத்துவப் பராமரிப்பு. இதனால், மருத்துவச் செலவுக்குத்தான் பெரிய அளவில் பணம் சென்றுசேரும்; நோயாளிக்குக் கடைசியில் கையில் பணம் இருக்காது. மருத்துவத்தையும் சந்தைப்படுத்தியதன் விளைவு இது. ஆகவே, உடல்நலப் பராமரிப்பில்தான் ஒரு நாடு அக்கறை செலுத்த வேண்டும்.
உடல்நலப் பராமரிப்புக் கட்டமைப்பு
- வேறுபட்ட விதத்தில் இயங்கக்கூடியது உடல் நலப் பராமரிப்பு. ஒருவருக்கு இளம் வயதில் அவருடைய ஆரம்ப சுகாதார மருத்துவர் அவருடைய உடல்ரீதியான செயல்பாடுகள், உணவு முறை, நோய்கள், எடை, எந்தெந்தப் பொருட்களை அவர் நுகர்கிறார், மரபணுவியல், ஆபத்தான வேலையில் இருத்தல், நடத்தைகள், வயது போன்றவற்றை அடிப்படையாக வைத்து ஆய்வுசெய்வார். ஒருவரின் வயதான காலத்திலோ அவரின் ஆரம்ப சுகாதார மூப்பு மருத்துவர் கூடுதலாக மேலும் சிலவற்றைச் சேர்த்துக் கொள்வார்:
- கையால் பிடிக்கும் பிடிக்கு எவ்வளவு வலு இருக்கிறது, நடை வேகம், காதின் கேட்புத் திறன், மூப்பைக் குறித்த நடத்தை, சமூகத்தோடு தன்னைப் பிணைத்துக்கொள்ளுதல் போன்றவற்றின் அடிப்படையிலும் அவரை ஆய்வுசெய்வார்.
- வயதான ஆண்களும் (பெண்களும்தான்) உடல்நலப் பராமரிப்புக் கட்டமைப்பை நம்பியிராமல், சில காரியங்களைச் செய்ய வேண்டும். தினசரி உடற்பயிற்சி, தசையை வலுவாக்கவும் நடக்கும்போது உடலுக்குச் சமநிலை கொடுப்பதற்கும் கொஞ்சம் ஏரோபிக் பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். நிறைய பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் உண்ண வேண்டும். பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளைக் கூடுமானவரை தவிர்க்க வேண்டும். காதின் கேட்புத் திறன் குறைவதுபோல் இருந்தால் மூளையின் செயல்பாட்டையும் சமூக வாழ்க்கையையும் காப்பாற்றிக்கொள்ள உடனே காதொலிக் கருவியைப் பொருத்திக்கொள்ள வேண்டும்.
- எதிலாவது ஈடுபட்டுக்கொண்டிருக்க வேண்டும். ஓய்வு மனப்பான்மைக்கு வந்துவிடக் கூடாது. சம்பளத்துக்கோ சம்பளம் இல்லாமலோ புதிய வேலை ஒன்றில் ஈடுபட வேண்டும். அர்த்தமுள்ள உறவுகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஆகவே, உங்கள் எதிர்கால மூப்புக்கு இப்போதே தயாராகிக்கொள்ளுங்கள். அப்போதுதான் அது உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும்.
- முதிய வயதில் வாழ்க்கை என்பது வித்தியாசமானதாக இருக்கும். ஆனால், மேம்பட்ட உடல்நலத்துக்கும் வாழ்க்கைநலத்துக்கும் தேவையான அடிப்படை முயற்சிகள் சிலவற்றை எடுத்தால், இளம் பருவத்தில் உள்ளதைப் போல் மட்டுமல்ல, அதைவிடச் சிறப்பானதாக முதிய வயது அமையும்.
நன்றி: இந்து தமிழ் திசை (13-12-2019)