- வெட்ட வெட்ட வளரும் விஷ மரங்களைப் போல வளர்ந்து கிளை பரப்பிக் கொண்டிருக்கின்றன ஆன்லைன் சூதாட்ட இணையதளங்கள்!
- இந்தியாவில் ஆன்லைன் சூதாட்ட இணையதளங்களும் செயலிகளும் கடந்த சில ஆண்டுகளாக பல மடங்கு அதிகரித்துள்ளன. இந்த சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட இணையதளங்களும், செயலிகளும் ஏழைகள், நடுத்தர வர்க்க மக்கள் உள்பட பலரைப் பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும் பெரிய அளவில் பாதிக்கச் செய்கின்றன. எங்கெங்கிருந்தோ இந்த ஆன்லைன் சூதாட்ட இணையதளங்களை நடத்தும் நிறுவனங்கள் இந்தியாவிலிருந்து ஆண்டொன்றுக்கு ரூ. 8.20 லட்சம் கோடி வருவாயைப் பெறுவதாக அண்மையில் “திங்க் சேஞ்ச் ஃபோரம்” என்ற அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. கரோனா தொற்றுக்குப் பிறகு இந்த இந்த சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் ஆண்டொன்றுக்கு 20 சதவிகித வளர்ச்சியை அடைந்துள்ளன எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆன்லைன் சூதாட்டங்களின் வளர்ச்சிக்குக் காரணம் என்ன
- இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக ஸ்மார்ட்ஃபோன்களின் பயன்பாடும் டிஜிட்டல் உள்கட்டமைப்புகளும் பலமடங்கு அதிகரித்துள்ளன. பொருளாதார ரீதியாக மேலே வர வேண்டும் என்ற எண்ணம்தான் மக்களை இதுபோன்ற ஆன்லைன் சூதாட்டங்களின் பக்கம் கவர்ந்திழுக்கின்றன. ஆன்லைன் சூதாட்டங்களில் கிடைக்கும் உடனடி லாபத்தைப் பார்த்து ஏமாந்து மக்கள் தங்களது பணத்தை இழக்கின்றனர். அரசுத் தரப்பில் இதுபோன்ற சட்டவிரோதமான ஆன்லைன் சூதாட்ட இணையதளங்கள் மற்றும் செயலிகளைத் தடை செய்தபோதிலும், இதற்கென தனிக் கண்காணிப்பு அமைப்பு எதுவும் இல்லாததால் அவை தொடர்ந்து செயல்பாட்டில் இருந்து வருகின்றன. பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கும்பட்சத்தில் அரசுத் தரப்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒரு சூதாட்ட செயலியை தொடங்குவது மிகவும் எளிது என்பதால், எண்ணற்ற ஆன்லைன் சூதாட்ட செயலிகள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றில் வழங்கப்படும் குறைந்தபட்ச நுழைவுக் கட்டண சலுகைகள், அதிகப்படியான லாபம் போன்ற விளம்பரங்கள் அதிகமானோரை அந்த செயலிகளைப் பயன்படுத்தச் செய்கிறது.
அரசு என்ன செய்கிறது
- நாட்டில் சட்டவிரோதமாக செயல்படும் ஆன்லைன் சூதாட்ட இணையதளங்கள் மற்றும் செயலிகளின் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது அமலாக்கத் துறை, மகாதேவ் என்ற ஆன்லைன் சூதாட்ட செயலி மீதான வழக்கை தீவிரமாக விசாரித்து வருகிறது. அதேபோல, அண்மையில் மின்னணு தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் 22 சட்டவிரோத இணையதளங்களுக்குத் தடை விதித்து உத்தரவிட்டது. இதுபோன்று சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட இணையதளங்களுக்கு தடை விதிக்கப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த பிப்ரவரியில் லோட்டஸ் 365 உள்பட 132 சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட இணையதளங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.
