ஆண்டனி வான் லீவன்ஹோக்
- நுண்ணுயிரியலின் தந்தை. நுண்ணோக்கிகளை உருவாக்கியவர். பாக்டீரியா, புரோட்டோசோவாவை முதலில் கவனித்தவர் போன்ற சாதனைகளுக்கு உரிய ஆண்டனி வான் லீவன்ஹோக் விஞ்ஞானி அல்ல, வியாபாரி.
- லீவன்ஹோக் நெதர்லாந்தில் டெல்ஃப்ட் நகரில் 1632 அக்டோபர் 24 அன்று பிறந்தார். தந்தையின் மரணம், குடும்பப் பொறுப்பு காரணமாக லீவன்ஹோக்கால் அதிகம் படிக்க முடியவில்லை. ஆம்ஸ்டர்டாமில் ஒரு துணி வணிகரிடம் சேர்ந்தார். தொழில் நுணுக்கங்களில் பயிற்சி பெற்றார். அங்குதான் முதன்முதலாக நூலின் தரத்தைப் பிரித்து அறிய பூதக்கண்ணாடிகளைப் பார்த்தார்.
- 20 வயதில் லீவன்ஹோக் சுயமாக ஜவுளி தொழில் தொடங்கினார் . அதில் வெற்றியும் பெற்றார். 1660இல் ஊர்த்தலைவருக்குக் காரியஸ்தராக நியமிக்கப்பட்டார். 1669இல் நில அளவையர் ஆனார். தொழில், வேலை இரண்டிலும் நல்ல வருமானம் கிடைத்தது. அதன் பிறகே லீவன்ஹோக் நுண்ணோக்கிகளின் மீது கவனத்தைத் திருப்பினார். பலவிதமான நுண்ணோக்கிகளை உருவாக்கிப் பார்த்தார்.
- அந்த நுண்ணோக்கி மூலம் மழைநீர், குளத்து நீர், கிணற்று நீர், உமிழ்நீர், போன்றவற்றை உற்றுநோக்கினார். அவற்றில் நுண்ணுயிர்கள் இருப்பதைக் கண்டறிந்தார் லீவன்ஹோக். அப்போது நுண்ணுயிரி என்கிற வார்த்தை புழக்கத்தில் இல்லை. எனவே அவற்றிற்கு அனிமல்க்யூல்ஸ் (சிறிய விலங்கு) என்று பெயரிட்டார். அவற்றின் அளவைக் கணக்கிட்டுக் குறித்துக்கொண்டார். இது பற்றி 1673இல் ராயல் கழகத்திற்கு எழுதினார். அதன் பிறகே நுண்ணுயிரியலின் தந்தை ஆனார் ஆண்டனி வான் லீவன்ஹோக்.
- விஞ்ஞானிகளைப் போல் முறையான அறிவியல் ஆராய்ச்சிகளைச் செய்யவில்லை லீவன்ஹோக். ஆனால், அவருடைய அனுமானங்கள் அனைத்தும் சரியாக இருந்தன. அதனால்தான் பாக்டீரியாவையும் புரோட்டோசோவாவையும் கண்டறிந்தார்.
- 1683இல் பாக்டீரியாக்கள் மூன்று வடிவங்களில் இருப்பதாக ராயல் கழகத்திற்குத் தெரியப்படுத்தினார். சிறு வயதிலேயே வரையும் திறனைப் பெற்றிருந்தார். எனவே தான் கண்டறிந்த எல்லாவற்றையும் எழுத்தோடு படங்களாகவும் வரைந்து அனுப்பி வைத்தார் லீவன்ஹோக்.
- தேனீ, பேன், பூஞ்சை போன்றவற்றைப் பற்றியும் ராயல் கழகத்திற்கு எழுதினார். மரம் செடிகொடிகளின் கட்டமைப்பைப் பார்த்தார். தாவர உடற்கூறியலுக்கு அடித்தளம் அமைத்தார் லீவன்ஹூக்.
- எறும்புகள், மீன்களின் முட்டைகள் குறித்து ஆராய்ச்சி செய்தார். ஈஸ்ட்கள் நுண்ணிய கோளத் துகள்களாக இருப்பதைக் கவனித்தார். விலங்குகளின் ரத்த அணுக்கள், பறவைகள், பாலூட்டிகளின் விந்தணுக்களை விவரித்தார். ரத்தச் சிவப்பணுக்களால் செல் கோட்பாட்டின் வரலாற்றிலும் பங்கேற்றார் லீவன்ஹோக்.
- தன் வாழ்நாள் வரை ராயல் கழகத்தின் உறுப்பினராக இருந்தார். லீவன்ஹோக்கின் படைப்புகள் இரண்டு தொகுப்புகளாக டச்சு மொழியிலும் லத்தீன் மொழியிலும் வெளிவந்துள்ளன. 500க்கும் மேற்பட்ட நுண்ணோக்கிகளைப் பயன்படுத்தி ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். அவை ஒரு பொருளை 270 மடங்குக்கு மேல் பெரிதாகக் காட்டும் திறன் பெற்றவையாக இருந்தன.
- உதவியாளர்கள் என்று யாரையும் வைத்துக்கொள்ளாததால் லீவன்ஹோக்கின் நுண்ணோக்கி ரகசியம் நுண்ணுயிரிகளைப் போலவே பொதுப் பார்வைக்கு தெரியாமல் போனது. 90 வயது வரை ஆராய்ச்சிகளுக்காக வாழ்ந்த லீவன்ஹோக், 1723 ஆகஸ்ட் 26 அன்று மறைந்தார்.
நன்றி: இந்து தமிழ் திசை (11 – 02 – 2025)