தடை விதித்தும் செயல்படும் ஆன்லைன் சூதாட்ட இணையதளங்கள்
- அரசு சார்பில் ஆன்லைன் சூதாட்ட இணையதளங்கள் மற்றும் செயலிகளுக்கு த் தடை விதிக்கப்பட்டுள்ளபோதிலும், அவை தொடர்ந்து செயல்பாட்டில் இருப்பது தெரியவந்துள்ளது. லோட்டஸ் 365 போன்ற ஆன்லைன் சூதாட்ட இணையதளமான ஃபேர்பிளேவுக்கு அண்மையில் தடைவிதிக்கப்பட்ட போதிலும் அவை தொடர்ந்து செயல்பாட்டில் இருந்து வருகிறது. சேலர் புக் என்ற இணையதளமும் தொடர்ச்சியாக செயலில் இருந்து வருகிறது. இதுபோன்ற சட்டவிரோத சூதாட்ட இணையதளங்கள் தங்களுக்கென வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் மற்றும் டெலகிராம் கணக்குகளைக் கொண்டுள்ளன. அல்லாமல் அவர்களது பக்கங்களை அதிகமானோர் பின்தொடரவும் செய்கின்றனர்.
- ரெட்டி அண்ணா என்ற சட்டவிரோத சூதாட்ட இணையதளம் அதன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 5 லட்சத்துக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளது. அதேபோல இந்த இணையதளத்துக்கு ஃபேஸ்புக்கில் பல கணக்குகள் உள்ளன.
கோடிகளில் புரளும் மகாதேவ் செயலி
- மகாதேவ் ஆன்லைன் சட்டவிரோத சூதாட்ட செயலி சத்தீஸ்கரில் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. சத்தீஸ்கரை மையமாக வைத்து இந்த ஆன்லைன் சூதாட்ட செயலியான மகாதேவ் இயங்கி வருவது ஆளும் அரசுக்குப் பெருமளவுக்கு நெருக்கடியாகவும் சவாலாகவும் உருவெடுத்துள்ளது.
- கடந்த 2020 கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் வட இந்தியாவில் இந்த மகாதேவ் செயலி மெதுவாக வளர ஆரம்பித்து தற்போது மிகப் பெரிய நெருக்கடியாக உருவெடுத்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் இந்த செயலியை உருவாக்கியவர்களும், அதனை விளம்பரப்படுத்தியவர்களும் பெரும் செல்வந்தர்களாக மாறியுள்ளனர். அண்மையில் இந்த செயலியை விளம்பரப்படுத்தியவர்களில் ஒருவரான சௌரவ் சந்திரகர் தனது திருமணத்தை ரூ. 200 கோடி செலவில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தியுள்ளார். வரி கட்டுவதைத் தவிர்ப்பதற்காக தனது திருமணத்திற்கான மொத்த செலவையும் அவர் பணமாகக் கொடுத்துள்ளார். இந்தப் புள்ளியில் மகாதேவ் செயலியை தனது விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தது அமலாக்கத் துறை. இந்த வழக்கில் இதுவரை அமலாக்கத் துறை 18 பேரை கைது செய்துள்ளது. சட்ட விரோத செயலியான இந்த மகாதேவின் சொத்து மதிப்பு ரூ. 4000 கோடி எனக் கூறப்படுகிறது.
ஆன்லைன் சூதாட்ட வளர்ச்சியில் சமூக ஊடகங்களின் பங்கு
- சமூக வலைத்தளங்களான இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் மற்றும் டெலகிராம் போன்றவை இந்த சட்டவிரோத ஆன்லைன் விளையாட்டுகளின் வளர்ச்சியில் மிகப் பெரிய பங்காற்றுகின்றன. இந்த சமூக வலைத்தளங்களின் விளம்பரங்களால் இளம் தலைமுறையினர் இந்த மாதிரியான சட்டவிரோத ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி தங்களது பணத்தையும், மதிப்பையும் இழக்கின்றனர். இந்த சமூக வலைத்தளங்களை பெரிய நிறுவனங்கள் மட்டுமின்றி குறிப்பிட்ட பகுதியில் உள்ளவர்கள் பங்குபெறும் வகையில் உள்ள சிறிய ஆன்லைன் சூதாட்ட செயலி நிறுவனங்களும் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
சட்டமும் நீதிமன்றமும் கூறுவது என்ன
- பணத்தை வைத்து விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகள் முற்றிலுமாக சட்டவிரோதமானவை என இந்தியாவில் கூறப்படவில்லை. சூதாட்டம் தொடர்பான தேசிய அளவிலான ஒரே சட்டம் 1867 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பொது விளையாட்டு சட்டம் மட்டுமே. இந்த சட்டம் பொது இடங்களில் சூதாட்டம் நடைபெறுவதை ஒழுங்குபடுத்துகிறது. இணையதளம் வளர்ச்சியடையாத காலத்தில் இயற்றப்பட்ட சட்டம் என்பதால் அதில் ஆன்லைன் சூதாட்டம் குறித்த அம்சங்கள் ஏதும் இடம்பெறவில்லை. இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாக வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மட்டுமே இருப்பதாகக் கூறப்படும் விளையாட்டுகளை நீதிமன்றம் சட்டவிரோதமானது எனக் கூறி வருகிறது. மேலும், திறமை அடிப்படையிலான விளையாட்டுகளை சட்டத்தின்படி அனுமதிக்கிறது. ரம்மி, போக்கர் போன்ற சீட்டாட்டங்களைத் திறன் அடிப்படையிலான விளையாட்டுகள் எனக் கூறி உச்ச நீதிமன்றம் அவற்றுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
- குதிரைப் பந்தயத்தைத் தவிர்த்து பல்வேறு ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்து மாநில அரசுகள் சட்டமியற்றியுள்ளன. அதிலும் சில மாநிலங்களுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக வில்வித்தையில் பந்தயம் கட்டுவது மேகலாயாவில் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சிக்கிம் மற்றும் கோவா போன்ற மாநிலங்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உடைய விளையாட்டுகளான கேசினோஸ் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை அனுமதித்துள்ளது. இருப்பினும், கோவாவில் கேசினோ விளையாட்டுகளில் பங்கேற்க அந்த மாநிலத்தில் வசிப்பவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமலாக்கத் துறை உள்ளே வந்தது எப்படி
- சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், மகாதேவ் செயலி போன்ற பெரிய நிறுவனங்கள் இந்த சட்டவிரோத ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டுவதாக அமலாக்கத் துறைக்கு புகார் வந்ததையடுத்து, அமலாக்கத் துறையின் விசாரணை வளையத்துக்குள் வந்தது மகாதேவ் செயலி. சட்டவிரோத ஆன்லைன் விளையாட்டுகள் மூலமாக இந்த நிறுவனத்தின் உரிமையாளார்கள் மாதத்திற்கு ரூ.450 கோடி வருமானம் ஈட்டுவதாக தெரிய வந்துள்ளது. இந்த வருமானத்தை போலியான கணக்குகள் உருவாக்கி அவற்றில் வரவு வைத்துப் பின்னர் ஹவாலா மூலம் நாட்டிலிருந்து பணம் வெளியே கொண்டு செல்லப்படுகிறது. அப்படி கொண்டு செல்லப்படும் பணம் கணக்கிலும் வருவதில்லை. அதற்கு வரியும் செலுத்தப்படுவதில்லை எனக் கூறப்படுகிறது.
அடுத்து என்ன
- ஆங்கிலேயர்கள் காலத்தில் இயற்றப்பட்ட பொது விளையாட்டு சட்டம், 1867 உத்தரப் பிரதேசத்தின் (யுனைட்டட் ப்ராவின்ஸ்) ஆக்ரா மற்றும் ஆவத் பகுதிகளுக்கு மட்டுமே உருவாக்கப்பட்டது.
- சுதந்திரத்துக்குப் பிறகு இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஆன்லைன் விளையாட்டுகள் மீதான சட்டமியற்றும் உரிமையை மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு பகிர்ந்தளித்துள்ளது. அந்த சட்டமியற்றும் உரிமையின் அடிப்படையில் இந்திய அரசாங்கம் அண்மைக் காலங்களில் சட்டவிரோத ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்வது மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கான விதிமுறைகள் தொடர்பான சட்டங்களை இயற்றி வருகிறது.
- சட்டவிரோத ஆன்லைன் விளையாட்டுகளைத் தடை செய்வதில் மத்திய, மாநில அரசுகள் கூடுதல் கவனம் கொடுத்து, வேரோடும் வேரடி மண்ணோடும் அவற்றை அப்புறப்படுத்தி, ஏழை, எளிய மக்களின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என்பதே அனைவருடைய எதிர்பார்ப்பும்.
நன்றி: தினமணி (25 – 11 – 2023)